Wednesday, May 15, 2019

Vishnu Sahasranama 345 to 362 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணுஸஹஸ்ரநாமம்-36

345.அநுகூல: கூல என்றால் நதிக்கரை அனுகூல என்றால் எல்லையாகும் நதிக்கரை. கூலம் அனுவர்ததே இதி அனுகூல:.. பகவான் எதற்கு எல்லை ஆகிறான் என்றாகள் அது அன்புக்கே.

அனுகூலம் என்ற சொல்லின் சாமான்ய அர்த்தத்தில் பார்த்தால் அவன் பக்தர்களுக்கு அனுகூலமாக இருப்பவன். வடுகநம்பியின் உருவத்தில் ராமானுஜருக்கு சீடனாக இருந்தவன். பாண்டுரங்கனாக பக்தர்களுக்கு அவன் செய்யாத சேவையே இல்லை. பாண்டவர்களுக்கு சகல விதத்திலும் உதவியாக இருந்தது மட்டும் அன்றி கலியுகத்திலும் பல உதாரணங்களைப் பார்க்கிறோம்.

346.சதாவர்த்த: - ஆவர்த்த என்றால் சுழற்சி. படைப்பு , காத்தல், அழித்தல் என்ற சுழற்சியை செய்பவர். காலச்சக்கரத்தை சுழற்றுபவர். கர்மச்சுழலில் ஜீவர்களை மாயையால் யந்திரத்தில் போல உழலச்செய்கிறவர்.' ப்ராமயன் சர்வபூதானி யந்த்ராரூடானி மாயயா.' (ப. கீ )

347. பத்மீ- பத்மம் அதாவது தாமரையைக் கையில் உடையவன். இன்னொரு பொருள். பத்யதே இதி பத்ம அதாவது ஞானம். ஞானச்வரூபன். தாமரை தண்ணீரில் இருந்தாலும் தனியாக நிற்கிறது. அதே போல பகவான் சர்வவ்யாபியாக இருந்தாலும் ஆகாசம் போல எதிலும் ஒட்டுவதில்லை.

348. பத்மநிபேக்ஷண:- தாமரை போன்ற கண்களை உடையவன். தாமரை குளிர்ந்ததும் அழகியதும் ஆக இருக்கிறது, காலையில் மலர்ந்து இரவில் மூடும். அதுபோல பகவானின் கண்கள் சாதுக்களிடத்து குளிர்ந்து திறந்து இருக்கின்றது. துஷ்டர்களைக் கண்டால் மூடி விடுகிறது.

349. பத்மநாப: - ந பாதி இதி நப: அல்லது நாப: - காணமுடியாதது. பத்மம் அல்லது தாமரை காணப்படுவது. பத்மநாபன் என்றால் காணமுடியாதவன் ஆனாலும் காணப்படுபவன். எல்லோரிடத்திலும் அந்தர்யாமியாக காண முடியாமல் சூக்ஷ்மமாக இருக்கிறான். ஆனால் யோகிகளுக்கு ஸ்தூலமாகத் தெரிகிறான்.

பத்மநாபன் என்பதன் சாதாரண அர்த்தம் தாமரையை நாபியில் ஏந்தியவன் என்பது. அதில் பதினான்கு உலகங்கள் அடக்கம்

350. அரவிந்தாக்ஷ: - இது முன் சொன்ன பத்மநிபேக்ஷண: என்ற அர்த்தத்தில் தாமரைக்கண் உடையவன் என்று தோன்றினாலும் இதற்கு உள் அர்த்தம் என்ன என்று பார்த்தோமானால் அர என்றால் செல்வது. அரவிந்த என்றால் செல்லும் கதியுடைய என்று பொருள். இது சூரியனையும் சந்திரனையும் குறிக்கும் .அரவிந்தாக்ஷ: என்றால் சூரியனையும் சந்திரனையும் கண்களாக உடையவன்

351. பத்மகர்ப: - இதயமாகிய தாமரையில் அந்தர்யாமியாக உள்ளவன்

352. சரீரப்ருத்-சரீரம் பிப்ரதி இதி . இந்த பிரபஞ்சம் என்கிற சரீரத்தை உடையவன்.அதைப் போஷிக்கிறவன்.

353. மஹர்த்தி: -பெரும் செல்வம் உடையவர். அது என்னவென்றால் அவருடைய அனந்த கல்யாண குணங்களும் மகிமைகளும்தான். 
'நாந்தோ அஸ்தி மம திவ்யானாம் விபூதீனாம்,' என்னுடைய தேய்வசக்தியை விளக்கும் விபூதிகளுக்கு எல்லையே இல்லை. (ப. கீ. 1௦.40.)

354. ருத்த: -பரிபூர்ணத்வாத் ருத்த: -பரிபூரணமானவர் ஆதலால் ருத்த:

355. வ்ருத்தாத்மா- வ்ருத்த: என்ற சொல் முதியவர் என்ற பொருளில் உபயோகப்படுத்தப் பட்டாலும் அதற்கு முழுதும் வளர்ந்த என்றும் பொருள். மஹதோ மஹீயான் , (BIGGER THAN the BIGGEST)

356. மஹாக்ஷ: -அக்ஷ என்றால் சக்கரம் அதாவது வண்டிச்சக்கரம் அல்லது வாஹனம். மஹான் அக்ஷ: யஸ்ய ஸ: - பெரிய வாகனம் உடையவன். இது கருடவாகனத்தைக் குறிக்கிறது.

அதுமட்டும் அன்றி பகவான் பெரிய சக்கரமாக பிரபஞ்சத்தை நடத்துகிறான். 
மஹா அக்ஷ: என்றால் பெரிய கண்கள் என்றும் பொருள்,. எல்லாவற்றையும் எப்போதும் பார்க்கும் கண்கள்.

357 . கருடத்வஜ:- கருடக்கொடியோன்.

358. அதுல:- ந துல: - தனக்கு சமம் இல்லாதவன். அர்ஜுனன் கூறுகிறான், 
'ந த்வத் ஸமோ அஸ்தி அப்யதிக: குதோ அந்யோ லோகத்ரயே அபி அப்ரதிமப்ரபாவ ,'
"கிருஷ்ணா உனக்கு ஈடானவன் மூவுலகத்திலும் இல்லை அப்படி இருக்க உன்னை விட மேலானவன் யார்? நீ ஈடில்லா ப்ரபாவத்தை உடையவன்." (ப.கீ. 11.43 )

'உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன் ,' திருவாய்மொழி முதல் பாசுரம்.

ஏகமேவ அத்விதீயம் – உபநிஷத். அவன் ஒருவனைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

359. சரப: - சீர்யமானத்வாத் சர: - தேகம் க்ஷீணமடைவதால் சர: எனப்படுகிறது. தஸ்மின் பாதி இதி சரப: - பகவான் அதில் அந்தர்யாமியாக ஒளிர்கிறார்.

360. பீம: - எல்லாமே தம்மிடம் பயந்து நடக்கும்படி இருப்பவர். பீஷா அஸ்மாத் வாத: பவதே;பீஷா உதேதி சூர்ய: - தைத். உப. இவருக்கு பயந்து அதாவது ஆணைக்கு கட்டுப்பட்டு காற்று வீசுகிறது சூரியன் உதிக்கிறான்.

பயாதேவ அக்னி: தபதி பயாத் தபதி சூர்ய: 
பயாத் இந்த்ரஸ்ச வாயு: ச ம்ருத்யுர்தாவதி பஞ்சம: (கடோபநிஷத் )

இதன் பொருள் , பிரம்மத்தினிடம் பயத்தால் அக்னி, சூரியன், இந்திரன் , வாயு மற்றும் யமன் எல்லோரும் தம்தம் கடமையை செவ்வனே செய்கிறார்கள்.

பகவான் துஷ்டர்களுக்கு பயத்தைக் கொடுப்பவர்.

361. ஸமயக்ஞ: -ஸமயம் ஜாநாதி இதி ஸமயக்ஞ: சிருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரத்திற்கேற்ற சமயங்களை அறிபவர்.

ஸமயம் என்னும் வெவேறு வழிபாட்டு முறைகளை அறிந்து ஏற்றுக்கொள்பவர்.

யேப்யன்ய தேவதா பக்தா: யஜந்தே ச்ரத்தயான்விதா:
தேபி மாமேவ கௌந்தேய யஜந்தி அவிதிபூர்வகம் 
மற்ற தேவதைகளை யார் ஸ்ரத்தையுடன் ஆராதிக்கிறார்களோ அவர்கள் என்னையே மறைமுகமாக வழிபடுகிறார்கள். (ப. கீ. 9.23 )

'ஸமத்வம் ஆராதனம் அச்யுதஸ்ய,' –( விஷ்ணு புராணம் 1.17.9௦ )
எல்லா உயிர்களையும் சமமாக பாவிப்பதே இவருக்கு சிறந்த பூஜையாகும்

362. ஹவிர்ஹரி: -
ஹவிஸ் என்பது யக்ஞங்களில் செய்யப்படும் ஆஹுதியாகும். யாகங்களில் ஹவிர்பாகத்தை எடுத்துக்கொள்கிறவர் ஹரியாகும்.

அஹம் ஹி சர்வ யக்ஞானாம் போக்தா ச பிரபுரேவ ச- (ப. கீ. 9. 24)
அல்லது அவரே ஹவிஸ் ஆகவும் இருப்பவர். 
ப்ரஹ்மார்ப்பணம் ப்ரஹ்மஹவி: ப்ரஹ்மாக்நௌ ப்ரஹ்மணாஹுதம் (ப.கீ 4.24)

பிரம்மனுக்காக பிரம்மனே ஹவிஸ் ஆக பிரம்மனாகிய அக்னியில் பிரம்மனால் ஆஹுதி செய்யப்படுகிறது. அதாவது சர்வமும் பிரம்மன்.

ஹராம்யகம் ச ஸ்மர்த்ரூணாம் ஹவிர்பாகம் க்ரதுஷு அஹம்
வர்ணஸ்ச மே ஹரிர் வா இதி தஸ்மாத் ஹரி: அஹம் ஸ்ம்ருத:
(மகாபாரதம் சாந்தி பர்வம் 352.3)

இதன் பொருள்
நான் என்னை நினைப்பவரின் பாபங்களை போக்குகிறேன். (ஹர என்றால் போக்குவது அல்லது எடுத்துச்செல்வது) யாகங்களில் ஹவிர்பாகத்தை ஏற்கிறேன். என் நிறமும் பச்சை ஆதலால் என்னை ஹரி என்கிறார்கள்.

  

No comments:

Post a Comment