பெரியவா திருவடியே
சரணம்.
நம் சரீரத்திற்கு எந்த வியாதி வந்தாலும், எந்த கஷ்டம் வந்தாலும், நிரம்ப வறுமையினாலே சிரமப்பட்டாலும், இவையெல்லாம் நமக்கு வைராக்கியத்தை கொடுப்பதற்காக சுவாமியினால் கொடுக்கப்பட்டவை என கருதவேண்டும். இவையெல்லாம் 'தபஸ்' என்று நினைத்துக்கொள்ள வேண்டும். தனக்கு உண்டாகும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்வதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதுமே தவத்தின் இலக்கணமாகும். தீயில் காய்ச்சி உருக்கிய தங்கம் எப்படி ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறதோ அதுபோல, துன்பங்கள் நம்மை வருத்தும் போது அதைப் பொறுத்துக் கொள்பவர்கள் யாரோ அவர்களின் வாழ்வில் எல்லா நன்மைகளும் ஏற்படும்.
கண்ணிற்கு அழகு சேர்ப்பது தாட்சண்யம் என்னும் கருணையுள்ள அருட்பார்வை மட்டுமே. அப்படியில்லாமல், பிறரது துன்பத்தைக் கண்டு கொள்ளாமல் இருப்பது மனித நிலைக்கு தாழ்வு. எந்தச் சூழ்நிலையிலும் பொதுவாகச் சிந்தித்து நடுநிலையோடு வாழ்வது சிறந்தது. ஒரு நல்ல மனிதனுக்குரிய உயர்ந்த தகுதி நடுநிலையாளராக இருப்பது தான். மேன்மக்கள் செல்வநிலையிலும், ஏழ்மைநிலையிலும் நடுநிலைமையிலிருந்து தவறமாட்டார்கள். மனம், சொல், செயல் என்ற மூன்றிலும் அடக்கம் பெற்றிருப்பதை விட சிறந்த நன்மை வேறில்லை. நாம் பேசும் சொற்கள் பொருளுடையதாக இருக்க வேண்டும். பொருளுடைய சொற்களால் பயனுண்டாகும். பயனற்ற வீணான சொற்களைப் பேசினால் நமது வாழ்வும் பயனற்றதாகும்.
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் இவற்றை அகற்றி வாழ்வதே அறவாழ்வாகும். பகைவரால் உண்டாகும் தீங்கினைவிட, பொறாமை குணமே நமக்கு தீங்கு தரப் போதுமானது. பொறாமை குணம் இருந்தால், வெளியில் இருந்து வேறு பகை தேவையில்லை. அதுவே நம்மை அழித்துவிடும். எனவே, மறந்தும்கூட பிறருக்கு தீங்கு நினைக்கக் கூடாது. ஆமை போல் ஐந்து உறுப்புக்களையும் தன் ஓட்டினுள் அடக்கிப் பாதுகாத்துக் கொள்வது போல, ஐந்துபுலன்களையும் தன் மனவலிமையால் அடக்கி ஆள வேண்டும். மதம் கொண்ட யானையைப் போல விளங்கும் ஐம்புலன்களையும் மனவலிமை என்னும் அங்குசத்தால் அடக்கியாளும் திறமை கொண்டவர்களே சிறந்த ஆன்மீக வீரர்கள் எனப்படுகிறார்கள்.
ஒரு மருந்தை வாங்கி உபயோகிக்காமல் வைத்துக் கொண்டிருந்தால் நோய் குணமாகாது. அதனை எப்படி உபயோகிக்க வேண்டும் எந்த ஞானமும் நோயைக் குணப்படுத்தாது. உடற்பயிற்சிகளை பற்றியும் ஆசனங்களை பற்றியும் தெரிந்து வைத்திருப்பதால் மட்டும் உடல் வலிமை பெறாது, ஆரோக்கியத்தை பெற்றுவிட முடியாது. அப்படியே நல்ல விஷயங்களை கேட்டும், அறிந்தும் அதனை அப்பியாசம்(பயிற்சி) செய்யாமல் இருந்தால் அதனால் ஒரு பயனும் இல்லை. 'ஏட்டுச் சுரக்காய் பசி தீர்க்காது' என்பது போல. பெயரளவில் முயற்சி இருந்தால் அதனால் பயனேதும் இல்லை. பெருமுயற்சி வேண்டும். அப்பொழுதுதான் எதுவும் சித்திக்கும்.
படித்ததில் பிடித்தது.
No comments:
Post a Comment