Friday, August 11, 2017

Mayiladuthurai temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
கோவை.கு.கருப்பசாமி.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
      🌺 தல தொடர் 57. 🌺
🌺 சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர் 🌺
(நேரில் சென்று தரிசித்ததைப் போல....)
    🌺 மயிலாடுதுறை. 🌺
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

இறைவன்:
 மாயூரநாதர் சுவாமி, வள்ளலார், 
கௌரி மயூரநாதர், 
கௌரி தாண்டவரேசர்.

இறைவி: அபயாம்பிகை, அஞ்சல் நாயகி.

மூர்த்தி:விநாயகர், சுப்ரமணியர், மயிலம்மை, சப்த மாதாக்கள், நடராசர், அருணாசலேஸ்வரர், சுரதேவர்,  ஆலிங்கனசந்திரசேகரர், தெட்சிணா மூர்த்தி, பிரம்மன், பிச்சாடனார், கங்கா விசர்சனர், எண்திசைத் தெய்வங்கள் வழிபட்ட  லிங்கங்கள், நவக்கிரகங்கள், அறுபத்து மூவர்.

தீர்த்தம்:இடப தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், அகத்திய தீர்த்தம்.

தலவிருட்சம்:மாமரம், வன்னிமரம்.

சோழநாட்டின் காவிரித் தென்கரையில் அமையப்பெற்ற நூற்று இருபத்து எட்டுத் தலங்களுள், முப்பத்து ஒன்பதாவதாக இத்தலம் போற்றப் பெறுகின்றது.

இருப்பிடம்:கும்பகோணத்திலிருந்து நாற்பது கி.மீ வடகிழக்கு திசையில் அமைந்துள்ளது.

சென்னை, கடலூர், விழுப்புரம், தஞ்சை ஊர்களிலிருந்து பேருந்து வசதிகளும், இருப்புப்பாதையும் உள்ள தலம்.

பெயர்க்காரணம்:
அம்பாள் மயில் வடிவில் வழிபட்ட தலம். அம்மை மயில் வடிவம் கொண்டு ஆடிய தாண்டவம் கெளரி தாண்டவம் எனப்படும். 

இத்தலம் கெளரி மாயூரம் என்றும் பெயர் பெறும். மயில்கள் ஆடும் துறையாக விளங்கியதால் மயிலாடுதுறை எனப் பெயர் பெற்றது.

தலச்சிறப்பு:
காவிரிக் கரையில் உள்ள ஆறு சிவஸ்தலங்கள் காசிக்கு நிகராக கருதப்படுகின்றன.  அவை திருமயிலாடுதுறை,  திருவையாறு, திருவெண்காடு, திருவிடைமருதூர், திருவாஞ்சியம், திருசாய்க்காடு ஆகும்.

மயிலாடுதுறை, மாயவரம், மாயூரம்  என்று அழைக்கப்படும் இத்திருத்தலம் மிகவும் தொன்மையான சிவஸ்தலம் ஆகும்.  

கோவில் அமைப்பு:
இக்கோயில் எட்டேமுக்கால் ஏக்கர் நிலப்பரப்பளவில் அமையப்பெற்றுள்ளது.

மாயூரநாதர் அபயாம்பிகை திருக்கோவிலில்  நான்கு பக்கம் சுற்று மதில்களும், கிழக்கே பெரிய கோபுரத்தை முதலில் காணவும் சிவ சிவ என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொள்கிறோம்.

மற்ற மூன்று பக்கம் மொட்டை கோபுரங்களும் வீதி உட்பட ஐந்து பிரகாரங்களைக் கொண்டு பரந்து விரிந்திருக்கிறது.

கிழக்கில் அமைந்துள்ள ராஜகோபுரம் ஒன்பது நிலைகளையும், உட்கோபுரம் மூன்று நிலைகளையும் கொண்டுள்ளது.

இராஜகோபுரத்தினை முதலில் வணங்கியபின் வாயில்  வழியாக உள்ளே சென்றால்,  இடதுபுறம் திருக்குளத்தைக் காணவும் தலைக்கு குளத்து நீரை தெளித்து பிரார்த்தித்தோம்.

