ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 10-அத்தியாயம் 4
அத்தியாயம் 4
தேவகியின் பக்கத்தில் வைத்ததும் அந்தப் பெண்குழந்தை உரக்க அழ ஆரம்பித்தது. சேவகர்கள் அதைக்கேட்டு எழுந்து கம்சனிடம் சென்று தெரிவித்தனர். உடனே கம்சன் தலைவிரி கோலமாக வழியில் இடறியவனாக ( இது எல்லாம் அவனுக்கு வரப்போகும் ஆபத்திற்கு அறிகுறி) அங்கு விரைந்தான்.
தனக்கு இந்தப் பெண்குழந்தையையாவது விட்டு வைக்கச்சொல்லி பிரலாபிக்கும் தேவகியை பொருட்படுத்தாமல் அக்குழந்தையை அவளிடம் இருந்து பிடுங்கி காலைப் பிடித்துத் தூக்கி கல்தரையின் மேல் அடிக்க முயலுகையில் அந்தக்குழந்தை அவன் கையிலிருந்து விடுபட்டு ஆகாயத்தில் எட்டுகரங்களுடன் துர்க்கா தேவியாகக் காட்சி அளித்தாள்.
அவள் கம்சனிடம் கூறியது,
கிம் மயா ஹதயா மந்த ஜாத: கலு தவாந்தக்ருத்
யத்ர க்வ வா பூர்வசத்ரு:மா ஹிம்ஸீ: க்ருபணான் வ்ருதா(ஸ்ரீ. பா. 1௦.4.12)
"மூடா, என்னைக் கொல்லுவதால் உனக்காவது என்ன?உனது பூர்வசத்துரு உன்னைக் கொல்வதற்காகவே எங்கேயோ பிறந்திருக்கிறான். வீணாக ஒரு பாவமும் அறியாதவர்களை ஹிம்சிக்காதே. "
இதைக் கூறிவிட்டு துர்காதேவியானவள் வெவ்வேறு க்ஷேத்திரங்களில் வேறு வேறு பெயருடன் அருள் பாலிக்க விளங்குபவளானாள்.
தேசிகர் அவள் பேசியதைப் பின்வருமாறு வர்ணிக்கிறார்.
படு கபீரம் உதாரம் அனாகுலம் ஹிதம் அவிஸ்தரம் அர்த்யம் அவிப்லவம்
கடுமையாகவும், கம்பீரமாகவும், பெருந்தன்மையாகவும்,
கலக்கமற்றதாகவும், ஹிதமாகவும்,விரிவில்லாமலும், அர்த்தபுஷ்டியுடையதாகவும் இருந்தது.
"நான் தேவர்கள் , அசுரர்கள் எல்லோரையும் மோஹத்தில் ஆழ்த்துபவள். மதுகைடபர்களை அழித்த எம்பெருமானுக்குத் திரையானவள் . அவன் என்னைக் கொண்டு தன்னைப் பிறருக்கு காணாதபடி வைத்துக் கொள்கிறான்.உன்னைக்காட்டிலும் அதிக பலம் உள்ள சும்பன் நிசும்பன் என்றவர்களைக் கொல்ல அவனால் நான் ஏவப்பட்டவள்.என்னை நீ பாறையில் எறிந்தடிப்பதால் உனக்கு என்னவாகும்? "
இதைக் கூறிவிட்டு அவள் "தேவர்களின் விரோதிகளைக் கொல்பவன் நந்தகோபரின் இல்லத்தில் அவதரித்து இருக்கிறான். அவனே உன்னை அழிக்கப் போகிறான்." என்று கூறிச் சென்றாள்.
இது பாகவதத்தில் இருந்து மாறுபட்டு இருக்கிறது. அதில் யோகமாயை கிருஷ்ணன் எங்கு இருக்கிறான் என்று கூறவில்லை. ஆனால் தேசிகர் தைரியமாக அவன் இருப்பிடத்தைக் கூறியுள்ளது கம்சனால் அவன் இருப்பிடம் தெரிந்தாலும் ஒன்றும் செய்ய இயலாது என்பதைக் குறிப்பதுபோல் உள்ளது.
( இதை ஆரம்பித்த பின்னரே இன்று ஆடி வெள்ளி என்பதை உணர்ந்தேன். இன்று தேவியைப் பற்றி எழுத முற்பட்டது அவள் அருள் .)
அதைக் கேட்ட கம்சன் தன் தங்கைக்கும் அவள் கணவருக்கும் செய்த தீங்கை நினைத்து வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.அவர்களையும் சிறையில் இருந்து விடுவித்தான்.
பிறகு அவன் தன் மந்திரிகளைக் கூப்பிட்டு யோகமாயை கூறியதை தெரிவிக்க கொடியவர்களான அவர்கள் எங்கெங்கு குழந்தைகள் பிறந்துள்ளனவோ அவைகளைக் கொல்வோம் என்று கூறியதும் அல்லாமல் அந்தணர்களும், பசுக்களும், வேதங்களும் , தவம், சத்தியம் , புலனடக்கம், மன அமைதி, சிரத்தை, தயை , பொறுமை என்பவைகளும் யாகங்களும் ஹரியின் சரீரம் . ஆதலால் ரிஷிகளை இம்சிப்பதே அந்த விஷ்ணுவைக் கொல்வதற்கு உபாயம் என்று கூற காலபாசத்தால் பீடிக்கப்பட்ட கம்சன் அவ்வாறே செய்யத் துணிந்தான்.
அடுத்து கோகுலத்தில் கண்ணன் பிறந்த வைபவம் காணலாம்
ஸ்ரீமத்பாகவதம் -ஸ்கந்தம் 1௦ அத்தியாயம் 5
அத்தியாயம் 5
பெரிய மனம்கொண்ட நந்தகோபர் தனக்குப் பிள்ளை பிறந்த மகிழ்ச்சியுடன் வேதம் உணர்ந்த அந்தணர்களைக் கொண்டு குமாரனுக்கு புண்ணியாஹவசனம் ஜாதகர்மம் இவை செய்வித்தார்.
கோகுலத்தில் எல்லோரும் பலவகை வாத்தியங்களை முழங்கி ஒருவர் மேல் ஒருவர் தயிர் பால் நெய் ஜலம் முதலியவைகளை இறைத்துக் கொண்டு க்ருஷ்ணஈ பிறப்பைக் கொண்டாடினார்கள்.
நந்தகோபர் எல்லோருக்கும் வாரி வழங்குவதில் கல்பதருவையும் மிஞ்சிவிட்டார் என்று தேசிகர் கூறுகிறார்.
கண்ணன் பிறந்தது முதல் கோகுலம் பகவானுடைய வாசஸ்தானத்திற்குரிய எல்லா குணங்களும் செல்வங்களும் நிறைந்ததாய் லக்ஷ்மேதேவி ரமிக்கும் இடமாக விளங்கிற்று என்று சுகர் கூறினார்.
கிருஷ்ணன் கோகுலத்திற்கு வந்த பின் கன்றுகள் இறக்கவில்லையாம் பசுக்கள் ஆண்டாள் கூறிய படி வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் கொண்ட நீங்காத செல்வம் நிறைந்திருந்தது. திருடர் பயமோ நோய்களின் பாதிப்போ இன்றி கோகுலம் கிருதயுகத்தை ஒத்திருந்தது என்று தேசிகர் கூறுகிறார்.
பின்னர் நந்தகோபர் கம்சனுக்குக் கப்பம் கட்டுவதற்காக மதுரைக்குச் சென்றார்.அவர் வந்த செய்தி கேள்வியுற்று வசுதேவர் உத்தம நண்பரான அவரைக் காணச் சென்றார். குழந்தை இல்லாமல் வயது சென்று இனிக் குழந்தை பிறக்கும் என்ற ஆசையும் நீங்கிய பின் குழந்தைப் பேற்றை அடைந்த அவருக்கு வாழ்த்துக் கூறினார். பின் கண்ணனின் நலம் பற்றியும் பலராமனின் நலம் பற்றியும் விசாரித்தார்.
நந்தகோபர் வசுதேவருக்குப் பிறந்த அனைத்து புத்திரர்களையும் கம்சன் கொன்றதைப் பற்றியும் கடைசியாகப் பிறந்த பெண்ணும் சுவர்க்கம் சென்றுவிட்டதைப் பற்றியும் வருத்தம் தெரிவித்தார்.மேலும் அவர் கூறியது,
நூனம் அத்ருஷ்டநிஷ்டோ அயம் அத்ருஷ்டபரமோ ஜன:
அத்ருஷ்டம் ஆத்மன; தத்வம் யோ வேத ஸ ந முஹ்யதி
இவ்வுலகு காணமுடியாத சக்திக்குட்பட்டது. ஜனங்கள் அதையே நம்புகிறார்கள். காணமுடியாமல் இருந்துகொண்டு தனக்கு இன்பதுன்பங்களைத் தரும் புண்ணிய பாவங்களின் தத்துவத்தை எவன் அறிகிறானோ அவன் மயங்குவதில்லை.(பா. 5.3௦)
அப்போது அவரிடம் வசுதேவர் கப்பம் கட்டியபின் அதிகநாள் அங்கு தங்க வேண்டாம் என்றும், கோகுலத்தில் ஆபத்துக் குறிகள் தோன்றுகின்றன என்றும் கூறினார். அதைக்கேட்ட நந்தர் முதலிய கோபர்கள் அவரிடம் விடைபெற்று கோகுலத்திற்குத் திரும்பினர்.
இதற்கிடையில் பூதனை கம்சனால் அனுப்பப்பட்டு கோகுலம் வந்து சேர்ந்தாள்.
No comments:
Post a Comment