உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு.கருப்புசாமி.*
__________________________________________
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல...........)
__________________________________________
*தேவாரம் பாடல் பெற்ற தல எண்: 207*
*பாடல் பெற்ற சிவ சிவ தொடர்:*
*சிவ தல அருமைகள் பெருமைகள்:*
*ஊண்றீஸ்வரர் திருக்கோவில், திருவெண்பாக்கம்:*
___________________________________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள முப்பத்திரண்டு தலங்களுள் இத்தலம் பதினேழாவது தலமாகப் போற்றப் படுகிறது.
திருவெண்பாக்கம் எனும் இத்தலத்தை தற்போது பூண்டி என்று அழைக்கிறார்கள்.
*இறைவன்:* ஊண்றீஸ்வரர், ஆதாரதாண்டேசுவரர்.
*இறைவி:* மின்னொளி அம்மை, கடிவாய் மொழியம்மை.
*தல விருட்சம்:* இலந்தை.
*தல தீர்த்தம்:* குசஸ்தலை நதி, கைலாய தீர்த்தம்.
*ஆலயப் பழமை:*
ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.
*புராணப் பெயர்கள்:* பழம்பதி, திருவெண்பாக்கம்.
*தேவாரம் பாடியவர்கள்:*
சுந்தரர் .
*இருப்பிடம்:*
திருவள்ளூர் நகரில் இருந்து சுமார் பன்னிரண்டு கி.மி. தொலைவில் இந்த தலம் அமைந்துள்ளது.
திருவள்ளூரில் இருந்து நகரப் பேருந்துகள் பூண்டி செல்கின்றன.
ஆலயத்தின் அருகிலேயே பேருந்து நிறுத்தம் உள்ளது. திருவள்ளூர் ஊத்துக்கோட்டை பேருந்தில் சென்று வழியில் நெய்வேலி கூட்டு சாலையில் இறங்கி பூண்டி செல்லும் சாலையில் ஒரு கி.மி. சென்றும் இத்தலத்திற்குச் செல்லாம்.
*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு ஊண்றீஸ்வரர் திருக்கோவில்,
பூண்டி நீர்த்தேக்கம் அஞ்சல்,
வழி திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம்.
PIN - 602 023
*ஆலயப் பூஜை காலம்:*
தினமும் காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் தரிசனத்திற்காக ஆலயம் திறந்திருக்கும்
*கோவில் அமைப்பு:*
திருவெண்பாக்கம் ஊண்றீஸ்வரர் ஆலயம் திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயத்தை நிர்வாகிக்கிறது.
இப்போதுள்ள ஆலயத்திற்கு கிழக்கிலும், தெற்கிலும் வாயில்கள் இருந்தாலும், பிரதான சாலையில் உள்ள தெற்கு நுழைவு வாயில் தான் முக்கிய வாயிலாக பயன்படுத்துகின்றனர்.
கிழக்கு நுழைவு வாயில் முன் புதர்கள் மண்டிக் கிடப்பதால் அது உபயோகத்தில் இல்லை.
தெற்கு நுழைவு வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் வெளிப் பிரகாரத்தில் வழித்துணை விநாயகர் ஒரு சிறிய சந்நிதியில் இருக்கவும்,........
விடுவோமா?, சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிக் கொண்டோம்.
கிழக்கு வெளிப் பிரகாரத்தில் சற்று உயரமான மண்டபத்தில் நந்தியார் இருந்தார். வணங்கிக் கொண்டோம். மேலும் உள் சென்று மூலவரைத் தரிசிக்க அனுமதியும் வேண்டிக் கொண்டு தொடர்ந்தோம்.
அடுத்திருந்த பலிபீடத்தருகாக வந்து நின்று வணங்கிவிட்டு, ஆணவமலம் இருப்பின் அவை நீங்கியொழியுமாறும் மீண்டும் ஆவணமலம் துளிராதிருக்கவும் வேண்டுதல் வைத்து திரும்பினோம்.
கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்றால் நேர் எதிரே ஊண்றீஸ்வரர் சந்நிதி இருந்தது.
சுவாமி சந்நிதி முன், நந்தி பலிபீடமிருக்க வணங்கிக் கொண்டோம். இதனருகில், சுந்தரர் ஊன்றுகோலுடன் இருந்தார்.
