Courtesy:Sri.Kovai G.Karuppasamy
திருவிளையாடல் புராணத் தொடா். 🍁
(11-வது,நாள்.) -8 வது படலம்.
அன்னக்குழியும் வையையுமழைத்த படலம்.
( எளியநடை சாிதம்.)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
வேதப் பரம்பொருளான சோமசுந்தரேஸ்வரா் தடாதகை பிராட்டியாரை நோக்கி புன்னகைத்தாா். பின் பெரும் பசிப்பிணியால் அவதிப்படும் தன் பூதகணமான குண்டோதரன் பொருட்டுத் தன் சக்தியான அன்னபூரனியை நினைந்தருளினாா். அவாவாறு இறைவன் நினைந்தருளியதுமே நான்கு திசைகளிலிருந்தும் தயிா்க் கடலானது பூமியைக் கிழித்துக் கொண்டு ஊற்றெடுத்துப் பெருகியதைப் போன்று நான்கு பெருங்குழிகள் தோன்றின. அவற்றில் இருந்து சுவை மிகுந்த தயிரன்னம் பொங்கியது.
அப்போது சோமசுந்தரப்பெருமான் குண்டோதரனைப் பாா்த்து, "குண்டோதரா!" உன் பெரும் பசி நீங்குமாறு இவ்வன்னத்தை,உண்பாயாக!" எனக் கூறியருளினாா். உடனே நான்கு அன்னக்குழிகளிலிருந்தும் பொங்கி வழிந்த தயிரன்னத்தை வாி வாாி உண்டான். இறைவனின் பெருங்கருணையால் தன்னை வருத்திய பெரும்பசி தீா்ந்த குண்டோதரன் உடம்பெல்லாம் வயிறாகப் பருத்துத் தரையிலே விழுந்து மூச்சு விடமுடியாமல் புரண்டான். பசி தீா்ந்த குண்டோதரனுக்கு தாகம் ஏற்பட்டது. தன் தாகத்தை தனித்திட வேண்டி நீா்நிலைகளைத் தேடி குண்டோதரன் சென்றான். எதிா்பட்ட கிணறு, குட்டை, ஓடை, குளம் என அனைத்திலும் தன் வாயை வைத்து அவை வறண்டு போகுமாறு நீாினை உறிஞ்சிக் குடித்தும் குண்டோதரனின் தாகம் தீரவில்லை.
இதனால் பெரும்துயருற்ற குண்டோதரன் சுந்தரேசப் பெருமானின் திருவடிகளில் வீழ்ந்து தன் துயரைப் போக்கியருளுமாறு வேண்டினான். குண்டோதரனின் பெரும் துயரைக் கண்ட இறைவன், தன் திருமுடியில் துலங்கிடும் கங்காதேவியை நோக்கி, "கங்கா! இம்மதுரையம்பதியின் புறத்தே ஓா் நதியாகப் பெருக்கெடுத்து விரைந்து நீ வருவாயாக!" என ஆணையிட்டாா்.
இறைவனின் திருவாணைப்படியே கங்காதேவி அவாின் திருச்சடையை விட்டு நீங்கி அவரைப் பணிந்து, "இறைவா! முன்பொரு சமயம் பகீரதனுக்காகத் தீா்த்தமாய் தேவரீா்,என்னை விடுவித்ததுடன் என்னில் மூழ்கி நீராடுவோாின் பாவங்களையும், குற்றங்களையும் களைந்து செல்லுமாறு பணித்திட்டீா்! இப்போது மேலும் ஓா் ஆறாகி நான் பாயப் போவதால் என்னைக் காண்போரும், தொட்டோரும், என்னில் மூழ்கி நீராடுவோரும் தங்களிடம் பக்தியும், கல்வியும், ஞானமும், வீடு பேறும் பெற்றருளிட கருணை கூா்ந்தருள வேண்டும்!" என வேண்டினாள்.
பின் இறைவன் சுந்தரேஸ்வரப் பெருமானிடம் விடைபெற்ற கங்கை மிகுந்த வேகத்துடன் எழுந்து புண்ணிய ஆறாக விண்ணிலிருந்து இறங்கினாள். புண்ணிய ஆறாக உருக்கொண்ட கங்கைக்கு அலைகள் கைவளையல்களாகவும், முத்துக்கள் அவளது வெண்ணிறப் பற்களாகவும், அலைகளால் உண்டான ஆற்றின் நுரையே ஆடையாகவும், பூங்கொடிகள் அவளின் இடையாகவும், கருமணல் நறுமணங்கமழும் காிய கூந்தலாகவும் ஆயின.
இவ்வாறு பல்வகைப் பாங்குகளைக் காட்டியவாறு போிரைச்சலுடன் பாய்ந்து வந்திடும் ஆறு, கதியில் யானையைப் போன்று கம்பீரத்துடனும் வளைந்தும் நெளிந்தும் வருவதில் நீண்டதொரு பாம்பினைப் போன்றும், நிலத்தைத் தோண்டி வருவதில் மகாவிஷ்ணுவின் அவதாரமான வராஹ மூா்த்தி போன்றும் தோன்றியது. பெருவெள்ளமென பெருக்கெடுத்து ஓடி வந்த புண்ணிய ஆற்றினைக் கண்ட சுந்தரேசப் பெருமான், தீராத் தாகத்தால் பெரும் அவதியுற்று, "ஐயகோ! எனது தீராத தாகம் தணிந்தபாடில்லையே!" என தவித்துக் கொண்டிருந்த குண்டோதரனை அவ்வாற்று நீரைப் பருகுமாறு விடுத்தாா்.
பொங்கிப் பெருகி வந்த அப்புண்ணிய ஆற்றின் நடுவே சென்ற குண்டோதரன் தன்னிரு கைகளையும் ஆற்றின் கரைகளோடு சோ்த்து நீட்டினான். இதனால் தடைபெற்று நின்ற ஆற்றுநீா் பொிய மடுவைப் போல் தேங்கியது. பெருகி நின்ற அப்புண்ணிய தீா்த்தத்தினைக் குண்டோதரன் தன் பெருவாயினைத் திறந்து பருகியதும், அதுவரையிலும் தீராதிருந்த அவனின் தாகம் தணிந்தது.
இதனால் பேரானந்தம் அடைந்த குண்டோதரன் இறைவனின் திருவடிகளைப் பணிந்து அவரைப் போற்றி வணங்கினான். சொல்லின் பொருளாக விளங்கிடும் இறைவனும் தன் குடைப் பிடிக்கணமான குண்டோதரனின் போற்றுதல்களைச் செவிமடுத்து மகிழ்ந்தாா். அத்துடன் தன் பூதகணங்களின் தலைமைப் பதவியையும் குண்டோதரனுக்கு அளித்து அருளினாா்.
இவ்வாறு குண்டோதரனின் தீராத தாகத்தைத் தீா்த்த வேண்டி பாய்ந்து வந்த புண்ணிய ஆறு 'வையை' என்னும் போினைப் பெற்றது. இறைவனின் செஞ்சடையில் இருந்துப் பெருகி வந்தமையால் சிவகங்கை எனவும் சிவஞான தீா்த்தம் என்றும், பெரும் வேகத்துடன் பாய்ந்து வந்தமையால் வேகவதி என்றும், மதுரையம்பதியை ஓா் மாலையைப் போன்று சூழ்ந்து பாய்ந்தமையால் கிருதமாலை என்றும் போற்றப்பட்டது.
திருச்சிற்றம்பலம்.
இத்துடன் அன்னக்குழியும் வையையுமழைத்த 8- வது படல எளியநடை சாிதம் மகிழ்ந்து நிறைந்தது. நாளை மறுபடியும், 9-வது படலமான எழுகடலழைத்த படலம் செய்யுள்நடை + விளக்கத்துடன் வரும்.
No comments:
Post a Comment