Sunday, November 13, 2016

Thirunaaraiyur temple

தேவதத்தன், நாரை சாபம் பெற்றதும், நீங்கியதும். 🍀
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
தேவலோகத்தைச் சார்ந்த தேவதத்தன், வான் வழியாகச் சென்று கொண்டிருந்தான். பயணத்தில் கீழ் நோக்கி பார்த்த போது அழகான மரமொன்றில், அழகிய பழம் ஒன்று அவனை ஈர்த்தது.

அந்தப் பழத்தை எடுத்து சுவைத்திட ஆர்வம் கொண்டு கீழே இறங்கினான். பழத்தைப் பறித்தவன் மீண்டும் வான் வெளிக்கு உயர்ந்து பயணத்திக் கொண்டே கனியை சுவைத்தான். அந்தப் பழத்தின் சுவைகள் அவனை மெய்மறந்திருக்கச் செய்தன.,

பழத்தை முழுவதும் சாப்பிட்டவன் மீதமான கொட்டையை பறந்து கொண்டிருக்கும்போதே வீசியெறிந்தான். 

வானிலிருந்து பூமியை நோக்கி கீழே வந்த பழக்கொட்டை, ஒரு மரத்தின் கீழ் தவம் மேற்கொண்டிருந்த துர்வாச முனிவரின் மேல் வந்து விழுந்தது. 

தியானத்தில் இருந்த துர்வாச முனிவர், தன் மீது ஏதோவென பொருள் பட்டென விழுவதை உணர்ந்து, கண் திறந்து பார்த்தார். பழக் கொட்டை அவர் மடிமீது விழுந்து கிடந்தது.

தன் தவத்தை கலைத்த பழக்கொட்டையைப் பாா்த்தார். இது எப்படி? என் மீது வந்து விழுந்தது. இதுவாக என் மீது எப்படி வந்து விழும். இதை அறிய ஞான திருஷ்டியால் அறிய முனைந்தார். 

அப்போது வான்வழியாக செல்லும் தேவதத்தன் பழத்தை உண்டு விட்டு கொட்டையை கீழே வீசிய காட்சி, வந்து மறைந்து போனது.

ஞானதிருஷ்டி கொண்டு தொிந்து கொண்ட துர்வாச முனிவர் மிகவும் கோபப்பட்டவராய்........

'ஏ"....வான் வழியே செல்லும் தேவதத்தனே!"... உடனே கீழே இறங்கி என் முன்னே வா!" என உரக்கக் கத்தினார்.

தேவதத்தனும், தன்னை அழைப்பது யார்?" எதற்காக அவர்கள் என்னை அழைக்க வேண்டும்?" துரிதகதியில் வானிலிருந்து கீழிறிங்கி பூமிக்குத் திரும்பினான்.

அங்கே கடுமையான சினத்துடன் நின்றிருந்த துர்வாச முனிவரைப் பார்த்து, வான் வழியாக சென்று கொண்டிருந்த என்னை சத்தமிட்டு அழைத்த நீங்கள் யார்?" எதற்காக என்னை அழைத்தீர்கள் என்று தேவதத்தன் கேட்டான்.

பழம் தின்று கொட்டையை வீசி என் தவத்தை கலைத்தது மட்டுமல்லாமல், தவத்தில் பெயர் பெற்று விளங்கிய என்னைப் பார்த்து யாரென்று கேட்ட தேவதத்தன் மீது துர்வாசருக்கு கோபம் கூடுதலானது.

"மூடனே!" என்னுடைய தவத்தை கலைத்தும் விட்டு, என்னையே யாரென்று கேட்டு அவமதிக்கிறாயா? என்றார் துர்வாசர்.

முனிவரின் கோபத்தைக் கண்டு பயந்த தேவதத்தன், ....முனிவரே!"........நீங்கள் யாரென்று உண்மையிலே எனக்குத் தெரியாது. நானாக உங்கள் தவத்தைக் கலைக்க வேண்டுமமென்று எதுவும் செய்யவில்லை என்றான்.

நாரைதான் பழத்தைச் சப்பிவிட்டு கொட்டையை கண்ட இடத்தில் உமுழும். அந்த நாரை போலவே நீயும் பழத்தை உண்டுவிட்டு கொட்டையை என் மீது எறிந்து  என் தவத்தைக் கலைத்து விட்டாய்!" தேவலோகத்தைச் சார்ந்தவனாக இருந்தும் நாரையைப் போல் நடந்து கொண்டாயே!" எனவே 'நீ'... நாரையாகவே உருமாறிப் போக கடவாய்!" என்று சாபம் கொடுத்து விட்டார் துர்வாச முனிவர்.

முனிவர் சாபம் கொடுத்ததைக் கேட்டு கவலை கொண்டான் தேவதத்தன். முனிவரை நோக்கி...உண்ட பழத்தின் கொட்டையை நான் சாதாரணமாகத்தான் வீசினேன். மேலும் நீங்கள் தவமியற்றியதும் தொியாது!; தவத்தையும் கலைக்க வேண்டுமென்பதும் என் எண்ணமில்லை!; ஆக அறியாம செய்த தவறினால், தங்கள் மனம் துண்பப்படுமாயின், என்னை மன்னித்து,,,தாங்கள் கொடுத்த சாபத்திலிருந்து விடுவித்துக் கொள்ளும் வழியையும் காட்டியருள வேண்டும் என்று மனமுருக முனிவரிடம் மன்றாடினான் தேவதத்தன்.

தேவதத்தனின் பனிவும் வேண்டுதலையும் பார்த்த முனிவர்,.........
 'தேவதத்தா!.....இந்த உலகில் உணக்குப் பிடித்த சிவலிங்கம் ஒன்றை கண்டுபிடித்து, அந்த லிங்கத்திற்கு கங்கை நீரெடுத்து வந்து அபிஷேகம் செய்ய உனக்கு நான் கொடுத்த சாபம் நீங்கப் பெறும் என்றார்.

சாபம் கொடுத்தவரிடம் சாப விமோசனத்திற்கான வழியையும் பெற்றுக் கொண்ட தேவதத்தன், இருகரம் கூப்பி முனிவரை வணங்கிக் கொள்ள,,, மறுகனம் நாரை உருவம் உருப்பெற்றான். வானில் பறந்து மிதந்து செல்லலானான்.

வானில் பயணித்துக் கொண்டே சென்ற நாரை உருவிலிருந்த தேவதத்தன், தனக்குப் பிடித்தமான சிவலிங்கத்தைத்  பறந்து தேடினான். அப்படி அவன் கண்ணுக்குப் பட்ட சிவலிங்களிலெல்லாம் பக்தர்கள் கூட்டம் இருக்கவே, தனித்திருக்கும் சிவலிங்கத்தைத் தேடி மேலும் மேலும் பறந்து தேடினான்.

பல மாதங்களுக்கும் மேலாக தேடித் திரிந்த நாரை,  ஒரு நாள் அடர்ந்த, வனப்பகுதியினுடே செல்லுகையில் நாரையின் கண்களுக்கு அந்த வனப்பகுதியின் புதரினுள்ளே  சிவலிங்கமொன்று தனித்துக் காணப்பட்டது தெரிந்தது.

தனது சாப விமோசனத்திற்கு ஏற்ற லிங்கம் இதுவே எனவும், பக்தர்கள் வழிபாடு இல்லாத லிங்கமாக இருப்பதாலும், இந்த லிங்கத்திற்கே வழிபாடு செய்து வர உசிதமானது என எண்ணியது நாரை.

லிங்கத்தைச் சூழ்ந்திருந்த புற்களையும் செடி கொடிகளையும் தன் அலகால் செமப் படுத்தியது. பிறகு முனிவர் சொன்னபடி கங்கை நீரை எடுத்து வர வடக்கு நோக்கி பயணித்தது. கொஞ்சம் கொஞ்சமாக கங்கை நீரை தன் வாயால் பருகி எடுத்டு வந்து சிவலிங்கத்தின் அருகே இருந்த கல்பள்ளக்குழியில் நீரை பெருக்கி வைத்து வந்தது. இப்படி பல நாட்களாய், பல முறைகள் பறந்து சென்று நீரை சேகரித்தது. 

இன்னும் கொஞ்சம்  கங்கைநீா் கொண்டு வந்தால் போதும், கல்பள்ளக்குழி நிரம்பிவிடும். அபிஷேகம் செய்து விடலாம் என முடிவெடுத்து படு வேகத்துடன் பறந்து சென்றது. 

கடைசி முறையாக  கங்கை நீரை கொண்டு வந்த போது, வானில் இடி, மின்னல், பலத்த சூறாவளிக் காற்று, பலத்த மழை. இவைகளையெல்லாம் எதிர்த்து போராடி வர அதனால் முடியவில்லை. சிறிகை விரிக்க இயலவில்லை -மழை வெள்ளத்தால். பறக்க இயலவில்லை -சிறகுகள் உடலோடு ஒட்டிப் போய்விட்டிருந்ததால். முயற்சித்து சிறகை மறுபடியும் மறுபடியும் எழுப்ப, இறக்கை பிய்ந்து விழுந்தது நிலத்தில் அதுவும் பறக்க முடியாமல் பொத்தென நிலத்தில் விழுந்தன. அப்போது நாரையின் வாயிலிருந்து சிலமணி கங்கை நீர்த் துளிகள் நிலத்தில் சிதறி விழுந்தன.

உடலியலில் முடியாமை போயின் அது விடவில்லை. நாரை  விடாமுயற்சி செய்தது. இறக்கையை இழந்த பின்னும் கடைசியாக கொண்டு வந்த கங்கை நீருடன் நடந்தே சிவலிங்க இருப்பிடம் நோக்கி வந்தது. 

கல்பள்ளக்குழியில் நீர் நிரம்பவும்,  தன் அலகால் நீரை எடுதிது எடுத்து சிவலிங்கத்தின் மீது உமிழ்ந்து கழுவி அபிஷேகித்தது. அருகில் முளைந்திருந்த மலர்கை பிடுங்கி வந்து லிங்கத்தின் சிரசில் வைத்து வணங்கியது. நெடுநேரமும் லிங்கத்தின் முன் அமர்ந்து விமாசனம் கிடைக்க மனமுருக வேண்டிக் கொண்டது.

சிறகொடிந்த போதிலும், தன்னம்பிக்கையை விடாது முயற்சித்த நாரையின் பக்தியினைக் கண்டு ஈசன் மகிழ்ந்தார். நாரைக்கு முன்பாகத் தோன்றி காட்சியளித்தார்.  சாப விமோசனம் நீங்க அருள்பாலித்தார். நாரையாக இருந்த தேவதத்தன் உருமாறி தேவதத்தனாகவே மாறினான். இருகரம் தலைக்கு மேல் தூக்கி வணங்கினான். பிறகு ஈசனிடம்.....

'இறைவா!" எனக்கு சாப விமோசனம் அளித்தது போல், இந்த இடத்திலேயே கோயில் கொள்ள வேண்டும். இங்கும் பக்தர்கள் நாடி வர வேண்டும். அப்பக்தர்கள் தெரியாமல் செய்யும் தவறுகளுக்கு, இவ்விடம் வந்து வேண்டிப் போற்ற, அவர்களை மன்னித்து நற்பலன் கிடைக்க இவ்விடத்திலிருந்து அருள் செய்விக்க வேண்டும் என வேண்டினான். 

ஈசனும், அவ்வாறே அருளுவோமென கூற, மகிழ்ச்சியடைந்த தேவதத்தன், மீண்டும் ஈசனை வணங்கிப் பணிந்துப் பின் தேவலோகம் சென்றான். 

நமக்கே தெரியாது சில தவறுகளைச் செய்வோம். அதற்கு தண்டனை உண்டு என்றாலும், இறைவனிடம் மனமுருக (அவன் உருக வேண்ட) வேண்டிட தண்டனைகளை அவன்  அழித்தொலிப்பான். 

நாரை உருவிலிருந்த தேவதத்தன், கங்கையிலிருந்து நீா் கொண்டு வரும் வழியில், திடீரென்று புயல்,  காற்று, மழை  சீற்றத்தில் நாரையின் சிறகுகள் முறிந்து விழந்தன. நாரையின் சிறகுகள் இழந்து விழுந்த இடம்தான்  "சிறகிழந்த நல்லூர்" என அழைக்கப்படும் ஊராகும்.

திருநாரை எனும் ஊரிலிருந்து ஒரு கிலோ மீ. தூரத்தில் இருக்கிறது சிறகிழந்த நல்லூர்

இங்கு ஞானபுரீஸ்வரர் கோவில் இருக்கிறது. இக்கோயில் தேவார வைப்புத்தலமான கோயில்.

கடைசியாக கங்கை நீரை எடுத்து வரும்போது மழை, புயல் சீற்றத்தினால் நாரை எதிர்த்து வரும் வேளையில், நாரையின் வாயிலுள்ள கங்கை நீா்த்துளிகள் சில நிலத்தில் தெரித்து விழ, அந்த இடமே தீர்த்தமாகி "காருண்ய தீா்த்தம்" என்றானது.

இந்த காருண்ய தீர்த்தம்தான் திருநாரையூர் ஈசனுக்குாிய தீர்த்தம் என்பது சிறப்பு.

சாபத்தால் நாரையாக மாறிய தேவதத்தன், சாபவிமோசனம் பெற சிவலிங்கம் தேடி வழிபட்டான். அவன் ஈசனை வழிபட்டு விமோசனம் பெற்ற தலம் திருநாரையூர் என அழைக்கப்படுகிறது. 

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவிலுக்கு வட கிழக்கில் ஆறு கி.மீ தொலைவில், கொள்ளிடம் ஆற்றின் கரையோரமாய் அமைந்திருக்கிறது இவ்வாலயம். 

இங்கு வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஈசன் நாரையூர் நாதர் , சவுந்தர நாதர் , சுயம்பிரகாசர் ஆகிய பெயர்களால் வணங்கப்படுகிறார். 

இங்கு வந்து இவ்விறைவனை வழிபடுபவர்களுக்கு, அவர்கள் தெரியாமல் செய்த தவறுகள் நீங்கப் பெற்று நற்பலன் உண்டாகும்.

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற சிறப்புக்குாிய தலம்.

No comments:

Post a Comment