சிரமேற் கைகள் உயர்ந்தன. நம் கண்களில் ஈரம் பணித்தது. மனம் லேசாக இறுக்கமானது போல் ஆகிவிட்டது.
அந்த மன இறுக்கம் இறைவன் சந்நிதிக்கு மற்றும் நுழைந்தபோதுதான் குறைந்தது.
இறைவன் கிழக்கு நோக்கி அருளை வழங்கிய வண்ணமிருந்தார். நின்றவாறு சிறுது நேரம் தியாணித்தோம். மனமுருக பிரார்த்தனை செய்தோம்.
தீபாரதனைக் காட்சியில் ஈசனின் திருமேனியைக் கண்டு வணங்கிக் கொண்டு, அர்ச்சகர் தந்த வெள்ளியவிபூதியைப் பெற்றுக் கொண்டு அப்படியே அவ்விபூதியை திரித்து நெற்றிக்கு தரித்துக் கொண்டோம்.
சுவாமி சந்நிதியை வலம் வரும் அமைப்பு இருந்ததனால், வலமிருந்து இடமாக வலம் செய்துவிட்டு, அம்மை சந்நிதியை நோக்கிச் சென்றோம்.
தெற்கு வாயில் வழியாக உள்ளே சென்றால் நேர் எதிரே அம்பாள் மின்னொளி அம்மை சந்நிதி தெற்கு நோக்கி காணப்பட்டது.
அம்மையை கண் கண்குளிரக் கண்டு தரிசித்து மனநிறைவுடன் அவளருளைச் சேகரித்து, அர்ச்சகர் தந்த குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.
அம்மை சந்நிதியை மும் வலம் வர வசதி இருந்ததினால், அம்மை சந்நிதியையும் வணங்கியபடி வலம் செய்து கொண்டோம்.
சுவாமி சந்நிதி கருவறைச் சுற்றில் உள்ள விநாயகர், வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகர், மகாலட்சுமி சந்நிதிகள் பார்த்து வணங்கினோம்.
கருவறை கோஷ்டத்தில் கணபதி, லிங்கோத்பவர், தட்சினாமூர்த்தி, பிரம்மா, துர்கை ஆகியோர் ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
உள் மண்டபத்தில் இருந்த பைரவர், நால்வர் சந்நிதி, அருணகிரிநாதர்,சூரியன், ஆகியோர்களையும் கண்டு கைதொழுத வண்ணம் நகர்ந்தோம்.
நவக்கிரகங்கள் சந்நிதி ஆகியவை கிழக்குப பக்கம் இருந்தன
*தல குறிப்பு:*
தேவார காலத்தில் இருந்த பழைய கோயில் குசஸ்தலையாற்றின் கரையில் திருவிளம்பூதூரில் முதலில் அமையப்பெற்றிருந்தது.
திருவிளம்பூதூருக்குப் *பத்ரிகாரண்யம்* என்றும் பெயர். (இது இலந்தை மரக்காட்டுப் பகுதியாகும்.)
சுந்தரருக்கு ஊன்றுகோலை இறைவன் அளித்தருளிய தலமும் இதுதான்.
பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் பல கல்வெட்டுக்களையும் கொண்டவை.
சென்னை நகரின் குடிதீர் தேவைக்காக பூண்டியில் நீர்த்தேக்கம் அமைப்பதற்கு குசஸ்தலையாற்றில் அணையைக் கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதற்கான நிலதிருத்தத்தை 1942ல் அரசு முயற்சிகளை மேற்கொண்டது.
அணைகட்ட இதற்காண நிலப்பகுதிகளை எடுத்துக் கொண்டபோது அப்பகுதியில் தேவார காலத்தில் இருந்த *ஊண்றீஸ்வரர் ஆலயம்* உள்ள திருவிளம்பூதூரும் உள் அடங்கலாகி இருந்தன.
ஆகவே அப்போதைய அறநிலையத்துறை அமைச்சர், அப்போதைய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோரின் பெருமுயற்சியால் திருவிளம்பூதூர் கோயில் அங்கிருந்து எடுக்கப்பட்டு, தற்போதுள்ள இட்த்தில் பூண்டியில் புதிய கோயிலாகக் கட்டப்பட்டு 1968-ல் கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது.
