பேசும் தெய்வம் J K SIVAN
அபயம் இருக்கையில் அபாயம் ஏது?
எழுத்தாளர்களுக்கு சில நேரங்களில் எதை பற்றி எழுதலாம் என்ற ஒரு குழப்பம் வந்து பல விஷயங்களை பற்றி எழுதி ''சே இது வேண் டாம்'' என்று நிறைய காகிதங்களை கிழித்து தன்னைச் சுற்றி போட்டுக்கொண்டு நடுவில் ஒரு பைத்தியமாகவே தலையை சொரிந்து கொண்டு உட்காருவார்கள். அவர்கள் மேல் பரிதாபமோ, கருணையோ கொண்டு ஒரு ரகசியம் உரக்க சொல்கிறேன். மகா பெரியவா பற்றி எழுதுங்கள், எழுத எழுத, பேச பேச, பாட பாட, நிறைய விஷயங்கள் தானாகவே சுனாமி யாக கிடைக்கும். இன்னொரு வசதியும் இருக்கிறது. சுற்றிவர காகிதத்தில் கிறுக்கி கிழித்து போடவேண்டாம். இருக்கவே இருக் கிறது கம்பியூட்டர். எவ்வளவு எழுதினா லும் ஒரு தூசி தும்பட்டை பக்கத்தில் இருக்காது.
இதில் ஓரே ஒரு எச்சரிக்கை. தயவு செய்து யாரும் அவர் சம்பந்தப் பட்டதாக, நடக்காத, நிகழாத, இல்லாத ஒன்றை, ருசிகரமான இருக்கவேண்டும் என்பதற்காக நடக்காததை, இல்லாததை எல்லாம் எழுதி குளிர் காயவேண்டாம். அவர் என்றும் வாழும் நடமாடும் தெய்வம். அவரைப்பற்றி கண்டபடி நினைத்ததை எல்லாம் எழுத துணிவது அபசாரம். மகா பாபம். மன்னிப்பு கிடையாது. அவரை தெய்வமாக நம்பி தொழும் பக்தர்களை ஏமாற்றுவது அது. பிரா யச் சித்தம் இல்லை.
இப்போது நான் சொல்லவருவது ஒரு அப்பட்டமான உண்மை. நமது முகநூல் குழு அங்கத்தினர் ஒரு மாமி எனக்கு நேரிடையாக சொன்ன ஆனந்த அனுபவம். அதை தான் சுருக்கமாக சொல்கிறேன்.
எல்லோரையும் போல் அந்த மாமி தனது மண வாழ்க்கையை துவங்கினாள். சிறந்த பக்தை. காஞ்சிபுர வாசி மஹாஸ்வாமி பக்தியில் மனம் நிறைந்திருந்தவள். ஒரு குழந்தை பிறந்தது. அழகான ஆண் பையன். அன்று பிறந்த நேரத்தில் எப்படி இருந்தானோ அப்படியே இப்போதும் முப்பது+ வயதிலும் இருக்கிறான். மூளை வளர்ச்சி இல்லை.
ஒரு சிறு குழந்தைக்கு நேரம் பார்த்து, பாலூட்டி, அதன் தேவைகளை அறிந்து உதவும் தாயாக அந்த மாமி தனது ஐம்பது-அறுபதுகளில் இப்போதும் இருக்க வேண்டியது காலத்தின் கட்டளையாகிவிட்டது. வேண்டாத தெய்வம் இல்லை, பார்க்காத மருத்துவர் இல்லை. பயன் தான் ஒன்றுமில்லை. அவள் வாழ்க்கை இவ்வாறு என்று ஆண்டவன் நிச்சயித்து விட்டான். பூர்வ ஜென்ம கர்மா.
ரெண்டாவது மகன் அழகன்.25+. நன்றாக சங்கீதம் கற்றவன். சமீபத்தில் அவன் குரலை நான் நாட்டை ராகத்தில் ''மஹா கணபதி'' யில் கேட்டேன். அவனுக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை என்பதை விட பயம் இருக்கிறது . எந்த பெண் தனது கணவன் தமையனை இந்த நிலையில் ஆதரித்து ''வளர்க்க'' விரும்புவாள். ஒருவேளை கிடைப்பாளோ? என்பது பகவத் சங்கல்பம்.
