Wednesday, August 26, 2020

Yamuna river & Godavari patti

யமுனா நீ உயர்ந்தவள்? J K SIVAN

ஒரு எண்பது வயது கிழவி . அவள் பெயர் வரலக்ஷ்மி. ஆனால் எல்லோரும் கூப்பிடுவது கோதாவரி பாட்டி. யாரும் இல்லாத தனிக்கட்டை. அவளுக்கு ஒரு வீடு இருந்து அதில் இருந்து வெளியே வந்து எத்தனையோ வருஷங்கள் ஆகிவிட்டது. அவள் வாழ்க்கையின் பெரும்பகுதி கோதாவரி நதிக்கரையிலேயே கழிந்து விட்டது. இரவோ பகலோ அவளுக்கு உற்ற சினேகிதி கோதாவரி மட்டும் தான். அதோடு பேசுவாள். பாடுவாள், சிரிப்பாள், ரசிப்பாள், கண்கொட்டாமல் அதன் அழகை பார்த்துக் கொண்டிருப்பாள். ஆகாரம் கிடைக்காத நாளில் கோதாவரியின் தண்ணீரே அவளுக்கு ஆகாரமாக இருந்தது. கோதாவரி காற்றில்
அசையும் சத்தம் அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.
கோதாவரி நதியை விட்டு பிரிய மனம் கொடுக்காவிட்டாலும், வயது அதிகமான காரணத்தால், மற்ற புண்ய நதிகளையும் முடிந்தவரை ஒவ்வொன்றாக பார்க்க ஆசை வந்தது.
''அம்மா கோதாவரி நான் போய் வருகிறேன் என்று சொல்லமாட்டேன். போகிறேன் அம்மா?''
''ஏய் , கோதாவரி, உன் பெயரும் என் பெயர் தானேடி, ஏன் என்னை விட்டு போக எண்ணம் வந்தது என் மேல் கோபமா? நான் ஏதாவது தப்பு பண்ணி இருந்தால் என்னை மன்னித்து விடடி. என்னிடமே இரேன்.''
''அம்மா பெரிய கோதாவரி நீ என் தாய். நீ வயதற்றவள். நான் வயதானவள். எனக்கு கங்கை, யமுனை
நதிகளையும் பார்க்கவேண்டும், உன்னைப்போல அவர்களும் அழகா என்று தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக கங்கையை விட எனக்கு பிடித்த கிருஷ்ணன் விளையாடிய யமுனையை நான் முடியும் முன் ஒரு தடவை பார்த்துவிட வேண்டும். அவளை மனதார அணைத்துக் கொள்ளவேண்டும் என்று கொள்ளை ஆசை. இப்போதிலிருந்து மெதுவாக நடக்கிறேன். திரும்பி வருவேனா என்று தெரியாது. அதனால் தான் உன்னை மனதில் இருத்திக்கொண்டு போகிறேன்....''
கோதாவரி அவளுக்கு விடை கொடுத்தாள் . கோதாவரி கொஞ்சம் கொஞ்சமாக நடந்து கங்கையை அடைந்தாள். அடேயப்பா நான் நினைத்தது போல் இல்லையே இவள்.
''கங்காமாதா, உண்மையிலேயே நீ தெய்வநதியடி. பாபம் நீக்கி புண்யம் தருபவள்... உன் சகோதரி கோதாவரி நான்'' சந்தோஷமாக கங்கைக்கரையில் சில நாட்கள் இருந்தபின் திருப்தியாக விடை பெற்றாள் .
''கோதாவரி உன்னோடு சிலகாலம் தான் இருந்தேன். உன்னை எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது. அதற்குள் என்னை விட்டு போகிறேன் என்கிறாயே'' என்றாள் கங்கை.
''கங்கம்மா, எனக்கு யமுனையோடும் சில நாள், அல்லது சிலமணி நேரமாவது இருக்கவேண்டும் என்று ஆசையம்மா. முடிந்தால் உன்னை மீண்டும் சந்திக்கிறேன் தாயே ''
கோதாவரி யமுனைக்கு வந்துவிட்டாள் .
பரந்த நீண்ட வளைந்து வளைந்து செல்லும் யமுனையின் அழகில் பிரமித்தாள் . கரையில் விழுந்து புரண்டாள்.
சிரிப்பொலி கேட்டது.
''யார் இங்கே சிரிப்பது ?"' சுற்று முற்றும் பார்த்தாள் .
''நான் தானடி கோதாவரி. உன் பிரியமான யமுனா.
''ஓ நீயா... அக்கா, உன்னை பார்க்கத் தானே நான் அவ்வளவு தூரத்திலிருந்து வந்தேன். ''
''ஏன் என் கரையில் புரண்டாய்?''
''இங்கு தானே அம்மா என் கண்ணன் உன்னோடு விளையாடி நடந்தான். என்னால் குனிந்து நமஸ்காரம் பண்ணமுடியவில்லை. முடிந்தவரையில் எல்லா இடத்திலும் மண்ணில் உருண்டால் அவன் பாதம் பட்ட இடத்தை நமஸ்கரித்தமாதிரி ஆகாதா? என்று தோன்றியது .
கரையில் நடந்த சிலர் ஏன் இந்த கிழவி யமுனை நதிக்கரையில் தனியாக அமர்ந்திருக்கிறாள் என்று யோசித்துவிட்டு போய்விட்டார்கள்.
