ஶ்ரீமத்பாக்வதம் - தசமஸ்கந்தம்
அத்தியாயம் 11
நந்தன் முதலியவர்கள் மரங்கள் விழ்ந்த சப்தத்தைக் கேட்டு இடிவிழுந்ததோ என்று பயந்தவர்களாய் அங்கு வந்தனர். அது எதனால் நிகழ்ந்த்து என்று அறியமுடியாமல் திகைத்த அவர்களிடம் கோபச்சிறுவர்கள் இருமரங்களிடை உரலை குறுக்காக கண்ணன் இழுத்துச்சென்றதால் மரங்கள் முறிந்து விழுந்தன என்றும் அதிலிருந்து இரு தேவ புருஷர்கள் வந்ததை ப் பார்த்ததாகவும் கூறியதை மற்றவர்கள் நம்பவில்லை.
கயிற்றால் கட்டப்பட்டு உரலை இழுத்துக் கொண்டு இருந்த புத்திரனைப் பார்த்து நந்த கோபர் சிரித்து அவனை அவிழ்த்துவிட்டார்.
ஓரு சமயம் ஒரு கூடைக்காரி பழம் விற்றுக்கொண்டு வருவதைப் பார்த்து ஸர்வ பல ப்ரதனாகிய கண்ணன் பழம் (பலம்) விரும்பி அவளிடம் கையில் தானியத்தை எடுத்துக் கொண்டு சென்றான். (அக்காலத்தில் பண்டமாற்று முறையில் தானியம் கொடுத்து வாங்குவது வழக்கம்)
ஆனால் கை நிறைய தானியம் எடுத்துச்சென்றும் கூடைக்காரியிடம் ஓடிச் சென்றதால் கையில் இருந்து தானியங்கள் விழுந்து விட்டன. சொற்பமே மீதி இருந்தது. ஆனால் பழக்காரி அவனுடைய கையில் சங்கு சக்கர ரே கையைக் கண்டு தன்னையே அவனுக்குக் கொடுக்க விரும்பினாள்.
அவனுடைய இரு கையிலும் பழங்களை நிரப்பினாள். உடனே அவளுடைய கூடை ரத்தினங்களால் நிரம்பியதாக ஆயிற்று. பகவான் எவ்வளவு விலையுயர்ந்த பொருள் கொடுத்தாலும் அதைவிட நம் இதயத்தைத்தான் விரும்புகிறான் அல்லவா?
தேசிகர் கூறுகிறார்
ஆரண்யகானாம் ப்ரபவ: பலானாம் அரண்யஜாதானி பலானி அபீப்ஸன்
ஆரண்யகம் எனப்படும் உபநிஷத்துக்களின் பலனைத் தருபவன் ஆரண்யக பலன்கள் அதாவது காட்டில் விளைந்த பழங்களை விரும்பினானானாம்.
ஆபூரிதம் ஸ்வாதுபலார்ப்பணேன க்ரீடாசிசோ: ஹஸ்தபுடம் கிராதீ
ரத்னை: ததா கௌஸ்துபநிர்விசேஷை: ஆபூரிதம் தத்பலபாண்டம் ஆஸீத்
(யாதவாப்யுதயம்)
இனிய பழங்களால் குழந்தையாக லீலை செய்தவனின் கரங்களில் நிரப்பினாள் . அப்போது கௌஸ்துபத்தின் மதிப்பிற்குக் குறையாத ரத்தினங்களால் அவளுடைய கூடை நிரப்பபட்டது.
தாயான யசோதை கண்ணனை எப்படியெல்லாம் அனுபவித்தாள் என்பதை பாகவதம் சுருக்கமாகக் கூறுகிறது.
கண்ணன் தன் நண்பர்களுடன் நெடு நேரமாக விளையாடிக் கொண்டிருக்கிறான். அவ்னை யசோதை உணவு உண்ண அழைக்கிறாள்.
ப்ரதீக்ஷதே த்வாம் தாசார்ஹ போக்ஷ்யமாணோ வ்ரஜாதிப:
ஏஹி ஆவயொ: ப்ரியம் தேஹி ஸ்வக்ருஹான் யாத பாலகா:
" உன் தந்தை சாப்பிடுவதற்கு உனக்காக காத்திருக்கிறார். சீக்கிரம் வந்து எங்களை மகிழ்விப்பாய். குழந்தைகளே நீங்கள் உங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள். "
பிறிதொரு சமயம் கண்ணனை நீராட அழைக்கிறாள்.
பச்ய பச்ய வயஸ்யான் தே மாத்ரும்ருஷ்டான் ஸ்வலங்க்ருதான்
த்வம் ச ஸ்னாத: க்ருதாஹார: விஹ்ரஸ்வ ஸ்வலம்க்ருத:
" கண்ணா, உன் நண்பர்களைப் பார் . அவர்கள் தாய்மார்களால் குளிப்பாட்டி அலங்காரம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். நீயும் வந்து ஸ்னானம் செய்து அலங்கரித்துக் கொண்டு விளையாடச் செல்."
இந்த சம்பவங்களை எல்லாம் அனுபவித்து யசோதையின் பாவத்தில் பெரியாழ்வார் அற்புதக் காவியம் புனைந்துள்ளார்
சுகர் கூறுகிறார் ,
இத்தம் யசோதா தம் அசேஷ சேகரம் மத்வா ஸுதம் ஸ்னேஹநிபத்ததீ ந்ருப
ஹஸ்தே க்ருஹீத்வா ஸஹராமம் அச்யுதம் நீத்வா ஸ்வவாடம் கதவத்யதோதயம்
அரசே, இவ்வாரு அன்பினால் கட்டுண்ட மனத்தளாய் யசோதை பரம்பொருளானவனை தன் பிள்ளை என்று எண்ணி பலராமனுடன் கண்ணனைக் கையில் பிடித்துக்ககொண்டு வீட்டில் ஸ்னானம் முதலியவைகளை செய்வித்தாள்.
பின்னர் நந்தகோபர் மற்றும் முதியவர்கள் கோகுலத்தில் கம்சனால் ஏற்பட்ட தீமைகளை நினைந்து வேறிடம் செல்ல உத்தேசித்தனர். புதிய காடுகள்,மலைகள் புல் பூண்டுகள் உள்ள ப்ருந்தாவனம் செல்ல தீர்மானித்து வண்டிகளைப் பூட்டி சாமான்களுடனும் பசுக்களுடனும் புறப்பட்டனர்.
அடுத்து ப்ருந்தாவன லீலைகள் தொடரும்.
No comments:
Post a Comment