Wednesday, August 19, 2020

Advice of vidhura

விதுர நீதி பகுதி - 8 -

உத்தமரை நாடு!

திருதிராஷ்ட்ரர்: விதுரா! நீ மாபெரும் அறிஞன். இதுவரை கூறியதைப் போன்ற மேலும் பல நல்ல அறிவுரைகளை எனக்கு விளக்கிச் சொல்வாயாக. உன் சொற்கள் நற்பண்புகளை வலியுறுத்துகின்றன. உலக நன்மைக்கான விஷயங்களால் நிரம்பி விளங்குகின்றன. அவை அழகு ததும்பும் உண்மைகலாக வெளிப்படுகின்றன. என் மனம் திருப்தியுறாமல் மேலும் கேக விழைகிறது.

விதுரர் கூறலானார்: "மன்னா! மனிதர்களில் முதல் தரமான மனிதன் உலகிலுள்ள அனைவரும், அனைத்தும் சௌக்கியமாக வாழ வேண்டுமென ஆசைப்படுவான். அத்தகைய நிலைக்கு எதிரான எதையும் என்றும் அவன் ஆதரிக்க மாட்டான். அவன் உண்மையையே பேசுவான். கனிவுடன் பழகுவான். உடல்-மன உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பான்.

நடுத்தரமான மனிதன் வாக்குறுதிகள் கொடுப்பான். அவற்ரை நிறைவேற்றியும் தருவான். எதுவும் கொடுப்பதாக வாக்களித்தால் அவ்வாறே கொடுட்தும் விடுவான். பிறரிடம் குற்றம் கண்டுபிடித்த வண்ணம் இருப்பான்.

மனிதர்களில் கீழானவர்கள் யாருக்கும் அடங்க மாட்டார்கள். எப்போதும் ஆவேசமாக இருப்பார்கள். பாவச் செயல்களில் ஈடுபடுவார்கள். பயங்கரமாகக் கோபப்படுவார்கள். நன்றி கெட்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் யாருக்கும் நண்பர்கள் அல்லர். சில சமயம் நல்லவர்கள் போல் பழகினாலும் அவர்கள் கொடிய மனம் உடையவர்களே.

கீழ்தரமானவன் பெரியவர்கள் கூறும் நல்ல ஆலோசனைகளின் படி நடந்து கொள்ள மாட்டான். அந்த ஆலோசனைகளால் நன்மை விளையுமென அவன் நம்புவதில்லை. அவன் தன்னையே சந்தேகப்படுபவனாக இருப்பான். தன்னுடைய நண்பர்களைக் கூடக் காட்டிக்கொடுத்துவிடுவான்.

பொறாமை கொள்ளாதிருத்தல், நேர்மையான பேச்சு, உள்ளத் தூய்மை, போதுமென்ற மனத்திருப்தி, எரிச்சலூட்டாத இனிய பேச்சு, மனக்கட்டுப்பாடு, வாய்மை, மனவுறுதி இம்மாதிரியான நற்பண்புகளைத் தீயவர்களிடம் எதிர்பாக்க முடியாது.

வாழ்க்கையில் வளம் பெற்று முன்னேற விரும்புகிறவன் மேற்கூறிய மூவகை மனிதர்களில் உத்தமமான மனிதர்களை மட்டும் அணுக வேண்டும். தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில் நடுத்தரமான மனிதர்களை அணுகலாம். ஆனால் ஒரு போதும் கீழ்த்தரமான மனிதர்களைச் சார்ந்திருக்கக் கூடாது.
🌸🌸🌸🌸
மூடர்கள் & நல்லோர் பண்பு நலன்கள்
     
              நேர்மையற்றதனத்தை  மட்டுமே சார்ந்திருக்கும் வளமை,அழிக்கப்படும் என்றே விதிக்கப்பட்டிருக்கிறது. எனினும், வலிமை, மென்மை ஆகிய இரண்டையும் சார்ந்த வளம், ஒருவனின் மகன்கள் மற்றும் பேரர்களிடம் திறத்துடன் இறங்கிச் செல்கிறது. ஒருவர் செய்யும் தர்மமே ஏழேழு  பரம்பரைக்கும் காத்து நின்று குலம் காக்கும்.

