Thursday, July 16, 2020

Pattinathar songs in tamil


பட்டினத்தார் J K SIVAN
ஞாபகத்தில் வை....

பட்டினத்தார் பற்றி எழுதினால் படிக்க உங்களுக்கு பிடிப்பது போல எழுத எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரைப்பற்றி நிறைய எழுதலாம். ஒரு ஆபத்து என்னவென்றால் நிறைய அவரையே சிந்தனையில் தேக்கி எழுத, படிக்க ஆரம்பித்தால் நாமும் வேட்டியை கிழித்து கோவணமாக தரித்து, வீட்டை விட்டு கிளம்பிவிடுவோம்... அந்த அளவுக்கு உலக வாழ்க்கையின் மாயையை புட்டு புட்டு வைப்பவர். நல்லவேளை கொரோனா விடு முறை காலம் என்பதாலும், வீட்டை விட்டு வெளியே போகமுடியாது, போலீஸ் விடாது என்பதாலும் பட்டினத் தாரைப் பற்றி , பற்றின்மையை, பற்றி தொடர்வோம்.
பட்டினத்தார் என்கிற திருவெண்காடர், ஒரு பெரிய வேதாந்தி. மிகப்பெரிய பணக்காரன், கப்பல் வியாபாரம் செயது காவிரிப்பூம் பட்டினத்தில் வாழ்ந்த வணிகன். காதறு ந்த ஊசியும் கடை வழி வாராது காண் என்று மகன் மருத வாணன் (திருவெண்காட்டு ஆலய சிவனே மகனாக வந்தவர்) எழுதிய ஓலை நறுக்கு அவரை முற்றிலும் புரட்டிப்போட்டது. ( காவிரிப்பூம்) பட்டினத்தார் என்று எல்லோரா லும் அழைக்கப்பட்டார். நமது சென்னையில் திருவொற்றியூரில் சமாதி அடைந்தவர். இன்றும் அங்கே அவர் சமாதி கோவில் இருக்கிறது. அவரைப் பற்றி நிறையவே எழுதியிருக்கிறேன்.
பட்டினத்தார் பாடல்களுக்கு தனியாக விளக்கம் தேவை இல்லை. எளிதில் புரிகிற தமிழ். அர்த்தம் ஆழமானது. எளிய தமிழ்ச் சொற்கள். இன்று சிலவற்றை ரசிப்போம்.

நினைமின் மனனே ! நினைமின் மனனே
சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே ! நினைமின் மனனே
அலகைத் தேரின் அலமரு காலின்உலகப்
பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க !

தம்பி நினைவு கொள் , சிவனை மறந்தவர் எவர் வாழ்ந்தார்? சிவனை நினைத்தவர் எவர் தாழ்ந்தார்? இந்த உடம்பை நினைத்து நாளைப் போக்குகிறாயே. இது பேய்த்தேர். கண்மூடி கண் திறப்பதற்குள் காணாமல் போகக் கூடியது. இதுவா சாஸ்வதம்? வயிற்றைப் பற்றி நினைக்காமல் வைத்யநாதனை நினை. உடம்பை பற்றிய எண்ணமே வேண்டாம். எண்ணத்தில் உமாமகேஸ்வரன் நிரம்பட்டும்.

பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்;

இந்த உலகத்தில் வாழும் எல்லா உயிர்களுக்கும் ஒரே ரூல் தான். பிறப்பு X பிறப்பு, தோற்றம் X மறைவு, பெரிசு X சிறிசு, நினைவு X மறதி, சேர்வது X பிரிவது, இன்பம் x துன்பம், இதெல்லாம் மாறி மாறி வந்தே தீரும். ஒன்றுக்கு மகிழ்வது இன்னொன்றுக்கு அழுவது வேண்டாம். ரெண்டையும் சமமாக மதிக்கும் ''மதி'' வேண்டும்.

அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்;
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்;
என்றிவை அனைத்தும் உணர்ந்தனை; அன்றியும்;
பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும்
கொன்றனை அனைத்தும், அனைத்து நினைக்கொன்றன.

ஐயாமார்களே , கவனம் வையுங்கள். இன்று சாப்பிட்ட பாதாம் அல்வா நாளை காலை ???? FLUSH OUT பண்ணாமல் அந்த பக்கமே போகமுடியாது. இன்று எது பிடிக்குமோ மறு நாள் அது பிடிக்காமல் போகிறது. அப்படியும் திரும்பி திரும்பி பல பிறவிகளில் நாம் மாறாமல் செய்ததையே செய்கிறோமே. நாம் ரொம்ப பிடித்து செய்தது, சொன்னது, தின்றது, எல்லாமே திரும்ப சிலகாலம் கழித்து சர்க்கரையாக, புற்று நோயாக நமக்குள் வளர்ந்து நமக்கு வேட்டு வைத்து கொல்கிறது இல்லையா?