இதனின் வலதுபுறம் குமரக்கட்டளை அலுவலகம் உள்ளது.   கருவறை கோஷ்டத்தில் உள்ள நடராஜரின் திருவுருவைப் பார்த்து மெய் மறந்தோம்.

இவரின் பாதத்திற்கு அருகில், ஜுரதேவர் உள்ளார். இவருக்கு அருகில் ஆலிங்கன மூர்த்தியும் உள்ளார்.

துர்க்கையம்மனின் காலுக்கு கீழே மகிஷனும், அருகில் இருபுறமும் இரண்டு அசுரர்கள் உள்ளனர்.

இத்தலத்தில் சிவ சண்டிகேஸ்வர் மற்றும் தேஜஸ் சண்டிகேஸ்வரர் இருவரும் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். அவருக்குண்டான எப்போது போலுள்ள  பணிவான வணக்கத்தைச் செலுத்திக் கொண்டோம்.

பிரகாரத்தில் அஷ்டலட்சுமியும், அதற்கு மேலே சட்டைநாதரும் உள்ளனர்.  சிவலிங்கத்தை பூஜிக்கும் மகாவிஷ்ணு உள்ளார். இவர்களையும் வணங்கியபின் தொடர்ந்தோம்.

வணங்கித் தொடர்ந்து செல்கையில், நாதசர்மா, அனவித்யாம்பிகை தம்பதியருக்கு இறைவன் முக்தி கொடுத்ததின் காரணமாய்  அவர்களுக்கு அம்பாள் சந்நிதியின் தெற்கே தனி சன்னிதி உருவாக்கப்பட்டிருக்கிறது என கேள்விப்படவும், அவர்களையும் கண்டு வணங்கிச் சென்றோம்.

தம்பதியரை லிங்கத்தில் ஐக்கியமாக்கி முக்தி வழங்கிய இறைவன், "இத்தலத்தில் உள்ள  அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு முடிந்த பின்பு உங்களையும் வழிபட்டால் மட்டுமே என்னை வழிபட்ட பலன் கிடைக்கும்" என்ற வரத்தையும் சிவபெருமான் அத்தம்பதியருக்கு அருளியிருந்தான் என்பைத் தெரிந்து அவர்களை வணங்கிக் கொண்டோம்.

லிங்கத்தில் ஐக்கியமான பெண் அடியாரான அனவித்யாம்பிகையை கௌரவிக்கும்  விதத்தில் லிங்கத்தின் மீது புடவை சாத்தப்பட்டிருந்தது. குனிந்து சந்நிதிப் படியின் நடையைத் தொட்டு ஆராதித்துக் கொண்டோம்.

இத்திருக்கோவிலின் ஈசானதிசையில் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் எழுந்தருளி இருக்கிறார். உட்பிரகாரத்தில் இந்திர லிங்கம், அக்னி  லிங்கம், வாயு லிங்கம், யம லிங்கம், வருண லிங்கம், சகஸ்ர லிங்கம், பிர்ம லிங்கம், ஆகாச லிங்கம், மற்றும் சந்திரன்,  இந்திரன், சூரியன், ஸ்ரீ மகா விஷ்ணு பைரவ மூர்த்தி ஆகியவர்களால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கங்களையும் காணவும் நின்று நிதானித்து பொறுமையுடன்  வணங்கியே நகர்ந்தோம்.

சுவாமி சிவலிங்க திருமேனியுடன் விளங்கும் நாதசர்மா, ஸ்ரீ அனவித்யாம்பிகை என பதினாறு சிவலிங்கங்களை சுற்றி இருக்கும் வகையில் வள்ளல் ஸ்ரீ மாயூரநாதர் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருப்பது நம் கண்களுக்கு கண்கொள்ளா அருட்காட்சி. திரும்ப திரும்ப தலைசாய்த்து வணங்கினோம்.

