திருவாய்மொழி 1.1.1.
பாசுரம் 1-1-1
உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே
மனமே, ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனும் கல்யாண குணங்களுடன் கூடியவனும் எவனோ, நம் மனமயக்கத்தைப் போக்கும் ஞானத்தைக் கொடுத்தவன் எவனோ, என்றும் தம் இயல்பை மறவாத நித்யசூரிகள் (எப்போதும் பகவானிடமே இருப்பவர்கள்) தலைவன் எவனோ, அவனுடைய எல்லா துயரங்களையும் போக்கும் மலரடியைத் தொழுவாயாக.
உயர்வற – ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன். நாராயணன் வேதங்கள் கூறும் பரப்ரம்மம். உபநிஷத் கூறுகிறது மனமும் வாக்கும் ப்ரம்மத்தை அறிய முற்பட்டு முடியாமல் பாதி வழியிலேயே திரும்பிவிட்டனவாம்.
உயர்நலம்- அவனுடைய அனந்த கல்யாண குணங்கள்.
மயர்வற- மயர்வு என்பது உண்மையை அறியமுடியாத மனமயக்கம். கயிறைக் கண்டு பாம்பு என்று நினைத்து மயங்குவது போல இந்த உலகத்தை உண்மை என்று நினைத்து அதைப் படைத்தவனை மறந்து அல்லல் படுவது.. அதை நீக்கி மதிநலம் அருளியவன். மதிநலம் என்பது, பக்தி, ஞானம். ஆழ்வார் பிறவியிலேயே ஞானமும் பக்தியும் உடையவராகையால் அதை அருளியவன் என்று பகவானைப் போற்றுகிறார்.
அதற்குக் காரணம் அவன் அமரர்கள் அதிபதி- தேவர் தலைவன். அயர்வறும் என்பது தம் உண்மை நிலையை உணர்ந்து அதை என்றும் மறக்காமல் உள்ள ஆதிசேஷன், கருடன், விஷ்வக்சேனர் முதலிய நித்ய சூரிகள், பகவானின் சேவையில் அனவரதமும் ஈடுபட்டவர்களைக் குறிக்கும்.
துயரறும் சுடரடி , நம் பிறவித் துன்பத்தைப் போக்கும் மலரடி. அதைத் தொழுது உலகானுபவத்தில் இருந்து எழவேண்டும் என்று மனதிற்குக் கூறுகிறார்.
உயர்வறு, மதிநலம், அயர்வறு இந்த மூன்று சொற்களும் முறையே உ, ம, அ என்று பிரணவத்தைக் குறிக்கின்றன. பிரணவத்தை வேத மந்திரமல்லாமல் நடைமுறையில் சொல்லக்கூடாது என்பதற்காக அந்த எழுத்துக்களின் முறை மாறி வருகிறது.
முதல் வரி அவன் கல்யாண குணங்களைக் குறிப்பிடுவதன் மூலம் ஒப்பாரும் மிக்காரும் இல்லதவனாகிலும் பக்தர்களால் எளிதில் அடையக்கூடியவன் என்பதைக் குறிக்கிறது. அடுத்த வரி மனதிலுள்ள அறியாமையைப் போக்கி பக்தியையும் ஞானத்தையும் அருள்பவன் என்று அவன் நம் உள்ளும் உறைபவன் என்பதைக் குறிக்கிறது. மூன்றாவது வரி அமரர் அதிபதி என்பது அவனுடைய பரத்துவம். வைகுண்டத்தில் பரவாசுதேவனாக இருப்பவனே பாற்கடலில் சயனித்து எளிதில் அடையக் கூடியவனாக இருக்கிறான். தேவர்கள் அவனிடம் பிரார்த்திக்க வேண்டுமென்றால் பாற்கடலுக்குத்தான் செல்வார்கள். வைகுண்டத்திற்கு அல்ல. அங்கு நித்ய சூரிகள் மட்டுமே அவனைக் காண முடியும்.
இந்தப் பாசுரத்தின் முதல் மூன்று வரிகள் திருமாலை, ஸ்ரீரங்ககம் , காஞ்சி இவைகளைக் குறிப்பதாக ஒரு கருத்து உள்ளது.
உயர்வற உயர்நலம்- உயர்ந்த மலையான திருமலை. வைகுண்டத்தில் இருந்து கலியுகத்தில் நமக்கு அருள் புரிய திருமலையில் வந்து இறங்கினார் என்பது. உடையவன் என்பது திருவேங்கடமுடையான். உயர்நலம் என்றால் ஆனந்தம். திருவேங்கடவன் விமானம் ஆனந்தமயம்.
மயர்வற மதிநலம் என்பது ஸ்ரீரங்கத்தைக் குறிக்கிறது. பிரணவம் ஞானத்தின் சின்னம். ரங்கநாதனின் விமானம் ப்ரண்வாகாரம்.
அமரர்கள் அதிபதி என்றால் தேவராஜன் அதாவது வரதன்,
கடைசி வரி எல்லா அர்ச்சாவதாரங்களையும் குறிக்கும். அதாவது மற்ற
திவ்ய தேசங்கள். அவைகளில் அவனைத் தொழுவது பிறவித்துயர் தீர்க்கும்.
சாரீரக சாஸ்திரம் என்று சொல்லப்படும் பிரம்மசூத்திரத்தின் நான்கு பாதங்களையும் இந்த நான்கு வரிகளும் குறிக்கின்றன என்று சொல்லலாம். முதல் பாதம் பரப்ரம்மம் என்றால் என்ன என்பது. நாரயணனே பரப்ரம்மம் என்பது உயர்வற உயர்நலம் உடையவன் என்பதால் விளக்கப்படுகிறது. இரண்டாவது பாதம் வாதங்களின் மூலம் வேதங்களிலும் உபநிஷத்துக்களிலும் கூறப்படுவது பிரம்மமே என்பது. இது மயர்வற மதிநலம் என்பதால் மற்ற கருத்துக்களை வென்று நிலைநாட்டப்படுகிறது. மூன்றாவது பாதம் பக்தியைக் கூறுவது. இது அயர்வறும் அமரர்கள் அதிபதி என்பதால் குறிப்பிடப்படுகிறது. கடைசி வரி அவன் அடி தொழுதால் பிறவித்துன்பம் நீங்கும் என்ற நான்காவது பாதத்தின் கருத்தாகிய முக்தியை தெரிவிப்பது.
No comments:
Post a Comment