''ஹே புவன சுந்தரா........! J.K. SIVAN
சத்தி முற்றப்புலவர் என்று ஒரு தமிழ் புலவர் நாரையை தூது விட்டார் என்பது தெரியுமல்லவா? தெரியாவிட்டால் ஒரு கதை பாக்கி இருக்கிறது. பிறகு சொல்கிறேன்?
நள தமயந்தி கதையில் தமயந்திக்காக ஒரு அன்னம் தூதாக செல்லும் . அதுவாவது தெரியுமா? தெரியாவிட்டால் ஒரு நஷ்டம் அன்னத்திற்கோ, நளனுக்கோ எனக்கோ இல்லை.
காளிதாசன் மேகத்தை தூதாக விட்ட அருமையான ''மேக சந்தேசம்'' கேள்விப்பட்டதுண்டா?
''மேக சந்தேசமா? அப்படியென்றால்?''
''ஒஹோ, சரி சரி புரிகிறது. மேலே அடுத்ததுக்கு போவோம்.
நான் இப்போது சொல்லும் கதையில் ஒரு பெண் தனது மனத்தை தூதாக விட்டிருக்கிறாள். அருமையான கதை.
யாராக இருந்தால் என்ன? அவள் ஒரு ராஜாவின் செல்லப்பெண், ஒரே பெண் என்பதால் அவளுக்கு என்று தனி உரிமையோ, தீர்மானமோ உண்டா? இல்லவே இல்லை. அவள் அண்ணன் சொல்படி தான் அப்பா கேட்பார்?
ஏன்?
அண்ணா பலசாலி. அடுத்த ராஜா அவன் தான். அவன் பராக்கிரமம் எட்டு திசையும் பரவி உள்ளதே. பிறகு ஏன் கிழ அப்பா அவன் பேச்சை கேட்க மாட்டார் ?
அவள் அழகி. பேர் அழகி. 56 தேச ராஜாக்களுக்கும் அவள் மேல் ஒரு கண். ஆனால் அண்ணாவோ அவனது நண்பன் தான் அவள் கணவன் என்று தீர்மானித்து விட்டான். முடிவெடுத்தாயிற்று. கல்யாணத்துக்கு நாள் பார்த்தாயிற்று. எல்லோருக்கும் சேதி சென்றுவிட்டது. அவளுக்கு வெகு நாட்களாகவே அடுத்த ஊர் அரசன் மேல் காதல். இத்தனைக்கும் அவனை பார்த்தது கூட கிடையாது. எல்லாம் அவனைப்பற்றிய செய்திகள் காதையும் மனத்தையும் நிரப்பியதாலேயே. அந்த பராக்கிரம ராஜாமேல் மாளாத பிரேமை. அடைந்தால் அவனே தவிர வேறு எவனுக்கும் நான் கழுத்தை நீட்ட மாட்டேன் என்று அவள் மனம் பூரா சொல்லிக்கொண்டாள். என்ன பிரயோசனம்?
அவள் மனத்தை அப்படி திருடியவன் ஒன்றும் சாமான்யன் அல்ல. அவனும் ஓர் தேசத்தின் ராஜா. பெரும் புகழ் பெற்றவன். அவனது கம்பீரம்,சாதுர்யம், பலம், திறமை, காந்தசக்தி எல்லோரையும் கவர்ந்தது . இதனால் தான் அவள் அண்ணனுக்கும் அவன் மீது பொறாமை என்பது தான் உண்மை. அப்பாவிடம் தனக்கு அந்த ராஜாவைத் திருமணம் செய்து கொள்ள ஆசை என்று தெரிவித்தும் அவரும் தலையாட்டியும் ஒரு பயனும் இல்லை. அண்ணா காதில் இந்த செய்தி விழுந்ததும் கொதித் தெழுந்தான். கூடாது என்று தடுத்து உடனே தனது நண்பனோடு அவள் திருமணத்தை நடத்த துடித்தான்.
கல்யாணம் நிச்சயமாகி விட்டது. இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கிறது '' டும் டும் ''முக்கு .
எப்படி தனது மனங்கவர்ந்த காதல் மன்னனுக்கு செய்தி சொல்லி அனுப்புவது? ''கிருஷ்ணா நீ தான் எனக்கு உதவ வேண்டும்'' என்று வேண்டிக்கொண்டாள் .
அந்த நேரம் பார்த்து ராஜாவின் அரண்மனைக்கு ஒரு பிராமணர் வந்தார். அவர் கிருஷ்ண பக்தர். நிறைய வேதங்கள் சாஸ்த்ரங்கள் படித்தவர். அவரிடம் ஏதோ ஆலோசனை கேட்க அண்ணா தான் அவரை வரவழைத்திருந்தான். எல்லாம் அவள் கல்யாண விஷயமாகத் தான்..
