Friday, September 2, 2016

Kanda sashti kavacam

*ஸ்ரீ கந்த சஷ்டி கவசம்*
பூனை மயிரும், பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீள் முடிமன்டையும்
பாவைகளுடனே பலகல சத்துடன்
மனையில் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும், ஒட்டிய பாவையும்(115)
காசும் பணமும், காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றான் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனைக் கண்டால் கலங்கிட(120)
*பதவுரை*
*பூனை மயிரும்*- பூனைகளின் உடலின் மேல் உள்ள உரோமமும், *பிள்ளைகள் என்பும்*- இளங்குழந்தைகளின் எலும்புகளும்,
*நகமும் மயிரும்*- அக்குழந்தைகளின் நகங்களும், உரோமங்களும் *நீள்முடி மண்டையும்*- நீண்ட தலைமுடியை உடைய மண்டை ஓடுகளும்,(இவையன்றி)
*பாவைகளுடனே* - (மேலே கூறப்பட்ட) இளங் குழந்தைகளின், உடல் உறுப்புகளைக் கொண்டு செய்யப்பட்ட பதுமைகளுடன், *பல கலசத்துடன்*-மண்ணால் செய்யப்பட்ட கலச பானைகளுடனும்,
*மனையிற் புதைத்த*- இல்லங்களில் ஒருவரும் அறியா வண்ணம் புதைக்கப்பட்டுள்ள *வஞ்சனை தனையும்*- வஞ்சனைமிக்க மந்திரச் செயல்களும்,
*ஒட்டியச் செருக்கும்*- இதைப் போன்ற மந்திரச் செயல்களின் மயக்கங்களையும், *ஒட்டிய பாவையும்* – இது போன்ற மந்திரச் செயல்களால் செய்து வைத்த பதுமைகளும்,
*காசும் பணமும்*- மாந்தீரிகச் செயல்களுக்காக, பதுமைகள் செய்து அவைகளுடன் மாந்தீரிகம் செய்து வைக்கப்பட்ட காசுகளும்,பணம் எனும் நாணயமும், *காவுடன் சோறும்*- பலி கொடுக்கப்பட்ட இரத்தத்துடன் கலந்து செய்து வைத்த சோற்று உருண்டைகளும்,
*ஓதும் அஞ்சனமும்*- மாந்திரிக நூல்களில் கூறப்பட்டுள்ள, மையிட்டு கொடுமைபுரியும், "அஞ்சனமுறையும்" * வழி போக்கும்*- கொடுமை விளைவிக்கும் செயல்களையே நாடிச் செல்லும் மாந்திரீகச் சக்தியாகவும்,
*அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட*- உம்முடைய அடியேனாகிய என்னைக் கண்ட அளவிலே, அத்தீய சக்திகள் நிலை தடுமாறி அழிந்து விட வேண்டும்,
*மாற்றார்,வஞ்சகர்*- பகைவர்களும், வஞ்சக எண்ணம் கொண்டவர்களும் *வந்து வணங்கிட*- என் முன்னே வந்து என்னை வணங்கிட வேண்டும்,
*காலதூதாள்*- உயிர்களைக் கவர்ந்து செல்லும் காலனின் தூதுவர்கள். *என்னைக் கண்டால் கலங்கிட*- என்னைக் கண்ட மாத்திரத்தில் நிலை குலைந்து விடவும்.
என்னைக் கவர்ந்து அருள் புரிவாயாக...
*ஓம் ஸ்ரீ ஆறுமுகனே போற்றி*......

பா.சிவகணேசன்

No comments:

Post a Comment