17. நீலகண்ட யாழ்ப்பாணர்
தமிழ்நாட்டில் பாணர் என்னும் இனத்தார் இசை பாடுவதிலும் யாழ் வாசிப்பதிலும் பழங்காலத்தில் பேர் பெற்றிருந்தார்கள். அந்தக் காலத்தில் யாழ் என்னும் இசைக்கருவி தமிழகத்தில் சிறப்பாக இருந்தது. யாழை வாசித்ததனால் அவர்களுக்கு யாழ்ப்பாணர் என்று பெயர் உண்டா யிற்று. பாணர் குலத்து மக்களும் இசைபாடுவதிலும் நாட்டியம் நாடகம் நிகழ்த்துவதிலும் வல்லவராக இருந்தனர். ஆகையால் அவர்கள் விறலியர் என்று பெயர் பெற்றிருந்தார்கள். அந்தக் காலத்தில் பாணர்கள், சமுதாயத்தில் நன்கு மதிக்கப்பட்டு அரசர்களிடத்திலும், செல்வந்த ரிடத்திலும் ஆடல் பாடல் நிகழ்த்திப் பரிசு பெற்று வாழ்ந்தார்கள்.
பாணர் குலத்திலே பிறந்தவர் நீலகண்ட யாழ்ப்பாணர். அவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சோழ நாட்டில் எருக்கத்தம் புலியூரில் வாழ்ந்தவர். பண் பாடுவதிலும் யாழ் இசைப்பதிலும் வல்லவர். அவர், பாணர் குலத்தைச் சேர்ந்த மதங்கசூளாமணி என்னும் மங்கையை மணஞ் செய்து வாழ்ந்தார். மதங்க சூளாமணியும் நீலகண்டரைப் போலவே பண் பாடுவதிலும் யாழ் வாசிப்பதிலும் தேர்ந்தவர்.
பக்தி இயக்கம் பரவிக் கொண்டிருந்த காலம்அது. நீல கண்டரும் சிவபக்தர். ஆகையால் மதங்கசூளாமணியாருடன் சோழ நாட்டுக் கோயில்களுக்குப் போய் யாழ் வாசித்து இசை பாடிக் கடவுளை வணங்கினார். அவருடைய இசைப் பாட்டினாலும் யாழின் இனிய நாதத்தினாலும் மனங்கவரப்பட்டு மக்கள் திரள்திரளாகச் சென்று அவருடைய இசையமுதத்தைப் பருகி மகிழ்ந்தார்கள். ஊர்கள் தோறும் சென்று திருக்கோயில்களில் இசைபாடி பக்தி செய்து வந்தபடியால் அவருக்குத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்னும் சிறப்புப் பெயர் ஏற்பட்டது.
சோழ நாட்டுக் கோயில்களில் இசை பாடி முடித்த பிறகு திரு நீல கண்டர் பாண்டி நாட்டுக்குப் போய் மதுரையில் கோயில் கொண்டிருக் கும் சொக்கநாதப் பெருமானை வணங்கி, கோயிலின் வெளியே நின்று யாழ் வாசித்துப் பண் பாடினார். அவர் பாடின தேவகானத்தைக் கேட்டு மதுரை மக்கள் மனம் மகிழ்ந்தார்கள் அன்று இரவு சொக்கநாதப்பெருமான் அடியார்களின் கனவில் தோன்றி "நீலகண்டன் தரையில் நின்று யாழ் வாசிப்பதனால் சீதந்தாக்கி யாழின் வீக்கு அழியும். அதனால் யாழின் இசை குறையும். பலகை இட்டு அதன்மேல் இருந்து பண் இசைக்கட்டும்," என்று கூறி மறைந்தார். அடுத்த நாள் பொழுது விடிந்தபோது அடியார்கள் தாங்கள் கண்ட கனவை யுணர்ந்து திருநீலகண்டரைக் கோயிலுக்குள் அழைத்துக் கொண்டுபோய்ப் பலகையிட்டு அதன் மேல் இருந்து இசை பாடச் சொன்னார்கள். அவர் அவ்வாறே பலகையில் அமர்ந்து இசை பாடினார். சிவபெருமானுடைய சிறப்புக்களை யாழில் இசைத்துப் பாடினார்.
