விஷ்ணு ஸஹஸ்ர நாமம் -7
37. ஸ்வயம்பூ:- ஸ்வயம் பவதி இதி ஸ்வயம்பூ:-தானே தன்னை தோற்றுவிப்பவர்.
கீதையில் கண்ணன் கூறுகிறான், பிரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய சம்பவாமி ஆத்மமாயயா (ப.கீ. 4.6)
"என்னுடைய மாயையால் நான் இயற்கையாகத் தோன்றுகிறேன்."
பாகவதத்தில் கிருஷ்ணனுடைய பிறப்பு இவ்வாறு வர்ணிக்கப்படுகிறது.
தம் அத்புதம் பாலகம் அம்புஜேக்ஷணம்
சதுர்புஜம் சங்கதாயுதாயுதம்
ஸ்ரீவத்ஸலக்ஷ்மம் கலசோபிபிகௌஸ்துபம்
பீதாம்பரம் சாந்த்ர பயோதசௌபம்
வசுதேவர் கண்ட குழந்தை எப்படி இருந்தது என்றால், தாமரைக்கண்கள், நான்கு புஜங்கள் கைகளில் சங்கு சக்ரம் கதை முதலிய ஆயுதங்கள், ஸ்ரீவத்ச மரு கொண்ட மார்பு, கழுத்தில் கௌஸ்துப மணி, பீதாம்பரம் இவைகளுடன் கொண்டல் நிறமான அத்புத பாலகன் என்று சுகர் வர்ணிக்கிறார். இது ஒரு மானுடக் குழந்தைக்கு சாத்தியமா? அதுதான் அவனுடைய ஸ்வயம்பு என்பதன் பொருள்.
தேசிகர் யாதவாப்யுதயத்தில் கூறுகிறார் . கண்ணன் தேவகியினிடத்தில் சூரியன் கிழக்கு திசையில் எழுவதைப்போல தோன்றினான் என்று. சூரியன் எப்போதும் உள்ளான் அவனை நாம் கிழக்கு திசையில் காண்கிறோம் அதுபோல எங்கும் உள்ள இறைவன் அவனுடைய மாயையால் நமக்கு ஓர் உருவம் கொண்டு தோன்றுகிறான்.
38. சம்பு:- சம் என்றால் சுகம். உதாரணம் எல்லா தேவதைகளும் நமக்கு சுகம் கொடுக்கட்டும் என்ற பொருளில் கூறப்படும் ' சம் நோ மித்ர: சம் வருண: ---' என்ற மந்திரம்.
சம் ,சுகம் பாவயதி இதி சம்பு: , சுகத்தைக் கொடுப்பவன். ' விச்வாக்ஷம் விச்வசம்புவம் ,' – நாராயண உபநிஷத்.
வால்மீகி ராமனை வர்ணிக்கிறார்,
ரூப ஔதார்ர்ய குணை: பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்
சந்த்ரகாந்தானனம் ராமம் அதீவ ப்ரிய தர்சனம் , என்று.
ராமன் அவனுடைய சிறந்த குணங்களாலும் சந்திரனைப்போன்ற முக லாவண்யத்தினாலும் எல்லோருடைய பார்வைகளையும் மனங்களையும் அபஹரிப்பவனாக மிகவும் சுகத்தை அளிக்கும் ரூபத்தை உடையவனாக இருந்தான் என்று.
39. ஆதித்ய: -- அதிதியின் புத்திரனாகையால் சூரியனுக்கு ஆதித்யன் என்று பெயர். இது அதிதியிடம் தோன்றிய வாமனரையும் குறிக்கும். தேவகி முந்தைய பிறவியில் அதிதியாக இருந்தாள் என்றதால் கிருஷ்ணரையும் குறிக்கும்' மேலும், அகாரம் விஷ்ணுவைக் குறிக்கும் ஆதலால் ஆத் +இத்ய: =ஆதித்ய: என்றால் அகாரமான விஷ்ணுவிடம் இருந்து கிடைப்பது, அதாவது மோக்ஷம்.
ஆ வர்ணாத் ப்ராப்ய:. ஆ என்ற அசை (syllable) மூலம் அடையக்கூடியவன் , ஆ என்பது நாராயணனின் வ்யூஹரூபங்களுள் ஒன்றான சங்கர்ஷணனின் பீஜ மந்த்ரம்.
ஆதத்தே, ரஸான் புவ: ரச்மிபி: இதி ஆதித்ய: என்று பொருள் கொண்டால்,
ரஸான்- உயிர்ஸத்தை, புவ: உலகத்திற்கு, ரச்மிபி: தன் கிரணங்களால் ஆதத்தே –கொடுக்கிறான். அல்லது, பாஸம்- ஒளியை , ஜ்யோதிஷாம் – சூரியன் முதலிய ஒளி தரும் சிருஷ்டிகளுக்கு ஆதத்தே – கொடுக்கிறான்.. இதன் மூலம் உயிர் மற்றும் ஒளி பெறக்காரணமாக உள்ள நாராயணன் என்கிற பரம்பொருள் சொல்ல்ப்பட்டதாக ஆகிறது.
40. புஷ்கராக்ஷ: - புஷ்கர என்ற சொல்லுக்கு , ஆகாசம், தாமரை, தண்ணீர் என்ற பல பொருள்கள். புஷ்கரே அக்ஷீணி யஸ்ய ஸ: புஷ்கராக்ஷ: என்று பொருள் கொண்டால் எவருடைய பார்வை எல்லாவற்றிற்கும் மேலே ( ஆகாசம் என்ற அர்த்தத்தில்) இருக்கிறதோ, அதாவது எங்கும் பார்வை உள்ள என்று பொருள் கொள்ளலாம்., நாம் சாதாரணமாக எல்லாவற்றையும் மேலே இருந்து ஒருவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று சொல்வதைப்போல. புஷ்கர என்றால் தாமரை என்று கொண்டால் தாமரைக்கண்கொண்டவன் என்று பொருள்.
மேலும் உபநிஷத் சொல்கிறது, 'தஸ்ய கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ' மலர்ந்த தாமரைக் கண்கள் அது பிரம்மமே என்று கூறுகிறது.. நாராயணனே பரப்ரம்மம் என்பதை ஒட்டி ராமானுஜர் கப்யாஸம் என்ற சொல்லுக்கு கம் பிபதி இதி கபி: , நீரைக்குடிப்பவன் அதாவது சூரியன் ( சூரியனால் நீர் ஆவியாவதால்) கபினா, அந்த சூரியனால் ஆஸம் – மலர்ந்த, புண்டரீகம், தாமரை , ஏவம்- இப்படிப்பட்ட அக்ஷிணீ, கண்களுடையவன் என்று நாராயணனையே சூர்ய மண்டலத்தின் உள்ளே இருப்பவனாகக் காண்கிறார்.
41. மஹாஸ்வன:- ஒலியே உருவானவன். சப்தப்ரம்மன். ப்ரணவச்வரூபன். கண்ணன் பாஞ்ச ஜன்யத்தை ஊதினபோது கௌரவர்கள் அப்போதே உயிரிழந்ததுபோல இருந்ததாம் . பாஞ்ச ஜன்யம் ப்ரணவஸ்வரூபம். அந்த பாஞ்ச ஜன்யத்தை உடையவன் மஹாஸ்வன: எனப்படுகிறான்.
42. அனாதிநிதன:- ஆதி அல்லது ஆரம்பம் நிதனம் அல்லது முடிவு என்பது இல்லாதவன். ஆதியந்தம் இல்லாதவன். அனந்தன்.
43. தாதா-எல்லாம் கொடுப்பவன் எல்லாவற்றையும் காப்பவன்.தா என்றால் உண்டாக்குவது என்றும் அர்த்தம் அதாகாது ஸ்ருஷ்டிப்பவன்., தே ( உட்கொள்வது) என்ற தாதுவிலிருந்து தா என்ற மாறுபாடு .அதாவது சம்ஹாரமும் சொல்லப்பட்டதாகிறது.
44. விதாதா- கர்மபலதாதா – கர்ம பலனைக் கொடுப்பவன் அல்லது விவிதை: தாதா- பலவகையிலும் காப்பவன்
வி என்ற சொல் பறவையை அதாவது கருடனைக் குறிக்கும். அதனால் விதாதா என்றால் கருடநாள் சுமக்கப்பட்டவன் என்றும் பொருள்.
45. தாதுருத்தம: - தா என்பதற்கு சிருஷ்டித்தல், காத்தல் என்பதோடு வளர்த்தல் என்றும் பொருள். உயிர்கள் வாழ அவனே காரணம் என்பதால் தாதுருத்தம: எனப்படுகிறான்., தாது என்பதற்கு ஆகர்ஷணம் அதாவது பிரபஞ்சத்தில் கிரகங்கள் நக்ஷத்திரங்கள் முதலியன அதனதன் இடத்தில் செயல் படுவதைக் குறிக்கும். ஸ்தூல உலகும் சூக்ஷ்ம உலகும் சரியாக செயல் படுவதற்கு காரணமானவன் என்பதால் தாதுருத்தம: எனப்படுகிறான்.
No comments:
Post a Comment