Friday, April 5, 2019

Shiva apradha kshamapana stotram in tamil

ஆதிசங்கரர் அருளிய அபூர்வ ஸ்லோகம் 

நம்மில் எத்தனை பேர் தினமும் நியமநிஷ்டை தவறாமல் கடவுளை வணங்குகின்றோம்? குறைந்தபட்சம் ஒரு பூவையாவது போட்டு பூஜிக்க  நமக்கு நேரம் இருக்கிறதா? அப்படியெல்லாம் இயலாமல் போவதற்க்கு முன்வினைப் பாவம் தான் என்கிறார். மற்ற எவரையும் குறை சொல்லாமல் தாமே இப்படியெல்லாம் குற்றம் செய்தவர் போல் மகேசனிடம் மன்னிப்பு கேட்கும் பாவனையில் மகத்தான ஸ்லோகம் ஒன்றை இயற்றியுள்ளார் அம்மகான். ஜகத்தின் நன்மைக்காக ஜகத்குரு இயற்றிய உயர்வான அந்ததுதி உங்களுக்காக இங்கே தமிழ் அர்த்ததுடன் தரப்பட உள்ளது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லுங்குங்கள் உங்கள் முன்வினைப் பாவம் யாவும் முக்கண்ணனின் அருளால் தீய்ந்து வாழ்வில் பிரகாசம் பெறுவீர்கள். உலகத்தை உய்விக்க உமாமகேசனே எடுத்து வந்த அவதாரமாய் அவதரித்தார் ஆதிசங்கரர் நம்மைப் பற்றியே சிந்தித்தவர் நமக்காகவே வாழ்ந்தவர் அவருடைய சிந்தனைகள், செயல்கள், பிராத்தனைகள் எல்லாமே நமக்காகத்தான். நாம் எப்படி வாழ வேண்டும்? எப்படி தர்மத்தின் படி நடக்க வேண்டும் அறுசமயக் கடவுள்களை எப்படி வணங்கினால் அவர்களின் அருளைப் பெறலாமென்பதையெல்லாம். தம் படைப்புகளின் மூலம் உணர்த்தியவர். மன்னிக்க வேண்டுகிறேன் என்ற இந்த பிராத்தனைப்பாடல், வடமொழியில் சிவாபராத க்ஷமாபன ஸ்தோத்திரம் என்று பிரபலமாக உள்ளது. பிரபஞ்ச நாயகனான மஹாதேவனை போற்றிப் பாடும் பாடல்கள் இவை. சிவமே சிவத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டுமா? கொஞ்சம் யோசித்தால் இதுவும் இந்த வேண்டுதலும் நமக்காகவே என்பது புரியும். மானிடராகப் பிறந்த எவரும் கர்ம வினைகளில் இருந்து மன்னித்து காத்திட மகேசனை வேண்டி சங்கர மகான் இயற்றிய சக்திமிக்க துதி இது. அகத்தில் ஈசனை நினைத்து இந்த ஸ்லோகத்தை பாடித் துதித்து வர தீவினைத் துன்பம் தீர்ந்து வாழ்வில் வளமும், நலமும் சேரும் என்பது நிச்சயம். மொத்தம் பன்னிரெண்டு ஸ்லோகம் தினம் ஒரு ஸ்லோகம் அதற்கான அர்த்தங்கள் தினமும் பதிவிடப்படும். 

                                    ஸ்லோகம் நம்பர் ஒன்று 

ஆதௌ கர்ம பிரஸங்காத் கலயதி கலுஷம் 
               மாத்ரு குக்ஷௌஸ்திதம் மாம்
விண்முத்ராமேத்ய மத்யே க்வதயதி நிதராம் 
               ஜாடரோ ஜாதவேதா:|
யத்யத்வை தத்ர துக்கம் வ்யதயதி நிதராம்
                சக்யதே கேன வக்தும்
க்ஷந்தவ்யோ மே அபராத: சிவசிவசிவ போ
                ஸ்ரீ மஹாதேவ சம்போ||

கர்ப்பச் சிறையாக தாயின் வயிற்றில் பத்து மாதமிருந்தேன். அப்போது தாயின் இரைப்பையின் அசைவுகளால் இம்சிக்கப்பட்டு, அசுத்தங்களின் அருகே  உழன்றேன். இவையாவும் கர்ம வினைகளின் பயனே. கடந்த பிறவியிலும் கடந்த காலங்களில் நான் செய்த தவறுகளை யெல்லாம் மன்னிக்க வேண்டுகிறேன். சிவ பெருமானே, மஹாதேவரே என் தவறுகளை யெல்லாம் மன்னித்தருள வேண்டுகிறேன். மறுபடியும் மற்றோர் தாயின் வயிற்றில் நான் பிறக்காமலிருக்க அருள வேண்டும். 
                                              மீண்டும் நாளை தொடரும். 