யாரும் இல்லை நதிக்கரையில். யமுனையை ரசித்துக்கொண்டு நிறைய கிருஷ்ணனோடு யமுனைக்கு உண்டான உறவை அனுபவங்களைக் கேட்டாள் . யமுனை சந்தோஷத்துடன் ''கோதாவரி உன்னைப்போல் யாரும் என்னிடம் கிருஷ்ணனை பற்றி பேசவே இல்லையடி...உனக்கு சொல்ல நிறைய விஷயம் இருக்கிறது. நீ என்னோடு இரு உனக்கு எல்லாம் சொல்கிறேன். ஒரு வாழ் நாள் போதாது.''
''யமுனா நான் பார்த்தவர்களில் நீ தானடி அழகு? எவ்வளவு அழகாக இருக்கிறாய் நீ! நுங்கும் நுரையும் மலர்களும் நறுமணமும் வீச ஒரு இளம் பெண்ணாகவே கங்கையை விட அழகானவளாகவே எனக்கு காட்சியளிக்கிறாய் யமுனா".
" கோதாவரி, நீயும் ஒருகாலத்தில் இளம் பெண் தானே. என்னை விட அழகானவளாகவே இருந்திருப்பாய் என்று இப்போது உன்னைப் பார்த்தாலேயே தெரிகிறது''
"நான் எப்படி இருந்தேன் என்றே எனக்கு தெரியாது யமுனா. நான் வயதுக்கு வரும் முன்பே எனக்கு கணவனாக இருந்தவன் கோதாவரியில் நீந்தி மூழ்கிப் போனான். அன்றிலிருந்து நான் அவன் திரும்ப வருவான் என்று கோதாவரிக் கரையிலேயே வெகு காலம் பார்த்து கொண்டே காத்துக் கொண்டிருந்தேன். காலம் கடந்துவிட்டது. அவனை மறந்து கோதாவரியின் அன்பில் அழகில் வாழ்ந்தவள்". உங்கள் இருவரை விட இப்போது தான் சில நாள் முன்பு கங்கையை சந்தித்தேன். அடேயப்பா கம்பீரமானவள் கங்கை...''
"கோதாவரி, நீ சொல்வது சரியே. கங்கை மிக பெரியவள். பெரிய இடத்தைச் சேர்ந்தவள் .எங்களுக் கெல்லாம் தலைவி. புண்ய நதி. அவளுக்கு நான் ஈடாக முடியுமா? நான் சாதாரணமானவள் கோதாவரி".
"அம்மா , யமுனா நீ ரொம்ப அடக்கமானவள் என்றுமே. கங்கைக்கு கோபமும் சீற்றமும் அடிக்கடி வரும். உன் பெருமை நான் அறிவேன். என் வாழ்வு முடியும் முன்பு உன்னை அடையவேண்டும் உன்னிலே
கலந்து என் மூச்சை விடவேண்டும் என்பதற்காகவே வந்தவள்"
"கோதாவரி, நீ எனக்கு மகிழ்ச்சியூட்ட இப்படியெல்லாம் சொல்கிறாய். நான் கங்கையின் முன்பு ஒரு சிறு ஓடை. அவ்வளவே."
"யமுனாதேவி, என்னைப் பொறுத்தவரையில் நீயும் கங்கையும் ஒன்றே அல்ல நீ உயர்ந்தவள். . உன் பெருமை நான் உணர்ந்தவரை சொல்கிறேன் கேள். கங்கையை நூறு மடங்கு புனிதப்படுத்தினால் கிடைப்பவள் நீ. விஷ்ணு என்கிற நாராயணனின் ஆயிரம் நாமத்தை விட ராமா என்கிற பெயர் உசத்தி. அப்படிப்பட்ட ராமனின் மூன்று நாமங்களுக்கு ஈடு கிருஷ்ணன் என்கிற ஒரு நாமம். இது பாகவதத்தில் இருக்கு. யமுனையில் நீராடினால் ஒருவன் செய்த பாபத்தின் விளைவுகள் அவனை விட்டு விலகும் அம்மா யமுனா, நீ ரொம்ப புண்யம் செய்தவள். புண்யம் தருபவள். உன்னில் ஒருமுறை ஸ்நானம் செய்தவன் குளித்து எழும்போது மனம் பூரா கிருஷ்ணனின் நினைவுகளோடு தான் கரையேறுகிறான். சைதன்யர் சொன்னதம்மா இது.
யமுனா, உனக்கு தெரியுமா? பிருந்தாவனத்தில் வசித்து அன்றாடம் உன்னிடம் ஸ்நானத்துக்கு வருபவர்களால் இந்த உலகமே சுத்தமாகிறது. நீ மறந்துவிட்டாயா? எத்தனை ஆயிரம் முறை உன்னில் மூழ்கி விளையாடியிருக்கிறான் கிருஷ்ணன் நண்பர்களுடனும் கோபியர்களுடனும்!! அவன் பாதத்தை எவ்வளவு ஆயிரம் தடவை நீ தொட்டு புனிதமடைந்தவள். யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்??? உன்னோடு இருந்தால் தான் கிருஷ்ணனைப் பற்றி முழுதும் உனக்கு சொல்ல முடியும் என்றாயே அக்கா, இனி உன்னை விடமாட்டேன், இதோ வந்துவிட்டேன் ....சொல்லு ஆர்வமாக இருக்கிறது கேட்க....''
கோதாவரி கிழவி யமுனையில் இறங்கினாள் யமுனையில் கரைந்து கிருஷ்ணனோடு கலந்தாள் .

No comments:

Post a Comment