ஒரு ஓட்டு.. உலகை மாற்றும்.
_________
(காட்டில் ஒரு தேர்தல் திருவிழா)
காட்டுக்குள் ஒரு தேர்தல்.
காட்டிற்கான அரசன் யார்? என்பதற்கான தேர்தல் அது.
சினம் கொண்ட சிங்கமும், மதம் கொண்ட யானையும் காட்டை ஆள்வதற்கான அரச பதவியை பெற போட்டியிட்டன.
ஒரு திடீர் திருப்பமாக சுண்டெலி ஒன்றும் தேர்தலில் நின்றது.
அனைத்து விலங்குகளும் சுண்டெலியை பார்த்து ஆச்சர்யப்பட்டன.
சிங்கத்திற்கும் யானைக்கும் இருக்கின்ற வலிமைக்கு முன்னால் சுண்டெலியும் நிற்பதை ஏளனத்தோடும் பார்த்தன.
தேர்தல் பிரச்சாரம் களை கட்டியது.
மான் கூட்டத்திற்கு இடையே சிங்கம் நல்ல பிள்ளையாக "மரங்களை எல்லாம் வீழ்த்தி காட்டையே அழிப்பவன் இந்த யானை.. உங்கள் இருப்பிடத்தை அழித்து விடுவான். ஆகவே யானைக்கு ஓட்டு போடவேண்டாம்" என கும்பிட்டது.
மறுநாள் அதே மான் கூட்டத்திற்கு இடையே யானை வாக்கு சேகரிக்க வந்தது. "உங்கள் இனத்தையே அழிப்பவன் அந்த சிங்கம். உங்களை காக்கும் பலத்தை நானே பெற்றுள்ளேன். ஆகவே எனக்கு ஓட்டு போடுங்கள்" என பிரச்சாரம் செய்தது.
இதற்கிடையே சுண்டெலியும் "நான் உங்களை போன்றவன். உங்களை காப்பேன் என இதுநாள் வரை ஆண்டவர்கள் உங்களை அழித்தே வந்திருக்கிறார்கள்" என காட்டு விலங்குகளிடம் பேசி வாக்கு கேட்டது.
நரிகள் சிங்கத்திடம் சேர்ந்திட, ஓநாய்கள் யானையிடம் சென்று சேர்ந்தது.
குரங்குகள் சிங்கத்திடமும், பன்றிகள் யானையிடமும் தங்கள் ஆதரவை தெரிவித்து களப்பணி ஆற்றின.
சுண்டெலி மட்டும் தன்னந்தனி ஆளாக ஓட்டுகேட்டு நின்றது.
தேர்தல் முடிந்தது.
வாக்கு எண்ணிக்கை நடந்தது.
சிங்கம் ஐந்தாயிரம் வாக்குகள் பெற்றது.
யானையும் ஐந்தாயிரம் வாக்குகளை பெற்றது.
சுண்டெலிக்கு ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்தது.
சுண்டெலி பெற்ற இந்த ஒரு ஓட்டுதான் இப்போது முக்கிய விஷயமானது.
காடே ஆச்சர்யமடைந்தது.
சுண்டெலி பெற்ற இந்த ஒரு ஓட்டை சிங்கமும் யானையும் தலைமீது கைவைத்தபடி "கவுத்துட்டானே நம்மை" என்றவகையில் சோகமாக பார்த்தன.
ஒரு ஓட்டின் மதிப்பை காடே அதிர்ந்து பார்த்தது.
காட்டின் நாட்டாமைகள் அவசரமாக ஒன்று கூடி "சுண்டெலி யாரை ஆதரிக்கிறதோ அவரே காட்டின் அரசனாக இருக்க வேண்டும்" என முடிவு செய்தது.
யானை சுண்டெலியிடம் "நீ தான் எனது அமைச்சர்" என்ற வகையில் ஆதரவு கேட்டது.
ஆனால் சுண்டெலியோ "நல்லாட்சியை தருவேன்" என வாக்கு கேட்டு இந்த ஒரு ஓட்டை பெற்றுள்ளேன்.
ஆகவே ஒரு வருடம் என்னை அரசராக ஆதரித்தால் மட்டுமே அடுத்த நான்கு வருடம் எனது ஆதரவு கிடைக்கும். நல்லாட்சி என்றால் என்னவென்று மக்களுக்கு காட்டிட வேண்டும்" என அறிவித்தது.
யானையை வீழ்த்திடும் கட்டாயத்தில் இருந்த சிங்கம், "சுண்டெலியை தான் ஆதரிப்பதாக" அறிவித்தது.
ஒரு ஓட்டை பெற்ற சுண்டெலி காட்டிற்கு அரசனாக முடிசூடியது..
சுண்டெலி பெற்ற ஒரு ஓட்டின் வலிமை பல காடுகளுக்கும் பரவியது..
ஒரு ஓட்டு யானையை வீழ்த்தியது.
ஒரு ஓட்டு சிங்கத்தை வீழ்த்தியது..
அந்த ஒரு ஓட்டுதான் உங்களின் ஓட்டு...
ஒரு ஓட்டு.. உலகை மாற்றும்..
_________
அதுசரி.. சுண்டெலி காட்டிற்கு அரசனாக பொறுப்பேற்றதும் போட்ட முதல் கையெழுத்து எது தெரியுமா?
"காட்டை அழிக்கிற மனிதர்களை பிடித்து மரத்தில் உயிரோடு கட்டிவைத்து எறும்புக்கு இரையாக்க வேண்டும் " என்பதே...
No comments:
Post a Comment