தின்றனை அனைத்தும், அனைத்து நினைக் கொன்றன;
பெற்றனை அனைத்தும், அனைத்து நினைப் பெற்றன;
ஓம்பினை அனைத்தும், அனைத்து நினை ஓம்பின;
செல்வத்துக் களித்தனை, தரித்திரத்து அழுங்கினை;
சுவர்க்கத்து இருந்தனை, நரகில் கிடந்தனை;

இனிப்பு நிறைய சாப்பிட்டாயே , இப்போது இனிப்பு உன்னை தின்கிறதே! முற்பகல் நீ செய்தது உன்னை பிற்பகலில் ஆட்டுவிக் கிறதே. பார்க்கிறோமே நிறைய பேர் தவிப்பதை. எதை நீ தேடி சென்றாயோ, அது உன்னை தேடி விஸ்வரூபத்தில் வந்து வாட்டு கிறதே. செல்வந்தனாக இருந்தாய். அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாமல் போனாய். படமெடு த்தவன், கிண்டியில் குதிரை வாலில் பணம் கட்டியவன், சீட்டாட் டத்தில் வீடு தோட்டம் எல்லாம் துறந்தவன், லாட்டரி சீட்டில் கோட்டை விட்டவர் எனக்கு தெரிந்து பலபேர். ஸ்வர்கத்தில் உனக்கு ஈடு இணை எவரும் இல்லை என்று கொடிகட்டி பறந்தாய். இதோ இப்போது எங்கே இருகிக்கிறாய்? இது நரகம் இல்லையென்றால் வேறு எது தம்பி சொல் ?

''இன்பமும் துன்பமும் இருநிலத்து அருந்தினை;
ஒன்றொன்று ஒழியாது உற்றனை; அன்றியும்,
புற்புதக் குரம்பைத் துச்சில் ஒதுக்கிடம்
என்னநின் றியங்கும் இருவினைக் கூட்டைக்
கல்லினும் வலிதாகக் கருதினை; இதனுள்
பீளையும் நீரும் புறப்படும் ஒருபொறி;
மீளுங் குறும்பி வெளிப்படும் ஒரு பொறி
சளியும் நீரும் தவழும் ஒருபொறி;
உமிழ்நீர் கோழை ஒழுகும் ஒருபொறி;
வளியும் மலமும் வழங்கும் ஒருவழி;
சலமும் சீயும் சரியும் ஒருவழி;
உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறும்
சட்டகம் முடிவில் சுட்டெலும் பாகும்
உடலுறு வாழ்க்கையை உள்ளுறத் தேர்ந்து,
கடிமலர்க் கொன்றைச் சடைமுடிக் கடவுளை''.''

இதை எழுதுவதற்கே கொஞ்சம் அரு வறுப்பாகவும் பயமாகவும் இரு க்கிறதே. படிக்கும்போது உங்களுக்கு அப்படி இருக்காதா? அதனால் அதிகமாக விளக்கி ஓடிவிடும்படியாக செய்ய வில்லை

பன்னீரில் குளித்து, ஜவ்வாது சென்ட் உடலில் பூசிக்கொண்டு பட்டு சட்டை வேஷ்டி ...பாதம் ஹல்வா, பாதாம் கீர்,... தங்கத்தட்டில் சாப்பிட்டு உடம்பை வளர்த்தாயே, இப்போது நன்றிமறந்து அது உனக்கு என்ன செய்கிறது பார்தாயா? சீழும் ரத்தமும், பீளை, மலம், சளி, இருமல், வியாதி பிண்டமாக இருக்கிறாய். அருகே வரமுடியாமல் நாற்றமெடுத்து அசைய முடியாமல் கிடக்கிறாய். நீ வளர்த்த உடம்பு சுடுவதற்கு தயாராகி விட்டது. எலும்பு மட்டுமே கொஞ்சூண்டு . மற்றது எல்லாமே சாம்பல். இப்போது புரிந்து கொள்கிறாயா எதற்கு முக்யத்வம் கொடுக்கவேண்டும் என்று. சாம்பலை பூசி சன்மார்க்க ஞானம் தரும் சம்புவை பிடித்துக்கொள்.

பட்டினத்தாரை ரொம்ப பிடிக்கிறது இல்லை யா? . இப்படி சுலபமாக தமிழில் எழுத நமக்கு வருமா?
Image may contain: people standing and indoor

No comments:

Post a Comment