ஆவியே அமுதே நினைந் துருகி
அவரவர் பணை முலை துணையா
பாவியே ணுணரா தெத்தனை பகலும்
பழுதுபோ யொழிந்தன நாள்கள்
தூவிசே ரன்னம் துணையொடும் புணரும்
சூழ்புணல் குடந்தையே தொழுது, என்
நாவினா லுய்ய நான்கண்டு கொண்டேன்
நாராயா ணாவென்னும் நாமம்
பெரிய திருமொழி முதற் பத்து வாடினேன்.... (949)
பொருள் :
என் உயிரே! எனக்கு இனிய அமுதமே என்று பெண்களிடம் சிற்றின்பத்தில் மூழ்கி தீவினைகளில் உழன்று பெருமானே நம்மைக் காப்பவன் என்று உணராமல் வீணாகப் பல நாட்கள் கழிந்தன. அழகான சிறகுகளைக் கொண்ட அன்னப் பறவைகள் தங்கள் துணையுடன் உறையும் நீர் நிறைந்த திருகுடந்தை ஆராவமுதப் பெருமானைத் தொழுது நான் ஈடேர என் நாவினால் நாராயணா என்ற திவ்ய நாமத்தைப் புகழ்ந்து காணப் பெற்றேன். திருமந்திரம் எட்டு எழுத்து ஆதலால் இடைவிடாமல் சொல்ல இயலும்.
நடந்த கால்கள் நொந்தவோ
நடுங்கு ஞால மேனமாய்
இடந்தமெய்கு லுங்கவோவி
லங்குமால்வ ரைச்சுரம்
கடந்தகால்ப ரந்தகாவி
ரிக்கைக் குடந்தையுள்
கிடந்தவாறெ ழுந்திருந்து
பேசுவாழி கேசனே!
திருமழிசைப்பிரான் அருளிய திருச்சந்த விருத்தம் ( 812)
பொருள்:
உலகளந்த போது உனது கால்கள் களைப்பில் தளர்ந்ததோ?
பூமாதேவியைக் காப்பதற்காக வராஹ அவதாரமெடுத்து அவளைக் காப்பாற்றிய போது திருமேனி குலுங்கிய களைப்போ?
பல தடைகளையெல்லாம் தகர்த்து வேகமாகப் பாயும் பரந்த காவிரி நதியின் கரையில் திருக்குடந்தையில் கண்வளரும் கேசவனே! உனக்கு மங்கலம் உண்டாகட்டும்!
வாரா வருவாய் வருமென் மாயா!
மாயா மூர்த்தியாய்
ஆரா அமுதாய் அடியேன் ஆவி
அகமே தித்திப்பாய்
தீரா வினைகள் தீர என்னை
ஆண்டாய்! திருக்குடந்தை
ஊரா, உனக்காட்பட்டும் அடியேன்
இன்னம் உழல்வேனோ?
திருவாய்மொழி – 5ம் பத்து ஆரா அமுதே (3203)
பொருள் : அகக் கண்களுக்குப் புலப்படும்படியான மாய உருவத்தில் காட்சி அளிப்பவனே! தெவிட்டாத அமுதம் போன்று இனிமையானவனே. என் வினைகளைத் தீர்த்து என்னை ஆட்கொண்டாய்! திருக்குடந்தையில் எழுந்தருளியிருக்கும் பெருமானே! உனக்கு நான் ஆட்பட்டபின் இன்னமும் துன்புறுவேனோ?
திருக்குடந்தை – கும்பகோணம்
மூலவர் – சாரங்கபாணி, ஆராவமுதன், அபர்யாபதாம்ருதன். ஆதிசேஷ சயனம். உத்தியோக சயனம். கிழக்கே திருமுகமண்டலம் . திருமழிசையார்வாருக்காக 'கிடந்தாவாறெழுந்' திருக்க முயலும் நிலையில் இருப்பதால் "உத்தாநசாயி". என்றும் அழைக்கப்படுகிறார்.
தாயார் – கோமள வல்லி – படி தாண்டாப் பத்தினி. ஹேமரிஷியின் புத்ரியான கோமள வல்லி தவம் புரிந்து பெருமானை மணந்து கொண்டதாக ஐதீஹம்.
ஹேம புஷ்கரிணி
வைதிக விமானம் வேத வேத விமானம்
இங்கு தான் "ஆரா அமுதே" என்ற திருவாய்மொழிப் பாடல்களை ஸ்ரீமந் நாதமுனிகள் கேட்டு திவ்யப் பிரபந்தத்தைத் தொகுக்க ஆரம்பித்தார்.
சித்திரை தேர் இங்கு பிரசித்தம். பெருமாள் சன்னிதியே தேர் சக்கரங்களுடன் கருங்கல்லால் கட்டப்பட்டிருக்கிறது. சன்னிதி உள்புறம் ராமாயண காவியத்தை வண்ணத்தால் வரைந்திருக்கிறார்கள்.
சிருஷ்டிக்கு வேண்டிய மூலப் பொருள்கள் அடங்கிய அமிர்த கும்பம் இங்கு தங்கியமையால் திருக்குடந்தை என்று பெயர் பெற்றது.
மங்களாசாஸனம்
பெரியாழ்வார் – 173,177,188
ஆண்டாள் - 628
திருமழிசையாழ்வார் 807-812, 2417
திருமங்கையாழ்வார்–949,954,991,1078,1202,1205,1394,1526,1538,1570,1606,1732
1759,1853,1949,1975,2010,2037,2045,2068,2070,2080,2672,2673(73),2674 (114)
பூதத்தாழ்வார் – 2251/2278
பேயாழ்வார் – 2311,2343
நம்மாழ்வார் – 3194-3204
மொத்தம் –51 பாசுரங்கள்.
ஆழ்வார் திருவடிகளே சரணம்!!
No comments:
Post a Comment