                                      ஸ்லோகம் நம்பர் இரண்டு 

பால்யே துக்காதிரேகோ மலலுதிவபு:
                ஸ்தன்யபானே பிபாஸா
நோ சக்தச் சேந்திரியேப்யோ பவகுண
                ஜனிதா ஜந்தேவோ மாம் துதந்தி |
நா நாரோகாதி துக்காத்ருதன பரவஸ:
                 சங்கரம் நஸ்மராமி
க்ஷந்தவ்யோ மே அபராத: சிவசிவசிவ போ
                ஸ்ரீ மஹாதேவ சம்போ||

விளக்கம் : அசுத்தத்திலேயே சுழன்று கொண்டிருந்த என்னால் அன்னையின் பாலை புசிக்க முடியவில்லை. என் அன்னை தானாகவே என் தேவையை உணர்ந்து என்னருகில் வருவதை நான் எதிர்பார்த்து நெடுநேரம் காத்திருந்தேன். பரிதாபமாக அழுதழுது என் இயலாமையை தெரியப்படுத்தினேன். ஈ,எறும்பு எண்ணாயிரம் பூச்சிகள் என் மேல் ஊர்ந்தாலும் அவைகளை அகற்றும் வழி தெரியாமல் தடுமாறினேன். ரோகங்களினால் நான் பட்ட துன்பங்கள் கடுமையானவை. முந்தை வினையின் பயனாக வந்த துன்பங்கள் இவை. இத்தகைய அவலநிலை ஏற்படாமல் பாதுகாக்க சிவனாகிய உம்மால் தான் முடியும். மஹா தேவரே என்னுடைய எல்லா பாவங்களையும் மன்னிக்க வேண்டுகிறேன். 

                                      ஸ்லோகம் நம்பர் மூன்று 

ப்ரௌடோ அஹம் யொவனஸ்தோ விஷய விஷ தரை:
                              பஞ்சபிர் மர்ம சந்தௌ
தஷ்டோ நஷ்டோ விவேக: ஸுத தன யுவதி  
                             ஸ்வாத ஸௌக்யே நிஷண்ண:|
சைவீசிந்தாவிஹீனம் மம ஹ்ருதய 
               மஹோ மான கர்வாதிரூடம்
க்ஷந்தவ்யோ மே அபராத: சிவசிவசிவ போ
                ஸ்ரீ மஹாதேவ சம்போ||

இப்போது நான் வயது முதிர்ந்தவன். வாலிபத்தில் ஐம்புலன்களின் மறைவான தாக்கத்தினால் விவேகத்தை இழந்தவன். பொங்கும் உணர்ச்சிகள் என்னை அலைக்கழித்து விட்டன. மழலைகள், செல்வம், பெண்கள் ஆகியவையளித்த சுகத்தில் என்னையே இழந்தேன். அகங்காரமும் ஆணவமும் என்னை உணர்வற்றுப்போகச்செய்து விட்டன. இத்தகைய அவலத்திற்கு காரணமான முந்தை வினைகளையும் மன்னிக்குமாறு மஹா தேவரே உம்மை வேண்டுகிறேன். 

                                    ஸ்லோகம் நம்பர் நான்கு 

வார்தகேயே சேந்த்ரியாணாம் விகதகதி 
                  மதிச்சதி தைவாதி தாபை:
பாபை ரோகைர் வியோகைஸ் வன வஸித வபு:
                  ப்ரௌடிஹீனம் ச தீனம் |
மித்யா மோஹாபிலாஷைர் ப்ரமதி மம
                 மனோ துர்ஜடேர் தியான சூன்யம் 
க்ஷந்தவ்யோ மே அபராத: சிவசிவசிவ போ
                ஸ்ரீ மஹாதேவ சம்போ||

விளக்கம் : நான் மூப்படைந்து விட்டதால் புலன்கள் சக்தியை இழந்து விட்டன. அதனால் இயற்கைச் சக்திகளால் ஏற்படும் தாபம் வெளி செயல்களால் விளையும் பாவம் உள்ளே உடலில் நோயால் ஏற்படும் ரணங்கள் உடனிருந்தவர்களின் மரணத்தால் விளையும் இழப்பு என்று பல துன்பங்கள் என்னை வாட்டுகின்றன. மாயையான இச்சையால் இளமையின் சக்தி பாதிக்கப்பட்டது. இதனால் மனம் சஞ்சலப்பட்டு தியானம் என்பதே அற்றுப்போய்விட்டது. எனவே மஹாதேவரே என் பிழைகளைப் பொறுத்தருள்வீராக.

                                      ஸ்லோகம் நம்பர் ஐந்து 

நோ சக்யம் ஸ்மார்த்த கர்ம ப்ரதிபத 
          கஹனப்ரத்ய வாயா குலாக்யம்
ச்ரௌதே வார்தா கதம் மே த்விஜகுல விஹிதே
          ப்ரம்ம மார்கே ஸுஸாரே
நாஸ்தா தர்மே விசார: ச்ரவண மனனயோ:
         கிம் நிதியாசிதவ்யம்
க்ஷந்தவ்யோ மே அபராத: சிவசிவசிவ போ
                ஸ்ரீ மஹாதேவ சம்போ||

விளக்கம் : ஸ்ம்ருதிகர்மா என்று ஸ்ம்ருதிகளில் கூறப்பட்ட ஈஸ்வர ஆராதனையில் என்னால் ஈடுபட இயலாது. அந்த ஸ்ம்ருதிகளில் நீதி நூல்கள், வேதங்களில் எளிதில் புரிந்து கொள்ள இயலாதபடி கடின பதங்களால் சொல்லப்பட்ட அனுஷ்டானங்களைப் புரிந்து கொண்டு செய்ய இயலாது. என்னுடைய மனமும் அறிவும் தங்கள் சக்திகளை இழந்து விட்ட நிலையில் ச்ரௌத கர்மா என்கிற தியானம், சிந்தனை ஆகிய வழிகளில் ஆத்மா முழுமையாக ஈடுபட முடியாது. அன்னையின் கருவிலிருந்து முதல் பிறப்பு ஆன்மிகத் தேடலுக்காக இரண்டாம் பிறப்பு என்று இரு பிறப்பாளருக்காக விதிக்கப்பட்டிருக்கும் கேட்டல் (சிரவணம்) சிந்தித்தல் (மனனம்) ஆகியவை மூலம் தெளிவையும் பெற முடியவில்லை. இத்தகைய இழிவான நிலையிலிருந்து கொண்டு எப்படி நான் உமது அருளைக் கோர முடியும்? இருந்தாலும் மஹா தேவரே என்னுடைய தவறுகளை மன்னித்து அருளுங்கள். 

                             ஸ்லோகம் நம்பர் ஆறு 

ஸ்நாத்வ ப்ரத்யூஷகாலே ஸ்நபன விதிவிதௌ
                        நாஹ்ருதம் கங்கதோயம்
பூஜார்தம் வோ கதாசித்மஹீதர கஹனாத்
                           கண்டபில்வீதலானி
நாநீதா பத்ம மாலா ஸரஸி விகஸிதா கந்த 
                        புஷ்பே த்வதர்தம்
க்ஷந்தவ்யோ மே அபராத: சிவசிவசிவ போ
                ஸ்ரீ மஹாதேவ சம்போ||

விளக்கம் : மஹா தேவரே அதிகாலையில் எழுந்து குறிக்கவில்லை. விதி முறைப்படி தங்களுக்கு அபிஷேகம் செய்ய ஒரு சிறு குடம் ஜலம் கூட கொண்டு வரவில்லை. தங்களுக்கு பூஜை செய்வதற்காக அடர்ந்த காட்டிலிருந்து பிளவு படாத வில்வ இலைகளைக் கொண்டு வரவில்லை. நறுமணம் உள்ள தாமரை மலர்களை தடாகத்திலிருந்து பறித்து வந்து உமக்கு மாலையாகச் சூட்டவில்லை. மணமுள்ள வாசனை மலர்களையும் சமர்ப்பிக்கவில்லை. மஹா தேவரே இத்தகைய எளிய அனுஷ்டானங்களைக் கூட செய்யாத என்னை மன்னிக்க வேண்டுகிறேன். 

                                   ஸ்லோகம் நம்பர் ஏழு

துக்தைர் மத்வாஜ்ய யுக்தைர் ததிஸித ஸஹிதை:
                        ஸ்நாபிதம் நைவ லிங்கம் 
நோ லிப்தம் சந்தனாத்யை: கனக விரசிதை: 
                        பூஜிதம் ந ப்ரஸுநை:|
தூபை: கர்பூரதீபைர் விவிதரஸயுநைர் நைவ
                         பக்ஷ்யோ பஹாரை|
க்ஷந்தவ்யோ மே அபராத: சிவசிவசிவ போ
                ஸ்ரீ மஹாதேவ சம்போ||

விளக்கம் : பால், தேன், நெய், சர்க்கரை, தயிர் இவை எதனாலும் என்னால் உமது லிங்ஙத் திருமேனிக்கு அபிஷேகம் செய்யப்படவில்லை. சந்தனம் முதலியவை பூசப்படவில்லை. மலர்கள் சமர்ப்பிக்கவில்லை. ஆபரணங்களால் அலங்கரிக்கப்படவில்லை. தூப தீபம் காட்டப்படவில்லை. புனித திரிவிளக்கு சமர்ப்பிக்கவில்லை. சுவையான உணவு பண்டங்கள் எதுவுமே நேவேதனம் செய்யவில்லை. மஹா தேவரே இத்தகைய அலட்சகயங்களும் அசட்டைகளும் என்னுடைய கர்ம வினையால் ஏற்பட்டிருப்பின் அவைகளை மன்னிப்பீராக.

                                         ஸ்லோகம் நம்பர் எட்டு 

நக்னோ நீஸ்ஸங்க சுத்தஸ்த்ரிகுண விர ஹிதோ 
                     த்வஸ்த மோஹாந்தகாரோ
நாஸாக்ரே ந்யஸ்த த்ருஷ்டிர் விதித பவகுணோ நைவ
                     த்ருஷ்ட: கதாசித்|
உன்மன்யாவஸ்தயா த்வாம் விகித கலிமலம் சங்கரம் 
                     ந ஸ்மராமி 
க்ஷந்தவ்யோ மே அபராத: சிவசிவசிவ போ
                ஸ்ரீ மஹாதேவ சம்போ||

விளக்கம் : சங்கரனே நீர் எங்கும் எல்லாவற்றிலும் இருப்பதால் இயற்கையாகவே திகம்பரனாக ஆடையேதும் தரிக்காமல் இருப்பவன். பற்றற்றவனாயிருப்பவன். மாயையின் இருளை அழித்து விட்டவன். மூக்கின் நுனியில் பார்வையை நிறுத்தி ஆழ்ந்த தியானத்திலிருப்பவன். இந்த உலகத்தின் குணங்களை அறிந்தவன். அறிய முடியாத குறைபாடுகள் அற்ற மனதை உடையவன். எல்லோருக்கும் ஆனந்தத்தையும் மங்கலத்தையும் அளிப்பவன். அத்தகைய உம்மை நான் சிந்திக்கவில்லை. 
 மஹா தேவரே இத்தகைய என் தவறுகளுக்கு கர்ம வனைகளேயல்லவா காரணணாக இருக்க முடியும் ! என்னை மன்னிக்க வேண்டுகிறேன். 

                                    ஸ்லோகம் நம்பர் ஒன்பது 

சந்த்ரோத் பாஸிதசேகரே ஸ்மரஹரே
         கங்காதரே சங்கரே
ஸ்வபைர் பூஷித கண்ட கர்ணவிவரே 
        நேத்ரோத்த வைச்வானரே|
தந்தித்வக்ருத ஸுந்தராம்பரதரே த்ரை
        லோக்யஸார ஹரே
மோக்ஷார்தம் குரு சித்த வ்ருத்தி மகிலா
        மன்னயஸ்து கிம் கர்ம பி:

விளக்கம் : சந்திரசேகரரே தாங்கள் சந்திரனின் பிறையொளியால் அலங்கரிக்கப்பட்ட நெற்றியையுடையவர். எம்முள் இருக்கும் தீய எண்ணங்களை அளிப்பதால் ஹரன் என்றழைக்கப்படுபவர். கங்கையை தரித்துக் கொண்டிருக்கும் கங்காதரன். ஆனந்தத்தைக் கொடுப்பதால் சங்கரன். கழுத்தும், காதும், நகத்தால் அலங்கரிக்கப்பட்ட நாகாபரணன். கணகளிலிருந்து நெருப்புச் சுடர் தெறிக்கும். வைஸ்வானரன் யானைத் தோலையணிந்தவன். மூன்று உலகங்களின் அடிப்படைத் தத்துவமானவன். மோக்ஷத்தை அளிக்கக் கூடிய பரிசுத்தமான மனத்தை நீர் எமக்களியும். அது ஒன்றை அருளினாலே போதும். மற்ற ஞானம் அனைத்தும் அதனுள்ளேயே அடக்கம் என்பதால் அனைத்தும் தானே வந்து சேரும். 

                                       ஸ்லோகம் நம்பர் பத்து 

கிம் வர்நேன தனேன வாஜிகரிபி:
      ப்ராப்தேனே ராஜ்யேன கிம்
கிம் வா புத்ர களத்ர பசுமிர்தேஹேன
     கேஹேன கிம்|
ஞாத்வை தத்க்ஷண பங்குரம், ஸபதிரே
     த்யாஜ்யம் மனோ துரத்:
ஸ்வாத் மாரத்தம் குருவாக்யதோ பஜ பஜ 
     ஸ்ரீ பார்வதி வல்லபம்||

விளக்கம் : ஏ மனமே செல்வத்தினால் என்ன உபயோகம்? குதிரைகள், யானைகள் யாவும் நிறைந்த ராஜ்யத்தினால் என்ன பலன்? மகன், நண்பன், மனைவி, மிருகங்கள் இவைகளால் என்ன பயன்? இந்த உடலால் என்ன உபயோகம்? இந்த வீட்டால் என்ன பயன்? இவையனைத்தும் ஒரு கணத்தில் அழியக் கூடியவை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இவை எல்லாம் உடனே துறக்கப்பட வேண்டியவை. அதன் பின் மேன்மையான குரு விடமிருந்து உபதேசம் பெற்று பார்வதி நாயகனைப் போற்றிப் பயனடைவாய். 

                                    ஸ்லோகம் நம்பர் பதினொன்று

ஆயுர் நச்மதி பச்ய தாம் ப்ரதி தினம் யாதி
            க்ஷயம் யௌவனம்
ப்ரத்யாயாந்தி கதா: புனர் ந திவஸா:
            கலோ ஜகத் பக்ஷக:|
லக்ஷ்மிஸ்தோய தரங்க பங்கசபலா
            வித்யுச்சலம் ஜீவிதம்
தஸ்மாந்மாம் சரணாகதம் சரணத த்வம்
            ரக்ஷ ரக்ஷா துனா||

விளக்கம் : தினமு‌ம் நம் உயிர் தேய்ந்து கொண்டிருகாகிறது. இது கவனிக்கப்பட வேண்டும். இளமையும் அழகும் கரைந்து கொண்டிருக்கின்றன. நாட்கள் கடந்து போய்க் கொண்டிருக்கின்றன. காலம் உலகத்தை விழுங்கிக் கொண்டிருக்கின்றது. செல்வத்திற்கதிபதியான லக்ஷ்மி எங்கும் நிலையாக நிற்க மாட்டாள். அலைமகள் அலைகளைப் போல் நிலையற்றவள். இந்த வாழ்க்கையும் நிலையற்றது. மின்னலைப் போன்று கணத்தில் தோன்றி மறையக்கூடியது. அதனால் சரணமடைந்தவரைக்காக்கும் சதா சிவனே என்னையும் காப்பீராக.

                                ஸ்லோகம் நம்பர் பன்னிரெண்டு 
கரசரணக்ருதம் வாக்காயஜம்
         கர்மஜம் வா
ச்ரவணநயனஜம் வா மானஸம்
         வா பராதாம்
விஹிதம விஹிதம் வா ஸர்வமேதத்
         க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ சம்போ|

விளக்கம் : மகாதேவரே! என் கைகளினாலும் கால்களினாலும் செய்யப்பட்ட தவறுகள், சொல், உடல், செயல்களில் தவறுகள், கண், செவி ஆகியவையால் செய்யப்பட்ட தவறுகள் செய்ய வேண்டியதைச் செய்யாததால் ஏற்ப்பட்ட விளைவுகள் செய்யக்கூடாததைச் செய்தால் ஏற்பட்ட கெடு பலன்கள் என்று எல்லா குற்றங்களையும் மன்னிப்பேராக. கணக்கற்ற பாவங்களையும் மன்னிக்க கூடிய கருணா மூர்த்தியே உண்மையே பர்பூர்ணமாக சரணாகதியடைகிறேன். என்னைக் காப்பீராக.

சிவாபராத க்ஷமாபன ஸ்தோத்திரம் நிறைவுற்றது.

No comments:

Post a Comment