திரிபுரம் எரித்தவாறும் நேர்மிசை நின்றவாறும்
கரியினை யுரித்தவாறும் காமனைக் காய்ந்த வாறும்
அரியயற் கரிய வாறும் அடியவர்க் கெளியவாறும்
பிரிவினால் பாடக்கேட்டுப் பரமனார் அருளினாலே
அந்தரத் தெழுந்த ஓசை அன்பினிற் பாணர் பாடும்
சந்த யாழ் தரையிற் சீதத் தாக்கில் வீக் கழியும் என்று
சுந்தரப் பலகை முன் நீர் இடும் எனத் தொண்டர் இட்டார்
செந்தமிழ்ப் பாணனாரும் திருவருள் பெற்றுச் சேர்ந்தார்
(திருநீலகண்ட யாழ்ப்பாணர் புராணம் 5, 6)
சில நாட்கள் அங்குப் பக்திப் பாடல்களைப் பாடிக் கொண் டிருந்த பிறகு சோழ நாட்டுக்குத் திரும்பி வந்து திருவாரூரில் தங்கி அந்தக் கோயிலில் யாழ் இசைத்துப் பண்பாடிக் கொண்டிருந்தார். நீலகண்டனாருடைய இசையின் புகழும் பக்தியின் மேன்மையும் எங்கும் பரவின.
அந்தக் காலத்தில் சீகாழியில் ஞானசம்பந்தர் என்னும் சிவபக்தர் தோன்றிக் கோயில்கள் தோறும் சென்று பக்திப் பாடல்களாகிய திருப்பதிகங்களைப் பாடிக்கொண்டிருந்தார். அந்தச் செய்தியை நீல கண்டர் கேள்விப்பட்டார். ஞானசம்பந்தர் பாடும் இசைப் பாடல்களைத் தம்முடைய யாழில் பண் அமைத்து வாசிக்க வேண்டுமென்று கருதித் தம்முடைய மனைவியார் மாதங்கியாருடன் சீகாழிக்கு வந்தார். வந்து ஞானசம்பந்தத்தைக் கண்டு அவருக்குத் தம்முடைய கருத்தைத் தெரிவித்தார். ஞான சம்பந்தரும் இவருடைய இசையைப் பற்றி முன்னமே கேள்விப் பட்டிருந்தபடியால் இவரை வரவேற்றார். தோணியப்பர் திருக்கோயிலுக்கு அழைத்துக்கொண்டு போய் யாழ்இசைத்து இசை பாடுமாறு கூறினார். நீலகண்டர் யாழ் வாசிக்க மதங்கசூளாமணியார் பாட்டுப் பாடினார். அவ்விசைப் பாடலைக் கேட்டு எல்லோரும் மகிழ்ந்து புகழ்ந்தார்கள்.
தானா நிலைக் கோல்வடித்துத் படிமுறைமைத் தகுதியினால்
ஆன இசை ஆராய்வுற்று அங்கணர்தம் பாணியினை
மானமுறைப் பாடினியார் உடன்பாடி வாசிக்க
ஞானபோ னகர் மகிழ்ந்தார் நான்மறையோர் அதிசயித்தார்
யாழில் எழும் ஓசையுடன் இருவர்மிடற் றிசை ஒன்றி
வாழிதிருத் தோணியுளார் மருங்கணையும் மாட்சியினைத்
தாழும்இரு சிறைப்பறவை படிந்துதனி விசும்பிடை நின்று
ஏழிசை நூல் கந்தருவர் விஞ்சையரும் எடுத்திசைத்தார்
(திருஞானசம்பந்த நாயனார் புராணம் 135, 136)
அன்று முதல் திருஞான சம்பந்தரும் திருநீலகண்ட யாழ்ப் பாணரும் தமிழ்நாட்டுத் தலங்கள் தோறும் சென்று திருக்கோயில்களில் கடவுளை வணங்கி இசை பாடினார்கள். ஞான சம்பந்தர் பதிகங்களைப் பாட அந்தப் பாடல்களை யாழ்ப்பாணர் தம்முடைய யாழில் பண் அமைத்து வாசித்தார். இவ்விசைச் செல்வர்களின் இசையைக் கேட்டு மக்கள் மகிழ்ந்தார்கள். இவர்களுடைய புகழ் நாடெங்கும் பரவி இவர்களுடைய இசையைக் கேட்பதற்கு ஊர்கள் தோறும் மக்கள் திரள் திரளாகக் கூடினார்கள். திருஞான சம்பந்தரும் திருநீல கண்டரும் திருக் கோயில்கள் உள்ள ஊர்கள் தோறும் சென்று பண் பாடியும் யாழ் வாசித்தும் இசையமுதம் வழங்கினார்கள். பல ஊர்களுக்குச் சென்று பிறகு தருமபுரம் என்னும் ஊருக்கு வந்தார்கள். தருமபுரம் நீலகண்டரின் தாயார் பிறந்த ஊர். அவ்வூர் மக்கள் திரளாக வந்து இவர்களை வர வேற்றார்கள். அவ்வூர்ப் பாணர் குலத்து மக்களும் வந்து இவர்களை வர வேற்றார்கள். அவர்கள் நீலகண்டருடன் அளவளாவி மகிழ்ந்தார்கள்.
