Friday, May 10, 2019

Eka sloki of Adi shankara in tamil - kim jyotistava - Sanskrit sloka

ஆதி சங்கரர் J K SIVAN

ஒத்தை செய்யுள்

சில பேரால் சின்ன விஷயங்களைக் கூட தெளிவாகச் சொல்ல முடியாது சிலர் சொல்வதற்கு ஒன்று நினைப்பார்கள் சொன்னது வேறாக இருக்கும். சிலர் சேம் சைட் கோல் (same side goal ) போடுவார்கள். தான் சொன்னதை தானே எதிர்க்கிறாற்போல் பேசுவார்கள். தலையை சுற்றும். ஆதி சங்கரர் இப்படிப்பட்ட பேர்வழி இல்லை. நிறைய நிறைய பாய் பாயாக ஸ்லோகங்களை எழுதியவர், என்றோ ஒரு நாள் என்ன தோன்றியதோ தெரியவில்லை, ஒரே ஒரு ஸ்லோகத்தில் உலகத்தை குறுகத் தரித்த குறள் போல் எழுதி விட்டார். ஒரே ஒரு ஸ்லோகம். அவ்வளவு தான். அதன் அர்த்தம் அபாரமாக இருக்கிறது.

किं ज्योतिस्तव भानुमानहनि मे रात्रौ प्रदीपादिकम्
स्यादेवं रविदीपदर्शनविधौ किं ज्योतिराख्याहि मे ।
चक्षुस्तस्य निमीलनादिसमये किं धीर्धियो दर्शने
किं तत्राहमतो भवान् परमकं ज्योतिस्तदस्मि प्रभो ।।

Kim Jyothistava Bhaanumaanahani Me Ratrau Pradeepadikam
Shyaadevam, Ravideepadarshanavidhau Kim Jyothiraakhyahi me
Chakshuhtasya Nimeelanaadisamaye Kim Dheehrdheeyo Darshane
Kim Tatraahamatho Bhavaanparamakam Jyothihtadasmi Prabho

கிம் ஜ்யோதிஸ்தவ பானுமானஹனி மீ ராத்ரௌ ப்ரதீபாதிகம் 
ஸ்யாதேவம் ரவிதீபதர்ஷனவிதவ் கிம் ஜ்யோதிராக்ஹ்யாஹி மீ 
சக்ஷுஹ் தஸ்ய நிமிலனாதிசமயே கிம் தீர்தியோ தர்சனே 
கிம் தத்ராஹமதோ பவான் பரமகம் ஜ்யோதிஸ்ததஸ்மி ப்ரபோ.

அத்வைத வேதாந்த ஸ்தாபகர் ஆதிசங்கரரைப் போன்று உலகம் இன்னொருவரை இன்னும் பார்க்கவில்லை. 32 வயதில் மூன்று லோக விஷயங்களையும் கரைத்து குடித்து இந்தியா முழுதும் கால்நடையாக நடந்து ஷண்மத ஸ்தாபனம் செய்தவர். இணையற்ற வேதாந்தி.

அவர் மேற்கண்ட ஒரே ஒரு ஸ்லோகத்தை 'ஏக ஸ்லோகி' என்ற ஒத்தை செய்யுளாக வேதாந்தத்தை ஒரு சீடன் கேள்வி கேட்க குரு விளக்குவதாக பேசி புரிந்து கொள்வதைப் போல அல்லவா எழுதியிருக்கிறார்!

குரு : ''அப்பனே, நீ எப்படியப்பா பார்க்கிறாய்?
சிஷ்யன்: (நாம் கண்ணால், மூக்கு கண்ணாடி போட்டுக்கொண்டு என்று தான் சொல்வோம்) அவன் அருமையான சீடன் அவன் என்ன சொல்கிறான்: ''குருவே நான் சூரிய ஒளியால் எல்லாவற்றையும் காண்கிறேன். 
குரு: ''சரி. அப்படியென்றால் நீ இரவில் எப்படி பார்க்கிறாய்?''
சிஷ்யன் : '' விளக்கின் ஒளியால் குருநாதா''
குரு: 'ஓ ஹோ, அப்படியென்றால் விளக்கை உன்னால் எப்படி பார்க்க முடிந்தது?'' கண்ணைத் திறந்து பார்க்கும் கணமே, முன்பே, எப்படி விளக்கு அடையாளம் தெரிந்தது?
சிஷ்யன்: '' குருவே அது என் புத்தியால் தான் தெரிந்து கொண்டேன் ''
குரு: ''அடாடா, நன்றாக சொன்னாய். அது சரி, உனக்குள் இருக்கும் புத்திக்கு இது தான் விளக்கு என்று எது பார்த்து தெரிந்து கொள்ள வைத்தது?
சிஷ்யன்: குருநாதா அது தான் '' நான்'' எனும் ஆன்மா, பிரம்மம் 
குரு: ''ஆமப்பா, சரியாக சொன்னாய். நீ தான் அந்த புறவெளியை அடையாளம் காட்டிய ஆன்ம ஒளி''
சிஷ்யன்: நமஸ்காரம் குருவே. தங்கள் அருளால் ''நான்'' யார்? என்று புரிந்துகொண்டேன்.

எப்படி இந்த குட்டி ஸ்லோகம். உயர்ந்த தத்துவம் சின்னதாக தெளிவாக்கப்பட்டது.
அது தான் ஆதி சங்கரர்.

No comments:

Post a Comment