உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு. கருப்பசாமி*
___________________________________________
*தேவாரம் பாடல் பெற்ற சிவ தல எண்:178*
*பாடல் பெற்ற சிவ தல தொடர்.*
*சிவ தல அருமைகள் பெருமைகள்.*
*சௌந்தரேஸ்வரர் திருக்கோவில், திருநாரையூர்.*
___________________________________________
நேரில் சென்று தரிசித்ததைப் போல.................
___________________________________________
*இறைவன்:* செளந்தரேஸ்வரர்.
*இறைவி:* திரிபுரசுந்தரி.
*தல விருட்சம்:* புன்னாகம்.
*தல தீர்த்தம்:* காருண்ய தீர்த்தம்.
*ஆகமம்:* சிவாலயம்.
*தேவாரம் பாடியவர்கள்:*
திருநாவுக்கரசர் -ஐந்தாம் திருமுறையில் ஒரு பதிகமும், ஆறாம் திருமுறையில் ஒரு பதிகமும்.
திருஞானசம்பந்தர் -இரண்டாம் திருமுறையில் ஒரு பதிகமும், மூன்றாம் திருமுறையில் இரண்டு பதிகங்களும். ஆக மொத்தம் இத்தலத்திற்கு ஐந்து பதிகங்கள்.
*இருப்பிடம்:*
சிதம்பரத்தில் இருந்து குமராட்சி வழியாக காட்டுமன்னார்குடி செல்லும் வழியில், சிதம்பரத்தில் இருந்து சுமார் பதினேழு கி.மி. தொலைவிலும், காட்டுமன்னார்குடியில் இருந்து சுமார் எட்டு கி.மி. தொலைவிலும் திருநாரையூர் தலம் அமைந்துள்ளது.
சிதம்பரம் - காட்டுமன்னார்குடி (வழி குமராட்சி) சாலையில் செல்லும் பேருந்துகளில் சென்று திருநாரையூர் விலக்கு நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து ஒரு கி.மீ. நடந்தால் இத்தலத்தை அடையலாம்.
*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு சௌந்தரேஸ்வரர் திருக்கோவில்,
திருநாரையூர் அஞ்சல்,
காட்டுமன்னார்குடி வட்டம்,
கடலூர் மாவட்டம்.
PIN - 608 303
*ஆலயப் பூஜை காலம்:*
நாள்தோறும் காலை 6.00 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்
*கோவில் அமைப்பு:*
இக்கோவிலுக்குச் சென்றிருந்தபோது, கோவில் முகப்பு வாயிலுக்கு வெளியே கிழக்கில் காருண்ய தீர்த்தத் திருக்குளம் இருந்தது.
இங்கு சென்று தீர்த்தத்தை அள்ளியெடுத்து சிரசிற்கு வார்த்து இறைவனை நினைந்து வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
முகப்பு வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் சிறிய விநாயகர் காட்சியானார். விடுவோமா? சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.
அடுத்து நந்தி மண்டபத்தில் நந்தியார் இருந்தார். இவரை முதலில் வணங்கிக் கொண்டு, ஆலயத்துள் புக அனுமதியும் வேண்டிக்கொண்டு நகர்ந்தோம்.
கொடி மரம் இருக்கப்பெறவில்லை.
இதைத் தொடர்ந்து எழுபத்தெட்டு அடி உயரமுள்ள கிழக்கு நோக்கிய கம்பீரமான மூன்றுநிலைகளைத் தாங்கியிருந்த ராஜகோபுரத்துடன் காட்சியினை கண்டதும் *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து வணங்கிக் கொண்டோம்.
மூலவர் சந்நிதிக்கு முன் வந்து நின்றோம். ஈசனுக்கு திரையிட்டு நைவேத்யம் ஆகிக் கொண்டிருந்தது.
அப்படியே சில நொடிகள் கண்களை மூடி தியாணித்தோம்.
நைவேத்யத்திற்குப் பிறகு ஈசன் காட்சி தந்தார்.
சௌந்தரேஸ்வரர் லிங்க வடிவில் கிழக்கு நோக்கி காட்சி தந்தார்.
மனமுருகி பிரார்த்தித்து வணங்கி அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியைப் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.
இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் இவருக்கு சுயம்பிரகாச ஈஸ்வரர் என்ற பெயரும் உண்டு.
இறைவன் கருவறைச் சுற்றில் மேற்குப் பிரகாரத்தில் ஸ்ரீசுப்பிரமணியர் சந்நிதி இருந்தது. இவரைக் கண்டு வணங்கி ஆனந்தமயத்துடன் திரும்பினோம்.
வடமேற்கில் இருந்த ஸ்ரீகஜலட்சுமி சந்நிதிக்கு வந்து வணங்கி துதித்தோம்.
