Monday, August 14, 2017

Thiru Aakoor temple

சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
🔔 *சிவ தல தொடர்.64.* 🔔
🔔 *சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர்.* 🔔
(நேரில் சென்று தரிசித்ததைப்போல......)
****************************************
       🔔 *திரு ஆக்கூர்.*  🔔
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■


*இறைவன்:*
தான்தோன்றியப்பர், (சுயம்புநாதர்)

*இறைவி:*
 வாள்நெடுங்கண்ணி.

*தலமரம்:* சரக்கொன்றை.

*தீர்த்தம்:* குமுதத் தீர்த்தம். (கோவிலின் பின்புறம் உள்ளது.)

*பெயர்க்காரணம்:*
ஊர்- ஆக்கூர். கோவில்- தான்தோன்றிமடம். ஆயிரமாவது இலையில் ஆயிரத்தில் ஒருவராக அமர்ந்திருந்த வயதான அந்தணரிடம் சென்ற மன்னன்.........

"ஐயா!, ..தங்களுக்கு எந்த ஊர்?, எனக் கேட்டான்.

அதற்கு வயதான அந்தணர் யாருக்கு ஊர் என்று மறுகேள்வி கேட்கிறார். (இதனாலேயே இந்த ஊருக்கு யாருக்கு ஊர் என்பது மருவி ஆக்கூர் எனவானது)

மன்னனை எதிர் கேள்வி கேட்ட அந்த வயதானவரை அடிப்பதற்காக சிப்பாய்கள் விரட்டுகின்றனர். 

ஓடிச் சென்ற வயதானவர் நெடுங்காலமாக அங்கிருந்த புற்றுக்குள் விழுந்து விட்டார்.

புற்றைக் கடப்பாரையால் குத்தி விலக்கிப் பார்த்தபோது, உள்ளேயிருந்து சுயம்பு மூர்த்தியாகிய தான்தோன்றீசுவரர் தோன்றினார்.

கடப்பாறை சுயம்புமீது பட்டதில் அடையாளமாக இன்றும்கூட லிங்கத்தின் தலைப் பகுதியில் பட்ட பிளவைக் காணலாம்.

*இருப்பிடம்:*
மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து கிழக்கே 17 கி.மி. தொலைவில் இருக்கிறது. ஆக்கூர் பேருந்து நிலையத்தின் வடபாகத்தில் இத்திருக்கோயில் அமையப்பெற்றுள்ளது. 

கோச்செங்கட் சோழன் தனது முன்பிறவியில் யானையினால் ஏற்பட்ட இடர் காரனமாக, யானை ஏற முடியாத மாடக் கோவில்கள் எழுபது  கட்டினான் என்று வரலாறு கூறுகிறது. ஆக்கூர் தான்தோன்றியப்பர் கோவிலும் ஒரு மாடக் கோவில்.

மாடம் என்னும் பெயர் கொண்ட திருக்கோயில்கள் இரண்டு தேவாரத்தில் காணப்படுகின்றன. ஒன்று நடு நாட்டுத் தலமான பெண்ணாகடத்தில் உள்ள *தூங்கானை மாடம்;* மற்றொன்று காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றான *ஆக்கூர் தான்தோன்றி மாடமாகும்.* யானை ஏறமுடியாத படிக்கட்டுகளை உடைய உயரமான தளத்தில் இறைவன் கருவறை அமையப்பெற்ற கோவிலகள் மாடக்கோயில் என்று பெயர் பெற்றன. ஊரின் பெயர் ஆக்கூர் ஆயினும் அங்குள்ள கோயிலுக்குத் தான்தோன்றிமாடம் என்று பெயர். அதாவது தான்தோன்றியப்பர் (சுயம்புமூர்த்தியாகிய இறைவர்) எழுந்தருளியிருக்கும் மாடக் கோயில் என்று பொருள்படும்.

*தேவாரம் பாடியவர்கள்:*
*சம்பந்தர்* 2-ல் ஒரே ஒரு பதிகமும்,
*அப்பர்* 6-ல் ஒரே ஒரு பதிகமும் ஆக மொத்தம் இரண்டு பதிகங்கள்.

*கோவில் அமைப்பு:*
அரை ஏக்கர் நிலப்பரப்பளவில், கோவில் அமைந்துள்ளது. இரண்டு பிராகாரங்களும் இருக்கின்றன.

இவ்வாலயத்திறகு கிழக்கில் மூன்று நிலை இராஜ கோபுரமும் தெரியவும் *சிவ சிவ* மொழிந்து வணங்கி உள் நுழைகிறோம்.

தெற்கில் ஒரு நுழைவாயிலும் உள்ள கோபுர வாயிலில் விநாயகர் காட்சி தருவது தெரிந்தே அவ்விடம் சென்று அவரை நமஸ்கரித்தோம்.

கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்து நேரே சென்றால் நாம் இருப்பது கிழக்கு வெளிப் பிரகாரத்தில். நேரே கிழக்கு நோக்கி உயரமான மாடத்தில் இறைவன் கருவறை உள்ளதைக் காணப்பெற்றோம்.

படிகள் ஏறிச் சென்று பலிபீடத்தருகே முன் நின்று ஆணவங்களை பலியிட்டு விட்டு, நந்தியையும் தொழுது வணங்கினோம்.

இங்கு குடிகொண்டுள்ள தான்தோன்றியப்பர் ஒரு சுயம்பு லிங்கம் ஆவார்.

அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய தலங்களில் இத்தலமும் ஒன்றானதால் இறைவி வாள்நெடுங்கண்ணியின் சந்நிதி மூலவர் சந்நிதிக்கு வலதுபுறமாக  அமைந்திருக்க வரிசையில் பொறுமையாக காத்திருந்து அம்மையின் அருட்பார்வை கிடைத்த பின் திரும்பி நகர்ந்தோம்.

உள் சுற்றில் விநாயகர், முருகர், விஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோர் சந்நிதிகள் இருக்க அவர்களையும் தொடர்ந்து வணங்கிக் கொண்டோம்.

சம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் ஆகியோர் இருக்க அத் திருஉருவச் சிலைகள இமை விலகாது பார்த்துக் கொண்டிருந்தோம். பின்னால் பக்தர் கூட்டம் வரவே அதன் பின்புதான் நகர்ந்தோம்.

சுந்தரர் அவரது இரு மனைவியர் சங்கிலி நாச்சியார் மற்றும் பரவை நாச்சியார் திருஉருவச் சிலைகள் தனி சந்நிதி கொண்டிருக்கும் இடம் வந்தோம். அவர்களின் பக்திசாரங்கள் திருமேனியிலிருந்தும்  அருள் காணப்பட்டன. கைகள் உயர்த்து வணங்கியபோது உரோமக்கால்கள் தேகத்தின் சில்லிட்டன.

அடுத்து காலபைரவர், பைரவர், சூரியன் ஆகியோரின் திருஉருவச் சிலைகளையும் வணங்கித் திரும்பினோம்.

அறுபத்து மூவர் நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார் அவதரித்த தலம் ஆக்கூர். 

கருவறை அர்த்த மண்டபத்தில் இடதுபுறம் சிறப்புலி நாயனார் சந்நிதி இருக்கும் இடம் வந்தோம். அவரின் கோலத்தையும் அவர் தொண்டையும் எண்ணி , கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

அவருக்கு நேர் எதிரே வலதுபுறமாக ஆயிரத்தில் ஒருவர் சந்நிதிக்குச் சென்று மனமுருகிப் பிரார்த்தனை செய்து கொண்டோம்.

இத்தலத்திறகுரிய சிறப்பு என்று இம் மூர்த்தியான  *ஆயிரத்தில் ஒருவர்* பெருமானைக் கூறுகின்றனர் அங்கிருப்போர்கள்.

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் மயில் மீது கிழக்கு நோக்கிய வண்ணம் சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். அருகே தேவியர் இருவரும் எழுந்தருளியுள்ளனர்.

*தல அருமை:*
ஒரு முறை கோச்செங்கணனுக்கு வயிற்றில் குன்ம ( அல்சர்) நோய் ஏற்படுகிறது.

இதனால் மன்னன் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறான்.
இந்த நோயைத் தீர்க்க வேண்டுமானால் மூன்று தலவிருட்சங்கள் எங்கு இருக்கிறதோ அங்கு கோயில் கட்டினால் நோய் தீரும் என்று அசரீரி கூறியது.

மன்னனும் பல கோவில்கள் கட்டி வரும்போது ஆக்கூர் என்ற இத்தலத்திற்கு வருகிறான்.

அப்போது அசரீரி வாக்கின்படி கொன்றை, பாக்கு, வில்வம் என்று மூன்று தல விருட்சங்களை ஒரே இடத்தில் பார்க்கிறான்.

உடனே அவ்விடத்தில் சிவாலயம் அமைக்கிறான். அப்படி கோவில் கட்டும் போது கட்டிய சுவர் விழுந்து விழுந்து நொறுங்குகிறது.

சிவனிடம் முறையிட்டு ஏன் இப்படி? என  அழுதான்.

அதற்கு சிவன்,  ஆயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்ய குறைபாடு நீங்கியொழியும் என ஈசன் கூறினார்.

அதன்படி நாற்பத்தெட்டு நாட்களுக்கு அன்னதானம் நடக்கிறது. அதில் ஒவ்வொரு நாளும் ஆயிரம் இலை போட்டால் ஆயிரம் நபர்களில் ஒரு நபர் குறைவாகவே சாப்பிட வந்தார்கள். ஒரு இலை மீதமிருந்து கொண்டே வந்தது.

மீண்டும் மன்னனிடம் முறையிட்டு வேண்ட, இறைவன் மன்னனின் வேண்டுதலுக்கு செவிசாய்த்து நாற்பத்து எட்டாவது நாள் ஆயிரம் இலைகளிலும் ஆட்கள் அமர்ந்து சாப்பிட்டார்கள்.

மன்னனின் பரிகாரமும் பூர்த்தியாகி நோய் தீர்ந்தது.

*தல பெருமை:*
அந்தணர்களுக்கு உணவளித்தபோது இறைவனும் அந்தணர்களில் ஒருவராய் அமர்ந்து உணவு உண்டு மன்னனுக்கு காட்சியளித்த தலம். ஆக இத்தலத்தைப் பற்றி திருமுறையில் கபிலதேவ நாயனார் போற்றிப் பாடியுள்ளார்.

*ஆயிரத்தில் ஒருவர்:*
மன்னன் ஒருவன் இறைவன் கட்டளைப்படி தினமும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்ய முற்பட்டான். நாற்பத்தெட்டு நாட்கள் இந்த அன்னதானம் செய்ய வேண்டியிருந்தது. தினந்தோறும் ஆயிரம் இலை போட்டு உணவு பரிமாறினாலும் 999 பேர் மட்டுமே உணவருந்தினர். 

நாற்பத்தேழு நாட்கள் இவ்வாறு தினமும் ஒருவர் குறைவதைக் கண்ட மன்னன் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டான். நாற்பத்தெட்டாவது நாள் அந்தணர் உருவில் ஆயிரத்தில் ஒருவராக தானும் வந்து உணவருந்தி அம்மன்னனுக்கு அருள் புரிந்தார். 

பந்தியில் தானும் ஒருவராக அமர்ந்து இறைவன் உணவருந்திய பெருமையை உடையது இத்தலம்.

இத்தலத்து வேளாளர்களைத் திருஞான சம்பந்தப் பெருந்தகையார் இவ்வூர்ப் பதிகத்தில் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

🔔வாளார்கண் செந்துவர்வாய் மாமலையான் றன்மடந்தை தோளாகம் பாகமாப் புல்கினான் தொல்கோயில் வேளாள ரென்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்கும் தாளாளர் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே. 

🔔ஒளி பொருந்திய கண்களையும், சிவந்தபவளம் போன்ற வாயினையும் உடையவனாய் இமவான் மகளாகிய பார்வதியைத் தன் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு அவள் தோளைத் தழுவிய சிவபெருமானது பழமையான கோயில், வள்ளன்மை உடைய, பிறர்க்கு உபகாரியாக விளங்கும் ஊக்கமுடைய வேளாளர்கள் மிகுந்து வாழும் ஆக்கூரில் விளங்கும் தான்தோன்றி மாடம் ஆகும். 

மேலும் தனது பதிகத்தில் ஆக்கூரைப் பற்றி குறிப்பிடும் போது - பல பிரிவுகளுடன் கூடிய நான்மறைகளையும், ஆறு அங்கங்களையும், பலகலைகளையும் கற்றுணர்ந்த, ஐவகை வேள்விகளையும் புரியும் அந்தணர்கள் வாழும் ஆக்கூர் என்றும், சிவபிரானின் பொன்போன்ற திருவடிகளுக்கு நாள்தோறும் பூவும் நீரும் சுமக்கும் சிவனடியார்கள் பலர் வாழும் ஆக்கூர் என்றும், இன்மையால் வந்து இரந்தவர்கட்கு இல்லையென்று கூறாது ஈந்து மகிழும் தன்மையார் வாழும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் என்றும் இத்தலத்தை சிறப்பித்துப் பாடியுள்ளார்.

