தந்தையும் மகளும்-3
பெரியாழ்வார் கண்ணன் திருவிளையாடல்களைக் கூற ஆரம்பிக்கிறார்.
"கண்ணன் ஆயர்பாடியில் பிறந்ததாகக் கருதிய
ஆயர்கள் அவன் பிறப்பை சிறப்புடன் கொண்டாடினர். மணமிகுந்த தைலங்கள் மஞ்சள் இவை ஒருவருக்கொருவரும் கண்ணன் மாளிகை முற்றத்திலும் தூவி அந்த இடம் சேறானது. "
'வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணை சுண்ணம் எதிரெதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்தளறாயிற்றே.'
"சிலர் மகிழ்ச்சிபெருக்கால் இங்கும் அங்கும் ஓடினர். சிலர் உவகை மிஞ்சி விழுந்தனர். வேறு சிலர் எங்கிருக்கிறான் கண்ணன் என்று தேடினர். ஆனந்தம் மேலிட்டு பாடுபவர்களும் ஆடுபவர்களும் கொண்டு ஆய்ப்பாடி விளங்கிற்று."
ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார்நம்பிரான் எங்குத்தான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆயர்பாடியே'
என்ற பெரியாழ்வாரின் சொற்களைக் கேட்டு கோதையும் மனதால் ஆயர்பாடிக்கே போனவளாக ஆட ஆரம்பித்தாள்.
பிறகு , " இவனைப்போல் பிள்ளை வேறில்லை , திருவோணத்துப் பிறந்த இப்பிள்ளை உலகை ஆள்வான் என்று அவனைக் கண்டவர் எல்லாம் ஒருமித்து ,
'ஆணொப்பார் இவன் நேர் இல்லை காண், திரு
வோணத்தான் உலகு ஆளும் என்பார்களே.'
என்று கூறினர்," என்ற தந்தையின் சொல் கேட்ட கோதை ,
"திருவோணமா? கண்ணன் பிறந்தது ரோகிணிஅல்லவா" என்றாள்.
"ஆம் குழந்தாய் , ஆனால் பரம்பொருளான அவன் தன் ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு ஓர் இடைப்பிள்ளையாய் அவதரித்தானே தவிர பிற்காலத்தில் அவன் தன மகிமையை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தான் அல்லவா?
அதைக் கண்ட எனக்கு 'இப்பிள்ளை உலகை ஆள்வான்' என்ற சொற்களால் அவன் முன்னோர்காலத்தில் வாமனனாய் வந்து த்ரிவிக்ரமனாய் உலகை ஆண்டது நினைவுக்கு வந்தது. வாமனமூர்த்தியின் நக்ஷத்ரம் திருவோணமல்லவா?" என்றார்.
"நீங்கள் யசோதையாய் மாறி அவனைப் பாடினாலும் அவன் நாராயணன் என்ற உணர்வு உங்களை ஆட்கொண்டதல்லவா? அதனால்தான் உங்கள் யசோதையும் ஆழ்வாராகவே காட்சி அளிக்கிறாள்.".என்றாள் கோதை.
மேலும் சொல்கிறார் பெரியாழ்வார் .
'உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்
நறு நெய் பால் தயிர்நன்றாகத தூவுவார்
செறி மென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே '
"ஆய்ப்பாடி மக்கள் பித்துக்கொண்டவர் போல உறியில் உள்ள நெய் பால் தயிர் எல்லாவற்றையும் உருட்டி அவற்றை எங்கும் இறைத்தனர். அவர் கூந்தல் அவிழ ஆடிக் களித்தனர்"என்று கூற கோதை ,
" ஆலிலை மேல் ஒரு பாலகனாய் துயின்றவன் , உலகெல்லாம் தன்னுள்ளே அடக்கியவன், இங்கு ஒரு உள்ளம் கொள்ளைகொள்ளும் கள்ளமறியாப் பிள்ளை போல கிடப்பதைக்கண்டு யார்தான் பித்தாக மாட்டார்கள் ." என்றாள்கோதை.
அடுத்து பன்னிரண்டாம் நாளில் கண்ணனை நீராட்டி தொட்டில் இடும் காட்சியைக் காண்போமா?
No comments:
Post a Comment