மாமியின் கணவர் ஒரு தொழில் நிபுணர். வேலைக்கு செல்ல முடியுமா? யார் வீட்டில் மாமிக்கு இந்த ''பெரிய'' பையனை (குழந்தையை) கவனித்துக் கொள்ள வேலையில் உதவுவார்கள்?. வீட்டிலிருந்த
படியே ஏதோ வியாபாரம் செய்து காலம் ஓடுகிறது. இப்போது தான் மாமியே என்னிடம் சொன்ன ஒரு அதிசய சம்பவத்துக்கு வரப்போகிறேன்.
''என் கணவருக்கு சமீபத்தில் கல்லீரலில் கோளாறு என்று டாக்டர் சொல்லி அப்போலோ செல்ல வைத்தார்கள். யானையைத் கட்டி தீனி போடும் சமாச்சாரம். கல்லீரலை ஆபரேஷன் செய்து உறுப்பு மாற்றி மற்றொரு கல்லீரல் வைத்தால் விமோசனம்'' என்றதால் காசு சேர்த்து, கஷ்டப்பட்டு கடனெல்லாம் வாங்கி யானைக்கு தீனி போட்டார்கள். ஆஸ்பத்திரி கையில் இருந்த பணம் எல்லாவற்றையும் விழுங்கி ஏப்பம் விட்டது தான் மிச்சம்.
ஒரு நல்ல குடும்ப நண்பர் குளோபல் ஆஸ்பத்திரியில் ரெண்டாவது அபிப்ராயம் வாங்குங்கள் என்று உபதேசித்து அங்கும் சென்றோம். மறுபடியும் பரிசோதனைகள்,மருந்துகள், அலைச்சல், அவர்களும் ''ஆமாம் கல்லீரல் (லிவர்)அறுவை சிகிச்சையில் மாற்றப்பட வேண்டும். வேறு வழியில்லை '' என்று சொல்லிவிட்டார்கள். யார் கல்லீரல் தருவார்கள். எவ்வளவு ஆகும்? எங்கே போவது செலவிற்கு?
அதிர்ஷ்ட வசமாக என் இரண்டாவது மகன் என் கணவரின் அதே ரத்த க்ரூப் சேர்ந்தவன். தான் அப்பாவிற்கு கல்லீரல் தர முன்வந்தான். குளோபல் பெரிய அறுவை சிகிச்சைநிபுணர் பல பரிசோதனைகளை நடத்தி ''நன்றாக பொருத்தமாக இருக்கிறது. நாள் குறித்து இந்த பையனுக்கு கொஞ்சம் தெம்பூட்டி உடல் சரியான நிலைக்குவந்தவுடன் கல்லீரல் மாற்றம் உடனே செய்து விடுவோம்'' என்றார்கள். ஈஸ்வரோ ரக்ஷது என்று கணவர் ஜென்ம நக்ஷத்ரத்தன்று ஒரு ம்ரித்யுஞ்சய ஹோமம் செய்துவிட்டு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்போமென்று முடிவு செய்தோம்.
''மகா பெரியவா, இப்படிப்பட்ட இக்கட்டில் மீள வழி தெரியவில்லை. நீங்கள் தான் வழிகாட்டவேண்டும்'' மாமி கண்ணீர் பொங்க வேண்டிக்கொண்டாள் . '' திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை அல்லவா. நீங்கள் தானே ப்ரத்யக்ஷ தெய்வம்''. ஒரு நல்ல குடும்பம் அவர்களுக்கு நட்பாக இருந்தது. அதுவும் பெரியவா பக்த குடும்பம்.
''நீ போய் பெரியவா அதிஷ்டானத்தில் நாலு நாள் நெய் தீபம் ஏற்று. அவா கிட்ட சொல்லி அனுமதி ஆசீர்வாதம் வாங்கிக்கோ அப்புறம் ஆபரேஷன் ஏற்பாடெல்லாம் செய் '' என்று அந்த குடும்பம் சொல்லியபடி மாமி காஞ்சிபுரம் சென்றாள்.
''காஞ்சிபுரத்தில் பெரியவா அதிஷ்டானத்தில் அவர் எதிரே நாலு நெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொண்டேன். தாரை தாரையாக கண்ணீர் கொட்டி வெளியே சொல்லாமல் மனதாலேயே சொல்லி புலம்பி
னேன் ''..... பிரார்த்தனை பண்ணினேன் ... எதிரே மெழுகு சிலையாக அசையாமல் அபய ஹஸ்தம் காட்டினார் மஹா பெரியவா. முகத்தின் புன்முறுவல் ''எதுக்கு பயப்படறே'' என்றது. ஏதோ ஒரு தைரியம் நம்பிக்கை என்னுள் புகுந்தது.
அன்றே பூஜ்யஸ்ரீ ஜெயேந்திரர் பாலபெரியவா தரிசனமும் கிடைத்தது. வார்த்தைகள் மூச்சு திணறி சிக்கலாக வந்தது. கவலைகளை கொட்டினாள் மாமி. கண்களை மூடி ஆசிர்வதித்து புஷ்ப குங்கும அக்ஷதை பிரசாதம் கொடுத்தார் ஜெயேந்திரர்.
''எல்லாமே நல்லபடியாக முடியும் போய்ட்டு வாம்மா'' என்றனர் இரு ஆச்சார்யர்களும் . ஓரிக்கை மஹா மணி மண்டபமும் சென்று அங்கேயும் ப்ரார்த்தித்தாள் மாமி. அடுத்த சில நாளில் ஜெயேந்திரர் முக்தி அடைந்தது வருத்தமாக இருந்தது. அதற்குள் அவர் ஆசிர்வாதம் கிடைத்ததே என்று சந்தோஷம் அதில் மறைந்திருந்தது. மனம் பாரத்தை கொஞ்சம் இறக்கியது.
நல்ல நாள் குறித்து, வேண்டிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றார்கள் மாமாவும் பையனும். மெஷின் மாதிரி கணவர் பையன் இருவருக்குமான டெஸ்ட், பரிசோதனைகள்,MRI ஸ்கேன்கள் நிரம்பிய பையோடு குளோபல் ஆஸ்பத்திரி பிரதம அறுவை சிகிச்சை நிபுணரை மீண்டும் சந்தித்தார்கள். எல்லா ரிப்போர்ட்டுகளும் கவனமாக படித்தார், படங்கள், ஸ்கேன் எல்லாம் கூர்ந்து கவனித்தார். என்ன சொல்லப்
போகிறாரோ? என்று நகம் கடித்தாள் மாமி.
''ம்ம்ம். பரவாயில்லையே. மாமாவின் கல்லீரல் இப்போதைக்கு அகற்ற வேண்டாம் என்று காட்டுகிறதே. மருந்தில் ரொம்ப குணமாகி இருக்கிறதே. இப்படியே இன்னும் கொஞ்சம் காலம் கழித்து மீண்டும் மருந்துகள் உதவியால் குணமாகிவிட்டால் ஆபரேஷன் மாற்று சிகிச்சை தேவைபடாமல் போகலாம். ஆறுமாதம் கழித்து வாருங்கள். மீண்டும் டெஸ்ட்கள் செய்து பார்ப்போம். ''.
உடனே ஆபரேஷன் பண்ணவேண்டும் லிவர் மாற்றவேண்டும் என இரு ஆஸ்பத்திரி நிபுணர்கள் சொல்லி செல்லாக்காசும் இல்லாத ஆண்டியாக்கினார்கள். அவர்கள் வாயாலே அவசியமில்லை இப்போது என்று சொல்லவைத்தது அந்த ரிப்போர்ட்கள், ஸ்கேன் முக்கிய காரணம் இல்லை . ரொம்ப ரொம்ப நிச்சய முக்கிய காரணம் அந்த மெழுகுவர்த்தி மஹாபெரியவா அபய ஹஸ்தம். ''அபயம்'' என்றாலே ''அபாயம்'' இல்லை, பயம் இல்லாமல் போ''என்று தானே அர்த்தம்.
இது என் கட்டுக்கதை இல்லை என்று மீண்டும் கூறுகிறேன். ஒரு பக்தையின் நேரடி அனுபவம். மேற்கு மாம்பலம் பக்கம் இருக்கிறாள் மாமி. தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாத அமைதியான பெரியவா பக்த குடும்பம். மஹா பெரியவா பேசும் தெய்வம் தான், என்றும், எப்போதும் என்று மீண்டும் நான் எடுத்துச் சொல்ல இந்த சம்பவம் என்னை தேடி வந்ததே என் பாக்கியம். லக்ஷோப லக்ஷம் பக்தர்களின் மனத்தில் இருக்கும் எண்ணம் அது. வேறு யாருக்காவது இதுபோன்ற உண்மை சம்பவம் ஏதேனும் இருந்தால் அதை எனக்கு தெரியப்படுத்தலாம். மற்ற பக்தர்கள் அறிந்து மகிழட்டுமே. காசுக்காக எழுதுபவன் இல்லை நான். விலை கொடுத்து வாங்கும் எந்த பத்திரிகைக்கும் நான் எழுதுபவன் இல்லை என்று அனைவருக்கும் தெரியும். ஜே.கே. சிவன் 9840279080
No comments:
Post a Comment