ஸ்ரீமத்பாகவதம் தசமஸ்கந்தம்
அத்தியாயம் 14
பிரம்மாவின் ஸ்துதியை சுருக்கமாகப் பார்க்கலாம்.
" மாயாவியாகிய உம்மையே உம்முடைய மாயையில் ஒரு சிறு பொறியான நான் மாயையால் சோதிக்க விரும்பியதை மன்னித்தருள வேண்டுகிறேன்.
நான் ஸ்ருஷ்டிகர்த்தா என்ற கர்வம் கொண்டு உமது மஹிமையை அறியாது செய்த குற்றத்தைப் பொறுத்தருள வேண்டும். இப்போது உம்மையல்லாத உலகம் பொய் என்பது நிரூபிக்கப்பட்டது. இவ்வாறு சகல ஜீவ ராசிகளுக்கும் ஆத்மாவானஉம்மை எவர்கள் உபனிடதம் என்ற கண்களைக் கொண்டு தமக்குத் தாமாகவே பார்க்கிறார்களோ அவர்களே சம்சார்மாகிய மாயக்கடலைத் தாண்டுகிறாரகள்
.
பரமாத்மாவாகிய உம்மை வேறாக நினைத்து வேறாயுள்ள உடல் முதலியவைகளைத் தாமாக நினைப்பது அறிவீனம்.நல்ல ஞானம் படைத்தவர்கள் சரீரம் முதலியவைகளை உண்மை அல்ல கயிற்றில் தோன்றிய பாம்பை விலக்குவது போல விலக்கி உம்மை சரீரத்திலேயே காண்கிறார்கள்.
உமது திருவடித்தாமரையை ஸேவித்து ஒரு துளியாவது அருள பெற்றவன் மட்டுமே உமது மகிமையை உள்ளபடி அறிவான். மற்றவன் எவ்வளவு காலம் தேடினாலும் அறிய மாட்டான்.
பரமானந்த ஸ்வரூபரும் பரிபூரணரும், பரப்ரம்மமும் ஆன உம்மைத் தோழராகப் பெற்ற கோகுல வாசிகளின் பாக்கியமே பாக்கியம்.
பூதனை போன்றவர்களே மோக்ஷம் அடைந்திருக்கையில் தம் உடல் பொருள் ஆவி அனைத்தும் உமக்கு சமர்ப்பித்த இவர்கள் உம்மையே அடைவதன்றி வேறு என்ன பயன் இருக்க முடியும்?
எந்த பகவானுடைய பாத தூளியானது இன்றும் வேதத்தால் தேடப்படுகிறதோ அவர் ப்ருந்தாவனத்தில் வியாபித்திருக்கிறார்., ஆகவே இங்கு ஏதாவது பசு பக்ஷி செடி கொடி முதலிய பிறவி வாய்ப்பது சிறந்தபாக்கியம் ஆகும். பற்றற்றவரான நீர் உம்மைச் சரண் அடைந்தவர்களின் ஆனந்தத்தை வளர்க்கவே பூவுலகில் இந்த நாடகத்தை நடிக்கிறீர்.
இவ்வாறு துதித்த பின் பிரம்மதேவர் க்ருஷ்ணனை நமஸ்கரித்துத் தன் இருப்பிடம் சென்றார். அதன்பின் க்ருஷ்ணன் முன்பிருந்த கன்றுகள் தோழர்கள் இவர்களை அழைத்துக்கொண்டு முன்னர் விளையாடிய மணல்திட்டுக்குச் சென்றார். கண்ணனை விட்டுப் பிரிந்துஒரு வருடம் ஆகியும் அவன் மாயையால் அவர்கள் அதை ஒரு கணமாகக் கருதினர். பின்னர் கோகுலம் திரும்பியதும் அவர்கள் கண்ணனால் ஒரு மலைப் பாம்பு கொல்லப்பட்டது இன்று என்று அது அப்போதுதான் நடந்ததாக நினைத்துக் கூறினர்.
பரீக்ஷித் இதைக் கேட்டு த் தன் குழந்தைகளிடம் உண்டாகாத ப்ரேமை கண்ணனிடம் எல்லோருக்கும் எப்படி உண்டாயிற்று என்று கேட்க , சுகர் கூறலுற்றார்.
"எல்லாப்பிராணிகளுக்கும் அவரவர் ஆத்மாதான் மிகப் பிரியமானது. மற்றவை எல்லாம் ஆத்மாவுக்கு சுகசாதனமாக இருப்பதால் தான் பிரியமானவை ஆகின்றன. இந்தக் கிருஷ்ணன் எல்லாப்ராணிகளுக்கும் ஆத்மாவாக இருப்பதால் அவரே எல்லாவற்றைக் காட்டிலும் பிரியமானவராக ஆகிறார்.
எல்லாப் பொருள்களுக்கும் உண்மையான இருப்பு அதன் காரணத்தில் இருக்கும். ( அதாவது மண்ணாலானவை எல்லாம் மண்ணே என்பது போல.) அந்தக் காரணத்திற்கும் காரணம் கிருஷ்ண பகவானே, ஆகையால் கிருஷ்ணன் இல்லாத வஸ்து என்பது எதுவும் இல்லை
.
' ந வாஅரே பத்யு: காமாய பதி: ப்ரியோ பவதி , ஆத்மனஸ்து காமாய ,' (ப்ருஹதாரண்யக உபனிஷத்)
இதில் கணவன் அவனுக்காக் விரும்பப்படுவதில்லை , தன் ஆத்மாவுக்கு பிரியமானதினால்தான் , என்று கூறி, மனைவி, புத்திரன், செல்வம் முதலிய எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக எடுத்து எல்லாம் ஆத்மாவை நாம் நேசிப்பதால்தான் என்று கூறப்படுகிறது.
இதை எளிதாகப்புரிந்து கொள்ளலாம் . முதலில் பிரியமானவர் இறந்தாலும் அவருடன் நாம் போவதில்லை . அதுவரை நேசித்தது தேகமானால் அதை உயிர் போனபின் ஒரு நொடியும் வீட்டில் வைக்க விரும்புவதில்லை. இரண்டாவது, எவ்வளவு பிரியம் வைத்திருந்தாலும் எந்த உறவும் தமக்குப் பிடிக்காத காரியம் செய்யும்போது அவர்கள் மேல் வைத்த பிரியம் போய் விடுகிறது. அது ஏன் என்றால் பிரியம் என்பது இது அல்லது இவர் என்னுடையது , என்னுடையவர் என்ற எண்ணத்தினால்தான் . அதற்கு மாற்றாக ஏதாவது நடக்கையில் பிரியம் போய்விடுகிறது.
நான் என்பது நம் தேகத்தைத் தாண்டிய ஒரு உணர்வு. என் தேகம் ,என் மனம், என் உயிர் இப்படி ஒவ்வொன்றாக்க் கடந்தால் எஞ்சியுள்ளது ஆத்மாவேயாகும்.அதனால் தான் பிரியம் என்பது ஆத்மாவுடம் சென்று முடியும் . பகவான் எல்லோருடைய ஆத்மாவாக இருப்பதால் அவனிடத்து அன்பு செலுத்தும்போது மற்ற எதுவும் பொருட்டில்லை என்றாகிறது.
No comments:
Post a Comment