இதற்கடுத்து அம்பாள் சன்னிதி தனியாக இருக்க தரிசிக்க உள் புகுந்தோம்.

(அம்பிகை மயில் வடிவில் ஈசனை வழிபட்ட இரண்டு தலங்கள் திருமயிலாப்பூர், திருமயிலாடுதுறை ஆகும்)

திருமயிலாடுதுறை மாயூரநாதர் அபயாம்பிகை திருக்கோவிலில் அம்பிகை மயில் வடிவிலும், இறைவன் சுயம்பு மூர்த்தியாகவும் அருள்பாலிக்கிறார்.

சிவாலயங்களில் கந்த சஷ்டியின் போது, முருகன் அம்பாளிடம்தான் வேல் வாங்குவது வழக்கம். ஆனால், இத்தலத்தில் சிவனிடம் வேல் வாங்குவது விசேஷமாக கருதப்படுறது.

அடுத்ததாக நடராஜர் தனி சன்னதியில் இருக்கும் இடம் வந்தோம்.  தினமும் மாலையில் நடராஜருக்குத்தான் முதல் பூஜை செய்யப்படுகிறதாம். ஆடலவல்லான் வரை வணங்கி வந்த நாம், சிறிது ஓய்விற்காக நடராஜப் பெருமானின் இடப்புறத்தில் கொஞ்சம் காலியிடமிருக்க அங்கு அமர்ந்தோம்.

பின் எழுந்து தரிசனத்தைத் தொடருகையில் நடராசருக்கு  நேரே கோவிலின் முதற்சுற்றுப் பிரகாரத்தில் தென்கிழக்கு திசையில் இருக்கும் மயிலம்மன் சன்னிதியில், அனைத்தும் மயில் வடிவில் காட்சியருள, நமக்கு முன் வணங்கி வந்தவர்களிடம் *ஏன்? எல்லா உருவமும் மயில் வடிவில் இருக்கின்றன என வினவினோம்.

அதற்கு அவர்கள், மயில் வடிவில் சிவபெருமானும் அம்பிகையும் காட்சி தருவதாகவும்,  பெண் மயிலான அம்பிகையின் இருபுறமும் இரண்டு சிறிய மயில்களாக இருப்பது சரஸ்வதி, திருமகளாக விளங்குகின்றன என்று சொன்னார்கள்.

மாயூரநாதர் சன்னிதிக்குத் தென்புறத்தில் கருவறையை ஒட்டி, குதம்பைச் சித்தர் ஜீவ சமாதி இருக்க அந்த சமாதியின் மீது சந்தன விநாயகர் எழுந்தருளி, சிறிய ஆலயமாக அமைத்திருப்பதைக் கண்டோம். 

விடுவோமா? விநாயகரையும் வணங்கிக் கொண்டோம், குதம்பைச் சித்தர் சமாதி முன்பு அமர்ந்து சிறிது தியானித்து விட்டு எழுந்து நடந்தோம்.

ஒன்பது நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி நூற்று ஐம்பத்தாறு அடி உயரத்தில் கட்டுவித்து அதன்கலசங்கள் வின்னுக்குள் புகுந்தனவோ எனமளவிற்கு, விண்ணை  முட்டும் வகையில் கம்பீரமாக கோபுரம் காட்சியளித்து. 

கோபுரத்தின் உள்மாடத்தில் அதிகாரநந்தி தன் துணைவியோடு திருமணக் கோலத்தில் காட்சி தருவது கண்களுக்குத் தெரிந்தது. அருகில் செல்ல ஏதுவா நிலை!... "அவர்தான் கோபுர உள்மாடத்திலே இருக்கிறார்.  கீழிருந்தே தரிசித்துக் கொண்டோம்.

இத்தலத்தின் தனிச்சிறப்பு ஐப்பசி மாதம் முழுவதும் நடைபெறும் துலா நீராடல் மற்றும் கார்த்திகை முதல்நாளின் முடவன் முழுக்கு ஆகும்.  இந்த நாட்களில் காவிரியில் மூழ்கி எழுந்தால், பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை.  

இக்கோயிலின் நடராஜ பெருமானுக்காக ஒவ்வொரு ஆண்டும் மாயூரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

பௌர்ணமி அன்று இத்திருக்கோவிலை பதினாறு முறை வலம் வந்தால் திருவண்ணாமலையை கிரிவலம் செய்த பயனை இங்கு அடையலாம் என்கிறார்கள் அங்குள்ளோர்.

மாயூரநாதர் அபயாம்பிகை திருக்கோவில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குரியது.

அன்னை பார்வதி மயில் வடிவில் வழிபட்ட திருத்தலம், இறைவன் ஆண் மயிலாகி கௌரிதாண்டவம் ஆடிய தலம், துலா நீராடல் மூலம் பாவம் நீக்கும் தலம், மற்றும் திருமால், திருமகள், பிரம்மா, இந்திரன், கலைமகள், சப்தமாதர்கள் வழிபட்ட ஆலயம்.

நந்திதேவர் தன் துணைவியோடு திருமணக்கோலத்தில் காட்சி தரும் அரிய தலம் என பல்வேறு சிறப்புகளை கொண்டது  மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோவில்.

தல அருமை:
மயிலாடுதுறையில் உள்ள "பெரிய கோவிலாக" ஸ்ரீ மாயூரநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. மாயூரத்தின்  கணவர் என்ற பொருளுடைய "மாயூரநாதசுவாமி" இக்கோவிலின் முதன்மை கடவுளாவார். 

இந்தக் கோயில் சுவர்களிலுள்ள மிகப் பழமையான பதிவுகளாக குலோத்துங்க சோழரின் பதிவுகள் உள்ளன.  அதன் ஆரம்ப கட்டுமானத்திற்கு பிறகு, சற்றே புனரமைக்கப்பட்ட நிலையில் இந்த கோயில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக நிமிர்ந்து விளங்குகிறது.

பார்வதியை மகளாகப் பெற்ற (தாட்சாயினி) தட்சன் வேள்விக்கு ஏற்பாடு செய்து இருந்தார்.  வேள்விக்கு சிவபெருமானை அழைக்கவில்லை, இதனால் கோபம் கொண்ட சிவன் பார்வதியை வேள்விக்குச் செல்ல வேண்டாம் என்று தடுத்தார்.  பார்வதி  மனம் கேளாமல் சிவபெருமான் கட்டளையையும் மீறி அழையாத விருந்தாளியாக தட்சனின் வேள்வியில் கலந்து கொண்டு அவமானப்பட்டாள்.

இதனால் சினமுற்ற சிவன் வீரபத்திர வடிவம் கொண்டு வேள்வியைச் சிதைத்தார். அப்போது வேள்வியில் பயன்படுத்தப்பட்ட  மயில் ஒன்று அம்பாளைச் சரணடைந்தது.  நாடி வந்த மயிலுக்கு அடைக்கலம் அளித்து காத்ததால் அபயாம்பிகை, "அபயப்பிரதாம் பிகை", அஞ்சல் நாயகி, அஞ்சலை என பலவாறு அழைக்கப்படுகின்றாள்.

சிவபெருமான் பார்வதியை மயிலாக மாறும்படி  சபித்து விடுகிறார்.  அம்பிகை மயில் உருவம் கொண்டு இத்தலத்தில் இறைவனை நோக்கித் தவம் செய்தாள்.

மனம் இளகிய ஈசன் மயில் வடிவிலேயே தோன்றி கௌரிதாண்டவ தரிசனமும் அம்பிகைக்கு அருள்கிறார். சிவனது கௌரி தாண்டவத்தை, "மயூரதாண்டவம்"என்றுகூறுகிறார்கள்.  சிவன் மயில் உருவில் வந்து அருள்புரிந்ததால், மாயூரநாதர் என்று அழைகப்படுகிறார்.

மாயூரநாதர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மயில் ரூபத்தில் அம்பிகை சிவனை வழிபட்டதால் மயிலாடுதுறை எனப் அழைக்கப்படுக்கிறது. சிவநிந்தனையுடன் செய்யப்பட்ட தட்சன் யாகத்தில் கலந்து கொண்ட தேவர்கள்  யாவரும் தண்டிக்கப்பட்டனர்.

அவர்கள் தாம் செய்த பாவம் நீங்க மயிலாடுதுறை வந்து மாயூரநாதரை வழிபட்டு அருள்  பெற்றனர். 

புண்ணிய நதிகளான கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகள், தங்களிடம் நீராடிய மக்களின் பாவக்கறைகள் முழுவதும் எங்கள் மீது படிந்து உள்ளதால், எங்களைப்  புனிதப்படுத்த வேண்டுமென சிவபெருமானிடம் வேண்டினர்.  

அதற்குச் சிவபெருமான், "மாயூரத்தில் ஓடும் காவிரியில் துலா மாதத்தில்  (ஐப்பசி மாதம்) ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நதியாக நீராடித் தங்கள் பாவச் சுமைகளை நீக்கிப் புனிதம் பெற்றுக் கொள்ளுங்கள்" என்று அருளினார்.  

அதன்படி ஐப்பசி மாதத்தில் கங்கை உள்ளிட்ட நதிகள் மயிலாடுதுறையில் உள்ள காவிரியில் நீராடி, தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு புனிதம் அடைந்தன.  

தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி, லக்ஷ்மி, கௌரி, சப்தமாதர்கள் ஆகியோர் மாயூரத்திலுள்ள காவிரிக்கரையில் நீராட வருகின்றனர்.  ஆகையால் துலா மாதத்தில் (ஐப்பசி மாதம்) மயிலாடுதுறையில் காவிரியில் நீராடுவது மிகவும் சிறப்புடையதாகும்.

கங்கைக்கே புனிதம் தரும் நதியாக காவிரி விளங்குவது சிறப்புக்குரிய ஒன்றாகும்.  ஐப்பசியில் முதல் நாளன்று முதல் முழுக்கு, அமாவாசையன்று அமாவாசை முழுக்கு, மாத நிறைவு நாளன்று கடைமுழுக்கு என மூன்று நாட்களிலும் காவிரி தென்கரையில்  மாயூரநாதர், மாயூரம் ஐயாறப்பன், காசி விஸ்வநாதர், படித்துறை விஸ்வநாதர், பஞ்சமூர்த்திகளுடனும், வட கரையில் வேதாரண்யேஸ்வரர் எனும் வள்ளலார், பஞ்சமூர்த்திகளுடனும் காவிரி துலாக்கட்டத்தில் காட்சித்தரும் சிறப்பு நிகழ்ச்சி  நடைபெறுவது சிறப்புக்குரியதாகும்.

துலா நீராடலில் முப்பது நாட்களும் மாயூரநாதர் காவிரிக்கு வந்து காட்சிதருவது சிறப்பம்சமாகும்.  துலா நீராடலைக்  கேள்விப்பட்டு, தன் பாவத்தினைப் போக்க முடவன் ஒருவன் மயிலாடுதுறைக்கு வந்தான்.

(ஐப்பசி மாதம் கடைசி நாளான கடைமுகம் அன்று நீராடுவது மிகச்சிறப்பு. இம்மாதத்தில் முதல் இருபத்து ஒன்பது நாட்களில் நீராட முடியாவிட்டால், கடைசி நாளான முப்பதாம் நாள் இக்காவிரியில் நீராடி மயூரநாதரையும் அன்னை அபயாம்பிகையையும் வழிபட்டால் மோட்சம் கிட்டும் என்பது நம்பிக்கை.)

தன் இயலாமையால் அவன் தாமதமாக  வந்து சேர்ந்தான்.  அதற்குள் ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை முதல் நாள் ஆகி விட்டிருந்தது.

முடவனான தன்னால் மீண்டும்  அடுத்த ஆண்டு வந்து மூழ்கிச் செல்வது இயலாது என இறைவனிடம் அவன் முறையிட்டதால், இறைவன் அவனுக்கு ஒரு நாள்  நீட்டிப்பு தந்தார். முடவனும் காவிரியில் மூழ்கி எழுந்தான்.  அவனது பாவமும் நீங்கியது.  இதுவே "முடவன் முழுக்கு" என அழைக்கப்படுகிறது.  செய்த தவறுக்கு மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுபவர்கள் இங்கு காவிரியில் நீராடி சிவபெருமானை  வழிப்பட்டு அருள் பெற்றுக் கொள்ளலாம்.

தல பெருமை:
மாயூரத்திற்குக் கிழக்கே விளநகரில் விளங்கும் இறைவன் துறைகாட்டும்வள்ளல்,

மேற்கே மூவலூரில் வழிகாட்டும் வள்ளல்,

தெற்கே பெருஞ்சேரியில் வாக்குக் காட்டும் வள்ளல், 

வடக்கே உத்திர மாயூரத்தில் கைகாட்டும் வள்ளல் என நாற்றிசைகளிலும் நான்கு வள்ளல்கள் விளங்கிட நடுநாயமாக மாயூரநாதர் விளங்கி வருகிறார்.

கங்கை இத்தலத்திற்கு வந்து நீராடிய சிறப்பினால் இத்தலம் காசிக்கு சமமாகும்.

காவிரித்துறையில் விஸ்வநாதரும், விசாலாட்சியும் கோவில் கொண்டுள்ளனர்.

ஐப்பசி மாதத்தில் இங்கு வந்து நீராடுவோர் புண்ணிய நதிகள் பலவற்றிலும் நீராடிய பலன்களைப் பெறுவர்.

இத்தலத்தில் ஐந்து விஸ்வநாதர் கோயில்கள் உள்ளன.

வள்ளலார் கோவிலில் காவிரியின் வடகரையில் மேதா தட்சிணாமூர்த்தி ரிடபதேவருக்கு உபதேசிக்கும் மூர்த்தியாக எழுந்தருளுகிறார்.

கடைமுகத் திருநாளன்று மாயூரத்தில் உள்ள எல்லாக் கோவில்களிலும் உள்ள மூர்த்திகள் திருவீதி உலவாக இடபத் தீர்த்தக் கட்டமாகிய துலா கட்டத்தில் எழுந்தருளி வந்து மாயூரநாதரோடு தீர்த்தம் கொடுத்தருளும் கடைமுகத் திருவிழா பெரும் சிறப்போடு நடைபெறுகிறது.

ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா?

வழிபட்டோர்:
அம்பாள், திருமால், திருமகள், பிரம்மா, இந்திரன், கலைமகள், சப்தமாதர்கள், கங்கை, யமுனை.

தேவாரம் பாடியோர்:  திருஞானசம்பந்தர் 1-ல்  ஒரு பதிகமும், 3-ல் ஒரு பதிகமும்,
*அப்பர்*5-ல் ஒரே ஒரு பதிகமும் ஆக மொத்தம் இத்தலத்திற்கு மூன்று பதிகங்கள்.

திருவிழாக்கள்:
ஐப்பசி பெருவிழாவில் மயிலம்மை வழிபாட்டு ஐதீகமும், வைகாசியில் சஷ்டி விழாவும் சிறப்புடன் நடைபெறுகிறது.

ஐப்பசி இறுதி நாளான கடைமுழக்கு, கார்த்திகை முதல் தேதி முடவன் முழக்கு விசேஷங்கள் கொண்டாடப்படுகின்றன.

பூஜை:
காமீக, ஆகம முறையில் ஆறு கால பூசை.

காலை 6.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, 
மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை,

வெள்ளிக்கிழமைகளில் இரவு 10.30 மணி வரை.

அஞ்சல் முகவரி: அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோயில்,
மயிலாடுதுறை அஞ்சல் – 609 001, மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்.

தொடர்புக்கு:
முருகானந்தம். 93451 49412
94422 36436,
04364--223779, 04364--222345,
04364--226436

          திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment