ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 1௦ அத்தியாயம் 6
பூதனை நகரங்கள், கிராமங்கள், இடைச்சேரிகள் எங்கும் சென்று கம்சனின் ஆணைப்படி பிறந்த குழந்தைகளைக் கொன்றாள்
சுகர் கூறுகிறார்
ந யத்ர ஸ்ரவணாதீனி ரக்ஷோக்னானி ஸ்வகர்மஸு
குர்வந்தி ஸாத்வதாம் பர்த்து: யாதுதான்யஸ்ச தத்ர ஹி (பாக. 6.3.)
நல்லோர்களின் நாயகனாகிய பகவானைப் பற்றிய ச்ரவணம், கீர்த்தனம் முதலியவை ராக்ஷசர்களை நிக்ரஹம் செய்பவை. அவை எங்கு இல்லையோ அங்குதான் ராக்ஷசர்களுடைய கார்யம் நிறைவேறும்
.
ஆகாய மார்க்கமாய் இஷ்டமான வடிவில் செல்லவல்ல அந்த பூதனை தன்னை மானிடப் பெண்ணாக்கிக் கொண்டு கோகுலத்திற்கு வந்தாள்.
அதை சுகர் வர்ணிக்கிறார்.
கேசபந்த வ்யதிஷக்த மல்லிகாம்
ப்ருஹன்னிதம்ப தனுக்ருச்ர மத்யமாம்
வல்குஸ்மிதாபாங்க விஸர்கவீக்ஷிதை:
மனோஹரந்தீம் வனிதாம் வ்ரஜௌகஸாம்
கேசத்தில் மல்லிகை மலர்கள், பெருத்த ஸ்தனங்களுடன் சிறுத்த இடை, அழகிய புன்சிரிப்பு, நாணம் கலந்த பார்வை இவைகளுடன் கூடிய அவள் கோகுல மாதர்களின் மனதைக் கவர்பவளாக விளங்கினாள்.
பாலர்களைக் கொல்லும் பூதனை அங்கு குழந்தைகளைத் தேடுகையில் தெய்வவசமாக நந்தகோபர் வீடு வந்து அங்கு துஷ்ட நிக்ரஹம் செய்பவனும் ஆனால் தன் பராக்ரமத்தை மறைத்துக் கொண்டிருப்பவனும், நீறு பூத்த நெருப்பு போன்றவனுமான குழந்தையைக் கண்டாள்.
விபுத்ய தாம் பாலகுமாரிகாக்ரஹம்
சராசராத்மா ஆஸ நிமீலிதாக்ஷ:
ஆனந்தம் ஆரோபயத் அங்கம் அந்தகம்
யத்ரகம் ஸுப்தம் அபுத்தி ரஜ்ஜூதீ: (பா. 6.8)
சராசர ப்ரபஞ்சத்தின் ஆத்மாவான பகவான் குழந்தைகளைக் கொல்லும் அரக்கி என அவளை அறிந்தும் அறியாதவர் போல கண்மூடி இருந்தார். அரக்கியும் தன்னை முடிக்கப்போகும் அனந்தனை தூங்கும் பாம்பைக் கயிறென நினைத்து அறியாமையினால் எடுப்பது போல எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள். அவள் அழகில் மயங்கி யசோதையும் ரோஹிணியும் அவளை கண்ணனை மடியில் வைத்துக்கொள்ள அனுமதித்தனர்.
மடியில் வைத்துக் கொண்ட குழந்தைக்கு கொடிய விஷத்துடன் கூடிய தன் ஸ்தனங்களைக் கொடுத்தாள். அப்போது பகவான் ரோஷத்துடன் அதைக் கைகளால் பற்றி அவளுடைய உயிருடன் உறிஞ்சலானார். அப்போது அவள் "போதும் விடு விடு:" என்று கூவிக்கொண்டு கைகளையும் கால்களையும் உதறிக்கொண்டு கதறினாள். இப்படி அந்த அரக்கி பிராணனை விட்டுத் தன் சுய உருவுடன் பூமியில் விழுந்தாள்.
அவளுடைய மார்பில் பயமில்லாமல் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை கோபியர் நெஞ்சு துடிக்க விரைந்து வந்து எடுத்தார்கள். பிறகு பகவானுக்கு அவனுடைய நாமங்களாலேயே நியாஸம் செய்து ரக்ஷையை அணிவித்தார்கள். பின்னர் யசோதை குழந்தைக்குப் பாலூட்டித் தூங்க வைத்தாள்.
அச்சமயம் மதுரையில் இருந்து வந்த நந்தகோபர் பூதனையின் சடலத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்து வசுதேவர் வாக்கு உண்மையாகிவிட்டதை உணர்ந்து அவர் உண்மையில் ஒரு யோகியாக இருக்க வேண்டும் என்று கருதினார். கோகுல வாசிகள் அரக்கியின் சடலத்தை கோடலியால் வெட்டி அப்புறப்படுத்தி தீமூட்டினார்கள். அப்போது அவள் உடலிலிருந்து அகில் வாசனையுடன் புகை கிளம்பிற்று. கொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தவள் நற்கதி அடைந்தாள்.
சுகர் கூறினார்.
உலகம் போற்றும் உத்தமர்களால் போற்றப்படுபவனவும் பக்தர்களின் இதயத்தில் நிலை பெற்றநாவும் ஆன திருவடிகளால் எவளுடைய அங்கங்களை ஆக்கிரமித்து பகவான் பாலைப் பருகினாரோ அவள் அரக்கியாயினும் நற்கதி அடைந்தாள். அப்படி இருக்க அவருக்கு அன்புடன் பால் , தயிர், வெண்ணை முதலியவைகளைக் கொடுத்தவரைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ.
மேலும் சுகர் கூறியதாவது, இதைப் படிப்பவரும் கேட்பவரும் பரிபூர்ண பக்தியை அடைவர். அவருக்கு மறுஜன்மம் என்பது இல்லை.
No comments:
Post a Comment