Wednesday, September 21, 2016

Quotes by periyavaa

தெய்வீகப் பொன்மொழிகள் 
பெரியவா சொன்னது 

"புண்ய கர்மா என்றால் என்ன? அவரவருக்கும் வேதம் விதித்த கர்மம்தான். லோக வாழ்க்கை சீராக நடக்க வேண்டும். அறிவினால் நடக்கிற காரியம், ராஜாங்க ரீதியில் நடக்கிற காரியம்., சரீர உழைப்பினால் நடக்கிற காரியம் எல்லாம் ஒன்றுக்கொன்று முரண்பாடில்லாமல் அனுசரணையாக நடந்தால்தான் சமூக வாழ்கை சீராக இருக்கும்". 

"பாப சிந்தனைகளைப் போக்குற புண்ணிய சிந்தனைதான் பரோபகாரம். சேவை மனப்பான்மை, 
தியாகம் எல்லாம். இதைப் பொதுவாக அன்பு என்று சொல்லலாம்". 

"தனக்கு" என்கிற பெரிய அரிப்பு இல்லாமல், அசூயை, வஞ்சனை எதுவுமே இல்லாமல் காரியம் செய்கிற போதுதான், அக்காரியத்தில் முழு ஈடுபாடு உண்டாகிறது. 

நாம் செய்யும் கருமம் எப்படிப் பாபமாகிறது என்றால் " நமக்காக" என்று ஆசைவாய்ப்பட்டு ஏதோ ஒரு லட்சியத்தைப் பிடிக்கிறபோது தான், இந்த லட்சியப் பூர்த்திக்காக எவ்வித தவறையும் செய்யத்துணிகிறோம்.
அதனால், சித்தத்தில் வெறுப்பு, மனப்பான்மை, துக்கம், பயம், இத்தகைய அழுக்குகளை ஏற்றிக்கொண்டு விடுகிறோம். 

சக்தியும் பொருளும் ஒன்றே என்று பெரிய உண்மையைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் அந்த அறிவைக்கொண்டு அணுகுண்டு தயாரிப்பைக் கண்டு பிடித்தார்கள் என்பது வருத்தமாக இருக்கிறது. வெளி உலக வஸ்துக்களைக் குறித்து விஞ்ஞானத்தால் நிலை நாட்டப்படும் அத்வைதம், புத்தி அளவில் நின்றதன் விபரீத விளைவுதான் இது.விஞ்ஞானத்தின் அத்வைதம் வெறும் அறிவோடும், வெளி உலகத்தோடும் நிற்காமல் மக்களின் பாவனையிலும் தோயவேண்டும். 

நாம் கண்ணால் மட்டுமே பார்க்கிறொம். ஒன்றை ரோஜா என்கிறோம், மற்றொன்றை ஊமத்தை என்கிறோம். ஞானம் என்ற அறிவால் பார்த்தால் அது ரோஜா அன்று. ஆனந்த மாகத்தான் தெரியும். ஊமத்தம் பூவும் அவ்வாறே தெரியும்.
நமக்கு ஞானம் இல்லாதபடியால், அவைகளை வெவ்வேறாகப் பார்க்கிறோம். உண்மை நமக்கு புலப்படாததற்குக் காரணம் நமக்கு சித்தத்தில் அழுக்கு இருப்பதே. 

அகண்டமாக இருப்பவன் ஒருவனே உண்மை. கண்டமாக இருப்பது வெறும் நினைவுதான். நினைவு, கனவு எல்லாம் சாசுவத உண்மை அல்ல. 

ஒருவருக்குச் சொந்தமாக கொஞ்சம் நிலம் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். அதில் வருஷத்திற்க்கு வருஷம் விளைச்சல் அதிகமாகிறது. "இந்த வயல் என்னுடையது" என்பதால் விளைச்சல் அதிகமாகும்போதெல்லாம் அவருக்கு மனம் குளிர்கிறது. ஆனந்தம் உண்டாகிறது. பிறகு விளைச்சல் குறைய தொடங்குகிறது. வயலை
வேறு ஒருவருக்கு விற்று விடுகிறார். மறுபடியும் அதே நிலத்தில் விளைச்சல் கூடுகிறது. இப்போது அதைப் பார்க்கும்போது அவருடைய மனம் குளிரவா செய்கிறது? "அட டா, போன வருஷம் நம்மிடம் இருக்கிறபோது நிலம் தரிசு போல் பொட்டலாக இருந்தது, இப்போது எவனோ ஒருவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறதே" என்று
வயிற்றெரிச்சல்தான் உண்டாகிறது. 
"எனது" என்ற சம்பந்தம் இருந்த மட்டும்தான், அமோக விளைச்சலால் சந்தோஷம் ஏற்பட்டது. பிறகு அதே விளைச்சலில் உணர்ச்சி அடியோடு மாறிவிட்டது. 

பைத்தியம் பிடித்த ஒருவனிடம் " இந்தத் தடியை கால்மணிநேரம் பிடித்துக் கொண்டே இரு" என்றால் அவனால் முடியாது. நம்மால் அவ்வாறு செய்ய முடிகிறது. ஆனால், "ஒரு பொருளை மட்டும் குறிப்பிட்ட நேரம் வரை
நினைத்துக் கொண்டு இரு" என்றால் நம்மால் செய்ய முடியவில்லை. சித்தம் மறுகணமே ஆயிரக்கணக்கான எண்ணங்களை சினிமாப்படங்கள் ஓடுவது போல் ஓட்டமாக ஒடியபடி நினைக்கிறது. ஆகையால், நாம் எவ்வாறு
பைத்தியங்களைப் பற்றி நினைக்கிறோமோ, அதுபோல், மகான்களுக்கு நாம் பைத்தியமாகத்தான் படுவோம். 

வேத அத்யயனம், மோகம், தியானம், பூஜை இவற்றைக் கஷ்டப்பட்டு அப்பியாசம் செய்வதால் கிடைக்கும் ஈசுவராநுபவத்தை தெய்வீகமான சங்கீதத்தின் மூலம், நல்ல ராக, தாள ஞானத்தின் மூலம் சுலபமாகப் பெற்றுவிடலாம். இப்படி தர்ம சாஸ்திரம் என்னும் ஸ்மிருதியைத் தந்திருக்கும் யாக்ஞவல்க்ய மகரிஷியே சொல்லியிருக்கிறார். வீணா கானத்தை அவர் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். கடுமையான பிரயாசை இல்லாமலே சங்கீதத்தால் மோக்ஷமார்க்கத்தில் போய்விடலாம் என்கிறார். 

தேக பலம், அகிம்சை, பயமற்ற நிலை இவற்றோடு சொந்த கஷ்டங்களைப் பாரட்டாமல் பிறரைக் காக்கும் மனப்பான்மையும் சேர்ந்தால் அது மிகப்பெரிய சீலமாகும். இதற்காக "க்ஷத்ர தர்மம்" என்று முன்னாளில் பெயர் சொல்லப்பட்டது. பிறரைத் தீமையிலிருந்து காப்பதே க்ஷத்ரம். இப்போது நம் நாட்டு இளைஞர்கள் இந்த க்ஷத்ர தர்மத்தை மேற்கொள்வது மிக அவசியமாகிறது. 
பண விஷயத்தில் மட்டுமல்ல வார்த்தைகளை உபயோகிக்கும் போதுகூட ஒரு சொல் கூட அதிகமாகப் பேசக்கூடாது. அளவாகக் கணக்காகப் பேசவேண்டும். அதனால், நமக்கும் சரி, நம் பேச்சைக் கேட்கிறவர்களுக்கும் சரி, பொழுது மிச்சமாகும். வளவளவென்று பேசாமல் சுருக்கமாகப் பேசக் கற்றுக் கொண்டால், புத்தியில் ஒரு தீட்சண்யமும், வாக்கில் ஒரு பிரகாசமும் உண்டாகும். சக்தியும் வீணாகாது. சண்டைச் சச்சரவுகளைத் தவிர்க்கலாம். திருவள்ளுவரும், எதைக் காக்காவிட்டாலும் நாவைக் கட்டுப்படுத்த வேண்டும், என்கிறார். 

இப்போது யாருக்குமே நிறைவு இல்லை. சமூக வாழ்கையிலும் பரஸ்பர சௌஜன்யம் போய், போட்டியும், பொறாமையும் வலுத்து விட்டன. ஒருத்தன் ஆடம்பரமாக இருந்தால் மற்றவர்களுக்கும் அதில் ஆசை ஏற்படத்தானே செய்யும் ! எல்லோருக்கும் எல்லா ஆசைகளும் நிறைவேறுவது எங்கேனும் சாத்தியமா? ஏமாற்றம் உண்டாகிறது. ஆசை நிறைவேறாவிட்டால் விரோதம் ஏற்படுகிறது. 