             தங்கள்  குலம் கௌரவம் காக்க  வேண்டியே பாண்டவர்கள் சூதாட்டத்தில் கலந்து கொள்ள ஒத்துக் கொண்டனர்.அது தான்  உயர்ந்த குலத்தோர் பண்பு என்று விதுரர் கூறுகிறார்.

மேலும்  தொடர்கிறார்.

           " ஓ! மன்னா, வெறும் வெளியில்  ஆகாயத்தைத் தனது முட்டியால் உடைக்க நினைப்பவர்களைப் போல், வானத்தில் இருக்கும் ஆவி நிரம்பிய இந்திரவில்லை {வானவில்லை} வளைக்க முயல்பவர்களைப் போல், சூரியனின் அருவக் கதிர்களைப் பிடிக்க விரும்புபவர்களைப் போல்  பதினேழு வகையான  முட்டாள் மனிதர்களைக் குறித்துச் சுயம்புவின் மகனான மனு சொல்லியிருக்கிறார்.

பதினேழு வகையான மூடர்கள்

1 . கட்டுப்படுத்தப்பட இயலாதவனைக் கட்டுப்படுத்த முயல்பவன்.

2 . சிறு லாபங்களால் மகிழ்ச்சியடைபவன்.

3 . எதிரிகளிடம் பணிவாகப் பணி செய்பவன்.

4 . பெண்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி {அவர்களைக்} கட்டுப்படுத்த முயல்பவன்.

5 . கேட்கக்கூடாதவனிடம் தானம் கேட்பவன்.

6 . எதையும் செய்யாமலே, தன்னைப் புகழ்ந்து கொள்பவன் {தற்பெருமை பேசிக் கொள்பவன்}.
7 . உயர்ந்த குடும்பத்தில் பிறந்திருப்பினும், முறையற்ற செய்கையைச் செய்பவன்.

8 . பலமற்றவனாக இருந்து கொண்டு, பலமானவனிடம் எப்போதும் பகை பாராட்டி வருபவன்.

9  . ஏளனமாகக் கேட்டுக் கொண்டிருப்பவனிடம் பேசுபவன்.

10 . அடைய முடியாததை அடைய விரும்புபவன்.

11 . மாமனாராக இருந்து கொண்டு, தனது மருமகளிடம் கேலி செய்பவன். தனது மருமகளால் தனது அச்சங்கள் அனைத்தும் விலகியதாகத் தற்பெருமை பேசுபவன்.

12 . தனது வித்துகளை வேறு நிலத்தில் சிதற விடுபவன். {பிறர் மனைவியரை பலவந்தமாய் அடைபவன்}.

13 . தன் மனைவியைக் குறித்து பிறரிடம் தவறாகப் பேசுபவன்.

14 .  பிறரிடம் இருந்து எதையும் பெற்றுக் கொண்டு, அது நினைவில்லையே என்று சொல்பவன்.

15 . புனித இடங்களில் தானமளித்துவிட்டு, வீட்டில் தன் வார்த்தைகளால் {அவற்றைச் சொல்லித்} தற்பெருமை பேசுபவன்.

16 . பொய்மையை உண்மை என்று நிறுவ முயல்பவன்

17 . பெண்களால் வரும் பொருளைக் கொண்டு பிழைப்பவன்.

ஆகியோரே அந்தப் பதினேழு வகையான மூடர்கள் ஆவர்.இவர்களால் எப்போதும் இவர்கள் உடன் இருப்பவர்களுக்கு ஆபத்து தான். கரங்களில் சுருக்குக் கயிறுகளோடு {பாசங்களோடு} வரும் யமனின் தூதர்கள், முதலில் அம்மனிதர்களை நரகத்திற்கு இழுத்துச் செல்வார்கள்.

அழிவை தரும் மூடர் நடத்தை

 முதுமை, அழகைக் கொல்கிறது {அழிக்கிறது};

பொறுமை, நம்பிக்கையையும்;

மரணம், வாழ்வையும்;

அறப்பயிற்சி, உலகம் சார்ந்த இன்பங்களையும்;

காமம், தன்மானத்தையும் {அடக்கத்தையும்};
தீயோர் தோழமை, நன்னடத்தையையும்; கோபம், செழுமையையும்;

செருக்கு அனைத்தையும் கொல்லும் {அழிக்கும்}" என்கிறார்  விதுரன்.

மரணத்தை துரிதப்படுத்தும் குணம்

          திருதராஷ்டிரன் விதுரனிடம் , "நூறு ஆண்டுகள் வாழ்நாள் {ஆயுள்} கொண்டவன் என்று மனிதன் வேதங்களில் பேசப்படுகிறான். அப்படி இருக்கையில், மனிதர்கள் அனைவரும் அந்தக் குறிப்பிட்ட வயதை அடைவதில்லை. ஏன் நூறு வயது வரை வாழ்வதில்லை? " என்று கேட்டான்.

அதற்கு விதுரன்  "அதிகமான செருக்கு, அதிகமான பேச்சு, அதிகமாக உண்ணுதல், கோபம், இன்பத்தில் விருப்பம், உட்பகை ஆகிய ஆறும் மனித உயிரினங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆயுள் காலத்தை அறுக்கும் {ஆறு} கூரிய வாட்களாகும். இவையே மனிதர்களைக் கொல்கின்றன; மரணம் அல்ல. மனிதர்கள் தங்கள் முறையற்ற நடத்தை மற்றும் வாழ்க்கை முறைகளாலேயே மரணத்தை விரைவில் தேடிக் கொள்கின்றனர்.

தனக்கென தரப்பட்ட ஆயுள் காலம் வரை வாழ யாருக்கு பரிகாரம் தேவை

             தன் மேல் நம்பிக்கை கொண்ட ஒருவனுடைய மனைவியின் உறவை  நாடுபவன் {தன்னை நம்பியவனின் மனைவியை அடைபவன்};

              தனது ஆசானின் படுக்கையில் அத்துமீறி நடப்பவன் {குருவின் மனைவியை அடைபவன்},

         சூத்திரப் பெண்ணின் கணவனாகவோ, மது குடிப்பவனாகவோ உள்ள பிராமணன்;

         அந்தணர்களை நிந்திப்பவன், அல்லது அவர்களுக்குத் தலைவனாக ஆகிற வேறு வர்ணத்தைச் சார்ந்தவன்  ( அல்லது) அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் {அந்தணர்களின் வாழ்வாதாரங்களாக இருக்கும்} நிலங்களை அபகரிப்பவன்;

              தன்னிடம் சரணடைந்தவர்களின் உயிரை எடுப்பவன் ஆகியோர் அனைவரும் அந்தணர்களைக் கொன்ற பாவத்தைச் செய்த குற்றவாளிகளாவர்.

          இது போன்ற மனிதர்களுடன் தொடர்பு ஏற்பட்டால் தொடர்பு கொண்டவர்கள் தனக்கென தரப்பட்ட ஆயுள் காலம் வரை வாழ  பரிகாரம் தேவை பரிகாரம் தேவை என்று வேதங்கள் கூறுகின்றன.

தனக்கென தரப்பட்ட ஆயுள் காலம் வரை வாழும்  யாருக்கு சொர்க்கம் கிடைக்கும்

               ஞானிகளின் கற்பித்தல்களை {போதனைகளை} ஏற்றுக் கொள்பவன்;
            அறநெறிகளின் விதிகளை அறிந்தவன்; பரந்த மனமுடையவன் {தானமளிக்கும் தயாளன்};

                  முதலில் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் உணவை அர்ப்பணித்த பிறகு உண்பவன்;

               யார் மேலும் பொறாமை கொள்ளாதவன்;

⚘                  பிறருக்குத் தீங்கை ஏற்படுத்தும் எதையும் செய்ய இயலாதவன்;

            நன்றி, உண்மை, எளிமை, கல்வி ஆகியவற்றுடன் இருப்பவன் போன்ற நற்குணங்களை தன் வாழ்நாள் முழுவதும் பின்பற்றுபவர்களே  தனக்கென தரப்பட்ட ஆயுள் காலம் வரை வாழ்ந்து சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்.