இச்செய்தி பற்றிய குறிப்புகளை கல்லிற்பொறித்து அம்பாள் சந்நிதி வாயிலில் பதிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஒருமுறை 2000-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
பழைய ஆலயத்தில் இருந்த சிலைகள், சிற்பங்கள், மண்டபத் தூண்கள் ஆகியவை யாவும் பெயர்த்து எடுக்கப்பட்டு புதிய ஆலயம் நிர்மாணிக்கும் போது அதில் சேர்க்கப்பட்டன.
*இறைவனிடம் கோபம் காட்டிய சுந்தரர்:*
திருவாரூரில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் மிகவும் பிரசித்தி பெற்றவர் வன்தொண்டன் என்ற சுந்தரப் பெருமான்.
திருவொற்றியூரில் சிவ சேவை செய்து வந்த சங்கிலி நாச்சியார் என்ற பெண்ணை, சிவபெருமானையே சாட்சியாக வைத்து மணமுடித்தார்.
மணமுடிக்கையில், திருவொற்றியூரை விட்டு நீங்குவதில்லை என சத்திய பிரமாணம் செய்து கொடுத்து திருமணம் முடித்தார்.
ஆனால், சங்கிலிநாச்சியாரை மறந்து அவர் செல்லவில்லை. அவசியமான பணி நிமித்தமாகவே அவர் திருவாரூர் செல்ல நேர்ந்தது.
அதனால், பிரமாணத்தை மீறி திருவொற்றியூர் எல்லையைத் தாண்ட வேண்டியதாயிற்று.
இதனால் சுந்தரப் பெருமான் பார்வை இழப்பு பெற்றார்.
திருவாரூர் செல்லும் பாதையில், சுந்தரப் பெருமான் இத்திருக்கோயிலுக்கு வந்து, தனக்கு பார்வை தந்தருளுமாறு பிரார்த்தித்தார்.
சிவன் ஒரு ஊன்று கோலை மட்டும் சுந்தரருக்கு கொடுத்தார்.
அதனாலேயே சிவபெருமானுக்கு *ஊன்றீசுவரர்* என்ற பெயர் உண்டானது.
இன்றும் ஊன்று கோலை தன் இடது கையில் ஊன்றியபடி பார்வையை இழந்த கோலத்தில் சுந்தரர் ஆலயத்தில் நிற்கும் திருமேனியை காணலாம்.
பார்வையைக் கேட்டால், ஊன்றுக்கோலைத் தருகிறானே என, ஈசன் மீது கோபப்பட்ட சுந்தரர், அந்த ஊன்று கோலை அந்தக் கணமே வீசியெறிந்து விட்டு, *என் பார்வையின் கேடை நீ உணர்ந்தாயா?*....என்றார்.
சுந்தரர் வீசியெறிந்த ஊன்று கோலானது, அங்கு சிவ பெருமான் முன்புறம் இருந்த நந்தீசனின் வலது கொம்பில் பட்டு கொம்பு முறிந்து போனது.
ஆக, இத்தல நந்தி தேவர் வலக்கொம்பு அற்ற நிலையிலேயே இப்போதும் காட்சி தருகின்றார்.
மன உளைச்சல் அதிகம் உடையவர்கள் இங்கு வந்து வணங்கப்பட வேண்டிய திருத்தலம் இதுவாகும்.
வாழ்க்கையில் வெறுப்பு கொண்டவர்களும், மன அமைதி இல்லாதவர்களும் தொழுதெழ வேண்டிய புண்ணிய தலமிது.
இங்குள்ள தல விருட்சம் இலந்தை மரம். காத்து, கருப்பு என்று பேசப்படும் ஆவிக் கோளாறினால் வரும் நரம்பு, மூளை சம்பந்தப்பட்ட பிணிகளையும் போக்கும் அற்புத சக்தி கொண்ட தலவிருட்சம் இது.
இங்குள்ள குசஸ்தலை தீர்த் தத்திலும், கைலாய தீர்த்தத்திலும் நீராடி, தல விருட்சத்தை பவுர்ணமி திதியில் தொழ, பேய், பிசாசு, ஆவி போன்ற கோளாறு அடங்கும் என்கின்றார் சிவவாக்கியர்.
எப்படிப்பட்ட பிழை செய்தானானாலும் பொறுக்கும் தன்மையாளன், விதிப்பயனை ஆவித் தொல்லை அகலும் பாரு
ஊழையுமாற்றி நிற்குந் தீர்த்தமிது கயிலாயமே! யிதற்கிணை யேது யறியோம் ஊழை மாற்றுவான் வூன்று கோலு மாவனிவ் வூன்றீசனே''
என்கிறார் அவர் பாடலில்.
