சங்கரர் சொத்து சகலருக்கும் சொந்தம்
ஆதிசங்கரர் நமக்கு வைத்து விட்டுப் போன சொத்து ஏராளம். அதில் ஒரு துக்குணியூண்டு எடுத்து தருகிறேன். இது கிருஷ்ணாஷ்டகம் என்று 8 குட்டி ஸ்லோகங்கள். குட்டி கிருஷ்ணன் மீது ஸ்லோகங்களும் குட்டியாகத்தானே இருக்கவேண்டும்.
பழைய ஒரு வீடு. அதில் இரு ஆசாரமான தம்பதியர். அவர் பெயர் சிவகுரு. அவர் மனைவி ஆர்யாம்பா. மலையாள தேசத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு ஏழைப் பிராமண குடும்பம். பல வருஷங்கள் தாம்பத்ய வாழ்க்கையில் ஒரு தீராத குறை, இருவர் மனத்திலும். பிள்ளையில்லையே! . திரிச்சூர் சென்று வடக்குநாதனை வேண்டினால் கைமேல் பலன் கொடுப்பானல்ல்லவா?. மகாதேவா, எங்களுக்கு ஒரு மகனைத் தருவாயா?
மகாதேவன் வேண்டியவர்க்கு வேண்டியதை வேண்டாமலேயே தருபவனாச்சே. திரிசூரில் ஒரு மண்டலம் தங்கி தினமும் புஷ்கரணியில் ஸ்நானம் செய்து விரதமிருந்தனர் இருவரும்.
ஆர்யாம்பா கனவில் ஈஸ்வரன் தோன்றினான். ''உன் வயிற்றில் பிள்ளையாய் நானே வருவேன்'' என்றான். எவனோ, பெயர் சொல்ல ஒரு மகன் வேண்டும் என்று வாடும்போது சிவனே நானே உன் மகன் என்றால் எப்படியிருக்கும் என்று இந்த சிவன் எழுதப்போவதில்லை. மனதில் நினைத்தால் இனிக்கும் அந்த இன்பம் எழுத்தில் வருமா?
ஈஸ்வரனை பொருத்தவரை இது ஒரு தக்க தருணம் எனலாம். ஏனென்றால் இது நிகழ்ந்த காலத்தில் நிரீஸ்வரவாதிகள் பெருகி, கொஞ்சம் கொஞ்சமாக பௌத்தம் இந்து தார்மீகத்தை விழுங்கி வந்தது.
''சனாதன தர்மத்தை பின்பற்றுவர்கள் தக்க துணையின்றி, சாய்ந்து கொள்ள ஒரு பக்க பலமின்றி திணறுகிறார்களே. உடனே நீங்கள் ஏதாவது செய்து இந்து தார்மீகத்தை புனருத்தாரணம் செய்யவேண்டும் என்று பிரம்மாதி தேவர்கள் சதாசிவனை வேண்ட அந்த தக்ஷினாமூர்த்தி யாமே அவதரிப்போம்'' என்று வாக்களித்தார். எனவே ஆரியம்பா கனவில் கண்ட சிவன் பிள்ளையாய் பிறந்தான், சிவனின் பெயரான சங்கரன் (சம்: மங்களம், கரன்: தருபவன்). பெயருக்குத் தகுந்தபடி சகல சந்தோஷத்தையும் தந்தான். சாஸ்திரம் சகலமும் கற்றான். இனி கற்க ஒன்றுமில்லை என்ற நிலை வந்ததோ என்னவோ அந்த அவதாரபுருஷனுக்கல்லவோ தெரியும். வந்த கார்யம் சடுதியில் நடக்க ஆயத்தமாகக் கூட இருக்கலாம். சன்யாசம் கொள்ள மிக்க விருப்பம் உண்டாயிற்று. பால் மனம் மாறாப் பாலகன் என்று கூட சொல்லும் ஏழு வயதில் இப்படி ஒரு ஆசை. ஒரு சந்தர்ப்பத்தை உண்டு பண்ணிக்கொண்டு சந்நியாசியாகி சங்கரன் தனது குருவைத் தேடி புறப்பட்டுவிட்டான்.
பாதசாரியாக பல தேசங்கள், வனங்கள், எல்லாம் கடந்து நர்மதை நதிக்கரையில் தனது குரு கோவிந்த பாதரை தரிசித்து வணங்கினார் சங்கரர்.
அதன் பிறகு எத்தனையோ அனுபவங்கள், அத்வைத வேதாந்த பிரகடனம். எதிர்த்தோர்களுடன் வாத, விவாதங்கள். சகலத்திலும் வெற்றி. தோற்றவர்கள் சீடர்களாகவும் ஆனார்கள். ஷண்மத ஸ்தாபனம். நான்கு மடங்கள் உருவாயின.
எண்ணற்றோர் வியந்தனர். சைவம் துளிர்விட்டு வளர்ந்து விரைவில் நாடெங்கும் நான்கு திசையிலும் பரவி மிகப்பெரிய விருக்ஷமாகியது. எத்தனையோ வேத, வேதாந்த, உபநிஷத்துக்கள், பாஷ்யங்கள் சங்கரரால் தோன்றின. காற்றில் சமஸ்க்ரிதம் மணத்தோடு நிறைந்தது.
எங்கோ பனிமலையில் சங்கரர் தம் பணியை நிறைவேற்றிக்கொண்டிருக்க தனியே மலையாள தேசத்தில் ஒரு தாய் வயதான காலத்தில் தினமும் பூர்ணா நதியில் ஸ்நானம் செய்து தனது குடும்ப தெய்வமான கிருஷ்ணனை வழிபாட்டு, மகன் சங்கரனையும் இடைவிடாது நினைத்துவந்தாள். அவள் மனதில் கிருஷ்ணனும் சிவனும் ஒன்றாகவே இடம் பெற்றார்கள். பிரிக்க முடியாதவர் களல்லவா இருவரும்.
ஒருநாள் ஆற்றுக்குப் போகும் வழியில் கிழவி தடுக்கி விழுந்தாள். பிறகு அவளால் வழக்கமான ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடக்க முடியவில்லை. ''என் நெஞ்சில் குடிகொண்ட கிருஷ்ணா, என் ஆருயிர் மகனே சங்கரா, என்னால் தினமும் ஸ்நானம் செய்ய போக முடியவில்லையே, எப்படி ஆசாரத்துடன் வழிபடுவேன்.?
பக்தியோடு வருத்தம் தோய்ந்த தாயின் தீனமான குரல் இருவருக்குமே கேட்டது.
சங்கரர் கிருஷ்ணனை நினைத்தார். கிருஷ்ணன் தோன்றினான். அம்மாவின் குறை சொல்லப்பட்டது.
''ஏற்கனவே தெரியுமே'' என்றான் கிருஷ்ணன்.
''என்ன செய்வது சொல் கிருஷ்ணா ''
''நீயே ஆற்றின் போக்கை மாற்றி தாயின் குறை போக்க வழியை உண்டாக்கு " என்றான் கிருஷ்ணன்.
''சரி, அப்படியென்றால் ஆற்றை இப்படி போகும்படியாக மாற்று'' - சங்கரரின் கால் தரையில் ஒரு வரைபடம் மண்ணில் வரைந்தது. வரைபடம் போலவே பூர்ணா தாயின் புழக்கடையில் ஓடினாள். அதிசயம் ஊரில் அடங்கவில்லை. நதி தனது போக்கை சங்கரர் வீட்டுப் பின்புரம் வரை மாற்றிக்கொண்டது சாதாரண விஷயமா?
சாசலம் என்ற பெயர் கொண்ட அந்த கிராமம் சங்கரர் காலடியில் உருப்பெற்ற நதியின் போக்கால் 'காலடி'' என்ற பெயர் பெற்ற. விவரம் இது தான். கிருஷ்ணனின் லீலையில் மகிழ்ந்து சங்கரர் மனம் பக்தியில் பொங்கியது.
நதி புறப்பட்டது போலவே கிருஷ்ணாஷ்டகம், அச்சுதாஷ்டகம் எல்லாம் அற்புதமாக பக்தி ரசம் சொட்ட சொட்ட சங்கரர் நாவில் புறப்பட்டு நமக்குக் கிடைத்துவிட்டது. சங்கரரின் தாய் வணங்கிய கிருஷ்ணன் கோவில் அந்த வீட்டிலேயே சங்கரரால் ஸ்தாபனமாகியது. இன்றும் நாம் காலடியில் அந்த கோவிலை பார்த்து கிருஷ்ணனை வணங்கலாம்.
அந்த புகழ் வாய்ந்த சங்கரர் போற்றிப்பாடிய கிருஷ்ணாஷ்டகம் எட்டு சிறிய எளிய சமச்க்ரித ஸ்லோகங்கள், ஏற்கனவே உங்கள் எல்லாருக்கும் தெரிந்தது, நீங்கள் அடிக்கடி கேட்டது, பாடியது, பாடப்போவது இது தான் :
வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தனம் |
தேவகீ பரமானந்தம் க்றுஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||
என்ன சொல்கிறார் ஆதி சங்கரர்? எல்லா லோகங்களிலும் கிருஷ்ணன் தான் ஜகத்குரு. ஏனென்றால் அவன் ஜகத் காரணம் என்பதால்! ஹே! கிருஷ்ணா, தேவகி வசுதேவருக்கு மட்டுமே கண்ணுக்கு கண்ணாகப் பிறந்தவனா நீ? கண்ணா என்று உளம் மகிழ்ந்து உன்னை நெருங்கும் எண்ணற்ற கோடி உயிர்களுக்கும் அல்லவோ சொந்தம்!. தேவகிக்கு மட்டுமா நீ பரம ஆனந்தம் ? எங்கள் சந்தோஷத்தை எழுத யாராலும் முடியாது என்பதால் தேவகியின் சந்தோஷத்தோடு மட்டும் சங்கரர் நிறுத்திக்கொண்டிருக்கிறார்.. கம்சன், சாணூரன் என்று வெளியே உலவிய அரக்கர்களை கொன்றது போதாது. அவர்களைக்காட்டிலும் பலம் வாய்ந்த மல்லர்கள், ராக்ஷசர்கள், காமம், குரோதம், மோகம், மதம் என்றெல்லாம் பெயரோடு எங்களுக்குள்ளே மறைந்திருக்கிறார்களே. அவர்களையும் மர்த்தனம் செய்யேன்? )
அதஸீ புஷ்ப ஸங்காஶம் ஹார னூபுர ஶோபிதம் |
ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||
அழகுக்கு அழகாய், மலர்களைத் தூவி, மாலை கட்டி சூடி, கையில் காலில் எல்லாம் பளபளக்கும் தங்க நகைகள் பூட்டி, மரகத, மாணிக்க வைர வைடூர்ய கற்கள் பதித்த கைவளை குலுங்க ஒரு குழந்தை காணப்பட்டால் எந்த மனம் தான் கொள்ளை போகாது? எங்கள் மனம் மட்டும் என்ன கல்லோ? கிருஷ்ணா, உன்னை நாங்கள் எங்கள் இதயத்தில் பூட்டி வைத்துள்ளோம் -- சிக்கெனப் பிடித்தோம்.
குடிலாலக ஸம்யுக்தம் பூர்ணசந்தர னிபானனம் |
விலஸத் குண்டலதரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||
(குட்டி கிருஷ்ணா, மூர்த்தி சிறிதானாலும் உன் கீர்த்தி பெரிது, நீ ஜகத் குரு , உன் கரிய, சுருண்ட, கேசத்தை, வர்ணிப்பதா, காதில் ஆடும் குண்டலத்தை மெச்சவா? பூரண சந்திரன் தோற்கும் பிரசன்ன முக மண்டலத்தைப் பாடுவதா? ஒன்றுமே தெரியாததால் பேசாமல் இருந்து வெறுமே கை கூப்பி உன் காலடியில் விழுந்து என்னை உனக்கு அர்பணிக்கிறேன், என்னுள் எல்லாமே நீ தானே ? )
மந்தார கந்த ஸம்யுக்தம் சாருஹாஸம் சதுர்புஜம் |
பர்ஹி பிம்சாவ சூடாங்கம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||
(ஹே, லோக சம்ரக்ஷண மூர்த்தி, ஜகத்குரு, எங்கிருந்து கற்றாய், உன் அழகிய மயில் பீலி சூட? அதனால் உன் புன்சிரிப்பின் அழகு கூடியதா? அல்லது உன்னைச் சுற்றி கமகமக்கும் நீ சூடிக்கொண்டிருக்கும் மந்தார புஷ்பம் தான் எங்களது மனத்தைக் கொள்ளை கொண்டதா? யாருக்கையா விடை தெரியும் ?)
உத்புல்ல பத்மபத்ராக்ஷம் நீல ஜீமூத ஸன்னிபம் |
யாதவானாம் ஶிரோரத்னம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்||
ஆதி சங்கரரால் தான் இப்படியெல்லாம் வர்ணிக்கமுடியும். சாதாரணன் எடுத்துச் சொல்ல முடியுமா? கண்களோ அன்றலர்ந்த தாமரை மொட்டுக்கள், நிறமோ, நீலமேகஸ்யாமம். யாதவ குல திலகம் ! நீ பக்தர் குலத்திற்கும் ஜகத்திற்கும் தலைவன், தெய்வம், குரு அல்லவா?)
ருக்மிணீ கேளி ஸம்யுக்தம் பீதாம்பர ஸுஶோபிதம் |
அவாப்த துளஸீ கந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||
சங்கரர் துவாரகை கிருஷ்ணனை நினைவு கூறுகிறார். யாரைக் காண்கிறார்? ருக்மணியுடன் சல்லாபிக்கிறான் மாயக்ரிஷ்ணன். அவனது மஞ்சள் நிற பட்டாடை கண்ணையும் மனதையும் கொள்ளை கொள்கிறதே. அவர்கள் இருக்கும் அந்த பகுதியே துளசியின் ஈடற்ற நறுமணத்தை காற்றில் பரப்பி நெஞ்சையு நிரப்புகிறதே. கிருஷ்ணா உனக்கு நமஸ்காரம்)
கோபிகானாம் குசத்வம்த குங்குமாங்கித வக்ஷஸம்
ஶ்ரீநிகேதம் மஹேஷ்வாஸம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||
(கோபி கிருஷ்ணா,உன்னைச் சுற்றிலும் எங்கும் உபனிஷத்துக்களே உருவெடுத்த கோபிகள், மார்பில் ஸ்ரீ (லக்ஷ்மி) குடிகொண்ட ஸ்ரீ னிவாசா, உன் கையில் என்ன ஒரு வில், அதற்குப் பெயர் தான் சார்ங்கமா? அதனால் உலகை ரக்ஷிக்கும் நீ சாரங்கபாணியா ?)
ஶ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம் |
ஶங்கசக்ர தரம் தேவம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||
லோகநாயகா, சாஷ்டாங்க நமஸ்காரம் உனக்கு. அதென்ன உன் மார்பில்ஏதோ பளிச்சென்று தெரிகிறது? ஒ, அது ஸ்ரீ வத்ஸம் அல்லவோ, இப்போது புரிகிறது. ஆம் அது தான், வண்ண மலர் மாலைகளுக்கிடையே கண்ணில் தோன்றி மறைந்தது . உன்னுடைய காம்பீர்யம், அழகு, நேர்த்திக்கேல்லாம் ஒரு விதத்தில் உன் கரங்களில் மிளிரும் பாஞ்சஜன்யம் என்கிற நாமம் கொண்ட சங்கமும், சுதர்சனம் என்கிற சக்ரமும் கூட என்று யார் வேண்டுமானாலும் யோசிக்காமல் சொல்ல முடியும்.
கிருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராதருத்தாய யஃ படேத் |
கோடிஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன வினஶ்யதி ||
ஆதி சங்கரர் இந்த கிருஷ்ணாஷ்டகத்தை சும்மா விருதாவாக எழுதிவிட்டு அதோடு விடவில்லை. டாக்டர் மருந்து பெயர் மட்டும் எழுதி கொடுக்காமல் அதை எப்போது, எப்படி சாப்பிட வேண்டும் என்று சொல்வது போல இந்த கிருஷ்னாஷ்டகம் எட்டையும், காலை பொழுது விடிந்தவுடன், எவன் விடாமல் சொல்கிறானோ, பஜிக்கிரானோ அவன் சொல்லொணா ஜன்மங்களில் எல்லாம் செய்து சேர்த்து வைத்திருக்கும் சகல பாபங்களும் ''சட்'' எனத் தீரும் என்கிறார். நினைத்தால் போய்விடும் என்கிறார். சென்னை வெள்ளம், அதனால் விளைந்த கஷ்டங்கள் அனைத்தும் அப்படித்தான் தீரவேண்டும்.
ஆதி சங்கரரே அடித்துச் சொன்ன பிறகு நமக்கேன் தயக்கம்? எங்கே க்ரிஷ்ணாஷ்டகம்? என்று தேடி, சொன்னபடி செய்வோம்.
No comments:
Post a Comment