அடுத்து வடக்குப் பிரகாரத்தில் ஸ்ரீ திருமூலநாதர் சந்நிதிக்கு வந்து, தொழுது கொண்டோம்.
பின், ஸ்ரீசண்டிகேஸ்வரர் சந்நிதிக்கு வந்து, இவருக்குப் டான் மரபு முறைப்படி வணக்கம் செய்து, நம் இருப்பு நிலையை சத்தமில்லாமல் உள்ளங்கையைத் திறந்து காட்டி, விரல்களினால் ஊமையாக விளக்கித்தை கூறித் திரும்பினோம்.
தலவிருட்சமான புன்னை மரம் இருக்க பவ்யபயத்துடன் மெதுவாக தொட்டு பணிந்து வணங்கிக் கொண்டோம்.
வடகிழக்கில் ஸ்ரீபைரவர், சூரியன்,சந்திரன், நவக்கிரக சந்நிதிகள் இருக்க, ஒவ்வொரு சந்நிதிக்கும் சென்று மனமுருக பிரார்த்தித்து தொழுது கொண்டோம்.
சுவாமி சந்நிதி வெளிப்புற கோஷ்ட மூர்த்திகளாக ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்க, இவர்கள் அனைவரையும் தொடர்ச்சியாக வணங்கி நகர்ந்தோம்.
அடுத்து, அம்பாள் திரிபுரசுந்தரி சந்நிதி தெற்கு நோக்கி சிவன் சன்னதிக்கு வெளியே வெளிபிராகாரத்தில் வடகிழக்கில் தனிக்கோயில் அமைப்பில் இருந்தது.
இங்கேயும் ஈசனிடம் தியாணித்து வேண்டிக் கொண்டது போலவே வேண்டிக் கொண்டு, அர்ச்சகர் ஏற்றியக்காட்டிய தீபாராதனையை வணங்கிப் பின், அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு நகர்ந்தோம்.
இப்போதுதான் பார்த்தோம். இறைவன் சந்நிதி விமானத்தில் அர்த்த சந்திர வடிவில் இரண்டு கலசங்களுடன் காணக்கிடைத்தது.
இவ்வமைப்பை வேறு எங்கும் நாங்கள் பார்த்ததில்லை. கலசங்களை சிரமேற் கை உயர்த்தி தொழுது வணங்கிக் கொண்டோம்.
இத்தகைய அமைப்பிலுள்ள விமானத்தை தரிசிப்பது அபூர்வம்.
சிவன், சக்தியை வடிவமாகிய அம்பிகையை தனக்குள் ஐக்கியப்படுத்தியிருக்கிறார் என்ற தத்துவத்தின் அடிப்படையில், அவளுக்கும் சேர்த்து இரண்டு கலசங்கள் அமைத்திருப்பதாக அருகிருந்த சிவாச்சாரியார் ஒருவர் கூறினார்.
நடராஜர் தனிச்சன்னதி இருந்தார். அழகான நடனம். பரவசமான முக பாவனை. கண்டு மெய் சிலிர்த்தோம்.
முகப்பாவனையை விட்டு கண்கள் விலக மறுத்தது. வணக்கத்திற்குப் பிறகும் சில நொடிகள் அப்படியே மெய் மறந்து நின்றோம்.
அடுத்த பக்தர்களின் கூடுதல் வருகையின் பொருட்டு, நாம் அவனிடமிருந்து விடைபெற்று நடந்தோம்.
ஒவ்வொரு சிவன் கோயில்களிலும் ஒரு சண்டிகேஸ்வரர் இருப்பார்.
ஆனால், இங்கு ஒரே சன்னதியில் அடுத்தடுத்து இரண்டு சண்டிகேஸ்வரரை தரிசிக்க முடியும்.
மூலவர் சவுந்தரேஸ்வரருக்கு ஒரு சண்டிகேஸ்வரர் இருக்கிறார்.
அடுத்து, பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கும் திருமூலநாதருக்கு ஒரு சண்டிகேஸ்வரர் இருக்கிறார். ஆக இங்கு இரண்டு சண்டிகேஸ்வரர் இருக்கின்றனர். வணங்கிக் கொண்டோம்.
மேலும் பிரகாரத்தில் ஒரே இடத்தில் மூன்று பைரவர்கள் காட்சி தருகின்றனர். இவர்களது தரிசனம் விசேஷமானது. சாந்தசொரூபமாக வணக்கம் செய்தோம்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமான இதில் சம்பந்தர் தனது பதிகத்தில்
........ *"உரையினில் வந்தபாவம் உணர்நோய்க ளும்"* என்று தொடங்கும் பதிகத்தில் இத்தல இறைவனை வழிபடுவதால் *வாக்கு, மனம், காயம்* ஆகியவற்றால் விளைந்த பாவங்கள் தீரும் என்றும், உடலால் செய்யப்பெறும் குற்றம் முதலானவும், அவ்வுடலைப்பற்றிய பிணி நோய்களும் கெடும் என்றும், தீவினையால் உலகிற் பிறந்து அடையும் துன்பங்கள் அகலும் என்றும், உடல் நீங்கும் காலத்தில் உயிர் கொள்ள வரும் இயமன் மிகவும் அஞ்சுவான்.
