Friday, August 18, 2017

Thiruvalampuram temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
🌺 *சிவ தல தொடர் 62.* 🌺
🍁 *சிவ தல அருமைகள்,பெருமைகள் தொடர்.*🍁
(நேரில் சென்று தரிசித்ததைப் போல.....)
★★★★★★★★★★★★★★★★★★★★★
     🌸 *திருவலம்புரம்.* 🌸
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*இறைவன்:* வலம்புரநாதர்.

*இறைவி:* வடுவகிர்க்கண்ணியம்மை. 

*தல விருட்சம்:* பனை மரம்.

*தீர்த்தம்:* பிரம்ம தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், (சுவர்ணபங்கஜ தீர்த்தங்கள்) சிவகங்கைத் தீர்த்தம்.

சோழநாட்டுக் காவிரித் தென்கரையில் அமையப்பெற்றுள்ள 128 தலங்களுள் இத்தலம் நாற்பத்து நான்காவது தலமாகப் போற்றப்பெறுகின்றது.

*இருப்பிடம்:*
சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சென்று மேலையூர் அடைந்து, அங்கிருந்து பிரிந்து செல்லும் மயிலாடுதுறை சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். சீர்காழியில் இருந்து சுமார் பதினாறு கி.மி. தூரத்தில் இத்தலம் இருக்கிறது.

மயிலாடுதுறையிலிருந்தும் பூம்புகார்ச் சாலையில் சென்று காவிரி கடைமுக அணையை அடைந்து, அங்கிருந்து சென்றாலும் இத்தலத்தை அடையலாம்.

பிரதான சாலையில் இருந்து சற்று உள்ளடங்கி கீழையூர் கிராமத்திற்குள் ஆலயம் உள்ளது.

*பெயர்க்காரணம்:*
காவிரிநதி இத்தலத்திற்கு வலமாகச் செல்வதால், இத்தலம் வலம்புரம் என்றானது.

பூம்புகாருக்கு அதைச் சுற்றிய அகழியாக இவ்வூர் முக்காலத்திலிருந்தமையின் இது பெரும்பள்றம் என பெயர் பெற்றது.

கீழ்புறம் உள்ளது கீழப்பெரும்பள்ளம் எனவும், மேற்புறம் உள்ளது மேலப்பெரும்பள்ளம் எனவுமாயிற்று.

*தல அருமை:*
மகாவிஷ்ணு சிவனைக் குறித்து தவம் செய்யப் போன போது, திருமகளை இத்தலத்து அம்பிகையின் தோழியாக விட்டு சென்றார். தவத்தின் பலனாக மகாவிஷ்ணு சிவபெருமானிடமிருந்து சக்ராயுதமும், கதையும் பெற்றார். 

அதன் பின் இங்கு வந்து அம்மனை வணங்கி சங்கும், பத்மமும் பெற்றார் என தல வரலாறு கூறுகிறது.

காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால் ஒரு பெரிய பிலத்துவாரம் (பள்ளம்) திருவலஞ்சுழி தலத்தில் ஏற்பட்டது. பாய்ந்து வந்த காவிரியாறு ஆதிசேஷன் வெளிப்பட்ட பள்ளத்தில் பாய்ந்து பாதாளத்தில் இறங்கிவிட்டது. ஹேரண்ட மகரிஷி திருவலஞ்சுழியில் அந்த பிலத்துவாரத்தில் இறங்கி தன்னை பலி கொடுத்து காவிரியை மீண்டும் வெளிக் கொண்டு வந்த பிறகு வலமாக வந்து இத்தலத்தில் கரையேறினார். அதனால் இத்தலம் *"திருவலம்புரம்"* ஆனது. 

ஹேரண்ட மகரிஷிக்கு இத்தலத்தில் தனி கோயில் உள்ளது. 

சம்பந்தருடன் திருநாவுக்கரசர் பல தலங்கள் சென்று வழிபட்ட போது, சிவபெருமான் இத்தலத்தில் திருநாவுக்கரசரை அழைத்து காட்சி கொடுத்துள்ளார்.

இங்குள்ள சுயம்பு லிங்கத்தின் மேல் பகுதியில் ஒரு கை நுழையும் அளவிற்கு இரு பள்ளங்கள் உள்ளது. எனவே லிங்கத்திற்கு சாம்பிராணித்தைலம், புனுகுசட்டம் சாத்தப்படுகிறது. அபிஷேகத்தின் போது குவளை சாற்றப்படுகிறது. இதனால் இத்தலம் *"மேலப் பெரும்பள்ளம்"* என்று அழைக்கப்படுவதாகக் கூறுகிறார்கள்.