நல்லோர் எப்போது தியாகம் செய்யலாம்?

                        எப்போதுமே இனிமையான வார்த்தைகளைப் பேசும் நல்லோர்  பலர் உண்டு. எனினும், இனிமையற்ற, ஆனால் மருத்துவக் குணம் கொண்ட வார்த்தைகளைப் பேசுவோரும், கேட்போரும் கிடைப்பதரிது.

                 தனது தலைவனால் ஏற்கத்தக்கது, தகாதது எனக் கருதாமல், அறத்தை மட்டுமே கண்டறிந்து , கசப்பாக  இருப்பினும், மருந்தாக இருப்பவற்றைச் சொல்லும் நல்லோர்  எப்போதும்  அந்த  நாட்டுக்கும் நாட்டு மன்னனுக்குமே  பலத்தையே சேர்க்கிறான். நாட்டு மக்களுக்கு நன்மை தரக்கூடிய ஒரு விசயம் கிடைக்குமானால்

        ஒரு குடும்பத்துக்காக, அதன் உறுப்பினர் ஒருவரைத் தியாகம் செய்யலாம்;

        ஒரு கிராமத்துக்காக, ஒரு குடும்பத்தைத் தியாகம் செய்யலாம்;

          ஒரு நாட்டுக்காக ஒரு கிராமத்தைத் தியாகம் செய்யலாம்;

            ஒருவனது ஆன்மாவுக்காக, முழுப் பூமியையும் கூடத் தியாகம் செய்யலாம்.

யாரார் எதை பாதுகாக்க வேண்டும்?

         தனக்கு {வருங்காலத்தில்} வரக்கூடிய துன்பங்களை நோக்கில் கொண்டு, ஒருவன் தனது செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும்;

                  தனது செல்வத்தைக் கொண்டு ஒருவன் தனது மனைவிகளைப் பாதுகாக்க வேண்டும்.

         தனது செல்வம் மற்றும் மனைவிகளைக் கொண்டு ஒருவன் அவற்றினைக் கொண்டு தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

சூதாட்டம்

               சூதாட்டம் சண்டைகளைத் தூண்டி விடும் என்பது பழங்காலத்தில் இருந்தே காணப்படுகிறது. எனவே, ஞானமுள்ள ஒருவன், வேடிக்கைக்காகக் கூட  சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது.

 பாண்டவர்கள் கௌரவர்கள் இடையே நடந்த  சூதாட்டத்தின் போது, ஓ! மன்னா, நான் உம்மிடம், "இது சரியல்ல" என்று சொன்னேன்.நோயாளி மருந்தை விரும்பாதது போல, அப்போது எனது வார்த்தைகள் உமக்கு ஏற்புடையனவாக  இல்லை.

                பலவண்ணத் தோகை கொண்ட மயில்களைப் போல ஒற்றுமையாக இருக்கும் பாண்டுவின் மகன்களை நீர் வீழ்த்த விரும்புகிறீர். உமது மகன்கள் அனைவருமோ வெறும் காக்கைகளாக இருக்கின்றனர். சிங்கங்களைக் கைவிட்டு, நரிகளைப் பாதுகாக்கிறீர்! ஓ! மன்னா, நேரம் வரும்போது, இவை அனைத்துக்காகவும் நீர் வருந்த வேண்டி வரும்" என்று எச்சரிக்கை செய்கிறார்.

            அவரது எச்சரிக்கையால் மனம் நொந்த திருதராஷ்டிரர் , " காக்கைகள் , சிங்கங்கள்  , நரிகள் என எதைக் கூறுகிறீர்கள்  ? " என கேட்கிறார்.

No comments:

Post a Comment