ஆதலின் நீர் நறுமணமுள்ள மலர்களைத் தூவி திருநாரையூர் இறைவனை கை கூப்பித் தொழுது வழிபாடு செய்வீர்களாக என்று குறிப்பிட்டுருக்கிறார்.
இதனால், தெரிந்தோ தெரியாமலோ பாவம் செய்தவர்கள், இத்தல இறைவனை வேண்டி வணங்கினால் விமோசனம் பெறலாம்.
*தல அருமை:*
திருநாரையூர் திருத்தலம், திருமுறைகளை வகைப்படுத்திய சான்றோனை ஈன்றெடுத்த தலம்.
அந்த சான்றோன், நம்பி. தன் பால வயதில் தந்தையாரின் விநாயகர் வழிபாட்டில், எட்ட நின்று ஈடுபாடு காட்டியவர்.
முழுமுதல்வனை அர்ச்சித்து, அவருக்கு நிவேதனமும் அளிப்பதை தூர நின்றே பிரமிப்புடன் பார்த்தவர்.
பூஜையறைக்குள் சிலைவடிவ விநாயகர் நிவேதனப் பொருட்களை உட்கொள்கிறார் என்ற பிரமிப்பு அவருக்கு இருந்தது.
படைத்த அந்தப் பொருட்கள் பிறகு சமையலறைக்குப் போய்விடுவதையோ, அதுவே, பிற உணவு வகைகளுடன் சேர்த்து மதிய உணவாகத் தமக்கு அளிக்கப்படுவதையோ அவர் கவனித்ததில்லை.
அவருக்குத் தெரிந்ததெல்லாம், 'தந்தையார் அளிக்கும் நிவேதனத்தை பிள்ளையார் அப்படியே சாப்பிட்டு விடுகிறார்' என்பதுதான்.
அந்த நம்பிக்கை நிரூபிக்கப்பட ஒரு வாய்ப்பும் விரைவில் ஒரு நாள் அவருக்கு கிடைத்தது.
தந்தையார் ஒருநாள் வெளியூருக்குப் போக வேண்டியிருந்தது. அவ்வப்போது தனக்குப் பூஜைப் பொருட்களை எடுத்துக் கொடுக்கும் மகனின் ஆர்வத்துக்குப் புது அங்கீகாரம் கொடுக்க விரும்பினார் அவர்.
தான் வரும்வரை அதுவரை தான் செய்து வந்த பூஜையை மகனை ஏற்றுச் செய்யச் சொல்லிவிட்டு புறப்பட்டுப் போனார்.
நம்பிக்கு மகிழ்ச்சி நிலை கொள்ளவில்லை. தந்தையாரைப் போலவே அதிகாலையில் எழுந்து, நீராடி, மலர்களையும், தாயார் தயாரித்துத் தந்த நிவேதனப் பொருட்களையும் கொண்டுபோய் விநாயகர் முன் வைத்தார்.
தனக்குத் தெரிந்தவகையில் அர்ச்சனை செய்துவிட்டு, நிவேதனம் செய்தார்.
காத்திருந்தார்.
நிவேதனப் பொருட்களைப் பார்த்தார் அப்படியே இருந்தது.
மீண்டும் விநாயகரைப் பார்த்தார். ஏன் சாப்பிடவில்லை சந்தேகம் வந்தது.
பிள்ளையார் ஏன் இறங்கி வரவில்லை, ஏன் நான் படைக்கும் நிவேதனத்தை ஏற்கவில்லை? மெல்லக் குரல் கொடுத்து அழைத்தார்.....பிள்ளையாரப்பா!.......என்று.
பதிலில்லாததால்....தன் குரலை சற்று உரக்கக் கத்தினார்.
இப்போதும் எதிர்பார்த்த எதிர்வினை ஏதும் இல்லாததால்,.....,..
அடுத்து அழைப்பு, அழுகையாக மாறி பிள்ளையாரப்பா!.என்று.
அப்படியும் பலனில்லாது போகவே, பாதம் மீது இருந்த சுவற்றில் தன் தலையை மோதிக் கொண்டார் நம்பி.
'என் தந்தை வந்து கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன்? அவர் படைத்தபோது நிவேதனத்தை ஏற்ற நீங்கள், நான் படைப்பதை நிராகரிப்பது ஏன்?' என்றார் கோபத்துடன்.