அப்போது, திருநீலகண்டர் அவர்களிடத்தில், "சம்பந்தப் பிள்ளையார் பாடும் திருப்பதிகப் பாட்டுகளை அடியேன் யாழில் இட்டுப் பண் இசைக்கும் பேறுபெற்றேன்" என்று கூறி மகிழ்ந்தார்.
இதைக்கேட்ட பாணர்கள், "பதிகங்களை யாழில் இசை யமைத்துப் பாடுக. அதனால் உலகத்தில் இசைக் கலை வளரட்டும்" என்று கூறினார்கள். நீலகண்டர், "யாழில் பண் அமைத்து இசை வாசிக்க முடியாத பாடல்களும் உள்ளன" என்று கூறி, அவ்வாறு பண் அமைத்துயாழ் வாசிக்க முடியாத பதிகத்தைப் பாடும்படி சம்பந்தப் பிள்ளை யாரைக் கேட்டுக்கொண்டார். அவ்வாறே ஞானசம்பந்தர் பதிகம் பாடினார்.
மாதர் மடப் பிடியும் மட அன்னமும் அன்னதோர்
நடையுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
பூதஇ னப்படைநின் றிசை பாடவும் ஆடுவர்
அவர் படர் சடைந் நெடு முடியதொர் புனலர்
வேதமோ டேழிசைபா டுவர் ஆழ்கடல் வேண்டிரை
யிரைந் நுரை கரை பொரு துவிம்மிநின் றயலே
தாதவிழ் புன்னைதயங் கும லர்ச்சிறை வண்டறை
யெழில் பொழில் குயில் பயில் தருமபுரம்பதியே
இது போன்று பதினொரு செய்யுட்களை ஞானசம்பந்தர் பாடினார். இதற்கு யாழ்முறிப்பதிகம் என்பது பெயர். இந்த இசையை யாழில் பண் அமைத்து இசைக்க முடியவில்லை யாகையால், நீலகண்டர், "இந்த இசையை யாழில் யமைக்க முடியாது, இந்த யாழ் இருந்து என்ன பயன்?" என்று கூறி அதைத் தரையில் அறைந்து உடைக்க முயன்றார். அப்போது ஞானசம்பந்தர் தடுத்து "இந்த இசையை யமைத்து வாசிக்க முடியாமற் போனாலென்ன? மற்ற இசைகளை அமைத்து வாசிக்கலாமல்லவா?" என்று கூறினார். நீலகண்டருக்கு அவர் கூறியது சரி என்று தெரிந்தது. பிறகு அந்த ஊரைவிட்டு வேறு ஊர்களுக்குச் சென்று பக்திப் பிரசாரஞ் செய்து இசை பாடினார்கள். இவ்வாறு சில ஆண்டுகள் கழிந்தன. திருநீலகண்ட யாழ்ப்பாணரும் திருஞான சம்பந்தரும் இசை வாசித்தும் பதிகம் பாடியும் பக்தி இயக்கத்தை நாட்டில் வளர்த்தார்கள்.
திருஞானசம்பந்தருக்குத் திருநல்லூர்ப் பெருமணம் என்னும் ஊரில் திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்துக்குப் பல பெரியவர்களும் அடியார்களும் வந்திருந்து சிறப்புச் செய்தார்கள்.
திருமணத்துக்குப் பிறகு மணப்பந்தலில் பேரொளி தோன்றிற்று. ஞானசம்பந்தர் அந்தச் ஜோதியில் புகும்படி எல்லோரையும் அனுப்பினார். அவர்களோடு நீலகண்டப் பெரும்பாணரையும் மதங்க சூளாமணியாரையும் அனுப்பினார். கடைசியில் ஞானசம்பந்தர் தம்முடைய மணப்பெண்ணுடன் ஜோதியில் புகுந்து மறைந்தார் என்று புராணம் கூறுகிறது. பக்தி இயக்க காலத்தில் இசைக்கலை மூலமாகப் பக்தியை வளர்த்தவர் களில் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் ஒருவர்.
No comments:
Post a Comment