Monday, April 22, 2019

Pancha patram meaning in tamil

பஞ்சபாத்ரம் என்று ஏன் சொல்லுகிறோம்? அதுக்கு ஏன் அப்பெயர் வந்தது?

பஞ்ச பாத்திரத்தை பற்றி மூன்று விதமான விவரங்கள் உண்டு.

முதலில் ஆராதனத்திற்க்கு பயன்படும் அந்த பஞ்ச பாத்திரம்  இயற் பெயர் 'பஞ்ச பத்ர பாத்திரம்' என்பர் பெரியோர்.

அதாவது அந்த பாத்திரத்தில் ஐவகை பத்திரங்களை(இலைகள்) அதிலுள்ள நீரில் இட்டு அந்நீரை உத்தரணி என்ற சிறு கரண்டியால் எடுத்து பூஜைக்கு,  ஆராதனைகளுக்கு பயன்படுத்துவதால் அப்பெயர்.

அது என்ன பஞ்ச பத்ரம்?

அதுவா துளசி, அருகு, வேம்பு, வில்வம், வன்னி ஆகிய இலைகளே பஞ்ச பத்திரங்கள் என்பர்.

இந்த பத்திரங்களும் தீர்த்தமும் விடப்படும் பாத்திரம் 'பஞ்ச பத்ர பாத்திரம்'. இதுவே காலப்போக்கில் மருவி பஞ்ச பாத்திரம் என்றானது.

இந்த பத்திரங்கள் மூலிகைகளாகும்.  இந்த பத்ரங்கள் தெய்வீகமானவை பூஜைகளுக்கு ஏற்றவை.

இப்படியாக ஐந்து இலைகளையும் பகவத் கைங்கர்யத்திற்க்கு அர்ப்பணித்து அர்க்யம்,பாத்யம், ஆசமனியம் என தீர்த்தம் விடுவதாலேயே அந்த பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

ஶ்ரீ வைஷ்ணவர்கள் விஷ்ணு பகவான் ஆராதனத்திற்கு  உகந்தது துளசிதளம் ( திருத்துழாய்).

ஸ்மார்த்தார்கள் ஆராதிக்கும் சிவனுக்கு உகந்தது வில்வம் என்பர் (பெருமாள் கோவிலிலும் வில்வ அர்ச்சனை செய்வர்).

சிவனின் பத்னியான அம்மனுக்கு வேப்பிலை உகந்தது.

அவரின் புத்திரனான விநாயகருக்கு அருகம் புல் உகந்தது.

படைப்பு தொழிலை கவனிக்கும் பிரம்மனுக்கு அத்தி இலை சிறப்பானது.

இப்படியாக ஐந்து பத்ரங்களை ஒவ்வொரு ஆராதனைக்கும் அவரவர்கள் உபயோகிப்பதால் பஞ்ச பத்ர பாத்ரம் என்பர்.

திருவாராதனத்தில் பகவானுக்கு அர்க்கியம், பாத்தியம், ஆசமனீயம், ஸ்நானீயம், சுத்தோதகம் என்று பஞ்ச உபசாரம் செய்ய உபயோகிப்பதால் அந்த ஐந்து நீர்வட்டில் பஞ்ச பாத்ரம்  என அழைக்கிறோம்.

பஞ்சபாத்திரம் = பஞ்ச+ பாத்திரம்.

பெரும்பாலும் இல்லத்தில் அல்லது நமது பெருமாள் கோவில்களில் 5 பாத்திரங்களில் பெருமாள் முன் தீர்த்தம் இருக்கும். ஆனால் தீர்த்த விநியோகம் செய்யும் போது ஒரு கிண்ணத்தில் உள்ள தீர்த்தத்தை மட்டுமே நமக்குத் தருகிறார்கள்.

பஞ்சோபசார பாத்ரம் என்றால் என்ன?

அதாவது பெருமாளுக்கு
அர்க்யம் -கைகளை சுத்தம் செய்ய
பாத்யம் - பாதங்களை சுத்திகரிக்க 
ஆசமனீயம் - இது ஆசமனம் 
ஸ்நானீயம் - திருமேனிக்கு 
சர்வார்த்த தோயம் - 

மேலே உள்ள உபசாரத்தை தவிர உள்ள மற்ற அனைத்து உபசாரங்களுக்கும் என பயன் படுத்துவதால் அந்த ஐந்து பாத்திரங்களையும் பஞ்ச பாத்திரங்கள் என்பர்.

அப்போ சொம்பு எதுக்கு?

மேலே சொல்லியுள்ள உபசாரங்களுக்கு தேவையான தீர்த்தத்தை வைப்பதற்க்கு அதில் இருந்து தீர்த்தம் எடுத்து தான் இந்த பஞ்ச பாத்திரங்களுக்கு தேவையான தீர்த்தத்தை விடுவார்கள்.

அப்படியானால் கோவிலில் தீர்த்த விநோயோகத்திற்கு எதில் இருந்து தீர்த்தம் தருவார்கள்?

அதாவது நமக்குக் கொண்டு வந்து கொடுக்கும் தீர்த்தம் சர்வார்த்த தோயம் என்ற அந்த ஐந்தாம் பாத்திரத்தில் இருந்து தருவார்கள்.

அந்த பாத்ரம் தான் நடுவில் வைக்கப்பட்டு இருக்கும். மற்ற அனைத்தின் உபசார தீர்தங்களும்  இந்த ஐந்தாவது பாத்திரத்திற்க்கே தான் போயும் வரவும் செய்யும்.
இந்த தீர்த்தங்களில் பெரும்பாலும் இடப்படும் பொருட்களும் ஐந்தாகும்.

பச்சைக் கர்ப்பூரம் (ஶ்ரீவைஷ்ணவர்கள் மற்றும் பெருமாள் கோவில்களில் மட்டும் உபயோகிப்பர்).
ஏலக்காய், இலவங்கம் ஜாதிக்காய், வெட்டிவேர்.

இவற்றுடன் சிறிது மஞ்சள் கலந்து சில கோவில்களில் உபயோகிப்பர்.

மூன்றாவதாக பஞ்சபாத்ரம் என்று ஒரே ஒரு பாத்ரத்தை சொல்லுவர்.

பொதுவாக அந்த டம்ளர் போலுள்ள பாத்ரத்தை பஞ்சமுக பாத்ரம் என்பர்.

விளக்கில் தானே பஞ்சமுகம்?  நீர் பாத்ரத்துக்கும் பஞ்சமுகம் என்பதா?

பஞ்சமுகம்என்பதற்குஅர்த்தமே வேறு.

வியாக்கரண சாஸ்திரப்படி பஞ்ச என்றால் விஸ்தாரம் என்று பொருள்.

இந்த பாத்திரத்தின் முகப்பு மாத்திரம் நன்றாக விரிந்து பெரியதாகவும் உடம்பு ஒடுங்கி சிறுத்தும் இருப்பதால் இதற்கு பஞ்சமுகம் என்றும் பெயர்.

அதேபோல் திருவாராதனத்திற்க்கு உபயோகிக்கும் அந்த டம்ளர் போன்ற பாத்திரத்தின் தலைப்பாகம் விரிந்தும் உடல் சிறுத்தும் இருப்பதனால் அந்த பாத்திரத்தை மட்டும் கூட பஞ்ச பாத்திரம் என்று கூறுவர் பெரியோர்.

1 comment:

  1. Athiyilai is for Brahma whereas Panchapatram contains Vanni or Athi ??

    ReplyDelete