பாலகன் மீது பரிதாபம் கொண்டார் விநாயகர். சிலை அசைந்தது. துதிக்கை நீண்டது. நம்பி சுவற்றில் மோதிய தலைமீது மெல்ல வருடிக் கொடுத்தது.
மாயமாக, மோதிய வலி காணாது போனது. அதே துதிக்கையால் நிவேதனப் பொருட்களையும் எடுத்து உண்டது.
மேலும் நம்பிக்கும் கொஞ்சம் ஊட்டி விட்டது! நைவேத்யம் தீர்ந்ததும் பிறகு மீண்டும் சிலையாக மாறிப் போனார் விநாயகர்.
நம்பிக்கு ஒரே சந்தோஷம்.
தன்னையும் விநாயகர் மதித்து நடத்துகிறார் என்ற உவகை. உடனே தாயாரிடம் வந்து விவரம் சொன்னபோது....................
அவர் விழிபிதுங்க மகனைப் பார்த்தார். 'பக்தி முற்றிவிட்டதோ?' ஊரிலிருந்து வந்த தந்தையார் முதலில் திகைத்தாலும், உடனே வெகுண்டார். ஆசைப்பட்டால் அம்மாவிடம் கேட்டு வாங்கிச் சாப்பிடுவதுதானே? இப்படி பூஜையறையிலேயே உண்டு விட்டு, பொய் வேறு சொல்கிறாயே என்று தன் பக்திக் குறைபாட்டை கோபமாக வெளிப்படுத்தினார்.
மகனை நோக்கி ஓங்கிய கையை ஒரு துதிக்கை தடுத்து நிறுத்தியபோது மருண்டார். விநாயகர் பிரசன்னமாகி, தான் நம்பியின் பக்தியை நேரடியாக ஏற்றுக் கொண்டதைச் சொன்னார்.
அதுமுதல், நம்பிக்கையால் ஆண்டவனையே ஆகர்ஷித்த நம்பி, நம்பியாண்டான் நம்பியானார். விநாயகரே நேரில் வந்து நிவேதனம் ஏற்ற அற்புதம் ஊரெல்லாம் பரவியது
மன்னன் ராஜராஜ தேவர் என்ற அபயகுல சோழனின் காதுகளுக்கும் எட்டியது.
உடனே விரைந்தோடி வந்தான். நம்பியின் பிஞ்சுத் தாள்களைப் பற்றினான். பிள்ளையாருக்கு பிரமாண்டமாக பூஜைகள் செய்வித்தான்.
நம்பிக்கும், நாயகருக்கும் இடையே உண்டான பக்தி அருள் பாலத்தின் வலிமையைத் தெரிந்து கொண்ட அவன், தேவாரத் திருமுறைகள் ஒளிக்கப்பட்ட விவரம் சொல்லி, விநாயகரிடம் கேட்கச் செய்தான்.
அவை இருக்குமிடம் அறிந்து சொல்லுமாறு கேட்டுக் கொண்டான்.
நம்பியும் பிள்ளையாரின் உதவியை நாட, உடனே கேட்டது தெய்வத்தின் குரல்: தில்லையின் மேற்கு கோபுரத்தை அடுத்துள்ள திருமதிலில் அந்த நூல்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன என்று.
உடனே சிதம்பரம் நோக்கி தொண்டர் படை புறப்பட, பிள்ளையார் கூற்றுப் படியே திருமுறைகளைக் கண்டெடுத்துப் பேரானந்தம் கொண்டார்கள் அனைவரும்.
*பிள்ளையார் வழிபாடு:* இவர் பொள்ளாப் (உளி கொண்டு செதுக்காத, சுயம்பு விநாயகர்) பிள்ளையார் என்று வழிபடப்படலானார்.
இந்தத் திருநாரையூர் தலத்தில் ஈசன் பிரதானமானவர். சௌந்தரேஸ்வரர் என்று பெயர்.
பொள்ளாப் பிள்ளையாருக்கு (இவரை பொல்லாப் பிள்ளையார் என்றும் போற்றுகிறார்கள். பொல்லாதவரைப் பொடிப்பொடியாக்கும் இவரது திறத்தால் மட்டுமல்லாமல்; வழிபடுவோர் உள்ளத்திலும் எந்தப் பொல்லாத்தனமும் நுழையாதபடி காப்பவர் என்ற பொருளிலும்) தனி சந்நதி. துதிக்கை வலப்புறம் திரும்பிய வலஞ்சுழி விநாயகர் இவர்.
நம்பிக்கு திருமுறைகளைக் காட்டித் தந்ததால் *'திருமுறை காத்த விநாயகர்'* என்றும் போற்றப்படுகிறார், இந்தப் பிள்ளையார்.
திருமுறைகளை விநாயகர் அருளால் மீட்டது மட்டுமல்லாமல், தாமே பத்து நூல்களை இயற்றியுள்ளார் நம்பியாண்டான் நம்பி.
