ரிக்வேத அத்யாபகர் ஸ்ரீ ராமக்ருஷ்ண ஶாஸ்த்ரிகளின் குடும்பம் மொத்தமுமே வேத அத்யயனம், யாக-யஜ்ஞாதிகள், நித்யாக்னிஹோத்ரம் என்று, பெரியவாளுக்கு மிக மிக ஸம்மதமான குடும்பம்.
ஒருமுறை அவருடைய தந்தை, ஈரோடில் ஒரு பெரிய வாஜபேய யாகத்தை, க்ரமமாக முடித்துவிட்டு, குடும்பத்துடன் பெரியவாளை தர்ஶனம் பண்ண, மஹாகாவ் வந்தார்.
பெரியவா எங்கு சென்றாலும் கூட்டம்தானே! அன்றும் நல்ல கூட்டம். பெரியவா உள்ளே இருந்தார்.
"ஈரோட்ல, வாஜபேயம் முடிச்சிண்டு….. நேரா…. பெரியவாள தர்ஶனம் பண்ண வந்தோம்"
பாரிஷதர்களிடம் கூறினார்.
அவரும் பெரியவாளிடம் சென்று "ராமக்ருஷ்ண ஶாஸ்த்ரிகளோட தகப்பனார், ஈரோட்ல.. வாஜபேயம் முடிச்சுட்டு…. குடும்ப ஸஹிதமா வந்திருக்கார்." என்றதும்,
"அவாள…. மொதல்ல…. இங்கேர்ந்து போகச் சொல்லு". தர்ஶனம் தராமலேயே திருப்பி அனுப்பி விட்டார்.
பெரியவாளின் தர்ஶனமும் இல்லாமல், மிகவும் வேதனையோடும், கண்ணீரோடும்….. பக்கத்தில் இருந்த ஒரு சத்திரத்தில் தங்கினார்கள்.
அவர்களுடைய துக்கமோ….. சொல்லி மாளாது….!
"என்ன குத்தம் பண்ணினோம்? தெரிஞ்சோ… தெரியாமலோ….. எதாவுது… பண்ணியிருந்தாலும், பெரியவா மன்னிச்சுடுவாளா?"
தவித்தனர் பாவம்.
ஒரு மணி நேரம் இப்படியே கழிந்தது.
ஸரி…. இனி இங்கே எத்தனை நாழி உட்கார்ந்திருப்பது? ஊருக்குப் போக, அடுத்த ரயில் எப்போது என்று விஜாரிக்க ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல முடிவு செய்தபோது, அறையின் வாஸலில் திடீரென்று ஒரே பரபரப்பு!
ஶ்ரீமடத்தை சேர்ந்த பாரிஷதர்கள் சிலரும், வேத விற்பன்னர்களும், சில பெரிய மனிதர்களும் வந்து வாஸலில் நின்றனர்.
"என்னது இது?….."
திகைத்தனர் !
"பெரியவா அனுப்பினா……! யாரோ….. வாஜபேய யாகம் பண்ணிட்டு இங்க வந்து தங்கியிருக்காளாம்.! அவாளையும், அவா குடும்பத்தையும்…. ராஜ மர்யாதையோட, அழைச்சிண்டு வரணுன்னு….. ஸாண்டூர் மஹாராஜாவை அனுப்பியிருக்கா"
வந்தவர்களில் ஒரு வேதவிற்பன்னர் வினயமாக உரைத்தார்.
யானை, குதிரை, சாமரம், வெண்கொற்றக்குடை, வேதகோஷம், வாத்யம் முதலானவை அந்த சத்திரத்து வாஸலில் வந்து, இவர்களுக்காக காத்திருந்தன.
இவர்களுக்கோ ஒரே ஆனந்த அதிர்ச்சி!
ஸாண்டூர் மஹாராஜா…. பெரிய வெண்கொற்ற குடையை அந்த குடும்பத்தின் தலைவருக்கு பிடித்தபடி வர, முன்னால் நாதஸ்வர இசை முழங்க, "பார்! எப்பேர்ப்பட்ட வேதவித்துக்களை அழைத்து வருகிறோம்!.." என்பது போல், கம்பீரமாக ஶ்ரீமடத்து யானை அசைந்து நடந்து செல்ல, குதிரை மேல் தடி ஏந்தியபடி, பாரா வர, ஸாமவேத கோஷத்துடன் கல்கத்தா ஶங்கரநாராயண ஸ்ரௌதிகள் இவர்களை அழைத்துக்கொண்டு பெரியவாளிடம் சென்றார்.
ஶாஸ்த்ரிகள் குடும்பத்தினர் ஆனந்தத்தில் அழுதனர்! பெரியவாளுடைய பேரன்பை நினைத்து அழுதனர்! அவருடைய வேத தர்ம பரிபாலனத்தை நினைத்து அழுதனர்!
"வேதமாதாவுக்கு முன் ராஜாதிராஜாக்கள் கூட ஸேவகர்தான்" என்ற ஸத்யம் அன்று தெய்வத்தால் உலகுக்கு உணர்த்தப்பட்டது.
இப்பேர்ப்பட்ட மாபெரும் ஊர்வலத்தை மனஸில் கல்பனை செய்தாலே சிலிர்க்கறது!
மடத்துக்குள் நுழைந்ததும் பெரியவா புன்சிரிப்புடன்……
" ஏன் மனஸு கஷ்டப்படணும்? வாஜபேயம் பண்ணினவாளுக்கு ராஜ மர்யாதையோட, யாராவுது…. மஹாராஜா வெண்கொற்ற கொடை பிடிச்சிண்டு வரணும்..! அப்டி….. அவாளை பாக்கறதுதான் தர்மம்.! அதுப்படி பாக்கறதுக்காகத்தான்…. ஒங்களை மொதல்ல போகச் சொன்னேன்…..! அதோட எனக்குமே கூட… ஓன்னை…. அப்டிப் பாக்கணுன்னு ஆசையா இருந்துது….. யத்ருஶ்சையா (யதேச்சையா) ….. ஸாண்டூர் மஹாராஜா வந்தார்…! …."
யத்ருஶ்சையாகவா! தன் ஸங்கல்பம் என்று ஒத்துக் கொள்வாரா என்ன?
ராமக்ருஷ்ண ஶாஸ்த்ரிகளின் அப்பா, பெரியவா பாதாரவிந்தங்களை கண்ணீரால் அபிஷேகம் செய்தார்.
பெரியவாளுடைய எந்த செயலுமே அனுக்ரஹம்தானே!!
இதில் பாரிஷதர்களின் வேடிக்கையான அனுபவம் என்னவென்றால், மஹாகாவ் என்ற சின்ன ஊரில், பூஜை ஸாமான்கள், ஸமையல் ஸாமான்கள், பாரிஷதர்களின் மடிஸஞ்சி, பெரியவாளின் மடிஸஞ்சி இத்யாதிகள் இருந்த இடத்தில் ஒரு பழைய வெண்கொற்றக் குடையும் இருந்தது !
ஒருவரும் அதை கவனிக்கவில்லை, பெரியவாளைத் தவிர!..
திடீரென்று ஒரு பாரிஷதர் உள்ளே வந்து,
"பெரியவா வெண்கொற்றக் குடையை கொண்டுவரச் சொல்றா!" என்றதும், அங்கிருந்த ஸாமான்களைத் துழாவி, தூஸி படிந்து, brown கொற்றக்குடையாக இருந்த வெண்கொற்றக் குடையை கண்டுபிடித்து, தூஸி தட்டிக் கொண்டிருந்தபோதே, "ஸீக்ரம்! பெரியவா அவஸரமாக் கேக்கறா!!" என்று ஆள் மேல் ஆள் வந்து கேட்டதும், ஒருவழியாக ஸுமாராகப் பண்ணி அதைக் குடுத்தனர்.
எதற்கு இத்தனை அவஸரம்?
வாஜபேய யாகம் பண்ணின தன்னுடைய பக்தனை பார்க்கத்தான் அத்தனை அவஸரம் பகவானுக்கு!
ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்
Compiled & penned by Gowri sukumar 🙏🏽🙏🏽🙏🏽
No comments:
Post a Comment