உ
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாற்றினார் அருள்வாய்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘
🌺 *சிவ தல தொடர்.69.* 🌺
🌸 *சிவ தல அருமைகள் பெருமைகள், தொடர்.* 🌸
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
🌺 *திருத்தருமபுரம்.* 🌺
(நேரில் சென்று தரிசித்ததைப் போல.......)
☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘
*இறைவர்:* தருமபுரீஸ்வரர், யாழ்முரிநாதர்.
*இறைவி* மதுரமின்னம்மை, தேனமிர்தவல்லி.
*தல விருட்சம்:* வாழை.
*தல தீர்த்தம்:* தரும தீர்த்தம், பிரம தீர்த்தம்.
*வழிபட்டோர்:* நான்முகன், மற்றும் சம்பந்தர்.
*பெயர்க்காரணம்:*
மார்க்கண்டேயரின் உயிரைப் பறித்த பிழை நீங்க எமன் (தருமன் - தருமராஜா) வழிபட்ட பதியாதலின் தருமபுரம் என்று பெயர் பெற்றது.
ஞானசம்பந்தரின் யாழ்முரிப் பதிகம் பெற்ற சிறப்புடைய தலம்.
இத்தலத்தில்தான் திருஞான சம்பந்தரின் இசை, திருநீலகண்ட யாழ்ப்பாணரின் யாழிசையில் அடங்காமையை இறைவன் வெளிப்படுத்தினார.
*இருப்பிடம்:*
திருநள்ளாற்றிலிருந்து காரைக்கால் செல்லும் பேருந்துச் சாலையில் இரண்டு கி.மீ. சென்று வலப்புறமாக பிரியும் (பெயர்ப் பலகை உள்ளது) பாதையில் சென்றால் இக்கோயிலை அடையலாம். கோயல் வரை வாகனங்களில் செல்ல முடியும்.
சோழநாட்டின் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள பாடல்பெற்ற 128 தலங்களுள் இத்தலம் ஐம்பத்தொன்றாவது தலமாகப் போற்றப் படுகிறது.
*கோவில் அமைப்பு:*
கோவில் கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் உள் நுழைகிறோம்.
முகப்பு வாயிலைக் கடந்து உள் செல்லும்போது, பலிபீடத்தை முதலில் காணப்பெற்றதும், அதன் முன்பாக வந்து நின்று நம் ஆணவமலத்தை பலியிட்டு விட்டு, இனியேனும் ஆணவத் தலைத் தூக்காதிருக்க நாங்களிருப்போமென்றும்,அதற்காக நீயும் அருளிடல் ஆகனும் என்றும் கூறிவிட்டு நகர்ந்தோம்.
அடுத்து நந்தியாரைக் கண்டோம். அவருக்குரிய வணங்குதலை வணங்கி விடைபெற்று நகர்ந்தோம்.
வலது புறமாக அம்பாள் சந்நிதி இருக்க உள் புக தொடர்ந்தோம்.
அங்கிருக்கும் மண்டபத் தூணிலே துவார விநாயகரையும், சுப்பிரமணியரையும் கண்டு வணங்கிக் கொண்டோம்.
அம்பாள், சந்நிதியில் நின்ற கோலத்தில் சதுர்புஜநாயகியாக அருளாட்சி புரிய பிரார்த்தனை செய்து அவளருளைப் பெற்று, வணங்கி வெளிவந்தோம்.
அடுத்ததாக சுவாமி சந்நிதிக்கு பிரவேசித்தோம். சுவாமி சந்நிதி முகப்பு வாயிலின் மேலே நம் கண்கள் பார்வையானது.
அங்கே, ரிஷபாரூடர் இருக்க, ஒருபுறத்தில் சம்பந்தர் பதிகம் பாடும் கோலத்திலும், யாழ்ப்பாணர் யாழ் இசைக்கும் கோலத்திலும், யாழ்ப்பாணரின் துணைவியார் அவர் பக்கமாக நிற்பது போலவும், இதற்க்கெல்லாம் எதிர்புறத்தில் சம்பந்தர், யாழுடன் பாணரும், அவர் மனைவி இவர்களுடன் நிற்பது போன்றவாறும் சுதைவடிவு வேலைப்பாடுகளுடன் அமைத்திருந்தார்கள். ஆனந்தமாக ரசித்தோம்.
பக்திப்பாங்கால் மெய்மறந்தபடியே நகர்ந்தோம்.
முகப்பு வாயிலைக் கடந்து நடக்கவும், இடப்புறமாய் கணபதியைக் கண்டு விட்டோம். விடுவோமா?அவசரகதி சுத்தியுடன் காதைத் திருகி வணங்கிக் கொண்டோம்.
அடுத்ததாக சுப்பிரமணியர், மகாலட்சுமி ஆகியோர்களின் சந்நிதிக்கு வந்து அவர்களையும் வணங்கிக் கொண்டோம்.
சுவாமி சந்நிதியில் கூட்டம் இருக்க, அங்கு ஓரமாய் இருந்த படியில் சிறிது அமர்ந்தோம். பக்தர்கள் வணங்கி நகரவும், திரும்ப சுவாமியைக் காணும் ஆவலுடன் ஆலயத் தடுப்பருகே வந்து, சுவாமி பெயருக்கு அர்ச்சனை எனச்சொல்லி, அர்ச்சகரிடம் அர்ச்சனை சீட்டைக் கொடுத்தோம்.
அர்ச்சகர் அர்ச்சித்து தீபாராதனையை சுவாமிக்கு ஏற்றி இறக்கி, நம்மிடம் கொண்டு வந்து தர, தீபாராதனையை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டோம்.
வலம்முடித்துப் படிகளேறிச் சென்றோம். அங்கே மூலவர் சந்நிதி யாழ்முரிநாதர் தரிசனத்தைக் கண்டோம்.
அவனருள்ப் பார்வையுடன் மனமுருகப் பிரார்த்தனை செய்து, விபூதிப் பிரசாதம் பெற்று, கோஷ்ட மூர்த்தங்களைத் தரிசிக்க வலம் வந்தோம்.
கோஷ்டத்திலிருக்கும் லிங்கோத்பவரை, பிரம்மா திருமால் ஆகிய இருவரும் வணங்கும் கோலருளைக் கண்டோம். நாங்களும் கைதொழுது கொண்டோம்.
அடுத்ததாக இருந்த நர்த்தண கணபதியாரையும், தட்சிணாமூர்த்தியை மும், சண்டேசுரரையும் வணங்கிக் கொண்டு ஆலயத் தொழுகை சிறப்பான மகிழ்வுடன் முடிந்ததை எண்ணி வெளி வந்தோம்.
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் தட்சிணாமூர்த்தி பின்புறம் சாய்ந்த நிலையில் காட்சியளிப்பது சிறப்பம்சம்.
*தல அருமை:* திருக்கடையூர் திருத்தலத்தில் தன்னை சரணடைந்த மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க வந்த எமதர்மனை, சிவபெருமான் சம்ஹாரம் செய்து, அவனது பதவியையும் பறித்தார்.
இதனால் பூமியில் பிறந்த உயிர்கள் அனைத்தும் இறப்பின்றி பல்கிப்பெருகின. பூமியின் பாரம் தாங்காத பூமாதேவி, எமதர்மனை மீண்டும் உயிர்ப்பிக்கும்படி, சிவபெருமானை வேண்டினாள்.
அதே சமயம், எமதர்மனும் தனது தவறை உணர்ந்து, தன்னை மன்னித்து அருளும்படி ஈசனை நெஞ்சாறத் தொழுது கொண்டிருந்தான்.
இந்த நிலையில் பூலோகம் சென்று தன்னை நோக்கி தவம் இருந்தால், அருள்செய்வதாக சிவபெருமான் அருளினார். இதையடுத்து எமதர்மன், சிவத்தல யாத்திரை மேற்கொண்டான்.
பின்னர் இந்த தலத்திற்கு வந்த எமன், இங்கு தீர்த்தம் ஒன்றை உருவாக்கி சிவபெருமானை பூஜித்து வழிபட்டான். இதையடுத்து எமதர்மனுக்கு காட்சி கொடுத்த சிவபெருமான், தகுந்த காலத்தில் பணி கிடைக்கப்பெறும் என்று கூறியதுடன் அவனை உயிர்பித்தருளினார்.
எமதர்மன், 'ஐயனே! எனக்கு அருள்செய்தது போல், இத்தலத்திற்கு வேண்டும் பக்தர்களுக்கும் அருள்செய்து சிறப்பிக்க வேண்டும்' என்று வேண்டினான். இதையடுத்து சிவபெருமான் அவ்விடத்தில் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கத் தொடங்கினார்.
*தல பெருமை:*
இந்த தருமபுரம் திருத் தலத்தில் உள்ள இறைவன் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக் கிறார்.
எருக்கத்தம்புலியூர் என்ற ஊரில் நீலகண்ட நாயனார் என்பவர் வசித்து வந்தார். இவர் சிவபெருமானின் மீது தீவிர பக்தி செலுத்துபவராக இருந்தார்.
திருஞானசம்பந்தரின் சிவ பணியை அறிந்த நீலகண்ட யாழ்பாண நாயனாரும், அவரது மனைவி மதங்கசூளாமணியும், திருஞானசம்பந்தருடன் இணைந்து சிவத் தல யாத்திரை மேற்க் கொண்டனர்.
திருஞானசம்பந்தர் பதிகம் பாட அதற்கேற்ப யாழ்ப்பாணர் இசையமைப்பார். சம்பந்தர் பாடும் அனைத்து பாடல்களுக்கும், யாழ் என்னும் இசைக்கருவியை இனிமையாக இசைக்கும் திறமைப் பெற்றிருந்தார் யாழ்ப்பாணர்.
*கர்வத்தால் துன்பம்*
திறமை சற்று அதிகமாக இருந்து விட்டால், அவர்களிடம் கர்வம் என்பது ஒருசிறிதாவது எட்டிப் பார்க்காமல் இருப்பதில்லை. அப்படி கர்வம் எட்டிப் பார்த்து விட்டால், அவர்கள் எவ்வளவு பெரிய பெருமைக்குரியவராக இருந்தாலும், தாழ்ச்சியடைந்தவராகவே கருதப்படுகிறார்கள். அப்படிப்பட்ட கர்வம்தான் யாழ்ப்பாண நாயனாருக்கும் வந்து சேர்ந்தது.
அவரது கர்வத்தை அடக்க சிவபெருமான் எண்ணம் கொண்டார்.
இந்த நிலையில் திருஞானசம்பந்தரும், யாழ்பாண நாயனாரும் திருத்தருமபுரம் திருத்தலத்திற்கு வந்தனர்.
வந்த இடத்தில் இறைவனை நோக்கி சம்பந்தர் பதிகம் பாடினார். அதற்கு இணையாக யாழ்ப்பாணர் யாழ் மீட்டத் தொடங்கினார். ஆனால் முன் எப்போதையும் விட இப்போது அவரால் யாழ் மீட்ட முடியவில்லை.
எவ்வளவு முயன்றும் பாடலுக்கு இணையாக இசையை வெளிக்கொணர இயலவில்லை. இதனால் மனம் கலங்கிப்போன யாழ்ப்பாணர் கலையில் தான் தோற்றுவிட்டதாக கருதி, யாழை முறித்து போட்டு விட்டு தன் உயிரை விட முயன்றார்.
*யாழ் மீட்டிய ஈசன்:*
அப்போது சிவபெருமான் அவருக்கு காட்சி கொடுத்தார். அதோடு நில்லாமல், தான் ஒரு யாழை எடுத்து சம்பந்தரின் பதிகத்திற்கு ஏற்றாற்போல், யாழ் மீட்டியதுடன் நடனமும் ஆடினார்.
தன் நிலை உணர்ந்த யாழ்ப்பாணர், கர்வம் நீங்கப்பெற்றார். யாழை இசைத்து, யாழ்ப்பாணரின் கர்வத்தை அடக்கியவர் என்பதால் இத்தலத்து சிவபெருமான், *'யாழ்முடிநாதர்'*என்னும் பெயர் பெற்றார்.
கருவறையில் லிங்க வடிவில் உள்ள இறைவன் எப்போதும் வெள்ளிக் கவசத்துடன் தரிசனம் தருகிறார்.
சிவபெருமான் யாழ் இசைத்தபோது, அம்பாள் தேனும் அமிர்தமும் கலந்தாற்போன்ற குரலில் இனிமையாக பாடி மகிழ்ந்தாளாம்.
அதன்காரணமாக அம்பாள் *'தேனாமிர்தவல்லி'* என்று பெயர் பெற்றாள். அம்பாள் தனது இடது கையை தொடையில் வைத்தபடி தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறாள்.
இனிமையான குரல் வளம் வேண்டுபவர்கள் இந்த அம்பாளுக்கு வஸ்திரங்கள் சாத்தி, பூஜைகள் செய்தும், இசை கற்பவர்கள் சிவன்பெருமான், தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு விசேஷ பூஜைகள் செய்தும் வழிபடுகிறார்கள்.
*ஆலய வழிபாடு:*
வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் சம்பந்தருக்கு, இந்த ஆலயத்தில் குருபூஜை நடக்கிறது. அன்றைய தினம் சிவபெருமான் வீதி உலா வந்து சம்பந்தருக்கு காட்சி தருகிறார்.
குரல் வளம் வேண்டுமென வேண்டுபவர்கள், இங்கிருக்கும் அம்மைக்கு வஸ்திரங்கள் சார்த்தி, பூஜைகளை மேற்க்கொண்டால் குரல் வளம் தெளிவு உண்டாகுமென்பது நம்பிக்கை.
இசை கற்க நினைப்பவர்கள், சிவன்-தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் செய்ய, இசை வளம் உண்டாகுமென்பது மற்றொரு நம்பிக்கையும் கூட.
இதனைத்தான் சம்பந்தர்....... *எழில் பொழில் குயில் பயில் தருமபுர பதியே!* என்று பாடியிருக்கிறார்.
சிவன் யாழ் இசைத்தபோது, சிவனது அம்சமான தட்சிணாமூர்த்தி இசையை விரும்பிக் கேட்டாராம்.
இசையில் மகிழ்ந்த தட்சிணாமூர்த்தி தன்னையுமறியாமல் வியப்பில் பின்புறமாகச் பார்த்தாராம்.
இதனை உணர்த்தும் விதமாகத்தான் இங்கேயிருக்கும் தட்சிணாமூர்த்தி பின்புறமாக சற்றே சாய்ந்தவாறு காட்சியருளிக் கொண்டிருக்கிறார்.
எமதர்மன் உருவாக்கிய தீர்த்தம், பிரகாரத்தில் உள்ளது, இனிப்பு சுவையுடன் இருக்கும் இந்த நீரை பருகினால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கையாகும்.
இந்த ஆலயத்தில் ஆயுள் விருத்தி ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி போன்ற பூஜைகள் செய்யப் படுகின்றன.
திருமண தோஷம், புத்திர தோஷம் உள்ளவர்கள், உத்திராட நட்சத்திர தினத்தில் துர்க்கைக்கு அபிஷேகங்கள் செய்து வழிபடுகிறார்கள்.
*தேவாரம் பாடியவர்கள்.:*
*திருஞானசம்பந்தர்:* 1-ல் ஒரே ஒரு பதிகம் மட்டுமே பாடியுள்ளார்.
🌸மாதர்ம டப்பிடியும் மட வன்னமு மன்னதோர்
நடையுடைம் மலைமக டுணையென மகிழ்வர்
பூதவி னப்படைநின் றிசைபாடவு மாடுவ
ரவர்படர் சடைந்நெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசைபா டுவ ராழ்கடல் வெண்டிரை
யிரைந் நுரை கரை பொரு துவிம்மிநின் றயலே
தாதவிழ் புன்னை தயங் கும லர்ச்சிறைவண்டறை
யெழில் பொழில் குயில் பயில்தருமபு ரம்பதியே.
🙏🏾விரும்பத்தக்க இளம்பிடியையும், இள அன்னத்தையும் போன்ற நடையினை உடையவளாகிய பார்வதி தேவியைத் தம் துணைவியாகக் கொண்டு மகிழ்பவரும், பூதப்படைகள் நின்று இசை பாட ஆடுபவரும், விரிந்த சடைகளையுடைய நீண்ட முடிமீது கங்கையை அணிந்தவரும் வேதங்களையும், ஏழிசைகளையும் பாடுபவரும் ஆகிய இறைவர்தம் இடமாக விளங்குவது ஆழ்ந்த கடலின் வெண்மையான அலைகள் ஆரவாரித்து நுரைகளோடு கரையைப் பொருது விளங்கவும், அதன் அயலில் புன்னை மரங்களில் பூத்த மகரந்தம் பொருந்திய மலர்களில் வண்டுகள் ஒலிக்கவும். அழகிய பொழில்களில் குயில்கள் பாடவும் விளங்கும் திருத்தருமபுரம் என்னும் நகராகும்.
🌸பொங்குந டைப்புகலில் விடை யாமவ ரூர்திவெண்
பொடி யணிதடங் கொண்மார் புபூணநூல் புரள
மங்குலி டைத்தவழும் மதி சூடுவ ராடுவர்
வளங் கிளர் புனலர வம்வைகிய சடையர்
சங்குக டற்றிரையா லுதை யுண்டுச ரிந்திரிந்
தொசிந் தசைந்திசைந் துசே ரும்வெண்மணற் குவைமேல்
தங்குக திர்ம்மணிநித் தில மெல்லிரு ளொல்கநின்
றிலங் கொளிந் நலங் கெழிற் றருமபு ரம்பதியே.
🙏🏾சினம் பொங்கிய நடையினை உடையதாய், உவமை சொல்லுதற்கு வேறொன்று இல்லாததாய் விளங்கும் விடையை ஊர்தியாகக் கொண்டவரும், திருநீறு அணிந்த அகன்ற மார்பின்கண் பூணூல் புரள வானத்தில் தவழும் பிறைமதியைச் சூடி ஆடுபவரும், வளமைகளைத் தருவதாகிய கங்கை, அரவம் ஆகியன தங்கிய சடையினருமாகிய சிவபிரானாரது இடம், கடல் அலைகளால் அலைக்கப் பெற்ற சங்குகள் சரிந்து இரிந்து, ஒசிந்து, அசைந்து, இசைந்து வெண்மணற் குவியலின் மேல் ஏறித் தங்கி ஈனும் ஒளி பொருந்திய முத்துமணிகளால் மெல்லிய இருள் விலகி ஒளி சிறந்து தோன்றும் அழகிய திருத்தருமபுரமாகிய நகரமாகும்.
🌸விண்ணுறு மால்வரைபோல் விடை யேறுவ ராறுசூ
டுவர் விரி சுரியொளி கொடோடுநின் றிலங்கக்
கண்ணுற நின்றொளிருங் கதிர் வெண்மதிக் கண்ணியர்
கழிந் தவ ரிழிந் திடும் முடைதலை கலனாப்
பெண்ணுற நின்றவர்தம் முரு வம்மயன் மாறொழவ்
வரி வையைப் பிணைந் திணைந் தணைந்ததும் பிரியார்
தண்ணிதழ் முல்லையொடெண் ணிதழ் மௌவன்ம ருங்கலர்
கருங் கழிந் நெருங் குநற் றருமபு ரம்பதியே.
🙏🏾வானளாவிய பெரிய மலை போன்ற விடையின் மேல் ஏறி வருபவரும், கங்கையை அணிந்தவரும், விரிந்து சுருண்டு ஒளிதரும் தோடு விளங்கக் கண்ணைக் கவரும் ஒளிதரும் பிறைமதியாகிய கண்ணியை முடியிற் சூடியவரும், முடை நாறும் தலையோட்டை உண்கலனாகக் கொண்டவரும், உமையம்மையைக் கூடிப் பிணைந்து இணைந்து அணைத்துத் தம் திருமேனியில் ஒரு பாதியாகக் கொண்டவரும், தமது உருவத்தை அயனும் மாலும் தொழ நின்றவருமாகிய சிவபிரானாரது இடம், குளிர்ந்த இதழ்களையுடைய முல்லை மலர்களோடு எட்டு இதழ்களையுடைய காட்டு மல்லிகை மலர்கள் மலர்ந்து மணம் வீசுவதும், கரிய உப்பங்கழிகள் நிறைந்ததுமாகிய திருத்தருமபுரம் என்னும் நன்னகராகும்.
🌸வாருறு மென்முலைநன் னுத லேழையொ டாடுவர்
வளங் கிளர் விளங் குதிங் கள்வைகிய சடையர்
காருற நின்றலரும் மலர்க் கொன்றையங் கண்ணியர்
கடுவ் விடை கொடி வெடி கொள்காடுறை பதியர்
பாருற விண்ணுலகம் பர வப்படு வோரவர்
படு தலைப் பலி கொளல் பரிபவந் நினையார்
தாருறு நல்லரவம் மலர் துன்னிய தாதுதிர்
தழை பொழின் மழைந் நுழை தருமபு ரம்பதியே
🙏🏾கச்சணிந்த மென்மையான தனங்களையுடைய உமையம்மையோடு கூடி நடனம் ஆடுபவரும், உலகிற்கு வளம் சேர்க்கும் நிலவொளியைத் தரும் மதி சூடிய சடையினரும், கார்காலத்தே மலரும் கொன்றை மாலையைச் சூடியவரும், விரைந்து செல்லும் விடையைக் கொடியாகக் கொண்டவரும், அச்சந்தரும் சுடுகாட்டைத் தமக்குரிய இடமாகக் கொண்டவரும், மண்ணுலகத்தினர், விண்ணுலகத்தினர்களால் போற்றப்படுபவரும், அவமானம் எனக் கருதாது அழிந்துபட்ட தலையோட்டில் பலிகொள்பவரும், பாம்பை மாலையாக அணிந்தவரும் ஆகிய சிவபிரானார் எழுந்தருளிய பதி. மகரந்தங்களை உதிர்க்கும் மலர்கள் நிறைந்த, தழைகள் செறிந்த, மேகங்கள் தவழும் பொழில்கள் சூழ்ந்த திருத்தருமபுரம் என்னும் நகரமாகும்.
🌸நேரும வர்க்குணரப் புகி லில்லைநெ டுஞ்சடைக்
கடும் புனல் படர்ந் திடம் படுவ்வதொர் நிலையர்
பேரும வர்க்கெனையா யிர முன்னைப்பி றப்பிறப்
பிலா தவ ருடற் றடர்த் தபெற்றியா ரறிவார்
ஆரம வர்க்கழல்வா யதொர் நாகம ழஃகுறவ்
வெழுஃகொழும் மலர் கொள்பொன் னிதழிநல் லலங்கல்
தாரம வர்க்கிமவான் மக ளூர்வது போர்விடை
கடிபடு செடி பொழிற் றருமபு ரம்பதியே.
🙏🏾ஆராயுமிடத்து அவருக்கு உவமையாகச் சொல்லத்தக்கவர் யாரும் இல்லை. கடிதாக வந்த கங்கைக்குத் தம் நீண்ட சடையை இடமாகக் கொடுத்த நிலையினர் அவர். அவருக்குப் பெயர்களோ பல ஆயிரம். முன்தொட்டு அவருக்குப் பிறப்பு இறப்பு இல்லை. தம்மை எதிர்த்தவர்களோடு சினந்து அவர்களைக் கொன்ற அவரது பெருவலியை யார் அறிவார்? தீயின் தன்மையுடைய நஞ்சினைக் கொண்ட நாகம் அவருக்கு ஆரம். செழுமையான பொன்போன்ற கொன்றை மலர், அவருக்கு மாலையாகும். இமவான் மகளாகிய பார்வதி அவருக்கு மனைவி. அவர் ஊர்ந்து செல்வது போர்ப் பயிற்சி உடைய இடபம். அவர் தங்கியுள்ள இடம் மணம் பொருந்திய ஒளிகளையுடைய பொழில்களால் சூழப்பட்ட தருமபுரம் என்னும் பதியாகும்.
🌸நேரும வர்க்குணரப் புகி லில்லைநெ டுஞ்சடைக்
கடும் புனல் படர்ந் திடம் படுவ்வதொர் நிலையர்
பேரும வர்க்கெனையா யிர முன்னைப்பி றப்பிறப்
பிலா தவ ருடற் றடர்த் தபெற்றியா ரறிவார்
ஆரம வர்க்கழல்வா யதொர் நாகம ழஃகுறவ்
வெழுஃகொழும் மலர் கொள்பொன் னிதழிநல் லலங்கல்
தாரம வர்க்கிமவான் மக ளூர்வது போர்விடை
கடிபடு செடி பொழிற் றருமபு ரம்பதியே.
🙏🏾மலர்மாலை சூடிய கூந்தலையும், தன் கணவரால் தழுவப்பெறும் மெல்லிய தனங்களையும், தேமல்களோடு கூடிய மேனியினையும், கொடி போன்ற இடையையும், பவளம் போன்ற வாயையும், மாவடு போன்ற ஒளி விளங்கும் கண்களையும் உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்ந்தவரும், வெற்றியைத் தரும் படைக்கலனாக மழுவாளைக் கொண்டவரும் விடையைக் கொடியாகக் கொண்டவரும் ஆகிய சிவபிரான் உறையும் பதி, யாழிசையையும் வெல்லுமாறு வண்டுகள் ஏழிசை முரன்று மெல்லிய சிறகுகளால் ஒலித்துச் சூழும் தேன்நிறைந்த நல்ல தாழை மரங்களும், புலிநகக் கொன்றையும் நிறைந்த கடற்கரைச் சோலைகளிலுள்ள சேற்று நிலங்களில் இசைபாடும் பறவையினங்கள் துயில்கொள்ளும் தலமாகிய தருமபுரமாகும்.
🌸தேமரு வார்குழலன் னந டைப்பெடை மான்விழித்
திருந் திழை பொருந் துமே னிசெங்கதிர் விரியத்
தூமரு செஞ்சடையிற் றுதை வெண்மதி துன்றுகொன்
றைதொல்புனல் சிரங் கரந் துரித்ததோ லுடையர்
காமரு தண்கழிநீ டிய கானல கண்டகங்
கடல் லடை கழி யிழி யமுண்டகத் தயலே
தாமரை சேர்குவளைப் படு கிற்கழு நீர்மலர்
வெறி கமழ் செறிவ் வயற் றருமபு ரம்பதியே.
🙏🏾இனிமையும், மணமும் பொருந்திய நீண்ட கூந்தல், அன்னம் போன்ற நடை, பெண்மான் போன்ற விழி இவற்றை உடையவளும் திருத்தம் பெற்ற அணிகலன்கள் பூண்டவளும் ஆகிய உமையம்மை ஒருபாலாகப் பொருந்திய மேனியனும், செவ்வொளி விரியும் தூய செஞ்சடையில் வெண்மையான பிறைமதி, நிறைந்த கொன்றை மலர், பழமையான கங்கை நீர், தலைமாலை ஆகியவற்றை மறைத்துச் சூடி, உரித்து உடுத்த தோல்களை உடையாகக் கொண்டவனும் ஆகிய இறைவனது பதி அழகிய குளிர்ந்த உப்பங்கழிகளை அடுத்துள்ள கடற்கரைச் சோலைகளில் தாழை மரங்களும், கடலினிடத்திருந்து பெருகிவரும் உப்பங்கழிகளிடத்து நீர்முள்ளிகளும், நீர் நிலைகளில் தாமரை, குவளை, செங்கழுநீர் ஆகியவற்றின் மலர்களும் மணம் வீசுவதும், வயல்கள் செறிந்ததுமாகிய தருமபுரமாகும்.
🌸தூவண நீறகலம் பொலி யவ்விரை புல்கமல்
குமென் மலர் வரை புரை திரள்புயம் மணிவர்
கோவண மும்முழையின் னத ளும்முடை யாடையர்
கொலைம் மலி படை யொர்சூ லமேந்திய குழகர்
பாவண மாவலறத் தலை பத்துடை யவ்வரக்
கனவ் வலி யொர்கவ் வைசெய் தருள்புரி தலைவர்
தாவண வேறுடையெம் மடி கட்கிடம் வன்றடங்
கடல் லிடுந் தடங் கரைத் தருமபு ரம்பதியே.
🙏🏾தூய வெண்ணிறம் பொருந்திய திருநீறு மார்பின் கண் விளங்க, மலை போலத் திரண்ட தோள்களில் மணம் நிறைந்து செறிந்த மென்மையான மலர்மாலையை அணிவர். கோவணத்தையும் மான் தோலையும் ஆடைகளாக உடையவர். கொல்லும் தொழிலில் வல்ல ஆயுதமாக ஓர் சூலத்தை ஏந்திய இளையர். பத்துத் தலைகளை உடைய அரக்கனாகிய இராவணன், பாடல்கள் பாடி அலறுமாறு அவனது வலிமையைச் செற்றுப் பின் அருள் புரிந்த தலைவர். தாவிச் செல்லும் இயல்புடைய ஆனேற்றைத் தம் ஊர்தியாகக் கொண்டவர். அவ்அடிகட்கு இடம், வலிய பெரிய கடலின் அலைகள் சேர்ந்த பெரிய மணற்கரையில் விளங்கும் தருமபுரம் என்னும் பதியாகும்.
🌸வார்மலி மென்முலைமா தொரு பாகம தாகுவர்
வளங் கிளர் மதி யர வம்வைகிய சடையர்
கூர்மலி சூலமும்வெண் மழு வும்மவர் வெல்படை
குனி சிலைதனிம் மலை யதேந்திய குழகர்
ஆர்மலி யாழிகொள்செல் வனு மல்லிகொ டாமரைம்
மிசை யவன் னடிம் முடி யளவுதா மறியார்
தார்மலி கொன்றையலங் கலு கந்தவர் தங்கிடந்
தடங் கடல் லிடுந் திரைத் தருமபு ரம்பதியே.
🙏🏾கச்சணிந்த மென்மையான தனங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவர். பிறைமதி, பாம்பு ஆகியவை தங்கும் சடையினர். கூரிய சூலமும், வெண்ணிறமான மழுவும் அவர் வெற்றி கொள்ளுதற்குரிய படைக்கலங்களாகும். ஒப்பற்ற மேரு மலையை வளைத்து வில்லாக ஏந்திய இளைஞர். ஆரக்கால் பொருந்திய சக்கராயுதத்தைக் கொண்ட திருமாலும், அகஇதழ்களை உடைய தாமரை மலரில் உறையும் பிரமனும் தம்முடைய அடிமுடிகளின் அளவுகளைத் தாம் அறியாவாறு அயரும்படி செய்தவர் அவர். கொத்தாகப் பூக்கும் கொன்றை மலரால் தொடுத்த மாலையை விரும்புபவர். அப்பெருமானார் தங்கியுள்ள இடம், பெரிய கடலின் அலைகள் வந்து தழுவிச் செல்லும் தருமபுரம் என்னும் பதியாகும்.
🌸புத்தர்க டத்துவர்மொய்த் துறி புல்கிய கையர்பொய்ம்
மொழிந் தழி வில்பெற் றியுற் றநற்றவர் புலவோர்
பத்தர்க ளத்தவமெய்ப் பயனாக வுகந்தவர்
நிகழ்ந் தவர் சிவந் தவர் சுடலைப்பொடி யணிவர்
முத்தன வெண்ணகையொண் மலை மாதுமை பொன்னணி
புணர்ம் முலை யிணை துணை யணைவதும் பிரியார்
தத்தரு வித்திரளுந் திய மால்கட லோதம்வந்
தடர்ந் திடுந் தடம்பொழிற் றருமபு ரம்பதியே.
🙏🏾புத்தர்களாகிய தத்துவாதிகளும், உறிகளை ஏந்திய கையினராய்த் திரியும் சமணர்களும் கூறும் பொய் மொழிகளினின்று நீங்கிய நல்ல தவத்தை உடையவர்களும், புலவர்கள் பக்தர்கள் ஆகியோரின் தவத்தை மெய்ப் பயனாக உகந்தவரும், அன்புக்கு நெகிழ்பவரும், வன்புக்குச் சினப்பவரும் சுடலைப் பொடி அணிபவரும், முத்துப் போன்ற வெண்மையான பற்களை உடைய ஒளி பொருந்திய மலை மாதாகிய பார்வதி தேவியாரின் ஒன்றோடு ஒன்று செறிந்த தனங்கள் இரண்டையும் துணையாகக் கொண்டு அவற்றைப் பிரியாதவரும் ஆகிய சிவபிரானாரது பதி, தவழும் அலைகளை உடைய பெரிய கடலின் ஓதநீர் வந்து பொருந்தும் தருமபுரம் ஆகும்.
🌸பொன்னெடு நன்மணிமா ளிகை சூழ்விழ வம்மலீ
பொரூஉம் புன றிரூஉவமர் புகல்லியென் றுலகில்
தன்னொடு நேர்பிறவில் பதி ஞானசம் பந்தனஃ
துசெந் தமிழ்த் தடங் கடற் றருமபுரம் பதியைப்
பின்னெடு வார்சடையிற் பிறை யும்மர வும்முடை
யவன் பிணை துணை கழல் கள்பேணுத லுரியார்
இன்னொடு நன்னுலகெய் துவ ரெய்திய போகமும்
முறு வர்கள் ளிடர் பிணி துயரணைவ் விலரே.
🙏🏾பொன்னால் இயன்ற நெடிய நல்ல மணிகள் இழைத்த மாளிகைகள் சூழ்ந்ததும், திருவிழாக்கள் மலிந்ததும், கரைகளை மோதும் நிறைந்த நீர்வளம் உடையதும், திருமகள் உறைவதுமான புகலி என்னும், தனக்கு உவமை சொல்ல இயலாத பதியின் மன்னனாகிய ஞானசம்பந்தனுடைய பரந்து விரிந்து கடல் போன்ற செந்தமிழாகிய பாமாலைகளால், ஒன்றோடு ஒன்று பின்னி நீண்டுள்ள சடைமுடியில் பிறையையும் பாம்பையும் அணிந்துள்ளவனாகிய சிவபிரானுடைய பிணைந்துள்ள இரண்டு திருவடிகளையும் போற்றி அன்பு செய்பவர், இனிய பெரிய நல்லுலகை எய்துவர், அடையத் தக்கனவாய போகங்களையும் பெறுவர். இடர் செய்யும் பிணி துயர் முதலியன நீங்கி என்றும் இன்பம் உறுவர்.
*திருவிழாக்கள்:*
வைகாசி மூலநட்சத்திரத்தில் சம்பந்தருக்குக் குரு பூஜை நடக்கிறது.
அன்று ஈசன் வீதியுலா வந்து சம்பந்தருக்குக் காட்சி தருகிறார்.
சிவராத்திரி மற்றும் கார்த்திகை சிறப்பாக நடைபெறுகிறது.
*பூஜை:*
மகுடாகம முறையில் நான்கு கால பூஜை.
காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை,
மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.
*அஞ்சல் முகவரி:*
அ/மி, யாழ்முரிநாதர் தேவஸ்தானம். தருமபுரம். (வழி) காரைக்கால் மற்றும் அஞ்சல். புதுவை மாநிலம்.609 602.
*தொடர்புக்கு:*
தருமையாதீனக் கோவில்.
தருமபுரம். 04364--223207
முத்துக் குருக்கள். 04368--226616..99407 55484
*நாளைய தலம்.....திருநள்ளாறு.*
திருத்தருமபுரத்தில் பிறையையும் பாம்பையும் சடையில் வைத்து அணிந்து எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானார் திருவடிகளைச் சென்று வணங்குவோர்க்கு சுவர்க்கம் சத்தியம்.
மேலும் இவ்வுலக வாழ்வில் வாழும்போது, துன்பமும் நோயும் அணுகாது.
இது திருஞானசம்பந்தர் திருவாக்கு ஆகும். ஆகையால், யாழ்மூரிநாதர் திருக்கோயிலான இவ்வாலயம் சென்று ஈசனையும், அன்னையையும் வழிபட்டு நல்வாழ்வு பெறுவீர்களாக!
திருச்சிற்றம்பலம்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment