Thursday, August 8, 2019

Worship of 6 chakras

அழகிய தமிழ் 83.
திருமந்திரம் தொடர்கிறது.

நாலும் இரு மூன்றும் ஈரைந்தும் ஈராறும்
கோவிமேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலம் கண்டு ஆங்கே முடிந்து முதல் இரண்டும்
காலம் கண்டான் அடி காணலுமே.

அக நிலைகள் ஆறு- நான்கு இதழ்கள் கொண்ட மூலம் [மூலாதாரம்], ஆறு இதழ்கள் கொண்ட கொப்பூழ் [ஸ்வாதிஷ்டானம்],  பத்து இதழ்கள் கொண்ட மேல் வயிறும் [மணிபூரகம்], பன்னிரண்டு இதழ்கள் கொண்ட நெஞ்சம் [அனாகதம்], பதினாறு இதழ்கள் கொண்ட மிடறு [கழுத்து அல்லது விசுத்தி], இரண்டு இதழ்கள் கொண்ட நடுப்புருவம் ஆகிய ஆறும் நினைந்து வழிபடக்கூடிய ஆறு ஆதாரங்களாகும். இந்த இடங்களில் மனதை நிலைப்படுத்தி வழிபட்டால் காலத்தைத் தோற்றுவித்த இறைவன் திருவடி தரிசனம் கிட்டும்.

ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தில்
மேதாதி நாதாந்த மீதாம் பராசக்தி
போதாலயத்து அ விகாரம் தனில் போத
மேதாதி ஆதார மீதான உண்மையே.
பன்னிரு கலைகள் [ஆதித்யர்கள்] உடையவன் சூரியன். பதினாறு கலைகள் கொண்டவன் சந்திரன்.மாதொருபாகனான சிவன், சூரிய மண்டலத்திற்கும், சந்திரமண்டலதிற்கும் மேலே வியாபித்திருக்கிறான். இதுதான் உண்மை.
இலிங்கமதாவது யாறும் அறியார்
இலிங்கமதாவது எண்டிசை எல்லாம்
இலிங்கமதாவது எண்ணெண் கலையும்
இலிங்கமதாக எடுத்தது உலகே.
எத்திசையும் பரவியிருப்பவன் சிவன். ஆய கலைகள் அறுபத்திநான்கிற்கும் தலைவன் அவன். அறிவதற்கரியவன். [பகவத் கீதையில் , அனைத்தும் நானே என்று கண்ணன் சொன்னதைப் போல] சூரியனில் ஒளி அவன் தான். நெருப்பில் வெப்பம் அவன் தான்.உடலில் சக்தி அவன் தான். தேனில் இனிமை அவன் தான். அம்மையப்பனாக , சிவலிங்கமாக உருவம் கொண்ட சிவனை வழிபடுவோம்.

No comments:

Post a Comment