Friday, December 11, 2020

Kriya heenam

Courtesy:Smt.Padma Gopal
(பகுதி −5..)
தினமும் பூஜை செய்வது, தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்வது என்ற நல்வழக்கங்கள் இன்றும் நம் இல்லங்களில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
ஆனால் அப்படி பூஜை செய்யும் போதும், ஸ்லோகங்களைக் கூறும் போதும் நம்மை அறியாமல் சில சமயங்களில் தவறு நேர்ந்து விடுகிறது.
பெரியவர்களிடம் ச்ரத்தையோடு கற்றுக்கொண்டு செய்யும் பொமுதும், சொல்லும் பொழுதும், தவறு நேருவதற்கு வாய்ப்பில்லை.
ஆனால், நாமே புத்தகத்தை வைத்துக் கொண்டு ஆரம்பிக்கும் போது, சில நேரங்களில் தவறு நேர்ந்து விடுகிறது.
உதாரணத்திற்கு, பூஜையில் உபசாரங்களைச் செய்யும் போது, அதாவது, அர்க்யம், பாத்யம், ஆசமனீயம், ஸ்நாநம் இத்யாதிகளை சமர்ப்பணம் செய்யும் பொழுது, ஒரே பாத்திரத்து நீரை உபயோகிப்பது தவறாகக் கொள்ளப்படுகிறது.
அது எப்படி என்பதைப் பார்க்கலாம்..
அர்க்யம் என்பது பூஜை செய்யப்படுகின்ற தெய்வத்திற்குக் கரங்களை சுத்தப்படுத்துவதற்காக அளிக்கின்ற நீர்.
பாத்யம் என்பது பாதங்களைக் கழுவ அளிக்கப்படுகின்ற நீர்.
ஆசமனீயம் என்பது வாய்க் கொப்பளிக்கத் தருகின்ற நீர்.
ஸ்நானம் என்று சொல்லி நீராடுவதற்கான நீரை அளிக்கிறோம்..
அப்பொழுது, இவை எல்லாம் வெவ்வேறு பாத்திரங்களிலிருந்து எடுத்து அளிப்பதுதானே முறை!
நம்மையே எடுத்துக் கொண்டாலும் கூட, பருகும் நீர் வேறாகவும், பிற உபயோகங்களுக்கான நீர் வேறாகவும்தானே வைத்திருக்கிறோம்!..
இதை எல்லாம் இறை பூஜையில், விசேஷமாக அனுசரிக்க வேண்டும் அல்லவா?..
ஒரு வேளை அறியாமல் தவறு செய்தோமானால், அது "க்ரியாஹீனம்" (செய்கையில் குறைபாடு) ஆகிவிடுகிறது..
அடுத்ததாக, உச்சரிக்கின்ற மந்திரங்களில் பிழை நேருவதற்கான வாய்ப்பை ஆராயலாம்.
பெரும்பாலும் அனைத்து மந்திரங்களும் வடமொழியிலேயே இருப்பதால், நாம் தவறு செய்கின்ற வாய்ப்பும் அதிகமாகி விடுகிறது.
உதாரணமாக ஒன்றிரண்டைப் பார்ப்போம்..
ஓம் துஷ்டாயை நம:
என்று சொல்கிறோம்..
தமிழில் தண்ணீர் என்பதற்கும், தாகம் என்பதற்கும் ஒரே "த" தான் இருக்கிறது. ஆனால், அடிக்கடி அனைவரும் உபயோகப்படுத்துகின்ற சொல் என்பதால், அவற்றைச் சரியாக உச்சரித்து விடுகிறோம்.
அதே போலவே, பயம், பழம் முதலியன..
சரி.. இந்த "துஷ்டாயை" என்பதை எப்படி உச்சரிப்பது?
Thustayai என்று உச்சரிக்க வேண்டும்.. அதற்கு "ஆனந்தமயமானவள்" என்பது பொருள்.
அதையே நாம் சற்று அழுத்தி, Dhustayai என்று சொல்வோமானால், "கெட்டவள்" என்று விபரீதமான பொருளைத் தந்து விடும்..
அதுவே போல, "லக்ஷ்மி அஷ்டோத்திர சத நாமாவளி"யை எடுத்துக் கொள்வோம்.
அதில் இரண்டு நாமங்கள் சேர்ந்து வருகிறது.
அதைப் பிரிக்கும் பொழுது தவறு நேர்ந்து விடுகிறது.
"காமாக்ஷீரோத ஸம்பவாம்"
என்பது பெரும்பாலும்
"காமாக்ஷி" என்றும்
"க்ரோத ஸம்பவாம்" என்றும் பிரிக்கப்படுகிறது.
இது விஷயமாக, அடியேன் குறைந்தது ஒரு பத்துப்பதினைந்து Sanskrit Documents ஆராய்ந்து, சரிபார்த்த பின்னரே, இதைப் பதிவு செய்கிறேன்..
ஓம் காமாயை நம: என்றும்,
ஓம் க்ஷீரோதஸம்பவாயை நம: (பாற்கடலில் உதித்தவள்) என்றும் பிரிப்பதே சரியாகக் காட்டி இருக்கிறார்கள்.
ஆனால், சிலர், "க்ரோத ஸம்பவாம்" என்பதும் சரியே என்று பேசுகிறார்கள்.
கேட்டால், "பணத்தினால்தானே சண்டை வருகிறது" என்று வாதம் செய்கிறார்கள்.
நமக்குள் இருக்கும் சச்சரவுகளுக்கும் சண்டைக்கும் தெய்வத்தைக் காரணம் காட்டுவதோடு நில்லாமல், அதையே சொல்லியும் காட்டுவது எப்படித் துதியாக முடியும்?
"உபசாரம்" செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு, தெய்வங்களிடம் "அபசாரப்பட்டு" விடுகிறோம்..
இதுதான் "மந்த்ர ஹீனம்"(மந்திரத்தில் குறைபாடு)
அடுத்தது, கேட்கவே வேண்டாம்..
பக்தி ஹீனம்
(பக்தியில் குறைபாடு..)
அதற்கு, அநேகமாக நாம் யாருமே விலக்கல்ல.
பத்து நிமிட பூஜைக்குள், மனம் பத்து விஷயங்களுக்குத் தாவி விடுகிறது.
சரி..இதற்கெல்லாம் நிவாரணம் என்ன?
நம் பெரியோர்கள், அதற்கும் வழி சொல்லித் தந்திருக்கிறார்கள்..
(வளரும்..)

No comments:

Post a Comment