மக்களுக்கு மானம், உயிர் இரண்டயும் காப்பாற்றிக்கொள்ள அவசியமானவை எவையோ அவை நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்கவேண்டும். இவற்றை அரசாங்கமே எல்லோருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும். அதற்குத்தான் திட்டம், ஒழுங்கு எல்லாம் வேண்டும். 

பொழுதுபோக்கு என்று ருசியாகத் திங்கிற இடத்திலும், கண்களைக் கவர்கிறவைகளைப் பார்பதிலும் பொழுதை வீணாக்குவது தவறு. இந்தப் பொழுதைப் பிறருக்குச் சேவை செய்வதில் செலவழிக்க வேண்டும். வாழ்க்கைத் தொல்லைகளிடையே சிறிது உல்லாசமாகப் பொழுது போக்குவது ஒரு தவறா என்று கேட்கலாம். நான் சொல்கிறேன் பரோபகாரமாகச் சேவை செய்தால் அதுவே பெரிய உல்லாசம் என்பது தெரியும். 

சத்தியத்தில் ஒருவன் நிலைத்து நின்றுவிட்டால் அவனுக்கு அதனால் தன்னையும் அறியாமலே ஒரு பிரயோஜனம் உண்டு. ஒருவன் சத்தியமே பேசிப்பழகிவிட்டால் முடிவில் அவன் எது சொன்னாலும் அது சத்தியமாகிவிடும். இப்படிப்பட்டவன் மனமறிந்து பொய் சொல்லமாட்டான்.
ஆனால், அறியாமையாவோ, தவறுதலாகவோ அவன் ஒரு விஷயத்தைத் தப்பாகச் சொல்லிவிட்டாலும், அந்த தப்பே நடை முறையில் சத்தியமாக நடந்துவிடும். 

சத்தியத்தின் லக்ஷணம், மனமும், வாக்கும் ஓன்றுபட்டிருப்பது. மனம் சுத்தமாக இருப்பது வாக்கு. வாக்கு சாந்தமாக இருப்பது தனக்கு சித்த சுத்தியையும், பிறருக்கு க்ஷேமத்தையும் உண்டு பண்ணுவது. 

சிறு பிராயத்திலிருந்தே ஆஸ்திக புத்தியை வளர்க்க வேண்டும். நமது மத அநுஷ்டானங்களை விடாமல் பற்றி ஓழுகி, உத்தமமாக வாழ்கின்ற பெரியோர்களின் சங்கத்தில் குழந்தைகளைப் பழக்க வேண்டும். நம்முடைய
ஆத்ம க்ஷேமத்திற்காகவே ரிஷிகள் சாஸ்திரங்களைத் தந்தார்கள் என்று விசுவாசத்தை ஏற்படுத்த வேண்டும். 

லட்சியம் லெளகிகமாக மட்டும் இருந்தால் அவ்வப்போது சமூக வாழ்வுக்கான விஷயங்களை மாற்றிக் கொள்ளலாம்.
ஆனால், ஆத்ம க்ஷேமத்தையே லட்சியமாக வைத்து அதற்கு அனுசாணையாக லெளகிக வாழ்க்கைக்கு விதிகள் செய்து தருகிறபோது, இவ்விதிகளை மாற்ற முடியாது. 

எனக்கு கனகாபிஷேகத்துக்கும், பீடாரோஹணத்துக்கும் காட்டுகிற உற்சாகத்தை வேத ரக்ஷணத்தில் காட்டி அதற்காகக் கமிட்டி, திட்டம், வசூல் எல்லாம் செய்யுங்கள் என்கிறேன். வேத ரக்ஷணத்தை அடுத்த சந்ததிக்கு ஜீவிய கர்மமாக ஆயுட்காலப் பணியாக வைக்க முடியாவிட்டால் கூடப்போகிறது.
எட்டு வயதிலிருந்து ஆரம்பித்துப் பிறகு, பத்து வருஷங்களுக்கு இளம் பிள்ளைகளுக்கு தினம் ஒரு மணிநேரம் வேத மந்திரங்களிலும், பிரயோகங்களிலும் பேட்டைக்குப் பேட்டை கூட்டுறவு அடிப்படையில் ஏற்பாடு செய்யுங்கள் என்கிறென்.
இதுதான் எனக்கு உண்மையான கனகாபிஷேகம்,  உற்சவம் எல்லாம். 

அநாதியான வேத தத்துவம் அதன் மூல ரூபத்திலேயே என்றென்றும் பிரகாசித்துக் கொண்டிருக்க வேண்டும். இந்த ஜோதியை, தீவர்த்தியை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்ற சேவகனாகப் [மஸால்ஜி]
பிராமணன் இருக்க வேண்டும். இப்போதுள்ள எல்லாப் பிரஜைகளுக்கும், எதிர்கால் வாரிசுகளுக்கும் இவன் செய்தே தீரவேண்டிய கடமை இது. மற்றவர்களை அதட்டிக் கொண்டு தனக்கு உயர்வு கொண்டாடுவதற்காக ஏற்பட்டதல்ல பிரம்மண்யம்.
சமூகத்தில் வேத விளக்கைப் படித்துக் கொண்டு வழி காட்டுவதற்குத்தான் அது இருக்கிறது. இதை எடுத்துக் கூறவே நான் நகரங்களுக்கு வந்து கொண்டிருக்கிறென். 
மனித அறிவின் எல்லையை மீறி அகண்டமாக ஆனவர்களே ரிஷிகள். அவர்களின் மூலமே வேத மந்திரங்கள் உலகிற்கு வந்திருக்கின்றன என்பது அடிப்படைக் கொள்கை. அவர்கள் மந்திரங்களைக் கண்டவர்கள். 

பிராமணனின் தேகம் இந்திரிய சுகத்துக்காக ஏற்பட்டதே அல்ல. அது உலக ஷேமத்துக்காக வேதத்தை ரக்ஷிப்பதற்கு என்ன நியமங்களை, அனுஷ்டானங்களைப் பின்பற்ற வேண்டுமோ அவற்றைச் செய்யவே ஏற்பட்டது. அதில், அதிகப்படியான எந்த போக்ய வஸ்துவும் சேர்க்கக்கூடாது என்பதே அடிப்படை தர்மம்.
அந்த தர்மத்தை, அதில் உள்ள தியாகப் பண்பை விட்டுவிட்டு நவீன உபகரணங்களால் சுலபத்தில் கிடைக்கிற சுகங்களுக்கு இவன் ஆசைப்பட்டது அடியோடு தவறுதான். 

ஹிந்து மதஸ்தர்கள் மிகவும் பெருமைப்பட வேண்டிய அம்சம். இந்த மதம் ஒன்றுதான் தன்னை அனுசரிப்பதின் மூலமே ஒரு ஜீவன் உய்வு பெற முடியும் என்று ஒரு தனி உரிமை கொண்டாடிக் கொள்ளாமலிருப்பதேயாகும். யார் யார் எந்தெந்த சமய மார்க்கத்தில் சென்றாலும், முடிவில் ஒரே பரமாத்மாவிடம் வந்து சேருவார்கள் ஒப்புக் கொள்கிற விசால மனப்பான்மை[catholic outlook ] நம் சாஸ்திரங்களிலேயே காணப்படுகிறது. இதன் காரணமாகவே பிறரை இந்துவாக மதமாற்றம் செய்ய நம் சாஸ்திரங்கள் இடம் கொடுக்கவில்லை. 

மதமாற்றம் செய்கிறவர்களை நாம் கரிக்க வேண்டியதில்லை. அவர்கள் கட்டாயப்படுத்தியாவது, அல்லது, ஆசை காட்டி வசியயப்ப்டுத்தியாவது ம்ற்றவர்களைத் தங்கள் மதத்தில் சேர்க்க நினைப்பதற்குக் காரணம் அவர்களுக்குத் தங்கள் மதமே பரம சத்தியம் என்பதில் இருக்கின்ற நம்பிக்கை தானே? 

எலலா சமயங்களும் கடவுளை வழிபட ஏற்பட்டவையே ஆகும். எல்லா சமயங்களும் கடவுள் ஒருவரே என்று சொல்கின்றன. ஒருவரேயான அக் கடவுள் எந்த சமயத்தின் மூலம் வழிபட்டாலும், அதை ஏற்றுக் கொள்ளத்தான் செய்வார். எனவே,  எவருமே தாங்கள் பிறந்த மதத்தை விட்டு இன்னொரு மதத்தைத் தழுவ வேண்டியதில்லை. 

ஜகத் முழுவதும் காரணம் - விளைவு - செயல்- பிரதிச் செயல்[Action & Reaction ] என்ற துவந்தத்துக்குள் தான் கட்டுண்டிருக்கிறது. பெளதிக சாஸ்திரம் [Physics] முழுவதும் இந்த உண்மையைத்தான் விளக்குகிறது. ஜடப் பிரபஞ்சம், ஜீவப்பிரபஞ்சம் இரண்டும் ஒன்றே என்பதை மூலத்திலிருந்தே வந்தால் ஜகத்துக்கு உள்ள இந்த விதி மனித வாழ்விலும் உண்டு. நம்முடைய செயல்களுக்கு எல்லாம் நிச்சயமாகப் பிரதி உண்டு. இன்று நாம் அனுபவிக்கிற சுகங்களுக்கும், துக்கங்களுக்கும் காரணம் நாம் முன்னவே இந்த ஜன்மாவிலோ, பூர்வ ஜன்மாவிலோ செய்த நன்மை - தீமைகள் தான். 

--------------------------------------------------------------------------- 
உலக வாழ்க்கையில் எல்லோருக்கும் அளவில்லாத கஷ்டங்கள் உண்டாகத்தான் செய்யும். பணக்காரன், பெரிய பதவியில் உள்ளவன் கஷ்டமில்லாமல் இருப்பதாக மற்றவர்கள் நினைக்கலாம். ஆனால், அவர்களைக் கேட்டால் தெரியும். அவர்களுக்கு எவ்வளவு கஷ்டங்கள் என்று நாம் திண்ணையில் இருக்கிறோம், விழுந்தால் சிராய்த்துக் கொள்வதோடு போய்விடும். அவர்கள் மேல்- மாடியில் இருக்கிறார்கள். விழுந்தால் எலும்பு முறிந்து விடும். பிராணனுக்கே ஆபத்து வரலாம் 
மனுஷனாகப் பிறந்த ஒவ்வொருவனும் ஓயாமல் அலைச்சலான அலைச்சல் அலைந்து கொண்டு இருக்கிறான். எதற்காக ? ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்குத்தான். 
வெளியிலிருக்கும் வஸ்துக்களிடம் இவனுக்கு ஆசை; ஒன்று கிடைத்துவிட்டால் அது போதவில்லை. அதனால், வரும் சுகம் தீர்ந்து போகிறது. மற்றொன்றுக்கு ஆசைப்படுகிறான். அதைத்தேடி ஓடுகிறான். இவனுக்கு சாந்தி என்பதே ஒரு நாளும் இல்லாமலிருக்கிறது. 

இந்து மதம் மத மாற்றத்தை ஆதரிக்கவில்லை. ஜன்ம விமோசனத்தைத் தான் எல்லா மதங்களும் குறிக்கோளாக எடுத்துரைக்கின்றன. ஒருவன் தன்னுடைய மத போதனைகளை வழுவாமல் அனுசரித்து வந்தால், அதுவே அவனுக்கு விமோசனத்தை அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறொம். ஆகவே, ஒரு மதத்தைப் பற்றி புகழ்ந்து கூறவோ, மற்றொன்றை இகழவோ எந்த அவசியமும் இல்லை. 

இந்த உலகமே ஒரு நாடகம் ;  ஆண்டவன் அதன் கதாசிரியர். 

சத்தியத்தை சர்க்கரை பூசிய மாத்திரைகளாக்கித் தரவேண்டும். சர்க்கரை பூச்சுத்தான் மொத்தமே சர்க்கரையாகி விடக்கூடாது. வெறும் இந்திரியங்களுக்கு மிகவும் ருசிக்கும் சமாசாரங்களில்தான் ஜனங்களுக்கு அதிக கவர்ச்சி இருக்கிறதென்று சொல்லிக்கொண்டே இவ்விதமே எழுதுவது சரியல்ல. பத்திரிகையாளர்கள் முனைந்தால் தானாகவே ஜனங்களுக்கு நல்ல விஷயங்களில் ருசி பிறக்கும். நம்மையும் உயர்த்திக் கொண்டு, நம் வாசகர்களையும் உயர்த்த வேண்டும் என்கிற கடமை உணர்ச்சியைப் பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் பெறவேண்டும். 

உயர்ந்த எண்ணம் வளர்ந்து வளர்ந்து பல காலங்களாக உருவெடுத்திருக்கிறது. உயர்ந்த எண்ணங்கள் ஒவ்வோரிடத்தில் ஒவ்வொருவிதமாக உருவெடுக்கின்றன. சிஷ்ய ரூபமாக, தியாக ரூபமாக, சேவை ரூபமாக, தான ரூபமாக, இப்படிப் பல உருவங்களாக உயர்ந்து வெளிப்படுகிறது. இந்த உயர்ந்த எண்ணம் மிகவும் உயர்ந்து, விரிந்து எடுத்துக்கொள்கிற உருவமே எல்லா உயிர்களிடமும் அன்பு,  உலகம் முழுவதும் ஒன்றாகிவிட வேண்டும் என்று எண்ணுகிற அன்பில் பிறப்பதே,  மிகப் பெரிய பண்பாடு. 

" ராவணன் சீதையைத் தூக்கிக் கொண்டு போன போது, ஒரு மைல் தூரத்திலிருந்த ராமனுக்கு சீதை போட்ட கூச்சல் காதில் விழவில்லையாம். அப்படிப் பட்டவனை இப்போது பக்தர்கள் கூப்பிட்டால் என்ன பிரயோஜனம்? " என்று கேலி செய்தவர்கள், எழுதியவர்கள் இருக்கிறார்கள். ராமனாக இந்த உலகத்தில் வாழ்ந்தபோது மனித வேழத்தில் இருந்தான்;  மனிதர்களைப் போலவே வாழ்ந்தான் என்பதை இவர்கள் மறந்து பேசுகிறார்கள். இராமாயண நாடகம் இருக்கிறது. வால்மீகி, லவகுசர்களை இராமனிடம் அழைத்துக் கொண்டு போகும் கட்டம். 

இராமஸ்வாமி அய்யங்கார் ராமர் வேஷத்தில் நடிக்கிறார். அவருடைய சொந்தப் பிள்ளைகளே லவகுசர்களாக நடிக்கிறார்கள். நாடக இராமன் வால்மீகியைப் பார்த்து " இந்தக் குழந்தைகள் யார் ? " என்று கேட்கிறார். இராமஸ்வாமி அய்யங்காருக்குத் தம் பிள்ளைகளையே தெரியவில்லையா என்று நாடகம் பார்க்கிறவர்கள் கேலி செய்யலாமா. அல்லது நாடக வால்மீகி " இவர்கள் இராமஸ்வாமி அய்யங்காரின் பிள்ளைகள் ! நீங்கள்தானே அந்த இராமஸ்வாமி அய்யங்கார் ? " என்று பதில் சொன்னால் எப்படி இருக்கும் ? 

ஸ்ரீ ஆதிசங்கர ஜயந்தியானது மற்ற ஜயந்திகளை விடப் பெரிய புண்யகாலம் என்று நினைப்பது வழக்கம். இதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. ஸ்ரீ ச்ங்கர அவதாரத்திற்கு முன்,  வைதீக மதம் ஆட்டம் கண்டபோது,  அதுவரை வேத புராணங்களால் விதிக்கப்பட்ட புண்ணிய காலங்கள் எல்லாம் தத்தளித்தன. ஒரு மதத்தில் நம்பிக்கை போய்விட்டால் அந்த மதப் பண்டிகைகளை யார் கொண்டாடுவார்கள்? 
அப்போது ஸ்ரீ சங்கர ஜயந்தி நிகழ்ந்ததால்தான் அந்தப் புண்ணிய காலங்கள் எல்லாம் நிலை நிறுத்தப்பட்டன. ஸ்ரீ சங்கர ஜயந்தி நிகழ்ந்திராவிட்டால், இன்று ஸ்ரீராம நவமியும், கோகுலாஷ்டமியும், சிவராத்திரியும், நவராத்திரியும் மற்ற புண்ணிய தினங்களையும் கொண்டாடுவோமா என்பது சந்தேகம். 

ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள அனைவரும் மாலை வேளைகளில் வீட்டிலேயே ஒரு பத்து நிமிஷமாவது பகவத் நாமாக்களை பாடி பஜனை செய்யவேண்டும். இதில் சாத்தியமில்லாத சிரமம் எதுவும் இல்லை. குடும்பத்தினர் எல்லோரும் பூஜை அறையில் அல்லது பூஜைக்கென்று தனி அறை இல்லாவிட்டால் - ஒரு குத்துவிளக்கை ஏற்றி வைத்து அதன் முன் உட்கார்ந்து கீர்த்தனங்களைப் பாடவேண்டும்.
பகவானைப் பாடுவதற்கு வெட்கமே வேண்டாம். சங்கீத ஞானம்,  ராக பாவம், சாரீர வசதி இல்லாவிட்டாலும், பரவாயில்லை. பக்தி, பாவனைதான் முக்கியம். ஏதேதோ விளையாட்டுகளில் ஓடிக்கொண்டிருக்கிற குழந்தை, அம்மாவின் நினைப்பு வந்ததும், " அம்மா, அம்மா" என்று கத்துகிறதல்லவா?
அதில் வெட்கமோ, ச்ங்கீத அழகோ இல்லை. 

சங்கர பகவத்பாதர்கள் பக்தியின் லக்ஷணத்தை சிவானந்த லஹரியில் இவ்வாறு வர்ணித்திருக்கிறார்: 

"அழிஞ்சில் விதை எப்படித் தாய் மரத்துடனேயே ஒட்டிக் கொள்கிறதோ, ஊசி எப்படி காந்தத்தால் கவரப் படுகிறதோ, பதிவிரதை எப்படி தன் பதியின் நினைவிலேயே ஆழ்ந்திருக்கிறாளோ, கொடி எப்படி மரத்தைத் தழுவி வளர்கிறதோ, நதி எப்படி சமுத்திரத்தில் கலக்கிறதோ,  அப்படியே பசுபதியின் பாதாரவிந்தங்களில் எக்காலமும் மனத்தை அமிழ்த்தியிருப்பதுதான் பக்தி என்பது. 
--------------------------------------------------------------------------- 

ஆஸ்பத்திரி வைத்து உடல் வியாதியை தீர்ப்பது மட்டும் போதாது. நோயாளிகளது மனதில் கெட்ட எண்ண ங்கள் என்ற வியாதி இல்லாமல் செய்வதே அதைவிட முக்கியம். இவ்வாறேதான் பள்ளிக்கூடங்கள் வைத்துப் படிப்பை விருத்தி செய்கிறோம். 
படித்து வெளியில் வந்தவர்கள் யோக்கியர்களாக இல்லாவிட்டால்,  பள்ளிக்கூடம் வைத்து பயன் நமக்கு ஏது?  
பக்தி, கட்டுப்பாடு, தியாகம் இவைகள் இல்லாமல் படிப்பால் வெறும் புத்தியை மட்டும் வளர்த்துக் கொண்டால் சாமர்த்தியமாக தவறுகள் செய்து தப்பித்துக் கொள்வதற்கு வழியாகிறது. அவன் நல்லவனாக இருக்க வேண்டும் என்பதுதான் லட்சியம். இப்படி நல்லவனாக்குகிற நிலையங்களாக ஆலயங்களும், ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம் போலவே,  இவைகளை விடவும் அவசியம் இருக்கத்தான் வேண்டும். 
----------------------------------------------------------------------------- 

கோயில்களும் அவற்றைச் சார்ந்த கலைகளும் ஓங்கி வளர்ந்திருந்த நாட்களில் நம் தேசம் எப்படி இருந்தது என்பதற்கு மெகஸ்தனிஸ் ஸர்டிபிகேட் கொடுத்து இருக்கிறான். இவை எல்லாம் மங்கிப் போயிருக்கிற இன்று தேசம் இப்படி இருக்கிறதென்பதையே கண்கூடாகவே பார்க்கிறொம். எங்கு பார்த்தாலும் பொய்யும், சஞ்சலமும், கலப்படமும், அதர்மமும் மிகுந்துவிட்டன. இவை நிவர்த்தியாக வழி ஒன்றுதான்; பழையகாலத்தைப்போல் கோயில்களை சமூக வாழ்க்கையின் மையமாக்கிவிட வேண்டும். அன்றுபோல் இன்றும் தெய்வ சம்பந்தமான பழமையான கலைகளை வளர்க்க வேண்டும். 

ஆபீஸ் கட்டிடங்கள், காட்டேஜ்கள் எல்லாம் இப்போது பல க்ஷேத்திரங்களில் ஏராளமாக முளைத்துவிட்டன. தெய்வ சம்பந்தமற்ற பல காரியங்கள் நடக்கின்றன. இது சாந்நியத்தைப் பாதிக்கிறது. ஏதோ எட்டாக் கையில் இருக்கிற கோயில்களில்தான் விச்ராத்தியான சூழ்நிலை நிலவுகிறது. காட்டேஜ்களும், சுற்றுலா கோஷ்டிகளும் பக்தியைவிட பொழுதுபோக்கை அதிகப்படுத்துகின்றன. 

சின்னஞ்சிறிய சூஷ்மமான தர்மங்களை எல்லாம் மறந்துவிட்டோம். நமக்கு உணவு தருபவனுக்கு நல்லபடி நிவேதனம் நடக்கவேண்டும். நமக்கு உடை தருபவனுக்கு நல்ல வஸ்திரம் இருக்கவேண்டும். இப்போது ஓர் ஊரில் யார் அழுக்குத் துணிகட்டிக் கொண்டிருக்கிறான் என்றால் அது ஸ்வாமிதான். நம் ஊர் கோயில் ஸ்வாமியின் வஸ்திரம் சுத்தமாயிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்திவிட்டோமானால், நம்மனதின் அழுக்கு போய்விடும். 

இதோ நமக்கு முன் வாழைப்பழ சீப்பு வைத்திருக்கிறது. "இதைப்பார், இது மஞ்சளாக இருக்கிறது" என்று சொன்னால், இது மஞ்சளாகத்தான் இருக்கிறது என்று காண்கிறீர்கள். அதற்குமேல் மனதில் அதைப்பற்றி எந்தவித பிரதி சிந்தனையும் [ ] எழுவதில்லை. மாறாக, இந்த வாழைப்பழத்தைக் காட்டி, "இதோ பார், இது சிவப்பாக இருக்கிறது" என்று நான் சொல்லியிருந்தால் உடனே உங்கள் மனதில் ஒரு ஆட்சேப உணர்வு எற்பட்டிருக்கும். இது மஞ்சள் என்றோ, சிவப்பு என்றோ நான் சொல்லாமல் "இந்த வாழைப்பழம் சிவப்பாக இருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள்' என்று சொன்னால் அப்போது உங்கள் மனதில் ஒரு பிரதி உணர்வு உண்டாகிறது. மஞ்சள் பழத்தையே சிவப்பாக இருப்பதுபோல் கற்பனை செய்து பார்க்கிறீர்கள். மனதை ஒருமுகப்படுத்தினால் அவ்வாறு பாவிக்கவும் முடிகிறது.
மூர்த்தி வழிபாடு என்பது இத்தகையதுதான். ஒரே மூர்த்தியைக் காட்டி, "இது பரமாத்மா" என்றால் யாரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஆனால் "இதை பரமாத்மாவாக பாவியுங்கள்" என்றால் அவ்வாறு பாவிக்க முடிவதாகத் தோன்றும் - வாழைப்பழத்தை சிவப்பாக கற்பனை செய்வதுபோல், ஆனால் சிவப்பு என்ன என்பது மனதுக்குத் தெரிவதுபோல், பரமாத்மா லக்ஷணம் தெரியாதே. தெரிந்த விஷயங்களில்தான் மனம் ஈடுபட்டு நிற்கும். எனவே, ஒரே காருண்யமும், சௌந்தர்யமும் வழிகிறது போன்றே ஸ்திரீ ரூபத்தில் விக்ரகம் செய்து "இதில் பரமாத்மா தாயாராக வந்திருக்கிறார் என்று பாவனை பண்ணு" என்றால், மனம் அதை நன்றாகக் கிரகித்துக் கொண்டு அப்படியே ஆழ்ந்து ஈடுபட முடிகிறது. 

-------------------------------------------------------------------------- 

சொந்த விருப்பு வெறுப்பில்லாமல் உலக க்ஷேமத்திற்காக காரியம் செய்து ஆத்ம பரிசுத்தி பெறும் பண்பாடு வேதகாலம் தொட்டு நம் தேசத்தில் தழைத்து வந்திருக்கிறது. அப்பண்பாட்டை ஒரு கையடக்கமான பேழையில் வைத்துக்கொடுத்ததுபோல் கீதையில் நமக்கு அனிந்திருக்கிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. இந்த உபதேசத்தை நம் வாழ்க்கையில் ஒவ்வொரு காரியத்திலும் உரைத்து அலசிப்பார்க்க வேண்டும். இந்தக் காரியத்தில் சொந்த லாபம், பேர், புகழ் இருக்கிறதா? ஆசை இருக்கிறதா? துவேஷம் இருக்கிறதா? பட்சபாதம் இருக்கிறதா? இவை இருந்தால், வெளிப்பார்வைக்கு நாம் செய்வது எவ்வளவு உயர்வாக இருந்தாலும், அது பாபம்தான். 

--------------------------------------------------------------------------- 

இப்போதெல்லாம் சிலர் சமய ஆசாரங்களெல்லாம் வெளி விஷயம்தானே என்று நினைக்கிறார்கள். உண்மையில் வெளியில் செய்கிற காரிய்மும், வெளியில் அணிகிற சின்னங்களும் உள்ளுக்கு நன்மை செய்கின்றன. உடலின் காரியமும் உள்ளத்தின் பாவமும் [ Bhava ] ஒன்றுக்கொன்று சம்பந்தமுடையவை. சற்றும் எதிர்பார்க்காமல் ஒருவருக்கு ஒரு பெரிய தொகை லாட்டரியில் கிடைத்தது என்கிற செய்தி கேட்டதும் அவருடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இது ஒரு மனோபாவம்தான். ஆனால், அதன் கரணமாக உடம்பில் படபடப்பு உண்டாகிறது. மூச்சு அப்படியே சிறிது காலம் அடங்கி மூர்ச்சையாகிவிடுகிறது. இவ்விதமாக வெளிச்சின்ன்ங்களுக்கும், உள் உணர்வுகளுக்கும் உள்ள தொடர்பு பற்றி கேள்வி எழுப்புகிறவர்கள், ராணுவ வீரர் தன்னுடைய யூனிபார்மில் இல்லாவிட்டால் அவருக்கு தைரியம் வராதா என்று கேட்கலாம். ஆனால் உலகம் முழுவதும் மிலிடரி என்றால் யூனிபார்ம் இருக்கத்தான் செய்கிறது. அதுவே வீரத்தைத் தூண்டுகிறது என்றும் சொல்வார்கள். 

நம்முடைய சாஸ்திரங்களில் இல்லாத ஸயன்ஸ் எதுவுமே இல்லை. ஆயுர்வேதத்தை சரகர், சுச்ருதர் முதலானவர்களின் நூல்களைப் பார்த்தால். இப்போதைய பெரிய டாக்டர்களும் அதிசயிக்கும்படியான மருத்துவ முறைகளையும், சர்ஜரி முறைகளையும் தெரிந்து கொள்கிறோம். நவீன மருந்துகளைவிட, நவீன சர்ஜரிக்கு நாம் பழக்கமாகிவிட்டதால், ஆயுர்வேதத்தில் சர்ஜரிக்கு இடமில்லை என்று பலர் நினைக்கிறார்கள். என்ஸைக்லோபீடியா பிரீடானிகாவில் கூறியிருக்கிறபடி, சர்ஜரி இந்தியாவில்தான் தோன்றியது. தன்னுடைய மிகத் தீவிரமான பக்தியைப் பற்றிக் குறிப்பிடும்போது, குலசேகர ஆழ்வார் "வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல் நோயாளன்போல்" என்கிறார். அறுப்பது" என்பது சர்ஜரி. "சுடுவது" காடரைஸேஷன் [Cauterisation] 

தாமிரச்செம்பு, கிணற்றில் ப்த்து வருஷங்கள் கிடந்து விட்டதென்றால், அதை எத்தனை தேய்த்தாக வேண்டும் ! எவ்வளவுக்கெவ்வளவு தேய்க்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு வெளுக்கிறது.
இவ்வளவு வருஷ காலம் எத்தனை கெட்ட காரியங்களைச் செய்து நம்முடைய சித்தத்தில் அழுக்கை ஏற்றிக்கொண்டு விட்டோமோ, அந்த அழுக்கைப் போக்க எத்தனை நல்ல கர்மாநுஷ்டங்களைச் செய்யவேண்டும். சித்தசுத்தி வளரும் நல்ல சீலங்கள் உண்டாகும். 

வீட்டிலேயே இருக்கிற குழந்தை சதா ஏதோ விஷமம் பண்ணிக்கொண்டிருக்கிறது. அதையே பள்ளிக்கு அனுப்பிவிட்டால்,
"இத்தனை மணிக்குப் போக வேண்டும். இன்ன இன்ன பாடங்களை அதற்குள் எழுதிவிட வேண்டும்; திரும்ப இத்தனை மணிக்குத்தான் வரமுடியும்; வந்தால் இதைச் செய்ய வேண்டும்" என்று அதற்கு ஒரு கட்டுப்பாடு வந்துவிடுகிறது. முன்பு காணப்பட்ட விஷம குணங்கள் எங்கோ போய்விடுகின்றன.
அதேபோல் நாம் கெட்ட எண்ணத்திலும், காரியத்திலும ஈடுபட அவகாசம் இன்றி, நல்ல காரியங்களை ஒரு விதிப்படி ஒழுங்கு தவறாமல் செய்வதுதான் முக்கியம். இதற்குத்தான் சாஸ்திரங்கள் நமக்கு விதிகள் போட்டிருக்கின்றன. 

பிறருக்கு உதவி செய்வதால், சேவை செய்வதால் அல்லது ஸ்வாமிக்கு பூஜை செய்வதால் ஒவ்வொருவருக்கும் உள்ளுக்குள்ளே ஒரு நிறைவு ஏற்படுகிறது. நாம் செய்யும் சேவையில் மற்றவர்களூக்கு உண்மையான லாபம் இருந்தாலும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால், அதைச் செய்யும்போது நமக்கே திருப்தியும், அமைதியும் உண்டாகின்றன. பிறருக்கு உபகாரமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனக்கே உபகாரமாக இருக்கிறது. நம்முடைய மனநிறைவுக்காகவே நாம் பிறரிடம் அன்பு காட்டுகிறோம் என்பது யக்ஞவல்க்ய மகரிஷி உபநிஷத் மூலம் அளிக்கும் போதனை. 

மகாபாரதத்தில் என்ன இருக்கிறது? பொறுமையின் வடிவமாக தருமபுத்திரர் இருக்கிறார். சத்தியமான பிரதிஞை என்பதற்கு பீஷ்மர் இருக்கிறார். தானத்துக்கு கர்ணன், கண்ணியத்துக்கு அர்ஜுனன். இதுபோல் இராமாயணத்தில் சகல தர்மங்களின் மூர்த்தியாக ஸ்ரீராமர் இருக்கிறார்.
பெண்களுடைய உத்தமமான தர்மத்திற்கு சீதை இருக்கிறாள். இராமனுக்கு நேர் விரோதியான இராவணனுக்கு மனைவியாக இருக்கும் மண்டோதரியும், சீதைக்குக் குறைவில்லாத மகாபதிவிரதையாக இருக்கிறாள். இராமாயண, பாரத கதைகளைக் கேட்கும்போது இத்தகைய உத்தம ஆத்மாக்களின் ஞாபகம் வருகிறது. 
--------------------------------------------------------------------- 

நம்முடைய தினசரி அலுவல்களில், நம்முடைய கடமைகள் யாவை, எது தருமம் போன்ற கேள்விகள் எழுந்து அவைகளுக்கு விடைபெற வேண்டியிருக்கிறது. நம்முடைய தருமம் எது?  அதற்கு மூலம் எது? 
தருமம் என்பது வாழ்க்கைக்கான ஒழுக்கம். த்ரும வழியில் செயல்பட வேதங்கள் விதித்திருக்கும் வழியில் செல்ல வேண்டும். வேதமே எல்லா தருமத்திற்கும் ஆதாரம். 

பண்பாடுடைய ஒருவன் உலகத்துக்கே உறவினனாகிறான். அவன் எல்லோருக்கும் நண்பன். ஒருவருக்கும் எதிரி அல்ல. அவனுக்கு மூவுலகம் தாய் நாடாகும். 

தன்னலமற்ற சேவை உணர்வு, தியாகம் செய்வதற்குத் தயாராக இருப்பது, கடவுளிடம் பக்தி, எல்லோரிடமும் அன்பு, நல்லெண்ணம் இவைகள் மேன்மையடைந்த மனதில் தோன்றுபவை,  இதற்குப் பண்பாடு என்று பெயர். சங்கீதம், சித்திரக்கலை போன்றவை அப்பண்பாட்டின் வெளித்தோற்றங்கள். 

நம்முடைய கர்மாக்களை கடவுளுக்கு அர்பணம் செய்வதன் மூலம் சித்த சுத்தி ஏற்பட்டு, வாழ்க்கையின் ஒரே குறிக்கோளான கடவுளை அறிவதற்கு வழி காணலாம். 

மௌனம் என்பது கடவுளை வணங்குவதற்கு ஒரு முக்கியமான முறை. மௌனம் என்றால் பேசாமலிருப்பது மைடுமல்ல. மனதை எண்ணமற்ற நிலையில் வைத்துக் கொள்ளும் ஒரு செயல்முறை. எலலாப்
புலன்களையும் நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு எந்த ஒரு அங்கமும் தானாகவேகூட அசையாமல் இருக்கவேண்டும். அத்தகைய மௌனம் நம் ஒவ்வொருவரின் இதயத்தில் இருக்கும் தெய்வீகமான பொறி இயங்கி பரமாத்மாவை நாம் அனுபவிக்க உதவும்.
பலவிதமான வழிபாட்டு முறைகளிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடம் என்னவென்றால், நம்முடைய க்ஷேமத்தின் பொறுப்பைக் கடவுளிடம் விட்டுவிட்டு நம்முடைய கடமையை நாம் செய்யவேண்டும். இது
செயலின்மைக்கோ அல்லது சோம்பேறித்தனமாக இருப்பதற்கோ ஆன தத்துவம் அல்ல. நம்முடைய பணிகளை கடவுளுக்கு அர்ப்பணம் செய்து செயல் படுத்துவதற்கான தத்துவம். 

நவீன விஞ்ஞான கருத்துக்கள் ஸ்ரீசங்கரரின் எல்லாமே இரு நிலையற்ற ஒன்றேதான் என்ற தத்துவத்திற்கு நெருங்கி வருகின்றன. இத்தகைய நவீன கருத்துக்கள் உலகில் சமாதானத்தைப் பற்றிய உணர்வு ஏற்பட வழிகோலும் உள்ளது ஒன்றுதான் என்ற தத்துவம் நன்றாக உணரப்பட்டு உலக மக்கள் அனைவரும் ஒரே ஆண்டவனின் ரூபங்கள் என்று அறிந்துவிட்டால் வித்தியாச மனப்பான்மை மறைந்துவிடும். 

ஒரு எதிரி நாடானாலும், அதிலுள்ள மக்களும் நாமும் ஒன்றே என்ற உணர்வு ஏற்படும். அவர்களுக்கு நேரும் துன்பம் தங்களுடையதே என்ற எண்ணம் எழுந்து உலக சமாதானத்தை நிலைநிறுத்த அஸ்திவாரம் போலாகும். 

சமீபகாலம் வரை, ஜடப்பொருள் வெவ்வேறு குணங்களுடைய மூலப்பொருள்களால் ஆனவை என்று கருத்தைக் கொண்டிருந்தனர். இப்போது, தனிப்பட்ட மூலப்பொருள்களுக்கிடையே வித்தியாசமில்லை
என்றும் எல்லாம் ஒரு சக்தியிலிருந்து உண்டானவை என்றும் சொல்கிறார்கள். 
ஆகவே, நவீன விஞ்ஞானிகள் வித்தியாசம் என்ற கருத்திலிருந்து எல்லாமே ஒன்று என்ற கருத்தை ஒப்புக்கொள்கிறார்கள். குறிப்பாக, ஐன்ஸ்டீன், ஸர் ஜேம்ஸ் ஜீன்ஸ், எடிங்டன் முதலானோர், ஸ்ரீ சங்கர பகவத்
பாதர்களின் அத்வைத சித்தாந்தத்திற்கு நெருக்கமாக வருகிறார்கள். நாம் காணும் பிரபஞ்சம் முழு உண்மையல்ல. ஒரு தோற்றமே என்று கூறி இரண்டாகவும் பலவாகவும் தோன்றும் வித்தியாசங்களை
மறுக்கிறார்கள். 

நாம் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளபோது காலத்திலோ, தூரத்திலோ நம்மிடமிருந்து பிரிந்திருப்பவர்களின் கவலைகள் நம்மை பாதிப்பதில்லை. நம்முடைய சென்ற கால துக்கங்களும் பின்நோக்கில் அவ்வளவு கடுமையாகத் தெரிவதில்லை. நம்முடைய விழிப்பு நிலையிலும், நம்முடைய கவலைகளும், துக்கங்களும் நம்மை பாதிக்காமலிருக்க பழகிக்கொள்ள வேண்டும். இன்பமோ, துன்பமோ நம்மை பாதிக்காமல் நம்முடைய கடமையைச் செய்ய வேண்டுமென்பதே உபநிஷத்துகள் கற்பிக்கும் பாடமாகும். தவத்தின் மூலமே இத்திறனை வளர்த்துக் கொள்ளவேண்டும். 

இவ்வளவு விரிவான சடங்குகள் எதற்கு? மௌனப்பிரார்த்தனை போதாதா?  என்ற கேள்வி எழலாம். சடங்குகளுடன் நிவேதனம் செய்வதின் உட்கருத்து என்னவென்றால் ஒரு பக்தன் எல்லாவற்றிற்கும் மூலமாக இருக்கும் ஒன்றையும் தான் அனுபவித்து இன்பம் பெறும் பொருள்களின் உள் தத்துவத்தையும் உணர்ந்து நன்றி செலுத்தும் வகையாக தான் அனுபவிக்கும் பொருள்களை முதலில் அந்த மூலத்திற்கு நிவேதனம் செய்கிறான். மிகவும் உயர்ந்தவைகளையும், மிகவும் பரிசுத்தமானவைகளையும் மட்டும்
ஆண்டவனுக்கு நிவேதனம் செய்ய வேண்டுமென்பதால் [நிவேதனம் செய்யப்படாத எதையும் அனுபவிக்கக்கூடாது]. 
இப்பழக்கம் ஒவ்வொருவரும் நிவேதனத்துக்கு உரியவைகளையே பெற்று அதன் மூலம் மகிழ்ச்சியடைய உதவும். நம்முடைய வாழ்க்கை பூர்ணமாகவும், பரிசுத்தமாகவும் அமைய இது மிகவும் உதவும். 

நமக்கு விருப்பமான ஒன்றோ அல்லது ஒரு நபரோ நம்மை விட்டுப் பிரிய நேர்ந்தால் அல்லது நாம் அவர்களிடமிருந்து பிரிய நேர்ந்தாலோ நாம் துக்கப் படுகிறோம். ஆகவே ஒன்றின் மீது ஆசை வைத்த அதே நேரத்தில் துக்கத்திற்கு விதை அம்மதம் மங்க விதைக்கப்படுகிறதென்று தெரிகிறது.
நாம் பற்றுதல் கொண்ட பொருள்களிடமிருந்து மரணம் நம்மைக் கட்டாயமாகப் பிரித்து எல்லோருக்கும் துக்கத்தைத்தான் விளைவிக்கிறது. 

பழுக்காத ஒரு மாங்காயைப் பறித்தால் அதிலிருந்தும், அதன் காம்பிலிருந்தும் [பிரிவால் கண்ணீர் விடுவதுபோல்] பால் சுரக்கிறது. அது பழுத்துவிட்டால் தானே காம்பிலிருந்து பிரிந்து விழுந்து விடுகிறது. [கண்ணீர் விடுவதில்லை]. அதுபோல் மரணம் நம்மை அழைக்கும்போது வருத்தமின்றி இந்த உலகத்தை விட்டுச் செல்லும் திறனை வளர்த்துக் கொள்ளவேண்டும். 

ஒவ்வொரு சாஸ்திரத்தை ஏற்படுத்தியவருக்கும் ஆச்சாரியர் என்று பெயர். ஆச்சாரியர் என்பவர் சாஸ்திர அர்த்தங்களை பிறருக்கு விளக்கிக் கூறி, தானும் அவைகளின்படி செயல்பட்டு மற்றவர்களையும் அந்த ஆசாரங்களில் நிலை நிற்கச் செய்பவர். 

நம்முடைய பாபங்களைக் கழித்துக்கொண்டு வாழ்க்கையின் குறிக்கோளை விமோசனம் பெற மதம் வழிமுறைகளைத் தருகிறது. 

தருமம் நம்முடைய மதம் என்னும் மரத்தின் வேர்;  பக்தியும் ஞானமும் அதன் மலர்கள், பழங்கள். அந்த வேர் காய்ந்து போகாமல் பாதுகாப்பது நம் கடமை. மிகப் பரவலான கருத்தொற்றுமையின் அடிப்படையில்
தருமத்தைப் பாதுகாப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு ஓரளவு தியாகம் தேவைப்படுகிறது. 
அரசாங்கத்துக்கு நாம் செலுத்த வேண்டிய வரியை ஒரு வரி வசூல் செய்யும் அதிகாரியின் மூலம் செலுத்துவது போன்று ஈசுவரனுக்கு நாம் செய்யும் நிவேதனங்கள் தனிப்பட்ட காரியங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட அந்தந்த தெய்வங்களின் மூலம் ஈசுவரனை அடைய வேண்டியிருக்கிறது. இந்த அம்சம் நம்முடைய மதத்தைப் பிற மதங்களிலிருந்து வேறுபடுத்துகிறது. 

ஒரு ஜாதி மற்றொரு ஜாதியை விட உயர்ந்தது என்ற பேச்சுக்கே இடமில்லை. எந்த ரிஷிகள் பிராமணர்களுக்கு மூலமோ அந்த ரிஷிகளின் வாழ்க்கை முறைக்கு பிராமணர்கள் திரும்பினால் மட்டுமே இந்த உயர்வு, தாழ்வு மனப்பான்மை மறையும். அவ்வாறு செய்வதன் மூலம் நாம் பாபச் செயல்களிலிருந்து விலகி ஈசுவரனின் அருளுக்குப் பாத்திரமாகி உலக நன்மைக்கு நம்மால் முடிந்ததைச் செய்ய முடியும். 

தலையில் குடத்துடன் நடனம் ஆடுபவள், சங்கீதத்திற்கும் தன்னுடைய விதவிதமான அங்க அசைவுகளுக்குமிடையே தலையிலுள்ள குடத்தை ஒருகணம் கூட மறப்பதில்லை. அவ்வாறே
நம்முடைய தினசரி வாழ்க்கையின் செயல்களுக்கிடையே நம்முடைய வாழ்க்கையின் குறிக்கோளை
மறக்கக்கூடாது. 

ஆண்மீக விஷயங்களில் உள்ள கட்டுப்பாடு இராணுவத்திலுள்ள கட்டுப்பாட்டைவிட கடுமையானது. வாழ்க்கையின் குறிக்கோளை நாம் அடையவேண்டும் என்றால் ஒழுங்கு முறைகளுக்கு கட்டுப்பட்டுதான் ஆகவேண்டும். அவ்வாறிருந்தால் நாம் யாரிடமும் அச்சம் கொள்ளத் தேவை இல்லை. நம்முடைய வாழ்க்கைத் தூய்மை உலகோரின் மதிப்பையும் மரியாதையையும் பெற்றுத் தரும். 
சமய நூல்களில் கூறப்பட்டவைகளை உங்கள் கருத்துக்கேற்ப திரிக்காதீர்கள். அவைகளை சரியாகப் புரிந்து கொண்டு, பக்தி சிரத்தையுடனும், நம்பிக்கையுடனும் அதன்படி நடக்கவேண்டும். சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யுங்கள். முடிந்தவரை அல்ல, முழுமையாக சாஸ்திரத்தில் நமக்கு இடப்பட்டவைகள் நம்முடைய சித்தத்தை சுத்தப்படுத்தி பாபங்களைப் போக்கும். அவ்வாறு சுத்தப்படுத்தப்பட்ட இருதயத்தில் கடவுள் தோன்றி உயர்ந்த ஆன்மீக அனுபவத்திற்கு வழி காட்டுவார். அந்த நிலையை அடைந்துவிட்டால் எந்த விதமான வித்தியாசங்களும் இல்லை. 
---------------------------------------------------------------------------- 
கடவுள் பக்தி, உண்மை பேசுதல் பிறருக்கு உதவி செய்வது போன்ற அடிப்படைக் கோட்பாடுகளில் மதங்களுக்கிடையே எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. அந்தந்த மதத்தலைவர்களின் அனுபவத்தில் பிறந்த சில கொள்கைகளிலும் ஆசாரங்களிலும் முக்கியமாக மதங்களுக்கிடையே வேறுபாடு உள்ளது. 

நம்முடைய சந்தேகங்களுக்கு வேத சாஸ்திரங்களிலிருந்து விளக்கம் கிடைக்கவில்லை எனில், சாஸ்திரம் அறிந்து அதன்படி நடக்கும் பெரியோர்களின் வழியை நாமும் பின்பற்றவேண்டும். அத்தகைய வழிகாட்டுதல் கிடைக்காவிடில் ஆசையையும், அகங்காரத்தையும் வென்று தூய உள்ளம் கொண்ட நல்லவர்கள் வழியில் நாம் செல்ல வேண்டும். இதுவும் இல்லையெனில், நாம் நம்முடைய மனசாட்சியின்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று சாஸ்திரம் அறிவுறுத்துகிறது. 

கெட்ட எண்ணங்களாலும், தகாத ஆசைகளாலும் கோபம் போன்ற தீவிர உணர்ச்சிகளாலும் நாம் விழித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நேரமும் நம் மனம் அசுத்தமடைகிறது. நம் மனதை தினமும் சுத்தப்படுத்த வேண்டியது நம் கடமை. இதனால் மன அழுக்குகள் மேன்மேலும் சேராமலிருக்கும். சித்த மலத்தைக் கழுவ வல்ல ஒரே நீர் தியானம். 

------------------------------------------------------------------------------- 
சமநிலையில் உள்ளவர்களுக்கிடையே காணும் அன்புதான். நட்பு, கடவுளிடமும், மேல் மட்டத்தில் உள்ளவர்களிடமும் காட்டும் அன்பு. பக்தி நமக்குக் கீழ்ப்பட்டவரிடம் காட்டும் அன்பு க்ருபை எனப்படும். எல்லோரிடமும் அன்பு என்னும் அஸ்திவாரத்தின் மீது வாழ்க்கை என்னும் உயர்ந்த கட்டிடத்தை நிர்மாணிக்க வேண்டும். தர்மமே நம்முடைய வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்க வேண்டும். 

நம்முடைய மனநோய்களைத் தீர்ப்பதற்கு நமக்கு கடவுளின் அருள் வேண்டும். நம்முடைய மனதிலிருந்து கோபம், வெறுப்பு, பேராசை, காமவெறி இவைகளை விரட்ட வேண்டுமானால் மனதை அன்பால் நிரப்ப வேண்டும். ஒவ்வோருவர் உள்ளத்திலும் கடவுள் குடிகொண்டிருக்கிறார். நம்முடைய சுயநலத்தினாலும் மற்ற ஆசாபாசங்களாலும் அவர் பின்னுக்குத் தள்ளப் படுகிறார். அன்பு வழியாக அவைகளை அகற்றி மனதை அன்பினால் நிரப்பினால் அது கடவுள் குடி கொள்வதற்குத் தகுதியாக தூய்மை பெறும். 

கடவுள் நாமத்தை விடாமல் உச்சரிக்க நாவைப் பழக்கப்படுத்த வேண்டும். நாம் விழிப்பு நிலையில் இருக்கும்போது எதை நினைக்கிறோமோ அதையே நாம் கனவில் பார்க்கிறோம். அதுபோலவே விடாமல் கடவுள் நாமத்தை எப்போதும், எந்த சூழ்நிலையிலும் உச்சரித்துக் கொண்டிருந்தால், மரணத் தருவாயில் தானாகவே கடவுளை அழைக்க முடியும். மரணத் தருவாயில் கடவுளை நினைவு கூர்வதென்பது இயலாத காரியம். 

உடற்பயிற்சிகள் தேகத்தின் தசைகளை வலுவாக்குவதுபோல் அடிக்கடி மந்திரங்களை உச்சரிப்பது நம்முடைய நரம்பு, நாடிகளை பலம் பெறச் செய்கிறது. இதனால் சித்தம் சுத்திபெற்று, நம்முன் கடவுள் தங்கும் இடம் தூய்மை பெறுகிறது. நடத்தையாலும் ஆசார அநுஷ்டானங்களாலும் தகுதி பெற்றவர்கள் மந்திரங்களை அறிந்து அவைகளைப் பயனுள்ள வகையில் உபயோகிக்கவும், காப்பாற்றவும் முடியும். 
----------------------------------------------------------------------------- 
வரதக்ஷணை நிகழ்காலத்தில் பிரச்சனைகளை உண்டாக்குவதோடு, எதிர்காலத்தில் நம்முடைய சமூகம் வீழ்ச்சியடைய வழிகோலுகிறது. நம்முடைய சமூகத்தின் மீதும், கலாசாரம், தர்மங்களின் மீதும் நல்லெண்ணம் கொண்டவர்கள் வரதக்ஷணை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். நம்முடைய நாட்டின் சுதந்திரத்திற்காக எத்தனையோ தியாகங்கள் செய்து, கஷ்டங்களை அனுபவித்த நாம், நம்முடைய தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக வரதக்ஷணையை தியாகம் செய்ய முடியாதா? 

இந்த வாழ்க்கையில் நலம் அடையக்கூடிய நிரந்தர செல்வம் பக்தி ஒன்றே. ஆகவே, பாகவதம், புராணம் போன்றவைகளைக் கேட்டு பக்தியை விருத்தி செய்துகொள்ளும் சந்தர்பங்களை நழுவ விடக்கூடாது. 
-------------------------------------------------------------------------------- 
பொருளாதாரத்திற்கான நியதிகள் நாம் வாயால் பேசுவதற்குப் பொருந்தும். கட்டுப்பாடற்று பேசுவது மனஸ்தாபங்களுக்கும், தொல்லைகளுக்கும் வழி வகுக்கும். நமக்கு ஆன்மீக ரீதியில் நன்மை பயக்கக்கூடிய பேச்சாலோ அல்லது பிறர் மனம் நோகாவண்ணம் பேசும் பேச்சாகவோ இருந்தால் நமக்கு ஏற்படும் பல தொல்லைகளைத் தவிர்க்கலாம். இது நம்முடைய செய்கைகளுக்கும் பொருந்தும். 
நாம் உலக ரீதியாக பயன் பெறுவதற்காக கடவுளிடம் பக்தி செலுத்தினால், அது பக்தியாகாது. பண்டமாற்று வியாபாரமாகும். நம்முடைய ஆன்மீக உயர்வுக்காக பக்தி செலுத்தினால் ஒரு நதி சமுத்திரத்தை அண்டும்போது அதன் ஓசையும், வேகமும் அடக்கி சாந்தப்படுவதைப் போல நாமும் சாந்தியைப் பெறுவோம். தனக்கு வெளியிலே, தன்னைத்தவிர ஒன்று இருப்பதாகக் கருதி, ஆனந்தத்தைத் தேடி அந்த ஒன்றிடம் பக்தி செலுத்துகிறான். தன்னையே ஒருநாள் அறிந்து கொள்ளும்போது தானும் கடவுளும் வேறல்ல ஒன்றுதான் என்ற உணர்வு ஏற்படும். 

கடந்த காலங்களில் எத்தனையோ சோதனைகளை சந்தித்த போதிலும் நம்முடைய மதம் இன்றுவரை தழைத்திருப்பதற்கு நம்முடைய கோவில்களும், அவைகளில் நடைபெறும் உற்சவங்களும் காரணம். வேதங்களில் கூறப்பட்ட ஆன்மீகக கொள்கைகளும் ஒழுங்கு முறைகளும், நன்னெறிகளும் புராணங்கள் வழியே மக்களிடையே பரவி இன்று நிலவுகின்றன. அவை அடிப்படை உண்மைகளை நம் மனம் ஏற்கும்படி கூறுகின்றன. பொக்கிஷம் போன்ற இந்த மத நூல்களைப் படித்து, ஆராய்ந்து நாமும் நன்மை பெற்று உலகும் நன்மை பெறச்செய்வோமாக. 

சாதாரண மக்களுக்கான அவ்வளவு கடினமில்லாத தவம் பிருஹதாரண்யக உபநிஷத்தில் கூறப்பட்டிருக்கிறது. நமக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டால் அது நாம் தவம் செய்வது போன்று விரதம் இருப்பது, வலியைத் தாங்கிக் கொள்வது, குளிர் காய்ச்சல் போன்றவைகளை பொறுமையுடன் அனுபவிப்பது முதலியவற்றுக்கு கடவுள் அளித்த ஓர் வாய்ப்பு என்று எண்ணி உடல் உபாதையை வரவேற்க வேண்டும். நோய்வாய்ப்பட்டால் அது நாம் நம்முடைய தேவைகளை மறந்து கடவுளை நினைக்க வாய்ப்பு என்று எண்ண வேண்டும். அவ்வாறு நினைத்தால், நம்முடைய கடமைகளை ஆண்டவனுக்கு அர்ப்பணிக்கும் வகையில் செய்ய நாம் அறிந்து கொள்வோம். 

துன்பத்தைப் பற்றி வருந்திக் கொண்டிருப்பது மதத்தின் வழியாகாது. நாம் சங்கடமான நிலைமையில் இருக்கும்போது தீய எண்ணங்கள் நம் மனதில் புகாமல் இருக்க பிரார்த்தனை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் சமாளிக்கும் திறமை வலுப்பெற்று துன்பமே அர்த்தமற்றதாகிவிடும். அத்தகைய நோக்கு ஞானத்தில் பிறப்பதாகும். ஒவ்வொருவரும் தத்தம் முயற்சியாலேயே ஞானத்தை அடைய வேண்டும். ஆகவேதான், நம் மதம் தனி மனிதனை அடிப்படையாகக் கொண்டது. நம்மைச் சேர்ந்த, நாம் செய்யும் ஒவ்வொன்றையும் ஆண்டவனுக்கு அர்பணித்துவிட்டால் சக துக்கங்களால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான சமமான மனநிலையை நாம் பெறலாம். 
-------------------------------------------------------------------- 
நமக்கு சம்பந்தப்பட்டவைகளையும் நாம் செய்யும் அனைத்துக் காரியங்களையும் கடவுளுக்கு அர்ப்பணித்து விட்டால், நாம் மகிழ்ச்சியாலோ, துக்கத்தினாலோ பாதிக்கப்படாமல் மனதில் சம நிலையை அடைய முடியும். 

ஒரு மதத்தின் வலிமை அதை அனுசரிப்பவர்களின் எண்ணிக்கையப் பொறுத்ததல்ல. இந்து மத கொள்கைகளின்படி வாழ்ந்து காட்டுபவனே இந்து மதத்திற்கு சிறந்த பிரசாரகனாகிறான். 
அப்படிப் பட்டவர்களால்தான் நம் மதம் இன்று தழைத்திருக்கிறது. 
இந்து மதத்தில் தோன்றிய மஹான் கள் தங்களுடைய உபதேசங்களால் மக்களை உயர்நிலைக்குக் கொண்டு வருவதாகவோ அல்லது அவர்களை உய்விப்பதாகவோ சொல்லிக் கொள்ளவில்லை.
அவர்களுடைய பரிசுத்தமும், கொள்கைகளும் அதன்படி அவர்கள் நடத்திய வாழ்க்கையும் அவரைஅண்டியவர்களுக்கு ஆன்மீகக் கல்வியாக அமைந்தது. தான் பரிசுத்தமாக இல்லாத ஒருவர் ம்ற்றவர்கள் அவ்வாறு இருக்க வேண்டுமென்று உபதேசம் செய்ய முடியாது. 

வேதங்கள் நம்முடைய மதத்தின் வேர்கள். பண்டிகைகளும், விருந்துகளும், மற்றவைகளும் அம்மரத்தின் பூக்களும், கனிகளும் போல, அவைகளுக்கும் வேதம் என்ற வேர் தேவைப்படுகிறது. மண்ணில் புதைத்திருந்தாலும் அந்த வேர்கள் மரத்தின் பூக்களையும் கனிகளையும் போல மணத்துடனும் எப்போதும்
புதுமையாகவும் இருக்கின்றன. வேத அத்யயனமும் வெதத்தை தினசரி சாஸ்திர சடங்குகளில் உபயோகப் படுத்துவதும் நமக்கு மிக முக்கியம். இதற்கு வேதங்களை மனப்பாடம் விதிப்படி ஓதவேண்டும். 

கல்யாணங்களில் சொல்லப்படும் மந்திரங்களின் அர்த்தம் தெரியாததால் இளைஞர்களும், பெண்களும் அது பற்றி அசட்டையாக இருக்கின்றனர். மந்திரங்களின் அர்த்தங்களை விஷயம் தெரிந்த ஒருவர் கல்யாணத்திற்கு முன்பே விளக்கிச் சொல்லிவிட்டால், மணமக்கள் புரிந்து கொண்டு அக்கறையுடன் சடங்குகளைச் செய்வார்கள். இதே முறையை உபநயனம் மற்றும் இதர ஸம்ஸ்காரங்களுக்கும் கையாளலாம். 
ஒரு நாள் ஒரு பாலத்தின் ஒரு வளைவின் கீழ் நின்று மற்ற வளைவுகளைப் பார்த்தால் அவை தான் நின்று கொண்டிருக்குமிடத்திலுள்ள வளைவைவிட சிறிய வைகளாக தெரியும். ஆனால் பாலத்தின் எல்லா வளைவுகளும் ஒரே அளவானவை என்று நமக்குத் தெரியும். 
அதுபோல் ஒரு தேவதையிடம் பக்தி கொண்ட ஒருவனுக்கு மற்ற தேவதைகள் கீழானவைபோல் தோன்றும். வினாடியும் தன்னுடைய தேவதையிடம் தான் கொண்ட அபிமானத்தால் அவ்வுணர்ச்சி ஏற்படுகிறது. ஆனால் எல்லா தெய்வங்களுமே கடவுளின் விதவிதமான தோற்றங்களே

No comments:

Post a Comment