அரையாடை, மார்பில் முப்புரிநூல், தலையில் உருத்திராட்ச மாலை, ஆகியவற்றோடு திகழும் அந்தணர் ஒருவர் தம் இடக்கரத்தைத் தொடை மீது இறுத்தியவாறு நின்று கொண்டு தம் வலக்கரத்தால் பொற்காசுகளை எதிரே நிற்கும் இருவரிடம் வழங்க, அவர்கள் கரம் நீட்டிப் பெற்றுக் கொள்ளும் அரிய சிற்பக்காட்சி அக்கல்வெட்டுப் பொழிப்புக்குக் கீழாகக் காணப்பெறுகின்றது. இக்காட்சியைக் கண்ட பிறகு சேக்கிழார் பெருமான் அருளிய பெரிய புராணத்தில் 35வதான சிறப்புலி நாயனார் புராணம் பாடல்களைச் சற்று நோக்குவோம். 

ஆறே பாடல்கள் அமைந்த அப்புராணத்தில் முதற்பாடல்: 
'பொன்னி நீர் நாட்டின் நீடும் பொற்பதி
 புவனத்துள்ளோர்
இன்மையால் இரந்து சென்றோர்க்கு 
இல்லை என்னாதே ஈயும்
தன்மையார் என்று நம்மைச் சார்ந்த
 வேதியரைச் சண்பை
மன்னனார் அருளிச் செய்த அறைத்திரு
 ஆக்கூர் அவ்வூர்'

இப்பாடலில் சண்பை (சீர்காழி) மன்னராகிய திருஞானசம்பந்தப் பெருமானார் ஆக்கூரின் பெருமையையும் அங்கு சிவத்தொண்டு புரிந்தருளிய சிறப்புலி நாயனாரின் பெருஞ்சிறப்பினையும் எடுத்துரைத்துள்ளார். இப்பாடலைச் சுவைத்தவாறே ஆளுடைய பிள்ளையாரின் அத்திருத்தலத்து பதிகத்தை நாம் நோக்குவோமாயின் ஒன்பதாம் பாடலில்,'இன்மையால் சென்று இரந்தார்க்கு இல்லை என்னாது ஈந்து உவக்கும் 
தன்மையார் ஆக்கூரில்தான் தோன்றி மாடமே' 

என்று ஞானக் குழந்தையார் பேசும் சிறப்புலி நாயனாரின் சீர்மையை நாம் அறிவோம். இல்லை என்னாது ஈந்து உவக்கும் சிறப்புலி நாயனார் வாழ்ந்த ஆக்கூர் என்ற அந்த பழம்பதியில் வாழ்ந்த வேளாளர்கள் அனைவரும் வள்ளன்மை மிக்கத் தாளாளர்களே என்பதையும் அந்த ஞானக் குழந்தையாரே அப்பதிகத்தில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்க சிறப்புடையதாம். 

சீர் கொண்ட புகழ்வள்ளல் எனத் திருத்தொண்டத் தொகையில் சுந்தரரால் சிறப்புலியார் குறிக்கப் பெற்றுள்ளார். 

சிவனடியார்பால் பேரன்புடையவராய் அடியார்களை எதிர்கொண்டு வணங்கி இனிய உரை பகர்ந்து திருவமுது படைத்து அவர்கள் விரும்புவனவற்றை குறைவறக் கொடுத்து மகிழ்ந்து வந்த சிறப்புலி நாயனார் திருவைந்தெழுத்தோதி சிவபெருமானைக் குறித்துச் செய்வதற்குரிய வேள்விகள் புரிந்து இடையறா பேரன்பால் நல்லறங்கள் பல செய்து சிவபெருமானின் திருவடி நீழலையடைந்தார் எனச் சேக்கிழார் பெருமான் அவர் புராணச் சிறப்புரைத்துள்ளார். 

