Courtesy:Smt.Saroja Ramanujam
அத்தியாயம் 44
கண்ணனும் பலராமனும் முறையே சாணூரன் முஷ்டிகன் இவர்களை எதிர்க்க முற்படுகையில் அங்கு உள்ளோர் இந்த இளம் பிள்ளைகளை தேர்ந்த மல்லர்களுடன் சண்டையிடச்செய்வது அநியாயம் என்று கூறி அங்கிருந்து செல்ல நினைத்த பொழுதில் கண்ணன் சாணூரனைத் தூக்கிச்சுழற்றி அடித்துக் கொன்றான். அவ்வாறே பலராமனும் முஷ்டிகனைக் கொல்ல, கம்சனைத்தவிர எல்லோரும் மகிழ்ச்சி உற்றனர்.
கம்சன் கோபம் கொண்டு அவர்களை மதுரையில் இருந்து விரட்ட ஆணை விடுத்து அவனைச்சேர்ந்த யாதவர்களை சிறைப்பிடித்து அவர்களின் உடமைகளை பறிக்க உத்தரவிட்டான். மேலும் வசுதேவர் தேவகி இவர்களையும் கொல்ல ஆணை பிறப்பித்தான்.
இவ்வாறு அவன் அச்சம் மேலிட்டு பித்ற்றிக் கொண்டு இருக்கையில் கண்ணன் தாவி அவனை கருடன் பாம்பைப் பிடிப்பதுபோல் பிடித்து அவனைக் கீழே தள்ளி அவன் மேல் விழுந்தார்.பின் ஒரு சிங்கம் யானையைக் கொல்வதைப் போல் அவனைக் கொன்றார். பிறகு வசுதேவரையும் தேவகியையும் விடுவித்து பலராமனுடன் அவர்களை வணங்கினார்.
அத்தியாயம் 45
கண்ணனின் உண்மை மகிமை அறிந்த அவர்கள் தயங்குவதைக் கண்டு தன் மாயையால் மயக்கி அவர்களை அன்னையே, தந்தையே, என்று அழைத்து பலராமனும் தானும் அவர்களின் அன்பை இதுவரை அனுபவிக்காததை நினைத்து வருந்துவதாகக் கூறினார். அதனால் மயங்கிய அவர்கள் அவனுடைய தெய்வத்தன்மையை மறந்து சாதாரண பெற்றோர்கள் போல் அவனை மார்புறத் தழுவினர்.
பிறகு உக்ரசேனர் கண்ணனையே அரசுப் பட்டம் ஏற்கக் கூறியும் அதை மறுத்து யதுவம்சத்தோருக்கு யயாதியின் சாபத்தின்படி அரசு உரிமை கிடையாது என்று கூறி உக்ரசேனரையே அரசராக்கினார்.
இவ்வாறு மதுரையில் இருந்து கம்சனுக்கு பயந்து ஓடிய யாதவர்களை திரும்பவும் மதுரைக்கு அழைத்து நந்தரிடம் எல்லாவற்றையும் முடித்தபின் திரும்பவும் கோகுலம் வருவதாகக் கூறி அவருக்கு விடை கொடுத்தார். ஆனால் நந்தகோபர் அது நடக்கபோவதில்லை என்று அறிந்தவராய் கண்ணீருடன் விடை பெற்றுச்சென்றார்.
பிறகு கண்ணனும் பலராமனும் கர்க்க முனிவரால் உபநயனம் செய்விக்கப்பட்டு சாந்தீபனி முனிவரிடம் குருகுல வாசம் செய்து குருதக்ஷிணையாக பிரபாச தீர்த்தத்தில் பஞ்ச ஜன்யன் என்ற அசுரனிடம் இருந்து அவர் மகனை மீட்கச்செல்ல அங்கு அவனைக் காணாமல் பஞ்ச ஜன்யனைக் கொன்று பாஞ்சஜன்யம் என்னும் சங்கை அவன்உடலில் இருந்து எடுத்து பின்னர் யமலோகம் சென்று பாஞ்சஜன்யத்தை முழங்க யமனால் கொடுக்கப்பட்ட குருபுத்திரனை அழைத்து வந்து குருவிடம் சேர்ப்பித்தார்.
பிறகு கண்ணனும் பலராமனும் மதுரை வந்து கம்சன் கொல்லப்பட்டதால் கோபம் கொண்டு எதிர்த்த ஜராசந்தனுடன் போரிட்டுப் பின்னர் மக்களுக்கு இன்னல் ஏற்பட்டதால் த்வாரகையை நிர்மாணித்து அவர்களை ஒரே இரவில் அங்கு சேர்ப்பித்தது, ஜராசந்தனுக்கு உதவியாக வந்த காலயவனனை தோற்று ஓடுவதுபோல் போக்குக்காட்டி முசுகுந்தனால் அழையச்செய்து துவாரகைக்கு சென்றதுவரை கூறப்படுகிறது.
த்வாரகை சேர்ந்த பின் நடந்த முக்கிய நிகழ்ச்சி ருக்மிணி கல்யாணம் . அத்துடன் இந்தப் பதிவை முடிக்க உத்தேசம். அடுத்து ருக்மிணி கல்யாணத்தை பார்க்கலாம்.
.
No comments:
Post a Comment