விஷ்ணு ஸஹஸ்ரநாமம்11
75. ஈஸ்வர:- சரவவல்லமை படைத்தவர். 'ஈஸ்வர: சர்வபூதானாம் ஹ்ருத்தேசே அர்ஜுன திஷ்டதி ப்ராமயன் சர்வ பூதானி யந்த்ராரூடாநி மாயயா,'(ப. 18.61) ஈஸ்வரன் எல்லோருடைய இதயத்திலும் இருந்துகொண்டு தேகமாகிய இயந்திரத்தில் உள்ள பொம்மைகள் போல அவர்களை மாயையால் இயக்குகிறான்
76. விக்ரமீ-க்ரம என்றால் அடி வைப்பது(stride) விஷம: க்ரம:அஸ்ய இதி விசித்ரமான அடிவைப்பு . இது த்ரிவிக்ரமனைக் குறிக்கிறது. விக்ரம என்றால் வீரம்.,விக்ரம: அஸ்ய அஸ்தி இதி விக்ரமீ. வீரம் என்பது பகவானின் ஆறு குணங்களில் ஒன்று.
77. தன்வீ- சார்ங்கம் என்ற தனுஸ் , வில்லை உடையவன் ஆதலால் தன்வீ எனப்படுகிறான். ராமாவதாரத்தில் கோதண்டபாணியாக இருப்பதாலும் தன்வீ என்ற சொல் பொருந்தும். கீதையில் கண்ணன்' ராம: சஸ்த்ரப்ருதாம் அஹம் ,; ஆயுதம் தரித்தவர்களில் நான் ராமன் என்று சொல்கிறான்.
78. மேதாவீ- அனைத்தையும் அறிபவர். முண்டக உபநிஷத் கூறுகிறது, ய: சர்வக்ஞ: சர்வவித் யஸ்ய ஞானமயம் தப:, எவர் எல்லாம் அறிந்தவரோ எவருடைய தவசக்தி ஞானம் என்பதோ அவர்தான் ஈஸ்வரன்.
79. விக்ரம: - வி என்றால் பறவை அதாவது கருடன். வினா க்ரமணம் அசய இதி விக்ரம: கருடன்மீது செல்பவர். கருடன் வேதாத்மா என்று சொல்லப்படுகிறார் அதாவது வேத மயமானவர். பகவான் த்ரயீமயக்ரமண: அதாவது மூன்று வேதங்கள் மூலம் அறியப்படுபவர். த்ரிவிக்ரமனாய் உலகை அளந்தவர் என்றும் சொல்லலாம்.
80. க்ரம:- சர்வவ்யாபீ. 'யச்ச கிஞ்சித் ஜகத் சர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித: ,' நாரயணசூக்தம்.எவ்வளவு சிறிதாயினும் அனைத்தையும் வியாபித்திருப்பவர்.
81. அனுத்தம: -உத்தம: என்றால் எல்லாரையும் விட மேலான என்று பொருள். அனுத்தம: என்றால் அவனை விட உத்தமன் வேறு இல்லை என்பது. உயர்வற உயர்நலம் உடையவன்
82. துராதர்ஷ:-கடலைப்போல் ஆழம் காண முடியாதவர். துஷ்டான் ஆஸமந்தாத் தர்ஷயதி , துஷ்டர்களை எல்லா விதத்திலும் கண்டிப்பவர்..
83. க்ருதக்ஞ:-க்ருதம் ஜாநாதி இதி க்ருதக்ஞ:. எல்லோராலும் செய்யப்பட்ட எல்லாவற்றையும் அறிபவர். சிறிய நல்ல செய்கையையும் மறக்காதவர் என்றும் சொல்லலாம். உலக வழக்கில் இது நன்றியுள்ளவரைக் குறிக்கும். ஆனால் இது பகவானுக்கு எவ்வாறு பொருந்தும் என்றால் 'பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி ததஹம் பக்த்யுப்ருதம் அச்னாமி பிரயதாத்மன:,' என்று கீதையில் கூறியுள்ளபடி, ஒரு சிறு இலையோ பூவோ பழமோ எதுவானாலும் பக்தியுடன் கொடுக்கப்பட்டால் அதை மறவாது அவருக்கு மோக்ஷத்தை அளிப்பவர் என்று பொருள். குசேலர் கதை இதற்கு உதாரணம்.பிடி அவலுக்கு மாளாத ஐஸ்வர்யத்தைக் கொடுத்து கடைசியில் மோக்ஷத்தையும் அளித்தான் அல்லவா! கொடுத்ததை விட மேலாக அளிப்பவன் க்ருதக்ஞன் .
மகாபாரதத்தில் கண்ணன் சொல்கிறான், திரௌபதி கூக்குரல் இட்டு அவனைக்கூப்பிட்டது அவன் காதில் ஒலித்துக்கொண்டே இருந்ததாம். அது வட்டி போடும் கடனாக நினைத்தானாம். அதனால்தான் அவளுக்கு அப்போதைக்கு அருள்புரிந்தாலும் அதை ஒரு தீராக்கடனாக நினைத்து கௌரவர்களை பூண்டோடு அழித்தான். தன் பக்தர்களை துன்புறுத்துபவர்களை பகவான் ஒருபோதும் மன்னிக்க மாட்டான்.
ராமனை வால்மீகி பினவருமாறு வர்ணிக்கிறார் .
கதம்சித் உபகாரேண க்ருதேனைகேன துஷ்யதி
ந ஸ்மரத்யபகாராணாம் சதமபி ஆத்மவத்தயா
ராமன் ஒரு சிறிய உபகாரத்தைக்கூட மறக்க மாட்டானாம். அதே சமயம் அபகாரங்கள் நூறாயினும் அதை மனதில் கொள்ள மாட்டானாம்
84. க்ருதி:
க்ருதிஎன்றால் செய்கை ., அவனே உள்ளிருந்து செயல் படுத்துவதால் செயலும் அவனே செய்பவனும் அவனே.
85. ஆத்மவான் –தன் மகிமையையே தனக்கு ஆதாரமாகக் கொண்டிருப்பவன்என்று சாந்தோக்ய உபநிஷத் கூறுகிறது. 'ஸ பகவ: கஸ்மின் ப்ரதிஷ்டித: இதி. , ஸ்வே மஹிம்னி.'
No comments:
Post a Comment