மனுஸ்மிருதியில்
'ரிஷயோ தீர்க்க சந்த்யாவாத் தீர்க்கமாயுர் அவாப்நுயு ப்ரக்ஞாம்
யசச்ச கீர்த்திம் ச பிரஹ்ம வர்ச்சஸ மேவச'
என்று இருக்கிறது.
இதன் அர்த்தம் என்ன என்றால், ரிஷிகள் தீர்க்காயுள், ஞானம், தேஜஸ் அடைந்ததற்குக் காரணம் அவர்கள் விடாமல் செய்து வந்த சந்த்யா வந்தனத்தின் பலன்தான். சந்த்யாவந்தனத்தின் பலனைத் தெரிந்துகொள்ள இது ஒன்றே போதும். ஏராளமான பொருட்செலவு செய்து உபநயனம் செய்து வைத்தான் பலன் பூஜ்யமாகி விடாமல் பார்த்து கொள்வது இன்றைக்கு இருக்கிற பெற்றோர்கள் மற்றும் பெரியோர்களின் பொறுப்பாகும். அவர்கள்தான் இதைக் கண்காணிக்க வேண்டும்.
நம்முடைய பெரியோர்கள் சந்த்யாவந்தனத்தை ஒவ்வொரு காலத்திலும் தவறாமல் அதன் விதிப்படி செய்து வந்தார்கள். அதனால், அவர்கள் சகல வளங்களோடு வாழ்ந்தார்கள். ஆனால், இப்போதோ, ஆங்கில படிப்பு படித்த அநேகம் பேர், சந்த்யாவந்தனத்தை முறையாகச் செய்வதாகத் தெரியவில்லை. ஒருவேளை இதைச் செய்வது, நாகரீகக் குறைபாடு என்று கூட சிலர் நினைக்கிறார்கள்.
சந்த்யாவந்தனம் போன்ற கர்மாக்கள் முறையானபடி ஒழுங்காக நடைபெறாததன் காரணமாக இப்போது லோக க்ஷேமத்தில் குறைவு ஏற்பட்டிருக்கின்ற காரியங்கள் தோன்றி இருக்கின்றன. ஒருவர் சந்த்யாவந்தனத்தை ஒழுங்காகச் செய்வதால் அவருக்கு மட்டுமே அந்த நற்பலன் போய்ச் சேருவதில்லை. உலகில் இருக்கின்ற அனைவருக்குமே அந்தப் பலன் போய்ச் சேருகிறது. இதனால்தான், ராஜாக்கள் தங்கள் ராஜ்யத்தில் வசித்து வந்த அந்தணர்களைப் போற்றினார்கள். அவர்கள் தங்களது நித்ய கர்மாக்களைக் குறைவில்லாமல் செய்தால், நாட்டில் வளம் பெருகும் என்று அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தார்கள்.
தற்போதைய நிலையில் அக்னி மறையும் தருவாயில் இருக்கிறது. இனிமேலாவது எல்லோரும் சந்த்யாவந்தனத்தை ஒழுங்காகச் செய்ய ஆரம்பித்தால், மறைந்திருக்கும் அக்னி, பூர்ணஜ்யோதியை அடையும் என்பதில் சந்தேகம் இல்லை. இதன் மூலம் உலக நலன் வருத்தி ஆகும். எல்லா ஜீவராசிகளும் சந்தோஷத்தை அடையும்.
சைக்கிள் வேகமாகச் செலுத்தப்படும்போது, பெடல் பண்ணாது இருந்தாலும், கொஞ்சம் தூரத்திற்குத் தானாகவே சென்று கொண்டிருக்கும். அதுபோல சந்த்யாவந்தனம் போன்ற கர்மாக்கள் செய்யப்பட்டுத் திடீரென்று நின்று விட்டாலும், முன்னோர்கள் செய்த கர்ம பலத்தைக் கொண்டு இப்போது நன்றாக இருப்பது போலத் தோற்றம் அளிக்கும். ஆனால், அது நிலையானதல்ல.
தாமதமாகக் கிளம்பும் ஒருவன், தான் பிடிக்க வேண்டிய ரயிலைத் தவற விட நேர்ந்தால், போக வேண்டிய காரியம் நஷ்டம் ஆகி விட்டதே என்பதற்காக ரொம்பவும் வருத்தப்படுகிறான். ஆனால், உலக நலனுக்காகத் தான் செய்ய வேண்டிய சந்த்யாவன்தனக் கடமையை விட்டு விட்டால், அதற்காகக் கொஞ்சமும் வருத்தப்படாமல் இருக்கிறான்.
காயத்ரி மந்திரத்தைத் தினமும் குறைவு படாமலும், வசதிப்பட்டால் சொல்ல வேண்டிய அளவுக்கு அதிகமாகவும் ஒருவன் ஜபிக்க வேண்டும். இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. எவன் ஒருவன் ச்ரத்தையுடனும், பக்தியுடனும் காயத்ரி மந்திரத்தைத் தினமும் த்யான பூர்வமாக ஜபித்து வருகிறானோ, அவன் பக்தி ஸச்ரத்தையை அனுசரித்து, அதே ஜன்மாவிலோ அல்லது தொடர்ந்து வரும் ஜன்மாக்கள் ஒன்றிலோ மிகப் பெரிய பதவியை அடைகிறான்.
-காஞ்சிப் பெரியவர்
நன்றி:மகா பெரியவா, பி சுவாமிநாதன், த்ரிசக்தி பதிப்பகம்
No comments:
Post a Comment