மன்னன் ஒருவன் இறைவன் கட்டளைப்படி நாள்தோறும் ஆயிரம் அடியார்களுக்கு உணவளிக்கும் கைங்கரியத்தை மேற்கொண்டு வந்ததாகவும், ஒருநாள் ஆயிரவரில் ஒருவர் குறைய மன்னன் வருந்தியபோது ஆக்கூர் ஈசனே ஒரு அடியாராக வந்து உணவு அருந்தி மன்னனுக்கு அருள்பாலித்தான் என்றும் தலபுராணம் கூறி நிற்கின்றது. 'ஆயிரத்துள் ஒருவர்' என்ற பெயரில் ஒரு லிங்க இறைத் திருமேனி இக்கோயிலில் உள்ளது. 

🔔பொன்னி நீர் நாட்டின் நீடும் பொன் பதி புவனத்து உள்ளேர் 
இன்மையால் இரந்து சென்றோர்க்கு இல்லை என்னாதே ஈயும் 
தன்மையார் என்று நன்மை சார்ந்த வேதியரைச் சண்பை 
மன்னனார் அருளிச்செய்த மறைத் திரு ஆக்கூர் அவ்வூர்.

🔔தூ மலர்ச் சோலை தோறும் சுடர் தொடுமாடம் தோறும் 
மா மழை முழக்கம் தாழ மறை ஒலி முழக்கம் ஓங்கும் 
பூ மலி மறுகில் இட்ட புகை அகில் தூபம் தாழ 
ஓம நல் வேள்விச் சாலை ஆகுதித் தூபம் ஓங்கும்.

🔔ஆலை சூழ் பூக வேலி அத்திரு ஆக்கூர் தன்னில் 
ஞாலம் ஆர் புகழின் மிக்கார் நான் மறைக் குலத்தில் உள்ளார் 
நீலம் ஆர் கண்டத்து எண் தோள் நிருத்தர்தம் திருத்தொண்டு ஏற்ற 
சீலராய்ச் சாலும் ஈகைத் திறத்தினில் சிறந்த நீரார்.

🔔ஆளும் அங்கணருக்கு அன்பர் அணைந்த போது அடியில் தாழ்ந்து 
மூளும் ஆதரவு பொங்க முன்பு நின்று இனிய கூறி 
நாளும் நல் அமுதம் ஊட்டி நயந்தன எல்லாம் நல்கி 
நீளும் இன்பத்து உள் தங்கி நிதிமழை மாரி போன்றார்.

🔔அஞ்சு எழுத்து ஓதி அங்கி வேட்டு நல் வேள்வி எல்லாம் 
நஞ்சு அணி கண்டர் பாதம் நண்ணிடச் செய்து ஞாலத்து 
எஞ்சலில் அடியார்க்கு என்றும் இடை அறா அன்பால் வள்ளல் 
தஞ்செயல் வாய்ப்ப ஈசர் தாள் நிழல் தங்கினாரே.

🔔அறத்தினில் மிக்க மேன்மை அந்தணர் ஆக்கூர் தன்னில் 
மறைப் பெரு வள்ளலார் வண் சிறப்புலி யார் தாள் வாழ்த்திச் 
சிறப்புடைத் திருச் செங்காட்டங் குடியினில் செம்மை வாய்ந்த 
வீரர் சிறுத் தொண்டர் செய்த திருத்தொழில் விளம்பல் உற்றேன்.

*திருவிழாக்கள்:*
திருவாதிரை அன்று நடராசர் வீதியுலா வருவதே இக்கோவிலின் மிகப் பெரிய திருவிழாவாகும். 

மற்றபடி சிவனுக்குரிய மாதாந்திர பிரதோஷம், சிவாராத்திரி, திருக்கார்த்திகை, பெளர்ணமி போன்ற நாட்களிலும் சிறப்பு பூஜை உண்டு.

*பூசை:*
காரணாகம முறையில் நான்கு கால பூசை.

காலை 6.00 மணி முதல் பகல் 11.00 மணி வரை,

மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

*அஞ்சல் முகவரி:*
அ/மி. தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், ஆக்கூர் அஞ்சல், தரங்கம்பாடி வட்டம். நாகை மாவட்டம்- 609 301.

*தொடர்புக்கு:*
வைத்தியநாதன். 04364- 280005,    97877 09742
சந்திரசேகர். 98658 09768    

*நாளைய தலம்.......திருக்கடவூர்.*

        திருச்சிற்றம்பலம்.

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment