ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 7- அத்தியாயம் 14
யுதிஷ்டிரர் நாரதரிடம் இல்லறத்தில் மதி மழுங்கிய க்ருஹஸ்தன் பகவானிடம் நிலைத்த பக்தியான இந்நிலையை எந்த முறையில் அடைவான் என்று கேட்க நாரதர் க்ருஹஸ்தாஸ்ரமத்தைப் பற்றி கூறலுற்றார்.
க்ருஹஸ்தன் இல்லறத்திற்குரிய கடமைகளை பகவானுக்கு அர்ப்பணமாகச் செய்து மகான்களாகிய முனிவர்களை நாடி அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். பற்றில்லாமல் அத்தியாவசிய தேவைகளை மட்டும் நிறைவேற்றி த்ன் கடமைகளை ஆற்றவேண்டும். தன் உடமைகளை பகவானின் கொடையாக நினைத்து அவற்றில் பற்றை அகற்ற வேண்டும்.
உடல் படைத்தோருக்கு வயிறு எவ்வளவு கொள்ளுமோ அவ்வளவுதான் சொந்தம். அதற்கு மேல் அபிமானம் வைத்தால் அவன் திருடனாகக் கருதப்படுவான். எல்லா உயிர்களையும் தன் மக்களாகவே பாவிக்க வேண்டும். பொருள் ஈட்டுவதில் அளவுக்கு மீறி ஈடுபடாமல் கிடைத்ததைக் கொண்டு திருப்தியடைய வேண்டும். தன்னிடம் இருப்பதை எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும்.
பஞ்ச மகாயக்ஞங்களையும், அக்னி ஹோத்ரம் முதலியவைகளையும் தவறாமல் அனுஷ்டிக்க வேண்டும். எல்லா உயிர்களிடத்தும் பகவானைக் கண்டு எல்லோரையும் அன்புடன் நடத்தவேண்டும். கோயில்களில் அர்ச்சாவதாரமான் பகவானை வழிபடுவது, புண்யதீர்த்தங்க்ளில் நீராடுவது , புஷ்கரம், குருக்ஷேத்ரம், கயா பிரயாக் முதலிய சாதுக்களும் பக்தர்களும் நிறைந்த இடங்களை நாடிச் செல்வது, மற்றும் பகவான் என்றும் இருப்பதாக எண்ணப்படும் நைமிசாரண்யம், வாரணாசி, மதுரா, பத்ரிகாச்ரமம் முதலிய இடங்களை தரிசிப்பது இவை எல்லாம் அளவு கடந்த புண்ணியம் தருபவை.
இந்த ப்ரபஞ்சம் ஒரு பெரிய மரமாக உருவகப்படுத்தப்பட்டதானால் இதில் எல்லா ஜீவராசிகளும் கிளைகளாக இருக்கின்றன,. இதன் ஆணி வேர் என்பது அச்சுதனே ஆகும். அதனால் அவனை ஆராதிப்பது எல்லா ஜீவராசிகளையும் திருப்திப் படுத்துவதாகும். அதிலும் மகான்கள் பூஜைக்குரியவர்கள். உங்கள் ராஜசூய யாகத்தில் தேவர்கள் ரிஷிகள் சித்தர்கள் சனகாதியர் எல்லோரும் இருந்தும் பகவான் ஸ்ரீக்ருஷ்ணரே அக்ர பூஜைக்குரியவரானார் அல்லவா. ஆனால் அவரே புண்ய புருஷர்களை வணக்கத்திற்குரியவர்களாக பாவித்தாரே.
No comments:
Post a Comment