அவர்கள் குல வழக்கப்படி ஊருக்கு வெளியே காட்டின் ஓரத்தில் ஒரு அம்மன் கோயில். குல தெய்வம். அந்த கோயிலில் கல்யாணப்பெண் ஒரு இரவு தங்கி பூஜை விரதம் எல்லாம் இருந்து மறுநாள் கல்யாணம். அந்த பிடிக்காத, அண்ணனின் நண்பனுடன்.
அவளும் அவள் தோழிகளும் தான் அந்த பூஜையில் கலந்து கொள்வார்கள். அண்ணனோ அவன் சேனையில் எவரோ அங்கு வரமாட்டார்கள். ஆண்களே வரக்கூடாதே. ஒரே சந்தர்ப்பம் அவளுக்கு. அந்த நேரத்தில் அங்கு அவள் மனம் கவர்ந்த அந்த ராஜகுமாரன் வந்து அவளை கவர்ந்து சென்றால் இந்த திருமணச் சிறையிலிருந்து மீளலாமே என்று ஒரு நப்பாசை அவளுக்கு.
அவள் அதிர்ஷ்டம் அந்த பிராமணர் அடிக்கடி அரண்மனைக்கு வருபவர். அவள் மீது மிகவும் அன்பும் பாசமும் கொண்டவர். அரண்மனைக்கு வந்த போதெல்லாம் அவளைப்பார்க்காமல் செல்ல மாட்டார். அவர் அவள் அறைக்கு வந்தார்.
ஆழ் கடலில் மூழ்கி உயிர் போகும் சமயத்தில் ஒரு உயிர் காக்கும் கயிறு கையில் கிடைத்தாற் போல இருந்தது அவளுக்கு அந்த பிராமணரைப் பார்த்ததும். ஒரு பாட்டம் அழுது தீர்த்து விட்டாள் . குமுறினாள். அவள் உள்ளக்கிடக்கையை புரிந்து கொண்டார் அந்த பிராமணர். உன் நிலையை நான் போய் உன் உளங்கவர்ந்த அந்த ராஜாவிடம் இன்றே போய் சொல்கிறேன். நீ எதாவது எழுதிக்கொடேன். உன் எண்ணம் புரிந்தால் நான் சொல்வதைக்காட்டிலும் உன் உள்ளக்கிடக்கை உன் எழுத்தால் அழுத்தமாக இருக்கும். அந்த ராஜாவுக்கு நிலைமை புரிந்து உடனேஅவன் ஏதாவது செயல் புரிய உதவுமே'' என்றார் அந்த நல்ல பிராமணர்.
எடுத்தாள் அந்த ராஜகுமாரி ஒரு ஓலையை. எழுதினாள் . இல்லை இல்லை. தன மனதைப் பிழிந்து அந்த ஓலையில் கொட்டினாள் . என்ன அப்படி எழுதினாள் என்று தான் நாம் எட்டிப்பார்த்து அதைப் படிக்கப்போகிறோம். இந்தக் கணம் நமக்கு அவள் எழுதிய ஓலைச்சுவடியை படிக்கும் திறமை தான் வந்து விட்டதே.
''ஹே , புவன சுந்தரா, நான் உன்னைப் பார்த்ததில்லை. ஆனால் உன் கல்யாண குணங்களை எல்லோரும் சொல்ல செவி குளிர கேட்டிருக்கிறேன். என் இதயத்தை உன் பிரபாவம் நிரப்பி விட்டது. என் கண் ஏதாவது புண்யம் செய்திருந்தது என்றால் அது உன்னை ஒரு தரமாவது பார்ப்பது தான். உன் மேல் எனக்குள்ளே நான் வளர்த்துக்கொண்டுள்ள காதலை, பிரேமையை, மாயையை, வெட்கத்தை விட்டு ஒரு பெண் நான் எழுதுகிறன் என்றால் பார்த்துக்கொள்ளேன். நானோ ஒரு சிறைப்பறவை. பேதை. கல்லாதவள். நீ சர்வஞன். சகலமும் அறிந்தவன். புத்திசாலி. பராக்ரமன். பலவான். வீரன். கருணை உள்ளவன். நீ எங்கே? நான் எங்கே? இருந்தாலும் நீ இல்லையென்றால் நான் இல்லை என்று ஆகிவிட்டது என் நிலை.
நானும் நீயும் பேசியதில்லை என்பது பெரிய தவறு. நீ ஒருவேளை ராமனாக அவதரித்தவன் என்றால் நான் தான் உன் சீதை என்று புரிந்துகொள். சரியான உதாரணம் தான் நான் சொன்னது. ஏன் என்றால். நான் சீதை என்றால் அவள் தான் ஒரு ராவணனால் சிறைப்பட்டாளே அது போல் என் அண்ணன், அப்பன் எல்லோரும் என்னை இங்கே சிறை வைத்திருக்கிறார்கள். நான் உன் மனைவி. ஆனால் உன்னிடமிருந்து பிரிந்திருக்கிறேனே. இதைப் பார்த்த உடனே வந்து என்னை காப்பாற்று.
நீ ஒரு வேளை என்னை வந்து அந்த ஊர்க்கோடி அம்மன் கோவிலில் தக்க தருணத்தில் மீட்டுச் செல்லாத பக்ஷத்தில் என்ன மிஞ்சும் தெரியுமா? ஒரு அபலைப் பெண்ணின் உடல். உயிர் போயிருக்கும் எங்கே தெரியுமா? உன்னையே சுற்றிக் கொண்டிருக்கும். உயிர் உள்ள அந்த உடல் ஒரு நாளும் மற்றவன் மனைவியாகாது.. புரிந்து கொள். உன் பெயரைத்தவிர என் மூச்சில் வேறு ஒன்றில்லை. உன்னை த்தவிர என் மனத்தில் வேறு யாரும் இல்லை. உடனே வா. ''
பிராமணன் ஓலையை மடித்து தனது அரையில் கட்டிய ஆடைக்குள் ஒளித்து வைத்துக்கொண்டான். அம்பு போல் விரைந்தான். இரவுக்குள் அவள் மனங்கவர்ந்த ராஜாவின் ஊரை அடைந்தான். அன்ன ஆகாரத்துக்குக் கூட அவன் நேரத்தை வீணடிக்கவில்லை.
மறுநாள் விடியற்காலை அரண்மனை வாயில் காப்போனிடம் அரசனைக் காண வேண்டும் என்றான். உள்ளே செல்ல அனுமதில்லை. அந்த பெண்ணின் பெயரைச் சொல்லி ''ஆபத்து உடனே உதவி கேட்டு ஓலை கொடுத்திருக்கிறாள். ராஜாவிடம் மட்டும் தான் அதை கொடுக்க வேண்டும் உடனே சென்று விஷயம் சொல்'' என்று பிராமணன் சொல்ல காவலாளி அரண்மனைக்குள் ஓடி அரசன் முன் நின்றான்.
''என்ன விஷயம் ஒடி வருகிறாய்?'' சிரித்துக்கொண்டே கேட்டான் அந்த ராஜா.
''யாரோ ஒரு பிராமணர் உங்களை அவசரமாக பார்க்க வேண்டுமாம்?''
''எதற்கு என்று கேட்டாயா ?''
''கேட்டேனே. ஒரு பெண் ஆபத்தில் இருக்கிறாளாம். உங்களுக்கு கடிதம் கொடுத்திருக்கிராளாம். அதை உங்களிடம் மட்டுமே நேரில் கொடுக்கவேண்டுமாம்''
''வரச்சொல்''
பிராமணர் வந்தார். கடிதம் கொடுக்குமுன்னே அந்த பெண்ணைப் பற்றிய சகல விவரங்களும் சொன்னார். அரசன் ஆர்வமாக கேட்டான். பெயர், ஊர், அவள் தந்தை, அண்ணன், அவள் ஆசை,கட்டாய கல்யாணம், மறுநாள் இரவு கோவிலில் தனியாக தோழியுடன் பூஜை. எல்லாமே ஒன்று விடாமல் கேட்டு தெரிந்து கொண்டான் அரசன். கடிதம் கை மாறியது. அதை ஆவலுடன் படித்தான். இங்கு தான் ஒரு ரகசியம் சொல்ல வேண்டும். நிறைய பெண்கள் அந்த ராஜாவின் மேல் ஆசை கொண்டவர்கள் என்று அவனுக்கே தெரியும். அதனால் அந்த பெண்கள் எல்லாம் யார் என்று விவரம் எல்லாம் அவனுக்கு அத்துபடி. ஒரு பெண் மேல் அவனுக்கு தனி மயக்கம் உண்டு. அந்த பெண்ணின் அழகு, புத்திசாலித்
தனம், சமயோசிதம் எல்லாம் அவனைக் கவர்ந்திருந்தது. நேரில் பார்த்ததில்லை. சகல விவரங்களும் தெரியும் அவளைப்பற்றி. அந்தப் பெண் தான் இந்தக்கடிதம் எழுதியவள் என்று தெரிந்ததும் அவன் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான். யோசித்தான்.
கடிதத்தை வாங்கி வைத்துக்கொண்டான். ''உடனே செல் அந்த பெண்ணிடம் . ''நான் வருகிறேன் எனக்காக காத்திருக்கவும் கோவிலில் என்று சொல்''.
பரிசுகள் கொடுத்து பிராமணரை அனுப்ப்பினான் அரசன்.
நம்பிக்கை இழந்து மரணத்தின் அருகில் சென்ற அந்த ராஜகுமாரிக்கு பிராமணின் வருகையும் அந்த ராஜா சொல்லிய செய்தியும் மனதில் நம்பிக்கை ஊட்டியது. பயம் பிடுங்கித தின்றது. இது நடக்குமா, நடக்க முடியுமா. கிருஷ்ணா நீ காப்பாற்று என்று வேண்டிக்கொண்டாள் .
குறிப்பிட்ட நேரத்தில் அந்த ராஜகுமாரி தனது உயிர்த்தோழியுடன் பூஜை சாமான்களுடன் விரதத்துக்கு காட்டில் இருந்த அம்மன் கோவில் சென்றாள் . அவளது அண்ணன் கெட்டிக்காரன் அல்லவா? . தெரியும் அவனுக்கு. தனது நண்பனுடன் கல்யாணம் பிடிக்கவில்லை தங்கைக்கு என்று. ஆனால் விடப்போவதில்லை அவளை. கட்டாயமாகவே கல்யாணம் நடக்கப்போகிறது நாளைக்கு. எனினும் அவளுக்கு அந்த வேற்றூர் அரசன் மீது உள்ளூர விருப்பம் உண்டு என்பதாலும் , அந்த அரசனும் சாமர்த்தியக்காரன் என்பதாலும் எப்படியாவது அந்த கல்யாணம் நடக்காமல் தடை செய்யக்கூடியவன் என்றும் அறிவான். எனவே அரச குமாரிக்கு பலத்த பாதுகாப்பு போட்டிருந்தான். கோவிலுக்கு அவள் செல்லும்போது ஆடவர்கள் எவரும் அங்கு வரக்கூடாது என்பதால் தொலை தூரத்திலேயே அவனது காவலர்கள் காத்திருந்தனர்.
இதோ கோவிலும் வந்து விட்டது.
ராஜகுமாரி அங்கும் இங்கும் நோக்கினாள். எங்குமே தன் மனங்கவர்ந்த ராஜாவைக் காணோமே? வரமாட்டானோ? நான் அப்படியே ஏமாந்து கடைசி வாய்ப்பையும் இழந்து விட்டேனோ. இனி மரணம் தான் எனக்கு கைகொடுக்கபோகிறதோ?
கண்ணில் நீர் வடிய ''கிருஷ்ணா என்னைக் காப்பாற்று என்று வேண்டினாள் . கோவிலுக்குள் சென்றாள் . பூஜை செய்தாள் . யாரும் இல்லையே? மனம் ஒடிந்து நடை தளர்ந்து மெதுவாக தனது தேருக்கு நடக்கும்போது எங்கிருந்தோ மின்னல் வேகத்தில் சட்டென்று ஒரு தேர் அவள் சமீபம் வந்தது. அதில் அந்த ராஜா இருந்தான். அவளை அப்படியே வாரி அணைத்து தனது தேரில் ஏற்றினான். அவளுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. புன் சிரிப்புடன் அந்த ராஜா அவளை அருகில் வைத்துக்கொண்டு வெகு வேகமாக தேர் அவனது தேசம் நோக்கி ஓடியது.
தூரத்தில் காவலர்கள் இப்போது தான் அரச குமாரியை கடத்திச் சென்ற அந்த தேரைப் பார்த்தார்கள். துரத்தினார்கள். அவர்களை அவன் சுலபமாக எமனுலகுக்கு அனுப்பினான். அண்ணன் பெரிய படையோடு வழியில் காத்திருந்தான். அவனுக்கும் ராஜாவுக்கும் பலத்த யுத்தம் நடந்தது. அண்ணனின் சேனை அத்தனையும் தனி ஒருவனாகவே அந்த ராஜா அழித்தான். அவனது பராக்ரமத்துக்கு முன் எவராலும் ஈடு கொடுக்கமுடியாமல் அண்ணனும் சிறைப்பட்டான். அவனை உயிர் தப்ப விட்டு ''பிழைத்துப் போ ''என்று நிராயுத பாணியாக நடக்க வைத்து ராஜா அந்த ராஜகுமாரியோடு தனது ஊருக்குச் சென்றான்.
பிறகு விமரிசையாக அந்த ராஜாவும் அந்த ராஜகுமாரியும் ராஜா ராணியாக வாழ்ந்தார்கள் என்று உங்களுக்குத் தான் தெரியுமே.
ராஜா வேறு யாருமில்லை சாக்ஷாத் கிருஷ்ணன் தான். ராஜ குமாரி ஸ்ரீ ருக்மணி பிராட்டி தான். அண்ணன் ருக்மி. ருக்மிணி கல்யாணம் தெரியாத இந்துக்கள் உண்டா ?
No comments:
Post a Comment