*கோவில்அமைப்பு:*
மூவராலும் பதிகம் பாடப் பெற்ற தலம் என்ற சிறப்பைப் பெற்ற இத்தலம் ஒரு மாடக் கோவிலாகும்.

கோவிலுக்கு எதிரில் உள்ள தீர்த்தக்கரையில் விநாயகர் வீற்றிருக்க தீர்த்தத்தை சிரசில் தெளித்து  ஆராதித்துப் பின் விநாயகரையும் வணங்கினோம். 

இவரருகே ஏரண்ட முனிவர் உருவமும் அவர் வழிபட்ட இலிங்கமும் உள்ளன. 

கிழக்கு நோக்கிய இவ்வாலயத்தில் மூலவர் வலம்புரிநாதர் சுயம்பு லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளதை மனமொன்றி பிரார்த்தி வணங்கினோம்.

உள் பிராகாரத்தில் சூரியன், விநாயகர், நால்வர், விசுவநாதர், முருகர், இராமநாதர், கஜலட்சுமி சந்நிதிகள் இருக்க தொடர்ந்து அனைவரையும் தரிசித்தே நகர்ந்தோம்.

அம்பாள் சந்நிதி மகாமண்டபத்தில் தெற்கு நோக்கி அருட்பார்வைகளை காட்ட, அமைதியாக தியானித்து தரிசித்துக் கொண்டோம்.

இங்குள்ள பிட்சாடனர் மூர்த்தத்தை வணங்கியபோது அவர், மிகச் சிறப்பாகதானவாக காட்சி தந்தார்.

கருவறையில் நம் கண்கள் மேய அங்குள்ள சிற்ப  வேலைப்பாடுகள் நமக்கு பிரமிப்பான அழகை ஏற்படுத்திக் காட்டின.

நடராசர் சபையும் மகாமண்டபத்தில் இருக்க,...."விடுவோமா? ......சாதாரணமா இவருக்கென்றே நாம் சில வினாடிகள் அதிகம் எடுத்துக் கொண்டுதான் வணங்கி வருவோம். அதுபோலவே இப்போது, நன்றாக அவனின் ஆடற் அங்கசைவிலிருந்து வெளிப்படும் தோற்றத்தையும், அதோடு அவைக்கான அருள் மழைகளில் நனைந்தே வெளி வந்தோம்.

ஆலயத்தின் தீர்த்தங்களாக பிரம்ம தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் ஆகியவை உள்ளன. 

தல விருட்சமாக ஆண்பனை விளங்குகிறது.

*தல பெருமை:*
மகத நாட்டு மன்னன் தனஞ்செயன் என்பவன் தனது மகனிடம், *"நான் இறந்த பிறகு எனது அஸ்தி எங்கு மலராக மாறுகிறதோ, அங்கு எனது அஸ்தியை கரைத்து விடு,"* என்ற கூறிவிட்டு மறைந்தான்.

அதன்படி மைந்தன் பல தலங்களுக்கும் சென்றான். இறுதியில் இத்தலம் வந்ததும் அஸ்தி மலராக மாறியதைக் கண்டு அஸதியை இத்தலத்திலுள்ள தீர்த்தத்தில் கரைத்தான். அந்த மன்னனின் சிலை இத்தலத்தில் உள்ளது. எனவே இத்தலம் காசியை விட புனிதமானது என்று புராணங்கள் கூறுகிறது.

*மற்றொரு தல வரலாறு:*  அரசன் ஒருவன் வேட்டைக்குச் சென்றான். விளையாட்டுக்காகத் தான் இறந்து விட்டதாக அமைச்சர் மூலம் பொய்ச் செய்தி சொல்லியனுப்பினான். அச்செய்தி கேட்ட அரசி அதிர்ச்சியுற்று இறந்தாள். மன்னனைப் பழி சூழ்ந்தது. பழி நீங்க சான்றோர்களிடம் ஆலோசனை கேட்டான்.

அவர்களும் நாள்தோறும் ஆயிரம் பேருக்கு உணவளித்தால் அதில் எவரேனும் மகான் "ஒருவர் வந்து உணவுண்டால் அரண்மனை வாயிலில் உள்ள மணி ஒலிக்கும், அப்போது பழிதீரும்" என்று மன்னனுக்குச் சொல்லினர்.

அது கேட்ட மன்னனும் அவ்வாறே செய்து வந்தான். ஒரு முறை அன்னதானம் நடந்து கொண்டிருந்த போது, அசரீரி தோன்றி, *"அன்னதானம் நடக்கும் இக்கோயிலில் நீண்ட காலமாக ஒலிக்காத மணி, தானே ஒலிக்கும். அப்போது மன்னனின் தோஷம் விலகும்"* 'என கூறியது. 

அன்னதானம் தொடர்ந்து நடந்து வர, பட்டினத்தார் ஒரு முறை இக்கோயிலுக்கு அன்னதானம் நடக்கும் நேரம் வந்தார். பசியோடு இருந்த அவர், மடப்பள்ளியில் இருந்தவரிடம் தனக்கு உணவு தருமாறு கேட்டார். அவர் உணவு தர மறுக்கவே, மடப்பள்ளியின் பின் பக்கம் வழிந்தோடும் கஞ்சியை இருகைகளால் அள்ளி குடித்து பசியாறியதாகவும், உடனே இதுநாள் வரை அடிக்காமல் இருந்த மணியானது தானே ஒலிக்க ஆரம்பித்ததாகவும் மற்றொரு தல வரலாறாக இதைக் கூறுகிறது.

அன்னதானமே இன்னும் ஆரம்பிக்க வில்லை, அதற்குள் மணி ஒலித்து விட்டதே என அனைவரும் ஆச்சரியமடைந்து போய் பார்த்தபோது அங்கே பட்டினத்தடிகளை அனைவரும் தரிசித்தனர்.

உடனே மன்னனின் தோஷம் விலகியது. பட்டினத்தாரை மன்னன் சென்று வரவேற்கும் ஐதீக திருவிழா இத்தலத்தில் ஆண்டு தோறும் நடைபெறுகிறது.

*கல்வெட்டுச் செய்தி:*
விக்கிரமசோழன் கல்வெட்டில், இத்தலம் *"இராசராச வளநாட்டு ஆக்கூர் நாட்டு தலைச்சாங்காட்டுத் திருவலம்புரம்"* எனவும், சுவாமி*"வலம்புரி உடையார் எனவும் காணப்படுகிறது.

மற்றொருகல்வெட்டுச் செய்தியொன்றில், பண்டைய நாளில் கோயில்களுக்கு ஆண்களை விற்கும் பழக்கம் இருந்ததென சொல்கிறது.

 *தேவாரப் பாடல் பாடியவர்கள்:*
*சம்பந்தர்*- 3-ல் ஒரு பதிகமும்,
*அப்பர்*-4-ல் ஒரு பதிகமும், 6-ல் ஒரு பதிகமும்,
*சுந்தரர்*-7-ல் ஒரு பதிகமும் ஆக மொத்தம் இத்தலத்திற்கு நான்கு பதிகங்கள்.

*1*"தெண்டிரை தேங்கி யோதம்
சென்றடி வீழுங் காலைத்
தொண்டிரைத் தண்டா்கோனைத்
தொழுதடி வணங்கி யெங்கும்
வண்டுகள் மதுக்கண் மாந்தும்
வரம்புரத்து அடிகள் தம்மைக்
கொண்டுநற் கீதம் பாடக்
குழகா்தாம் இருந்த வாறே"                         

*2.*"மடுக்களில் வாளை பாய வண்டினம் இரிந்த பொய்கைப்
பிடிக்களிறு என்னத் தம்மிற்
பிணைபயின்ற அணைவ ரால்கள்
தொடுத்தநன் மாலை யேந்தித்
தொண்டா்கள் பரவி யேத்த
வடித்தடங் கண்ணி பாகர்
வலம்புரத் திருந்த வாறே" 

*3*தேனுடை மலா்கள் கொண்டு
திருந்தடி பொருந்தச் சோ்த்தி
ஆனிடை அஞ்சும் கொண்டு
அன்பினால் அமரஆட்டி
வானிடை மதியம் சூடும்
வலம்புரத்து அடிமைபள் தம்மை
நான டைந்து ஏத்தப் பெற்று
நல்வினைப்  பயனுற் றேனே"               

*4*"முளைஎயிர் றிளநல் ஏனம்
பூண்டுமொய் சடைகள் தாழ
வளையிற் றினைய நாகம்
வலித்தரை இசைய வீக்கிப்
புளைகயப் போர்வை போர்த்துப்
புனலோடு மதியம் சூடி
வளையில் இளையா் இளையா் ஏத்தும்
வலம்புரத்து அடிகள் தாமே"

*5*"சுரளுறு வரையின் மேலால்
துளங்கிளம் பளிங்கு சிந்த
இருளுறு கதிர்நு ழைந்த
இளங்கதிர் பசலைத் திங்கள்
அருளுறும் அடியர் எல்லாம்
அங்கையின் மலர்கள் ஏந்த
மருளுறு கீதங் கேட்டார்
வலம்புரத்து அடிக ளாரே" 

*6*"நினைக்கின்றேன நெஞ்சு தன்னால்
நீண்டபுன் சடையி னானே
அனைத்துடன் கொண்டு வந்தங்கு
அன்பினால் அமைய ஆட்டிப்
புனைக்கின்றேன் பொய்மை தன்னை
மெய்மைமையைப் புணர மாட்டேன்
எனக்குநான் செய்வ தென்னே
இனிவலம் புரனீரே" 

*7*"செங்கயல் சேல்கள் பாய்ந்து
தேம்பழம் இனிய நாடித்
தங்கயம் துறந்து போய்ந்து
தடம் பொய்கை யடைந்து நின்று
கொங்கையா் குடையும் காலைக்
கொழுங்கனி அழுங்கி னாராம்
மங்கல மனைவியின் மக்கார்
வலம்புரத்து அடிக ளாரே"

*8*"அருகெலாம் குவளை செந்நெல்
அகவிலை ஆம்பல் நெய்தல்
தெருவெலாம் தெங்கு மாவும்
பழம்விழும் படப்பை எல்லாம்
குருகினம் கூடி யாங்கே
கும்மலித் திறகு லர்த்தி
மருவலாம் இடங்கள் காட்டும்
வலம்புரத் தடிகளாரே"                                 

*9*"கருவரை யனைய மேனிக்
கடல்வண்ணன் அவனும் காணான்
திருவரை யனைய பூமேற்
றிசை முகன் அவனும் காணான்
ஒருவரை யுச்சி யேறி
ஓங்கினார் ஓங்கவந்து
அருமையில் எளிமையானார்
அவர்வலம் புரவ னாரே

*10*"வாளெயிறு இலங்க நக்கு
வளர்கயி லாயம் தன்னை
ஆள்வலி கருதிச் சென்ற
அரக்கனை அரைக்கீழ் அன்று
தோளொடு பத்து வாயும்
தொலைந்துடன் அழுந்தவூன்றி
ஆண்மையும் வலியும் தீ்ர்ப்பார்
அவர்வலம் புரவ னாரே.

*திருநாவுக்கரவசு சுவாமிகள் அருளிய ஆறாம் திருமுறை*

*1*"மண்ணளந்த மணிவண்ணார் தாமும் மற்றை
மறையவனும் வானவருஞ்சூழ நின்று
கண்மலிந்த திருநெற்றி யுடையா ரொற்றைக்
கதநாகங் கையுடையார் காணீ ரன்றே
பண்மலிந்த மொழியவரும் யானு மெல்லாம்
பணிந்திறைஞ்சித் தமமுடைய பின்பின் செல்ல
மண்மலிந்த வயல்புடை தம்முடை சூழ் மாடவீதி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே"                   

*2*"சிலை நவின்ற தொருகணையாற் புரமூண்று றெய்த
தீவண்ணர் சிறந்திமையோ் இறைஞ்சி யேத்தக்
கொலைநவின்ற களியானை யுரிவை போர்த்துக்
கூத்தாடித் திரிதருமக் கூத்தர் நல்ல
கலைநிவன்ற  மறையவர்கள் காணக் காணக்
கருவிடைமேற் பாரிடங்கள் சூழக் காதல்
மலைமகளும் கங்கையுந் தாமு மெல்லாம்
வலம்புமே புக்கங்கே மன்னி னாரே"                      

*3*"தீக்கூருந்து திமேனி யொருபால் மற்றை
யொருபாலும் அரியுருவந் திகழ்ந்த செல்வா்
ஆக்கூரில் தான் தோன்றிப் புகுவார் போல
வருவினையேன் நூலுந் தோலுந்
நோக்கா ரொருவிடத்து நூலுந் தோலுந்
துதைத்திலங்குந் திருமேனி வெண்ணீ றாடி
வாக்கால் மறைவிரித்து மாயம் பேசி
வலம்புரமே புக்கங்பே மன்னினாரே"                    

*4*"மூவாத மூக்கப்பாம் பறையிற் சாத்தி
மூவர் உருவாய முதல்வ ரிந்நாள்
கேவாத எரிகணையைச்ஹ சிலைமேற் கோத்த
குழகனார் குளிர்கொன்றை சூடி யிங்கே
போவாரைக் கண்டடியேன் பின்பின் செல்லப்
புறக்கணித்துத் தம்முடைய தஞ் சூழ
வாவா வென வுரைத்து மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாதே"                   

*5*"அனலொருகை யதுவேந்தி யதளி னோட
ஐந்தலைய மாநாகம் அரையிற் சாத்திப்
புனல் பொதிந்த சடைக்கற்றைப பொன்போல் மேனிப்
புனிதனார் புரிந்தமரா் இறைஞ்சி யேத்தக்
சின விடையை மேல்கொண்டு திருவாரூருஞ்
சிரபுரமும் இடைமருதுஞ் சோ்வார் போல
மனமுருக வளைகழல மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே"                   

*6*"கறுத்ததொரு கண்டத்தா் காலன் வீழக்
காலினாற் காய்ந்துகந்த கபாலியார்
குறித்ததொரு தோலுடுத்து முண்டஞ் சாத்தி
முனிகணங்கள் புடைசூழ முற்றந்தோறும்
தெறித்த தொரு வீணையாராய்ச் செல்வார் தம்வாய்ச்
சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ
மறித்தொருகால் நோக்காதே மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே"                   

*7*"பட்டுடுத்துப் பவளம் போல் மேனி யெல்லாம்
பசுஞ்சாந்தங் கொண்ட ணிந்து பாத் நோவ
இட்டெடுத்து நடமாடி யிங்கே வந்தார்க்
கெவ்வரீர் எம்பெருமா னென்றே னாவி
விட்டிடுமா றதுசெய்து விரைந்து நோக்கி
வேறோர் பதிபுகப் போவார் போல
வட்டணைபள் படநடந்தும் மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே"                   

*8*"வல்லார் பயில்பழனம பாசூ ரென்று
பழனம் பதிபழைமை சொல்லி நின்றார்
நல்லார் நனிப்பள்ளி யின்று வைகி
நாளைப் போய் நள்ளாறு சேர்து மென்றாா்
சொல்லா ரொருவிடமாத் தோள்கை வீசிச்
சுந்ததராய் வெந்தநீ றாடியெங்கும்
மல்லார் வயல்புடை சூழ் மாட வீதி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே"              

*9* "பொங்கா டரவொன்று கையிற் கொண்டு
போர்வென் மழுவேந்திப் போகா நிற்பா்
தங்கா ரொருவிடத்துந் தம்மே லார்வந்
தவிர்த்தருளார் தத்துவத்தே நின்றே னென்பர்
எங்கே யிவர் செய்கை யொன்றான் றொவ்வா
என் கண்ணின் நின்றாலா வேடங் காட்டி
மங்குல் மதி தவழும் மாட வீதி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே"       

*10*"செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ்
சேதுபந் தனஞ்செய்து சென்று புக்கும்
பொங்குபோர் பலசெய்து சென்று புக்கும்
போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ
அங்கொருதன் திவிரலால் இறையே யூன்றி
யடர்த்தவற்கே அருள்புரிந்த அடிக ளிந்தநாள்
வங்கமலி கடல்புடை சூழ் மாட வீதி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே"                   

*சுந்தரைமூர்த்தி சுவாமிகள் தேவாரம் (ஏழாம்திருமுறை)*

திருக்கடவூர் வீரட்டத்துப் பெருமானை "நீயேயன்றி யார் எனக்குத் துணையாவர் ? எனப் பகன்றபின் திருவலம்புரம் போந்து இறைவனின் பெருமைகளைத் தெகுத்துக் கூறிப் பெருமானார் ஈண்டுறையும் சிறப்பினையும் இணைத்துக் கூறிப் பதிகம் பாடுவாராயனர்.

*1*எனக்கினி தினைத்தனைப் புகலிடம் அறிந்தேன்
பனைக்கனி பழம்படும் பரவையின் கரைமேல்
எனக்கினி அவன்தமர்க்(து) இனியவன் எழுமையும்
மனக்கினி அவன்தன(து) இடம்வலம் புரமே.                              

*2*புரமவை எரிதர வளைந்தவில் லினன்  அவன்
மரவுரி புலியதள் அரைமிசை மருவினன்
அரவுரி இரந்தயன் இரந்துண விரும்பிநின்(று)
இர(வு)எரி யாடிதன் இடம்வலம் புர்மே.                                        

*3*நீறணி மேனியன் நெருப்புமிழ் அரவின்
கூறணி கொடமழு ஏந்தியோர் கையின்
ஆறணி அவிர் சடை அகழ்வளர் மழலைவெள்
ஏரணி அடிகள்தம் இடம்வலம்                                  

*4*கொங்ணை சுரும்புண நெருங்கிய குளிர்இளம்
தெங்கொடு பனைபழம் படும்இடம் தேவர்கள்
தங்கிடும் இடம்தடம் கடல்திரை புடைதர
எங்கள(து) அடிகள்நல் இடம்வலம் புரமே                                   

*5*கொடுமழு விரகினன் கொலைமலி சிலையினன்
நெடுமதில் சிறுமையின் நிரவவல் லவனடம்
படுமணி முத்தமும் பவளமும் மகச்சுமந்(து)
இடுமணல் அடைகரை இடம்வலம் புரமே                        

*6*கருங்கடக் களிற்றுரிக் கடவுள(து) இடம்கயல்
நெருங்கிய நெடுபெணை அடும்பொடு விரவிய
மருங்கொடு வலம்புரி சலஞ்சலம் மணம்புணர்ந்(து)
இருங்கடல் அடைகரை இடம்வலம் புரமே                       

*7*நரிபுரி காடரங் காநடம் ஆடுவர்
வரிபுரி வரிகுழல் அரிவையொர் பால்மகிழ்ந்(து)
எரிஎரி யாடிதன் இடம்வலம் புரமே                                   

*8* பாறணி முடைதலை கலன்என மருவிய
நீறணி வருதிரை வயலணி பொழிலது
மாறணி வருதிரை வயலணி பொழிலது
ஏறுடை அடிகள்தம் இடம்வலம் புரமே                             

*9*சடசட விடுபெணை பழம்படும் இடவகை
படவட கத்தொடு பலிகலந்(து) உலவிய
கடைகடை பலிதிரி கபாலிதன் இடமது
இடிகரை மணலடை இடம்வலம் புரமே.                          

*10*குண்டிகைப் படப்பினில் விடகினை ஒழித்தவர்
கண்டவர் கண்டுடைத் தண்டிதன் இனமுடை அரவுடன்
தண்டுடைத் தண்டிதன் இனமுடை அரவுடன்
எண்டிசைக்(கு) ஒருசுடர் இடம்வலம் புரமே.

*11*வருங்கல மும்பல பேணுதல் கருங்கடல்
இருங்குலப் பிப்பர்தம் இடமுடைய புரத்தினை
அருங்குலத்(து) அருந்தமிழ் ஊரன்வன்  தொண்டன் சொல்
பெருங்குலத் தவரோடு பிதற்றுதல் பெருமையே. 

*திருவிழாக்கள்:*
தைமாத பரணியில் பிட்சாடனர் திருவிழா, பங்குனி உத்திரம், கார்த்திகை சோமவாரம், விநாயகர் சதுர்த்தி, ஆடிப்பூரம், தை, ஆடி, புரட்டாசி மகாளய அமாவாசை தினங்கள், மார்கழித் திருவாதிரை, சிறப்பாக நடைபெறுகிறது.

*பூசை:* சிவாகம முறையில் இரண்டு கால பூசை.

காலை 8.30 மணி முதல், பகல் 11.00 மணி வரை,

மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
  
*அஞ்சல் முகவரி:*
அ/மி, வலம்புரநாதர்  திருக்கோயில்,
மேலப்பெரும்பள்ளம்,
மேலையூர் அஞ்சல்,
மயிலாடுதுறை RMS.,
தரங்கம்பாடி வட்டம்,
நாகை மாவட்டம்.609 107

*தொடர்புக்கு:*
சிவனடி கண்ணப்பய்யர். 04364- 200890
94864 62947

              திருச்சிற்றம்பலம்.

*நாளைய தலம்...திருச்சலச்சாங்காடு*      

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment