ஓம் சிவஓம்
வேதபுரீஸ்வரர் திருக்கோயில், தேரழுந்தூர், நாகப்பட்டினம் மாவட்டம்
வானே மலையே என் மன் உயிரே
தானே தொழுவார் தொழுதாள் மணியே
ஆனே சிவனே அழுந்தையவர் எம்
மானே என மாமடம் மன்னினையே.
-திருஞானசம்பந்தர்
கவிச்சக்ரவர்த்தி என்று புகழப்படும் கம்பன் பிறந்த ஊரான தேரழுந்தூர் ஒரு பாடல் பெற்ற தலமாகும். திருவழுந்தூர் என்றும் வழங்கப்படும் இப் புண்ணிய ஷேத்திரம் சிவபெருமானின் 274 திருத்தலங்களில், காவிரி தென்கரையில் அமைந்துள்ள திருத்தலங்களில் முப்பத்து எட்டாவது இடம் பெற்றதாகும்.
மயிலாடுதுறையிலிருந்து சுமார் 11 கிமீ தொலைவில் கும்பகோண மார்க்கத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்து பேருந்து வசதி உண்டு. இத்தலத்தின் மிக அருகிலேயே, வைணவ திவ்யதேசமான ஆமருவியப்பன் திருக்கோயிலும் அமைந்துள்ளது
தலபுராணம்
ஊர்த்துவன் என்ற மன்னன் தான் பிரம்மாவிடம் இருந்து பெற்ற வானூர்தியில் செல்லுங்கால், இவ்வூரில் அகத்திய முனிவர் யாகம் செய்வதை அறியாது மேலே செல்ல முற்படுகையில், வானரதமானது மேற்செல்லாது நிலத்தில் அழுந்தி விட்ட காரணத்தால், இவ்வூர் தேர் அழுந்தூர் எனப்படலாயிற்று என்பர்.
மாப்பிள்ளையும், மைத்துனனுமான ஆலவாயனும் அனந்தனும் சொக்கட்டான் ஆடுகையில், எண்ணிக்கையில் ஐயம் எழவே எம்பெருமான் தன் சக்தியான உமையவளை வினவ, அவள் தன் சகோதரனுக்குச் சாதகமான பதிலைச் சொல்ல, சினமுற்ற சிவபெருமான் அவளை பூலோகத்தில் பசுவாகப் பிறக்கும்படி கூறியதாகவும், அவ்வாறு மலைமகள் கோவடிவெடுத்து இத்திருத்தலத்தில் தவமிருந்து மீண்டும் கங்காதரனை அடைந்தாள் என்பதும் தல புராணம்.
தன்னால்தானே தன் சகோதரி பசுவாகப் பிறக்கும் சாபம் பெற்றாள் என வருந்தி பெருமாள் மாடு மேய்ப்பவனாக அவதரித்தானாம் இவ்வூரிலேயே. இதன் மிக அருகில் அமைந்துள்ள வைணவ திவ்யதேசத்தில் அவன் ஆமருவியப்பனாக அருள் பாலிக்கிறான்.
மூலவரின் பெயர் வேதபுரீஸ்வரர் என்பதாகும். இல்லாளைப் பிரிந்த ஈசன் இத்தல விருட்சத்தின் அடியில் அமர்ந்து வேதம் ஓதிய காரணத்தால், இப்பெயர் பெற்றான் எனக் கூறுவர்.
பசுவாக மாறிய பார்வதியன்னை பல தலங்களுக்கும் சென்று வழிபட்டு கடைசியில் இங்கு வந்து நாதனைக் கும்பிட்டு நல்லுருவம் அடைந்தாள் என்பதால் சௌந்தர்ய நாயகி எனப் பெயருற்றாள்.
எதிரும் புதிருமாக சிவன் பெருமாள் கோயில்கள் அமைந்துள்ள இவ்வூருக்கு திருஞான சம்பந்தர் வந்தபோது அவருக்கு சிவன் கோயிலைச் சுட்டிக் காட்டியதால், இக்கோயிலின் விநாயகர் ஞானசம்பந்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
தலச்சிறப்பு
உமையவள் பசுவாக அலைந்து திரிந்து இத்தலமேகி இங்கு மீண்டும் அழகு பெற்றாள் என்னும் காரணத்தால், இத்திருத்தலம் எக்காரணத்தினாலேனும் அழகை இழந்தோர் மீண்டும் அதைப் பெற இங்கு வந்து சௌந்தர்ய நாயகியை வணங்கினால் பலன் உண்டு என்று கூறுகின்றனர்.
காவிரிக்கும், அகத்தியருக்கும் சாப விமோசனம் கிடைத்த தலமும் இதுவேயாகும்.
அப்பன் அம்மையைப் பிரிந்திருந்த காலத்தே அவரைத் தரிசிக்க வந்த இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமை நந்தி அனுமதிக்கவில்லையாதலால், அவர்கள் ஊரைச்சுற்றி சிவலிங்கம் அமைத்து வழிபட்டனராம். அவ்வாறு அஷ்டதிக்பாலர்களால் நிறுவப்பட்ட அஷ்டலிங்கங்கள் இன்றும் உள்ளன.
கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் கசப்பு, மனஸ்தாபம் ஆகியவற்றைப் போக்கும் தலமாகும் இது.
ஜாதகத்தில் எந்தவொரு தோஷத்தினாலும் திருமணம் தாமதமானால் கலக்கமுறுவோர் இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்ளலாம். இது திருமணத் தடைகளைப் போக்கும் திருத்தலமுமாகும்.
தலப்பண்
சொக்கட்டான் ஆட்டத்தில் சோர்ந்துநிற்கும் காயெனவே
சொக்காநீ என்வாழ்வைச் சோழியுருட் டாடினையோ
எக்காலமும் உனையன்றி எனக்கென்றே யாருமில்லை
நக்கீரன் தனைக்காத்த நல்லசிவா என்னையும்காண்.
ஓம் நமச்சிவாய போற்றி ஓம் சிவஓம்
No comments:
Post a Comment