Thursday, February 7, 2019

Fingers not working... Stroke..?-periyavaa

என் வாழ்வில் மகாபெரியவா---காயத்ரி ராஜகோபால்
-------------------------------------------------------

நாளொன்றுக்கு என்னுடைய பதினேழு மணி நேர ஆன்மீக உழைப்பில் பத்து மணிநேரமாவது மின்னஞ்சலுக்கு பதில் கொடுப்பது. பதிவுகள் எழுதுவது புத்தகங்கள் எழுதுவது போன்ற எழுத்து வேலைகளை செய்வது வழக்கம்.

ஜனவரி 2O18 ,பதினேழாம் தேதி இரவு எட்டு மணி சுமாருக்கு நான் எழுதி கொண்டிருக்கிறேன்...காலையிலிருந்தே எழுதிக்கொண்டிருக்கிறேன்..ஆனால் எட்டு மணியை தாண்டி ஒரு சில நிமிடங்கள் ஆகியிருக்கும்.

உங்களுக்கெல்லாம் தெரியும் என்னுடைய வலது கை நடு விரலில் தான் நான் டைப் செய்கிறேன் என்பது.. .தீடீரென்று என்னுடைய மணிக்கட்டில் ஏதோ ஒன்று இழுப்பது போன்ற ஒரு உணர்வு.

நான் அதை பற்றி கவலை படாமல் டைப் அடித்துக்கொண்டே இருந்தேன். ஒரு எழுத்தில் என் விரல் நுனியை நான் வைத்தால் அந்த விரல் பக்கத்து எழுத்திற்கு சென்று விடும். இருந்தாலும் நான் இதைப்பற்றி பொருட்படுத்தாமல் டைப் செய்து கொண்டிருந்தேன். மஹாபெரியவா என்று திரும்ப திரும்ப ஜெபித்துக்கொண்டே டைப் செய்து கொண்டிருந்தேன்.. ஒரு நேரத்தில் என்னுடைய விரல்கள் உள்பக்கமாக சுருண்டு விட்டது. இப்பொழுது என் இடது கை விரல்கள் போல.

இப்பொழுது நான் டைப் செய்வதை நிறுத்திவிட்டேன். நிச்சயம் என்னை மீண்டும் ஒரு பக்க வாதம் தாக்கப்போகிறது என்பது நிச்சயமாக தெரிந்து விட்டது... செயல் பட்டுக்கொண்டிருக்கும் வலது கையும் செயல் இழந்து போய்விட்டால் நான் இத்தனை நாள் கண்ட கனவுகள் என்னாவது.

என் இன்னொரு கையும் செயல் இழப்பதை பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் மற்றவர்களை சார்ந்து வாழும் வாழ்க்கையின் நரக வேதனையை நன்றாகவே அனுபவித்திருக்கிறேன்..மேலும் நான் ஊனப்படாமல் இந்த உலகத்தை விட்டு என்னை மஹாபெரியவா அழைத்து சென்றால் அதுவே எனக்கு பெரிய பாக்கியம்.

ஐந்து விரல்களும் உள் பக்கமாக மடங்கி விட்டது. என்னால் விரல்களை நீட்ட முடியவில்லை.நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். இனிமேல் எனக்கு வேறு வகையான வாழ்க்கை.

நான் கடைசியாக எழுதிய வார்த்தைகள் என்ன தெரியுமா?. "மஹாபெரியவா சித்தி ஆகி விட்டாலும் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். நம்முடைய உருகும் பிரார்த்தனைக்கு என்றும் பதில் அளிப்பார்" என்பதுதான் அந்த வாக்கியம்..

நான் எழுதும் என் மேஜைக்கு எதிரில் ஒரு நிலை கண்ணாடி இருக்கிறது. அதில் என் முகம் தெரிகிறது நெற்றியில் நான் போட்டுக்கொண்டிருந்த திருமண் பளிச்சென்று தெரிகிறது. நாளையில் இருந்து திருமண் இல்லாத நெற்றி தான் எனக்கு, யார் எனக்கு திருமண் இட்டு விடுவார்கள்.

இரு கையும் செயல் இழந்த நிலை. எல்லோருக்கும் ஊக்கத்தையும் தெம்பையும் கொடுத்த எனக்கு இப்படியொரு நிலையா. என் மனசு பொறுக்கமுடியாமல் அழுது கொண்டே இருந்தது..

நான் அழுதுகொண்டே வலது கை விரல்களையே ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருக்கிறேன். ஒரு நிமிடம் வரை என்னுடைய லேப்டாப் கணினியில் நர்த்தனம் ஆடியவிரல்கள் இப்பொழுது அமைதியாகி விட்டனவே. இனி மடிந்த விரல்களா. இல்லை பழையபடி நர்த்தனம் ஆடும் விரல்களா? என்னிடம் பதில் இல்லை..

இரவு ஒன்பது மணியாகி விட்டது. என்னுடைய மாமியார் என்னை சாப்பிட அழைக்கிறார்கள். வீட்டில் யாரும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். சாப்பாடு போட்டாலும் என்னால் சாப்பிட முடியாதே.. என்னால் சாப்பிட முடியாமல் பழையபiடி பக்கவாதம் தாக்கி விட்டது என்று தெரிந்தால் அது என் மனைவிக்கும் மகனுக்கும் தெரிந்து விடும்.

என் மனைவி வெளிநாடு செல்லும் பொழுது என்னிடம் கேட்டாள். "நான் போவதால் உங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லையே.உங்கள் உடல் நலம் நன்றாக இருக்கிறதல்லவா என்று கேட்டாள். நான் சொன்னேன்

நீ ஏதற்கும் கவலை படாதே நான் நன்றாக இருக்கிறேன். அதற்கும் மேல் எனக்கு மஹாபெரியவா இருக்கிறார். கூப்பிட்ட குரலுக்கு ஏன் என்று கேட்டு ஒரு தாயை போல பார்த்துக்கொள்வார். சத்தியமாக என்னால் நீ வெளி நாட்டில் இருந்து திரும்ப வரும் நிலை நிச்சயம் இருக்காது என்று சொல்லி இது சத்தியம் என்றும் சொன்னேன்.

என் மனைவியும் நிம்மதியாக சென்றாள். என் மாமியாருக்கு தெரிந்தால் எல்லோருக்கும் தெரிந்து விடும். ஒரு பெண் என்பது வயதில் பக்கவாதம் பாதிக்கப்பட்ட ஒருவனை எப்படி பார்த்துக்கொள்ள முடியும். . அவளுடைய கவலை அவளுக்கு.

எனக்கு பசிக்கவில்லை நீங்கள் சாப்பிட்டு படுத்து விடுங்கள் என்றேன். நாளை காலை வரையில் இந்த விஷயத்தை யாருக்கும் சொல்லக்கூடாது என்று முடிவாக இருந்தேன். ஏன் தெரியுமா? மஹாபெரியவா மேல் எனக்கு அவ்வளவு ஒரு நம்பிக்கை. எந்த நொடியிலும் என் பக்கவாதம் சரியாகி விடும் என்ற நம்பிக்கையில் இருந்தேன்.

இரவு படுத்து விட்டேன்.நானும் படுத்துக்கொண்டே அழுது கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே. ஒருமணி நேரம் முன்பு மங்களகரமாய் இருந்த வாழ்க்கை நொடிப்பொழுதில் சோகத்தில் மூழ்கி விட்டதே.

இப்பொழுது மணி ஒன்பது முப்பது. என் மாமியார் உறங்குவதற்காக நான் காத்திருந்தேன். மஹாபெரியவா முன் நின்று கதறி அழ வேண்டும் போல் இருந்தது. எனக்கு சந்தோஷமானாலும் சோகமானாலும் மஹாபெரியவா முன் நின்று அழுவதுதான் என் பழக்கம்.

என் மாமியாரும் உறங்கி விட்டார். இரவு மணி பத்து. நான் மஹாபெரியவா முன் நின்று கதறி அழ மெதுவாக நடந்து பூஜை அறைக்கு சென்றேன். எனக்கு என்னுடைய பழைய நாட்களின் ஞாபகம் வந்து விட்டது இரவு எல்லோரும் தூங்கிய பிறகு .திருடனை போல் மஹாபெரியவாளை பார்க்க செல்வேன் அல்லவா அந்த ஞாபகத்தை சொல்கிறேன்.

மஹாபெரியவா முன் சென்று நின்று விட்டேன்.என்ன பேசுவது என்று தெரியவில்லை. ஆனால் என்னையும் அறியாமல் நான் அழுகிறேன்.நான் பேச ஆரம்பிக்கிறேன்.

"பெரியவா எனக்கு. வாழ்க்கையின் மறுபக்கத்தை காண்பித்து அனுபவிக்க வைத்து விட்டு இப்படி தட்டி பறிக்கலாமா.. என்னுடைய இந்த அறுபத்தி மூன்று வருட வாழ்க்கையில் என்னுடைய குழந்தை பருவத்திற்கு பிறகு இந்த மூன்று வருடம்தான் நான் மிகவும் ஆத்மார்த்தமாக சந்தோஷமாக இருக்கிறேன்.

இன்று இரவு எட்டு மணிக்கு பிறகு மீண்டும் நரக வாழ்க்கையில் தள்ளப்பட்டேன். ஏன் பெரியவா. நான் மத்தவா நன்னா இருக்கணும்னு பிரார்த்தனை பண்ணறது தப்பா. நீங்கள் கொடுத்த ஒருவிரலில் நல்ல விஷயங்களை மட்டும்தானே எழுதிக்கொண்டு இருந்தேனே..அது தப்பா.

எனக்கு வாழ்க்கையின் தத்துவங்களே புரியவில்லை பெரியவா. என்னை நீங்கள் ஆட்கொண்டீர்கள். எனக்கு நீங்கள் தான் எல்லாமே. நான் யாரிடம் போய் சொல்லி அழுவேன்...எனக்கு ஒரு பதில் சொல்லுங்கள் பெரியவா. என்று கெஞ்சி கேட்டுவிட்டு மௌனமாக நின்று கொண்டிருந்தேன்.

ஒரு பத்து நிமிட மௌனத்திற்கு பிறகு பெரியவச்சொல்கிறார்.

"நீ போய் நன்னா தூங்கிட்டு வழக்கம் போல் நாளைக்கு காத்தலே நான்கு மணிக்கு வா நான் உன்னிடம் பேசறேன் என்று சொல்லிவிட்டார்.

மஹாபெரியவா ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் அதற்கு மேல் நான் எதுவும் பேச முடியாது. நான் என்னுடைய அறைக்கு வந்து படுத்து விட்டேன்.

இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. விழித்துக்கொண்டு என் வலது கை விரல்களையே பார்த்துக்கொண்டிருக்கிறேன். எவ்வளவு பேருக்கு இந்த விரல் தன்னுடைய எழுத்துக்களால் நம்பிக்கையை கொடுத்திருக்கும்.

விரல் பிரசவிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் மஹாபெரியவா படிப்பவர்களுக்கு கொடுக்கும் பிரசாதம் என்று பலமுறை எழுதி இருக்கிறேன்.. நான் எப்பொழுது தூங்கினேன் என்று தெரியாது.நான் என்னை மறந்து கண் அயர்ந்தேன்.

அதிகாலை மூன்று மணி இருக்கும் எனக்கு ஒரு கனவு. மஹாபெரியவா எனக்கு கனவில் தரிசனம் கொடுக்கிறார். என்னையே பார்க்கிறார்.என்னடா வலது கையும் விளங்கமே போயிடுதேன்னு கவலை படறயா. நான் தான் ஒன்னோடயே இருக்கேனே. உனக்கு ஒன்னும் ஆகாது.

நீ நாளைக்கு காத்தலே வழக்கம் போல வா. என்று சொல்லி மறைந்து விட்டார்.

காலை மணி நான்கு. நானும் வழக்கம் போல எழுந்து கொண்டேன்.அப்பொழுதான் பார்த்தேன். என் உள் பக்கமாக மடங்கி இருந்த விரல்கள் வழக்கம் போல் நீண்டிருந்தது. எனக்கு மீண்டும் அழுகை. ஒரு பெத்த தாயை போல கூடவே இருந்து என்னை பார்த்துக்கொள்ளும் பெரியவா எனக்கு தாய்க்கும் மேலே.

நான் என்னுடைய காலை கடன்களை முடித்துக்கொண்டு ஸ்னானம் செய்த பின் மஹாபெரியவா முன் போய் நின்றேன்..மஹாபெரியவா முன் நின்று கொண்டு என் விரல்களை மடக்கியும் நீட்டியும் பெரியவாளுக்கு காண்பிக்கிறேன் ஒரு குழந்தையை போல.. சம்பாஷணை ஆரம்பிக்கிறது.

G.R. ஏன் பெரியவா இந்த சோதனை எனக்கு எதுக்கு?

பெரியவா: உன்னோட கர்மப்படி சில மணிநேரம் நீ மனசாலே கஷ்டப்படணும். அந்த கஷ்டத்தை நானே உனக்கு குடுத்து கர்மாவை கழிக்க வெச்சேன்.

இனிமே உன்னோட விரல்களுக்கு ஒன்னும் ஆகாது. சந்தோஷமா முதல்ல மாதிரி எழுது. என்றார்.

நீங்களும் ஒன்றை மறந்து விடாதீர்கள். மஹாபெரியவா உங்களுக்கு இன்னும் அனுக்கிரஹம் செய்யவில்லையே என்று கலங்க வேண்டாம்.. உங்களுடைய கர்மாக்களை மஹாபெரியவளே கூட இருந்து கழிக்க வைத்து கொண்டிருக்கிறார் என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நம்புங்கள்.

உங்கள் கர்மாக்கள் கழிய கழிய நீங்கள் ஒரு புனிதமான ஆத்மாவாக மாறுகிறீர்கள். நான் என் அனுபவத்தில் இருந்து கற்ற பாடத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பொறுமையும் நம்பிக்கையும் இருந்தால்

மஹாபெரியவா உங்களை விட்டு
கண நேரம் கூட
பிரிந்திருக்க மாட்டார்.

உங்களுக்கும் ஒரு தாயாகவே மாறிவிடுவார்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்.

No comments:

Post a Comment