திருநாரையூர் விநாயகர் திருவிரட்டை மாலை, கோயில் திருப்பண்ணியர் திருவிருத்தம், திருஞானசம்பந்தர் திருவந்தாதி, திருஞானசம்பந்தர் திருச்சண்பை விருத்தம், திருஞானசம்பந்தர் திருமும்மணிக்கோவை, திருஞானசம்பந்தர் திருவுலாமாலை, திருக்கலம்பகம், திருஞானசம்பந்தர் திருத்தொகை, திருநாவுக்கரசு சுவாமிகள் திருவேகாதசமாலை மற்றும் திருத்தொண்டர் திரு அந்தாதி ஆகியவை அவை.
இவ்வாறு நூல்கள் இயற்றுவதற்கு அறிவு புகட்டிய ஆசிரியராக, இவர் வணங்கிய விநாயகரே மூலகாரணமானார்.
தான் படைத்த நிவேதனத்தை உண்ண விநாயகர் வெகுநேரம் எடுத்துக் கொண்டதால், தான் அன்று பாடசாலைக்குத் தாமதமாகப் போக வேண்டியிருக்கும் என்றும், தன்னை ஆசிரியர் கடிந்து கொள்வார் என்றும், அதனால் விநாயகரே தனக்கு ஆசானாக இருந்து போதிக்க வேண்டும் என்றும் நம்பி மனமுருகி வேண்டினார்.
அவ்வாறே அருள் செய்தார் பிள்ளையார். கோயிலின் எதிரிலேயே நம்பிக்கும் தனிச் சந்நதி உள்ளது. கையில் அபிஷேகக் கலயத்துடன் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார் நம்பியாண்டான் நம்பி.
*தல பெருமை:*
ஒருமுறை கந்தர்வன் ஒருவன் ஆகாய வழியே சென்று கொண்டிருந்தான்.
அப்போது அவன் சாப்பிட்ட ஒரு பழத்தின் கொட்டையை கீழே போட்டான்.
அது அங்கு தவம் செய்து கொண்டிருந்த துர்வாச முனிவர் மீது விழுந்தது.
தவம் கலைந்த மகரிஷி, அவனை நாரையாக பிறக்கும்படி செய்து விட்டார்.
அவன் சாப விமோசனம் கேட்டு கதறியழுத போது இத்தலத்திலுள்ள சௌந்தரேஸ்வரரை தினமும் காசி கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து விமோசனம் பெறுக என்று கூறினார்.
சாபம் அடைந்த நாரை அதன்படி தினந்தோறும் இத்தலம் வந்து இறைவனை வழிபட்டது.
தனது வாயில் கங்கை நீரைக் கொண்டு வந்து இங்கிருந்த லிங்கத்திற்கு கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து கந்தர்வனாக மீண்டும் சுய வடிவம் பெற்றது.
நாரை வந்து பூஜித்த தலம் என்பதால் இவ்வூர் *"திருநாரையூர்"* எனப்பட்டது.
சாபம் அடைந்த நாரை, ஒருநாள் சுவாமியை வழிபட வந்தபோது, இறைவனின் சோதனையால் புயலுடன் கடும்மழை பிடித்துக் கொண்டது.
காற்றை எதிர்த்து பறந்ததில், அதன் சிறகுகள் ஒவ்வொன்றாக விழுந்தன. அப்போது, வாயில் இருந்த தீர்த்தத்திலிருந்து சில துளிகள் பூமியில் விழுந்தன.
இது ஒரு குளமாக மாறியது. இதற்கு *"காருண்ய தீர்த்தம்"* என்று பெயர்.
இத்தீர்த்தம் கோயிலுக்கு வெளியில் உள்ளது. நாரையின் சிறகு முறிந்து விழுந்த இடம் *சிறகிழந்தநல்லூர்* என்று பெயர் பெற்றது.
இந்த சிறகிழந்தநல்லூர் என்ற ஊர் இங்கிருந்து மூன்று கி.மீ. தூரத்தில் உள்ளது.
இங்கு தேவார வைப்புத்தலமான ஞானபுரீஸ்வரர் கோயில் உள்ளது.
*திருமுறை காட்டிய தலம்:*
(இன்றும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தின் மேற்கு உள்பிராகாரத்தில் திருமுறை காட்டிய விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது.)
மன்னன், நம்பியாண்டார் நம்பியுடன் சிதம்பரம் சென்று, ஒரு புற்றுக்குள் மூடிக்கிடந்த திருமுறை சுவடிகளை எடுத்தான்.
அவற்றை நம்பியாண்டார் நம்பி ஒழுங்கு படுத்தி ஏழு திருமுறைகளாகத் தொகுத்தார்.
தொகுத்த தேவாரப் பதிகங்களுக்கு பண் அமைக்க விரும்பிய நம்பியும், அரசனும் திருஎருக்கத்தம்புலியூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வேண்டினார்கள்.
"திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபில் பிறந்த பாடினி என்ற ஒரு பெண்ணுக்கு பண்களை அருளினோம். இத்தலத்திலுள்ள அப்பெண்ணை அழைத்துச் சென்று பதிகங்களுக்குப் பண்முறை அமைக்கச் செய்வீர்"' என்று தெய்வவாக்கு கிடைத்தது.
மனம் மகிழ்ந்த மன்னனும், நம்பியும் அத்தலத்திலுள்ள அந்தப் பெண்ணைக் கண்டறிந்து, தில்லை கனகசபைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு எல்லோரது முன்னிலையிலும் அப்பெண்ணைக் கொண்டு தேவாரப் பதிகங்களுக்குப் பண்முறைகளை முறையாக அமைக்கச் செய்தனர்.
இவ்வாறு, திருமுறைகள் கிடைக்க காரணமாக இருந்ததால் பொள்ளாப் பிள்ளையாருக்கு *"திருமுறை காட்டிய விநாயகர்"*என்ற பெயரும் உண்டானது.
இந்தப் பிள்ளையார் சந்நிதிக்கு எதிரில் ராஜராஜ அபயகுலசேகர சோழ மன்னனுக்கும், நம்பியாண்டார் நம்பிக்கும் சிலை உள்ளது.
*விநாயகருக்கும் ஆறுபடை வீடு:*
முருகப்பெருமானுக்கு ஆறு படைவீடுகள் இருப்பதைப்போல, அவரது அண்ணன் விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் உள்ளன.
இவற்றில் திருநாரையூர் தலம் முதல் படை வீடாகும். திருவண்ணாமலை, விருத்தாச்சலம், திருக்கடையூர், மதுரை, காசி ஆகியவை பிற தலங்களாகும்.
முழுமுதற்கடவுளான விநாயகரை முதல் படைவீடான இத்தலத்தில் வணங்குவது சிறப்பான பலம் தரும்.
*சம்பந்தர் தேவாரம்:*
1.🔔உரையினில் வந்தபாவ முணர்நோய்களும்ம செயறீங்கு குற்ற முலகில்
வரையினி லாமைசெய்த வவைதீரும் வண்ண மிகவேத்தி நித்த நினைமின்
வரைசிலை யாகவன்று மதின்மூன் றெரித்து வளர்கங்குல் நங்கை வெருவத்
திரையொலி நஞ்சமுண்ட சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.
🙏🏾மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங் களைச் செற்று, வளரும் கங்குலில் உமையம்மை அஞ்சக் கடல் நஞ் சினை உண்ட சிவன் மேவிய செல்வத் திருநாரையூரைக் கையால் தொழுதால் வாக்கு; மனம் காயம் ஆகியவற்றால் விளைந்த பாவங்கள் தீரும். அங்குள்ள பெருமானை அவ்வாறு தீருமாறு மிக ஏத்தி நித்தமும் நினைவீராக.
2.🔔ஊனடை கின்றகுற்ற முதலாகி யுற்ற பிணிநோ யொருங்கு முயரும்
வானடை கின்றவெள்ளை மதிசூடு சென்னி விதியான வேத விகிர்தன்
கானிடை யாடிபூதப் படையா னியங்கு விடையா னிலங்கு முடிமேல்
தேனடை வண்டுபாடு சடையண்ணல் நண்ணு திருநாரை யூர்கை தொழவே.
🙏🏾உயரிய வானத்தில் விளங்குகின்ற வெள்ளிய மதியைச் சூடிய சென்னியினனும், விதிகளைக் கூறும் வேதங்களை அருளிய விகிர்தனும், இடுகாட்டில் பூதப் படையோடு ஆடுபவனும், இயங்கும் விடையூர்தியினனும், விளங்கும் தலைமீது வண்டு பாடும் தேனடைந்த மலர்களைச் சூடிய சடையினனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய திருநாரையூரைக் கைகளால் தொழுதால் உடலால் செய்யப்பெறும் குற்றம் முதலானவும், அவ்வுடலைப்பற்றிய பிணி நோய்களும் கெடும்.
3.🔔ஊரிடை நின்றுவாழும் உயிர்செற்ற காலன் றுயருற்ற தீங்கு விரவிப்
பாரிடை மெள்ளவந்து பழியுற்ற வார்த்தை யொழிவுற்ற வண்ண மகலும்
போரிடை யன்றுமூன்று மதிலெய்த ஞான்று புகழ்வானு ளோர்கள் புணரும்
தேரிடை நின்றவெந்தை பெருமா னிருந்த திருநாரை யூர்கை தொழவே.
🙏🏾திரிபுரத்தசுரரோடு போர் செய்து மும்மதில்களைக் கணையால் எய்த காலத்தில் புகழ்பெற்ற தேவர்கள் கூடியமைத்த தேரில் நின்ற எந்தை பெருமான் எழுந்தருளிய திருநாரையூரைக் கைகளால் தொழுதால், ஊரின் கண் நின்று வாழ்ந்த உயிர் கவரும் காலனால் வரும் தீங்கும், உலகவர் கூடி மெள்ளப் பழித்துரைக்கும் வார்த்தைகளும் ஒழிவுறும்.
4.🔔தீயுற வாயவாக்கை யதுபற்றி வாழும் வினைசெற்ற வுற்ற வுலகின்
தாயுறு தன்மையாய தலைவன்றன் நாமம் நிலையாக நின்று மருவும்
பேயுற வாயகானில் நடமாடி கோல விடமுண்ட கண்டன் முடிமேல்
தேய்பிறை வைத்துகந்த சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.
🙏🏾இடுகாட்டில் பேய்களோடு உறவுகொண்டு நடன மாடுபவனும் விடமுண்ட அழகியகண்டத்தினனும் முடிமேல் தேய்ந்த பிறையைச் சூடியவனும் ஆகிய சிவபிரான் மேவிய திருநாரையூரை வணங்கினால் தீவினையால் உலகிற் பிறந்து அடையும் துன்பங்கள் அகலும். தாயாய்த் தலையளி செய்யும் அவன் நாமங்கள் நும் உள்ளத்தில் மருவும்.
5.🔔வசையப ராதமாய வுவரோதம் நீங்குந் தவமாய தன்மை வரும்வான்
மிசையவ ராதியாய திருமார் பிலங்கு விரிநூலர் விண்ணு நிலனும்
இசையவ ராசிசொல்ல விமையோர்க ளேத்தி யமையாத காத லொடுசேர்
திசையவர் போற்றநின்ற சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.
🙏🏾மேலான வீட்டுலகில் இருப்பவர். எல்லார்க்கும் முன்னே தோன்றியவர். அழகிய மார்பில் இலங்கும் முப்புரிநூலர். விண்ணும் மண்ணும் நிறைந்தவர். இமையவர்கள் ஏத்த அவர்கட்கு ஆசி சொல்பவர். அன்போடு திசைப்பாலகர் போற்ற நிற்பவர் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய திருநாரையூரைத் தொழின் கடலளவு பெருகிய பழிகள் இடையூறுகள் நீங்கும். தவம் வரும்.
6.🔔உறைவள ரூனிலாய வுயிர்நிற்கும் வண்ணம் உணர்வாக்கும் உண்மை யுலகில்
குறைவுள வாகிநின்ற குறைதீர்க்கு நெஞ்சில் நிறைவாற்று நேசம் வளரும்
மறைவளர் நாவன்மாவி னுரிபோர்த்த மெய்யன் அரவார்த்த வண்ணல் கழலே
திறைவளர் தேவர்தொண்டி னருள்பேண நின்ற திருநாரை யூர்கை தொழவே.
🙏🏾வேதம் வளரும் திருநாவினன் யானைத் தோலை மெய்யில் போர்த்தவன். பாம்பைக் கச்சையாகக் கட்டியவன். தலைமைத் தன்மை உடையோன் . அப்பெருமான் திருவடிகளையே திறைப்பொருளாக வளர்கின்ற தேவர்கள் தம் தொண்டால் அவன் அருளைப் பெற நிற்கும் திருநாரையூரைத் தொழுதால் உறையாக நிற்கும் உடலில் விளங்கும் உயிர் நிலை பெறும். நல் உணர்வைத்தரும். குறைகளைப் போக்கும். நெஞ்சில் நிறைவைத் தரும். நேசம் வளரும்.
7.🔔தனம்வரு நன்மையாகுந் தகுதிக் குழந்து வருதிக் குழன்ற வுடலின்
இனம்வள ரைவர்செய்யும் வினயங்கள் செற்று நினைவொன்று சிந்தை பெருகும்
முனமொரு காலமூன்று புரம்வெந்து மங்கச் சரமுன் றெரிந்த அவுணர்
சினமொரு காலழித்த சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.
🙏🏾முன்னொரு காலத்தில் முப்புரங்கள் அழியுமாறு சரம் விடுத்து அவுணரின் சினத்தை அழித்த சிவபெருமான் மேவிய செல்வத் திருநாரையூரைத் கைகளால் தொழுதால் தனம் வரும். நன்மையாகும். பெருமை பெறுதற்குத் திசைதோறும் அலைந்து உழன்று உடலின்கண் பொருந்திய ஐம்பொறிகளால் ஆகும் வஞ்சகங் களை அழித்துப் பெருமான் திருவடிகளில் நினைவு ஒன்றும் சிந்தை உண்டாகும்.
8.🔔உருவரை கின்றநாளி லுயிர்கொள்ளுங் கூற்ற நனியஞ்சு மாத லுறநீர்
மருமலர் தூவியென்றும் வழிபாடு செய்ம்மின் இழிபா டிலாத கடலின்
அருவரை சூழிலங்கை யரையன்றன் வீரம் மழியத் தடக்கை முடிகள்
திருவிரல் வைத்துகந்த சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.
🙏🏾அழிவில்லாத கடலாலும் அரிய மலைகளாலும் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனின் வீரம் அழியவும், நீண்ட கைகள் முடிகள் நெரியவும், திருவிரலை ஊன்றி, உகந்த சிவன் மேவிய திருநாரையூரைக் கைகளால் தொழ உடல் நீங்கும் காலத்தில் உயிர் கொள்ள வரும் இயமன் மிகவும் அஞ்சுவான். ஆதலின் நீர் மணமலர் களைத் தூவி அப்பெருமானை வழிபாடு செய்வீர்களாக.
9.🔔வேறுயர் வாழ்வுதன்மை வினைதுக்க மிக்க பகைதீர்க்கு மேய வுடலில் தேறிய சிந்தைவாய்மை தெளிவிக்க நின்ற கரவைக் கரந்து திகழும்
சேறுயர் பூவின்மேய பெருமானும் மற்றைத் திருமாலு நேட எரியாய்ச்
சீறிய செம்மையாகுஞ் சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.
🙏🏾சேற்றில் உயர்ந்து தோன்றும் தாமரை மலரில் விளங்கும் நான்முகனும், திருமாலும் தேடச் சிவந்த எரியுருவாய்ச் சீறி எழுந்த சிவபிரான் மேவிய திருநாரையூரைக் கையால் தொழப் பிறப்பு இறப்பற்ற தன்மை கிடைக்கும். வினையாகிய துக்கம், மிக்க பகை இவற்றைத் தீர்க்கும். தெளிந்த சிந்தையில் வாய்மை விளங்கித்திகழ மறைந்து நிற்கும் சிவனது வெளிப்பாடு கிடைக்கும்.
10.🔔மிடைபடு துன்பமின்ப முளதாக்கு முள்ளம் வெளியாக்கு முன்னி யுணரும்
படையொரு கையிலேந்திப் பலிகொள்ளும் வண்ண மொலிபாடி யாடி பெருமை
உடையினை விட்டுளோரு முடல்போர்த்து ளோரும் உரைமாயும் வண்ண மழியச்
செடிபட வைத்துகந்த சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.
🙏🏾சூலப்படையைக் கையில் ஏந்திப் பலியேற்கும் தன்மையனாய் இசைபாடி ஆடிச் செல்லும் இறைவனது பெருமையை உடையின்றியும் உடை போர்த்தும் திரியும் சமண் சாக்கியர் கூறுவன மாயுமாறு செய்து காக்கும் சிவன் மேவிய செல்வத் திருநாரையூரைக் கை தொழத் துன்பம் நீங்கும். இன்பம் உளதாகும். உள்ளம் ஒளி யாக்கும். ஆதலின் அத்தலத்தை உன்னி உணருங்கள்.
11.🔔எரியொரு வண்ணமாய வுருவானை யெந்தை பெருமானை யுள்கி நினையார்
திரிபுர மன்றுசெற்ற சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழுவான்
பொருபுனல் சூழ்ந்தகாழி மறைஞான பந்தன் உரைமாலை பத்து மொழிவார்
திருவளர் செம்மையாகி யருள்பேறு மிக்க துளதென்பர் செம்மை யினரே.
🙏🏾தீயணைப்பு சிவந்த நிறத்தை உடையவனாய், எம் தந்தையாகிய பெருமானார் மனமுருகி நினையாத அசுரர்களின் திரிபுரத்தை அக்காலத்தில் அழித்துக் காத்த எம்பெருமான் எழுந்தருளிய திருநாரையூரைக் கை தொழுது நீர் வளம் நிறைந்த காழி மறைஞான சம்பந்தன் உரைத்த இத்தமிழ்மாலையை மொழிபவர் திருவளரும் திருவருட்பேற்றுடன் செம்மையினராவர்.
திருச்சிற்றம்பலம்.
*திருவிழாக்கள்:*
நம்பியாண்டார் நம்பிகள் குருபூஜை வைகாசி புனர்பூச நாளில் விசேஷம்.
ராஜராஜ சோழனுக்கு பதின்மூன்று நாட்கள் திருவிழா. மற்றும் விநாயக சதுர்த்தி.
*தொடர்புக்கு:*
முத்துக்குமாரசாமி.
99432 54861
கண்ணன் பிள்ளை.
94439 06219
கார்த்திகேயன்.
98420 73704
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரையில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், திருக்கடம்பூர். (மேலைக்கடம்பூர்)*
__________________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment