விஷ்ணுஸஹஸ்ர நாமம்-6
25.ஸர்வ:-உபநிஷத் சொல்கிறது. 'அந்தர்பஹிஸ்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித':- நாராயண சூக்தம். ஸர்வமும் அவனே ஆகாயம் போல எங்கும் வியாபித்து உள்ளும் புறமும் ஆக விளங்குகிறான்.
26. சர்வ: -( சிவ என்பதில் போல உச்சரிப்பு.) ச்ருணாதி இதி சர்வ: , ஹினஸ்தி ஸர்வா: பிரஜா: ஸம்ஹாரஸமயே, பிரளயகாலத்தில் எல்லாவற்றையும் சம்ஹரிக்கிறார் என்று பொருள் அதனால் ருத்ரனுக்கு சர்வ; என்று ஒரு பெயர்.
நாராயணனுக்கு அவர் பரப்ரம்மமாக சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் மூன்றுக்கும் காரணமாக இருந்தாலும், சர்வ: என்ற சொல்லிற்கு ஸ்வசரீரபூதானாம் அசுபமபி ச்ருணோதி என்ற அர்த்தத்தில் அவருடிய சரீரமான் இந்த உலகத்தின் அசுபத்தை நீக்குகிறார் என்ற பொருளிலும் இந்தச்சொல் பயன்படுத்தப்படுகிறது.
27. சிவ:- சிவம் என்றால் சுபம் என்று பொருள். நிஸ்த்ரைகுண்யதயா சிவ:- முக்குணமற்ற சுத்த சத்வத்தைக் குறிக்கும்.
இன்னொரு பொருள். 'சீங் சேதே,' -சீங் என்ற தாது தூங்குவது என்ற பொருளில் உபயோகப்படுத்தப்படுகிறது. அந்தப் பொருளில் சேதே இதி சிவ: என்ற அர்த்தத்தில் இது பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனைக் குறிக்கிறது.
நாராயணனே பரப்ரம்மம் என்று பார்க்கும்போது அவனை அவனி அறிந்திலது என்ற பொருளில் அவன் தூங்குவதாக பாவனை செய்யப்படுகிறது.
.28.ஸ்தாணு: - இந்தப் பெயர் சிவனைக் குறிக்கும் என்பது அறிந்ததே . இங்கு நாராயணனுக்கு எப்படி பொருந்தும் என்று பார்த்தால் , ஸ்தாணு என்ற வார்த்தைக்கு 'திஷ்டதே இதி ஸ்தாணு:' என்று பகுத்துப் பொருள் கொள்ளவேண்டும். அதாவது ஸ்திரமாக உள்ளது என்று பொருள். எவ்வாறு ஒரு மரத்தின் கிளைகள் இலைகள் இவை அசைந்தாலும் மரம் அசையாதோ அதே போல அசையும் அல்லது மாறும் இந்த உலகில் மாறாது ஸ்திரமாக இருந்து அருள் புரிபவன் என்று கொள்ளலாம்.
29. பூதாதி: -பூதானாம் ஆதி:: அதாவது எல்லா உயிர்களுக்கும் காரணன் என்று பொருள்.
30. நிதி: அவ்யய:- இந்த இரண்டு நாமங்களையும் சேர்த்துப பொருள் கூறுவர் பெரியோர். நிதி என்றால் நாம் அறிவோம். அவ்யய என்றால் அழியாத என்று பொருள்.இந்த உலகில் உள்ள எல்லா செல்வமும் அழியக்கூடியது. அழியாத நிதி எது? பகவான் தான்.
இதை வேதாந்த தேசிகர் வைராக்ய பஞ்சகத்தில் மிகவும் அழகாகக் கூறுகிறார்.
நாஸ்தி பித்ரார்ஜிதம் கிம்சித் ந மயா கிம்சித் ஆர்ஜிதம்
அஸ்தி மே ஹஸ்திசைலாக்ரே வஸ்து பைதாமஹம் தனம்.
எனக்கு பித்ரார்ஜித சொத்து ஒன்றும் இல்லை. நானாகவும் எதுவும் சம்பாதிக்கவில்லை. ஆனால் என் பரம்பரை சொத்து அழியாதது ஒன்று உள்ளது அதுதான் இந்த அத்தி மலை வரதன் என்கிறார்.
பக்தர்களுக்கு அழியாத செல்வம் பகவானே. அதனால்தான் த்யாகராஜர் நிதி சால சுகமா ராமுனி சன்னிதி சேவா சுகமா என்று பாடினார்.
நிதி என்பதற்கு இன்னொரு பொருள் 'நிஸ்சயேன ஸர்வம் ஸதா அஸ்மின் நிதீயதே ,' அதாவது நிலையாக சேமிக்கும் பெட்டகம் என்பது. Sadedeposit vault! நாம் நம்மை அவனிடம் ஒப்படைத்து விட்டால் கவலை இன்றி நிம்மதியாக இருக்கலாம்.
உலகம் முடிவுறும்போது எல்லாம் அவனிடம் ஒடுங்குவதாலும் அவன் நிதி என்று சொல்லப்படுகிறான்.
31. ஸம்பவ: - இந்தச்சொல் சாதாரணமாக உண்டாகிறது என்ற அர்த்தத்தில் அறியப்படுகிறது. கும்ப சம்பவ: என்று அகஸ்தியருக்குப் பெயர் கும்பம் அல்லது குடத்தில் தோன்றியவர் என்ற பொருளில். இங்கு இந்தச்சொல் வேறு அர்த்தத்தில் சொல்லப்படுகிறது. 'ஸமீசீன: பாவ: ஸம்பவ:,' முழுமையாகத் தோன்றுதல். இது பகவானின் அவதாரத்தைக் குறிக்கிறது.
'சம்பவாமி யுகே யுகே – யுகம்தோறும் தோன்றுவேன்
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததா ஆத்மானம் ஸ்ருஜாம்யஹம் – எப்போதெல்லா தர்மம் அழிவுற்று அதர்மம் மேலோங்குமோ அப்போதெல்லாம் நான் என்னைத் தோற்றுவிப்பேன் ,' என்று கீதையில் சொன்னவாறு.
32. பாவன:- பாவ்யதே அனேன இதி பாவன:- பவ என்றால் இருப்பது என்று பொருள். பாவ்யதே அனேன என்றால் எல்லாம் இருப்பது அல்லது வாழ்வது அவனாலே என்று பொருள்.
33. பர்த்தா- பிரபஞ்சத்திற்கு ஆதாரமாக இருந்து தாங்குபவன். சிருஷ்டி செய்வதால் பாவனா: என்று சொல்லப்படுகிறான். காப்பதினால் பர்த்தா என்று சொல்லப்படுகிறான்.
34. ப்ரபவ: - ப்ரக்ருஷ்ட: பவ: - உயர்ந்த நிலையில் உள்ளவர். 'உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன் ,;' என்று நம்மாழ்வார் வாக்குப்படி. 'ப்ரகர்ஷேண மகாபூதானி அஸ்மாத் ஜாயந்த,' பஞ்ச பூதங்களால் ஆன உலகம் அவனிடம் இருந்து தோன்றியதாலும் பிரபவ: எனப்படுகிறான்.
35. பிரபு: -ப்ரகர்ஷேண பவதி இதி பிரபு: - எல்லாவற்றிற்கும் மேலான அதிபதியானவன்.
'கதிர்பர்த்தா பிரபு: சாக்ஷீ,'- கீதை
J
36. ஈஸ்வர: --ஈஸ்வர: சர்வபூதானாம் ஹ்ருத்தேசே அர்ஜுன திஷ்டதி
ப்ராமயன் சர்வபூதானி யந்த்ராரூடானி மாயயா- கீதை
ஈசிதும் சீலம் அஸ்ய இதி ஈஸ்வர: -எல்லாவற்றையும் நிர்வகிப்பவர். எல்லா உயிர்களுக்கும் உள்ளே இருந்து கொண்டு மாயையின் மூலம் பிரபஞ்சத்தை நடத்துபவர்.
No comments:
Post a Comment