இத்திருக்கோயிலினுள் குடிகொண்ட பைரவமூர்த்தி மிகவும் வரப்ரசாதி ஆவார்.
இவருக்கு கால பைரவர் எனப்பெயர். தெற்கு திசை நோக்கி எட்டுக் கரங்களுடன் விளங்கும் இத்திவ்ய மூர்த்தியை முப்பத்தாறு அட்டமியில் விரதமிருந்து வழிபட, இழந்த செல்வங்களைப் பெறலாம்.
மூதாதையருக்கு சாந்தி சேரும், விபத்து, சேதம் போன்றன தவிர்க்கப்படும் என்கிறார் அழுகணியார்.
கனிவாய்மொழி நாயகியாம் மின்னொளி அம்பாளை கண்டு ஆராதனை செய்த பக்தர்கள் எண்ணற்றோர்.
இத்திருத்தலத்திலுறை ஊன்றுகோல் ஈசனை சரணடையுங்கள். நம் ஊழ்வினைப் பயனை அகற்றி, உன்னத வாழ்வை அவரருளுவார்.
பார்வை குறைபாடு கொண்டவர்களுக்கு, இந்தப் பிணியைப் போக்கி அருள்பாலிக்கும் திவ்ய மூர்த்தியாக ஊன்றீசுவரப் பெருமானும், அன்னை மின் னொளி அம்பாளும் அருள்பாலிக்கும் திவ்ய க்ஷேத்திரம் இது.
பழம்பதி என்றும் திருவெண்பாக்கம் என்றும் சித்தர்கள் போற்றிக் கொண்டாடும் திவ்ய க்ஷேத்திரம் இது.
இத்தல இறைவனை அண்டிய பேருக்கு ஊழ்வினையில் மாற்றம் உண்டாகும். இத்தலத்தினை நச்சுப்பொய்யார் என்னுஞ் சித்தர்.....
*''மாபிழை யேதாயினும் எவ்வகை சூழிலிலாற்றிய போதுமதனை களைந்தின்பமே தந்து வாழ்விற்கு வூன்று கோலாவான் கயிலாய தீர்த்தத்தான்* என்றார்.
எவ்விதத் தவறுகளை நாம் அறிந்து, அறியாது செய்து இருந்தாலும், அந்தத் தவறுகளை எந்த சூழ்நிலையில் இருந்து செய்திருந்தபோதும் அதன் விளைவை வேருடன் நீக்கி, நம்மை காக்கும் ஊன்று கோலாவான் இத்தலத்து ஈசன்.
இவனிருக்கும் இச்க்ஷேத்திரத்தில் இருக்கும் புண்ணிய தீர்த்தத்திற்கு கைலாய தீர்த்தம் எனப்பெயர்.
பாம்பாட்டி சித்தர்,
*''சிவசேவைச் சங்கலியை மணக்கப் பிரமாணமெடுத்து பின் மாறிய சுந்தரனடி யான் விழிபட, கோலீந்தானிச் சுயம்பான பூர்வா வீசனே தன்னையே நம்பி நில்லார் நில்லாரே யாயினுமிவனருளால் வாழ்வாங்கு வாழப் பாரே நம்பியிவனை நம்பிநின்றா ருக்கில்லை யிடரே''* என்றார்.
இத்திருக்கோயிலுக்கு நம்பிக்கை கோயில் என்று மற்றொரு பெயரும் உண்டு.
பாம்பாட்டிச் சித்தர், தன்னம்பிக்கையின் அவசியத்தை இப்படி வலியுறுத்துகின்றார்.
தான் உயர, தான் சிறப்படைய, ஒருவனுக்குத் தன்னம்பிக்கை மிகவும் அவசியம். அப்படித் தன்னம்பிக்கையை இழந்து, சோர்ந்து, நொந்து நின்றவர்க்கு நம்பிக்கை தந்து, புது வாழ்வு ஈந்து, வாழ்வில் ஒளிகூட்டும் கோயில் இந்த *''நம்பிக்கை கோயில்''*என்கிறார்.
*சுந்தரர் தேவாரம்:*
பண்: சுவீகாமரம்
1.🔔பிழையுளன பொறுத்திடுவர்
என்றடியேன் பிழைத்தக்கால்
பழியதனைப் பாராதே
படலம்என்கண் மறைப்பித்தாய்
குழைவிரவு வடிகாதா
கோயிலுளா யேஎன்ன
உழையுடையான் உள்ளிருந்
துளோம்போகீர் என்றானே.
🙏🏾குழை பொருந்திய, தூங்குங்காதினை உடையவனே, நம்மாட்டுப் பிழை உளவாவனவற்றை நம் பெருமானார் பொறுத்துக்கொள்வார் என்னும் துணிவினால் அடியேன் பிழை செய்தால், அதனைப் பொறாததனால் உனக்கு உளதாகும் பழியை நினையாமலே நீ என் கண்ணைப் படலத்தால் மறைத்து விட்டாய்; இதுபோது இக்கோயிலினுள்ளே இருக்கின்றாயோ?' என்று யான் வினாவ, மானை ஏந்திய அவன், 'உளோம்; போகீர்' என்று சொன்னானன்றே! இதுவோ அவனது கண்ணோட்டம்!
2.🔔இடையறியேன் தலையறியேன்
எம்பெருமான் சரணம்என் பேன்
நடையுடையன் நம்மடியான்
என்றவற்றைப் பாராதே
விடையுடையான் விடநாகன்
வெண்ணீற்றன் புலியின்தோல்
உடையுடையான் எனையுடையான்
உளோம்போகீர் என்றானே.
🙏🏾யான் யாதொரு செயலிலும் 'முதல் இன்னது; நடு இன்னது; முடிவு இன்னது;' என்று அறியேன்; 'எம் பெருமானே எனக்குப் புகலிடம்; ஆவது ஆகுக' என்று கவலையற்றிருப்பேன்; அதனையறிந்திருந்தும், இடப வாகனத்தை யுடையவனும், விடம் பொருந்திய பாம்பை அணிந்தவனும், வெண்மையான நீற்றைப் பூசுபவனும், புலியின் தோலாகிய உடையை உடையவனும், என்னை ஆளாக உடையவனும் ஆகிய இறைவன், 'இவன் நம்மையே அடைக்கலமாக அடைதலை யுடையவன்; நமக்கு அடியவன்' என்ற முறைமைகளை நினையாமலே, "உளோம் போகீர்" என்று சொன்னானன்றே; இதுவோ அவனது கண்ணோட்டம்!
3.🔔செய்வினையொன் றறியாதேன்
திருவடியே சரணென்று
பொய்யடியேன் பிழைத்திடினும்
பொறுத்திடநீ வேண்டாவோ
பையரவா இங்கிருந்தா
யோஎன்னப் பரிந்தென்னை
உய்யஅருள் செய்யவல்லான்
உளோம்போகீர் என்றானே.
🙏🏾படத்தையுடைய பாம்பை அணிந்தவனே, 'உனது திருவடியே புகல்' என்று கருதி, 'செய்யத்தக்க செயல் இது; தகாத செயல் இது' என்பதைச் சிறிதும் அறியாத பொய்யடியேனாகிய யான்,அறியாமையாற் பிழைசெய்தேனாயினும், பொறுத்தல் உனக்குக் கடமையன்றோ; அங்ஙனம் பொறுத்து எனக்கு அருள் பண்ணாமையின், நீ இங்கே இருக்கின்றாயோ' என்று யான் உரிமையோடு வினாவ, எப்பொழுதும் என்மேல் அருள்கூர்ந்து, என்னை உய்யுமாறு தன் திருவருளைச் செய்ய வல்ல எம்பெருமான், இதுபோது, 'உளோம்; போகீர்' என்று சொன்னானன்றே; இதுவோ அவனது கண்ணோட்டம்!
4.🔔கம்பமருங் கரியுரியன்
கறைமிடற்றன் காபாலி
செம்பவளத் திருவுருவன்
சேயிழையோ டுடனாகி
நம்பியிங்கே யிருந்தாயே
என்றுநான் கேட்டலுமே
உம்பர்தனித் துணையெனக்கு
ளோம்போகீ ரென்றானே.
🙏🏾நம்பியே, நீ, செவ்விய அணியினை யுடைய மலை மகளோடு உடனாயினவன் ஆதலின், இருவீரும் இங்கே இருக்கின்றீர்களோ' என்று நான் வினவ, அசைதல் பொருந்திய யானையினது தோலையும் கறுத்த கண்டத்தையும், கபாலத்தையும், செவ்விய பவளம்போலும் உருவத்தையும் உடையவனும், தேவர்களுக்கு ஒப்பற்ற துணைவனும் ஆகிய இறைவன், எனக்கு, 'உளோம்; போகீர்' என்று சொன்னானன்றே! இதுவோ அவனது கண்ணோட்டம்!
5.🔔பொன்னிலங்கு நறுங்கொன்றை
புரிசடை மேற்பொலிந்திலங்க
மின்னிலங்கு நுண்ணிடையாள்
பாகமா எருதேறித்
துன்னியிரு பால்அடியார்
தொழுதேத்த அடியேனும்
உன்னமதாய்க் கேட்டலுமே
உளோம்போகீர் என்றானே.
🙏🏾பொன்போல விளங்குகின்ற, நறுமணம் பொருந்திய கொன்றைமலர், சடையின்மேற் பொருந்துதலால், மேலும் பொலிவுற்று விளங்க, மின்னலினது தன்மை விளங்குகின்ற நுண்ணிய இடையினை உடையவள் ஒருபாகத்தில் இருக்க, எருதை ஏறுபவனாகிய சிவபெருமானை, இருபாலும் அடியார்கள் நெருங்கி, வணங்கித் துதிக்க, யானும் உயர்ந்த முறைமையினாலே, 'கோயிலுளாயே' என்று கேட்க, அவன், 'உளோம்; போகீர்' என்று சொன்னானன்றே! இதுவோ அவனது கண்ணோட்டம்!
6.🔔கண்ணுதலால் காமனையுங்
காய்ந்ததிறற் கங்கைமலர்
தெண்ணிலவு செஞ்சடைமேல்
தீமலர்ந்த கொன்றையினான்.
கண்மணியை மறைப்பித்தாய்
இங்கிருந்தா யோஎன்ன
ஒண்ணுதலி பெருமான்றான்
உளோம்போகீர் என்றானே.
🙏🏾யாவரையும் வெல்லுகின்ற காமனையும் தனது நெற்றிக்கண்ணால் எரித்த ஆற்றலையுடைய, கங்கை விளங்குகின்ற, தௌளிய நிலவை அணிந்த சடையின்மேல் தீயின்கண் மலர்ந்தது போலத் தோன்றுகின்ற கொன்றை மலரை உடைய பெருமானை, அடியேன், 'என் கண்மணியை மறைப்பித்தவனே, இங்கு இருக்கின்றாயோ?' என்று வினவ, ஒள்ளிய நெற்றியையுடைய வளாகிய உமையம்மைக்குத் தலைவன், 'உளோம்; போகீர்' என்று சொன்னானன்றே! இதுவோ அவனது கண்ணோட்டம்!
7.🔔பார்நிலவு மறையோரும்
பத்தர்களும் பணிசெய்யத்
தார்நிலவு நறுங்கொன்றைச்
சடையனார் தாங்கரிய
கார்நிலவு மணிமிடற்றீர்
ஈங்கிருந்தீ ரேஎன்ன
ஊரரவம் அரைக்கசைத்தான்
உளோம்போகீர் என்றானே.
🙏🏾மாலையாகப் பொருந்திய மணம் உடைய கொன்றைப் பூவை அணிந்த சடையை உடையவரே, தாங்குதற்கரிய நஞ்சுபொருந்திய, நீலமணிபோலும் கண்டத்தையுடையவரே, நீர், மண்ணுலகிற் பொருந்திய அந்தணர்களும், அடியவர்களும் பணிசெய்ய இங்கு இருக்கின்றீரோ? என்று யான் வினவ, ஊர்கின்ற பாம்பை அரையிற்கட்டிய இறைவன், 'உளோம்; போகீர்' என்றானன்றே! இதுவோ அவனது கண்ணோட்டம்!
8.🔔வாரிடங்கொள் வனமுலையாள்
தன்னோடு மயானத்துப்
பாரிடங்கள் பலசூழப்
பயின்றாடும் பரமேட்டி
காரிடங்கொள் கண்டத்தன்
கருதுமிடந் திருவொற்றி
யூரிடங்கொண் டிருந்தபிரான்
உளோம்போகீர் என்றானே.
🙏🏾கச்சினது இடம் முழுவதையுங் கொண்ட அழகிய தனங்களை யுடையவளாகிய உமையோடு, பூதங்கள் பல சூழ, முதுகாட்டிற் பலகாலும் ஆடுகின்ற, மேலான நிலையில் உள்ளவனும், கருமை நிறம் தனக்கு இடமாகக் கொண்ட கண்டத்தை யுடையவனும், நான் விரும்பும் இடமாகிய திருவொற்றியூரையே தனக்கு இடமாகக் கொண்டவனும் ஆகிய இறைவன், யான் வினவியதற்கு, 'உளோம்; போகீர்' என்று சொன்னானன்றே! இதுவோ அவனது கண்ணோட்டம்!
9.🔔பொன்னவிலுங் கொன்றையினாய்
போய்மகிழ்க் கீழிருவென்று
சொன்னஎனைக் காணாமே
சூளுறவு மகிழ்க்கீழே
என்னவல்ல பெருமானே
இங்கிருந்தா யோஎன்ன
ஒன்னலரைக் கண்டாற்போல்
உளேஉளோம்போகீர் என்றானே.
🙏🏾பொன்போலுங் கொன்றை மலரை அணிந்த பெருமானே, நீ, கோயிலை விட்டுப்போய் மகிழ மரத்தின் கீழ் இரு" என்று சொன்ன என்னை, அதன் பொருட்டுக் காணாமலே, சங்கிலியிடம் சென்று, 'சூளுறவு, மகிழ மரத்தின் கீழே ஆகுக' என்று சொல்ல வல்ல பெருமானே, நீ, இங்கு இருக்கின்றாயோ என்று யான் வினவ, எம்பெருமான், என்னை, பகைவரைக் கண்டாற்போல வெறுத்து, 'உளோம்; போகீர்' என்று சொன்னானன்றே! இதுவோ அவனது கண்ணோட்டம்!
10.🔔மான்றிகழுஞ் சங்கிலியைத்
தந்துவரு பயன்களெல்லாம்
தோன்றஅருள் செய்தளித்தாய்
என்றுரைக்க உலகமெலாம்
ஈன்றவனே வெண்கோயில்
இங்கிருந்தா யோஎன்ன
ஊன்றுவதோர் கோலருளி
உளோம்போகீர் என்றானே.
🙏🏾மான் போல விளங்குகின்ற சங்கிலியை எனக்கு ஈந்து, அதனால் உளவாகின்ற பயன்களெல்லாம் எனக்கு நன்கு விளங்கும்படி திருவருள் செய்து காத்தாய்' என்று சொல்லுதற்கு, 'உலகத்தையெல்லாம் பெற்ற தந்தையே, வெண்கோயிலாகிய இவ்விடத்தில் நீ இருக்கின்றாயோ' என்று யான் வினவ, எம் பெருமான், ஊன்றுவதாகிய ஒருகோலை அருளி, 'உளோம்; போகீர்' என்றா னன்றே! இத்துணையது தானோ அவது கண்ணோட்டம்!
11.🔔ஏராரும் பொழில்நிலவு
வெண்பாக்கம் இடங்கொண்ட
காராரும் மிடற்றானைக்
காதலித்திட் டன்பினொடும்
சீராருந் திருவாரூர்ச்
சிவன்பேர்சென் னியில்வைத்த
ஆரூரன் தமிழ்வல்லாக்
கடையாவல் வினைதானே.
🙏🏾புகழ் நிறைந்த திருவாரூரில் உள்ள சிவ பொருமானது திருப்பெயரைத் தலையில் வைத்துள்ள நம்பியாரூரன், அழகுநிறைந்த சோலைகள் விளங்குகின்ற திருவெண்பாக்கத்தை இடமாகக் கொண்ட, கருமை நிறைநத கண்டத்தை யுடையவனை மிக விரும்பி, அன்போடும் பாடிய இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர்மேல், வலிய வினைகள் வந்து சாராவாம்.
திருச்சிற்றம்பலம்.
*திருவிழாக்கள்:*
மகாசிவராத்திரி,
ஐப்பசி அன்னாபிஷேகம்,
திருக்கார்த்திகை.
*தொடர்புக்கு:*
044- 27639725
044- 27639895
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள முப்பத்திரண்டு தலங்களுள் நாளைய தலப்பதிவு *சிவானந்தேஸ்வரர் திருக்கோயில், திருக்கள்ளில்.*
__________________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment