Wednesday, February 10, 2016

Marriage of Rukmini & Krishna


கம்சன் வதம் செய்யப்பட்ட பிறகு, அவனுடைய மனைவிகள் அஸ்தியும், பிராப்தியும் தங்களுடைய தந்தை ஜராசந்தனிடம் வந்து சொல்லி விட்டார்கள். அவனுடைய மனஸ்திதி மாறி விட்டது. ஜராசந்தன் வந்து, மதுராவை நாலு பக்கமும் சுற்றி வளைத்துக் கொண்டு விட்டான்.

கண்ணைய்யா சொன்னார், 'அண்ணா, ஜராசந்தன் வருகிறார், நமது மாமாவின் மாமனார்!.'

பலராமர் சொன்னார், 'வருகிறார் என்றால், யுத்தம் செய்வோம். நாமொன்றும் சளைத்தவர்களில்லை. வசுதேவரின் புத்திரர்களான நமக்கு என்ன பயம்?'

கிருஷ்ணர் சொன்னார், 'அதில்லை அண்ணா, என்னுடைய விண்ணப்பம் என்னவென்றால், நாம் ஜராசந்தனை கொன்று விட்டோம் என்றால், பிறகு மற்ற ராக்ஷஸர்களைக் கொல்வதற்கு, நமக்கு ஒவ்வொரு தடவையும், அவர்கள் இருக்குமிடத்திற்கு, அவர்களுடைய ஊர்களுக்குப் போக வேண்டி இருக்கும். ஜராசந்தனைக் கொல்லாமல் வெறுமனே தோற்கடித்து விட்டோம் என்றால், அவனோ தோல்வியை ஒப்புக் கொண்டு வீட்டிலேயே முடங்கிப் போய் விடுபவனல்ல. ஒரு தடவை நாம் அவனை தோற்கடித்தோம் என்றால், அவன் திரும்பவும் சேனையை ஒன்றுசேர்த்துக் கொண்டு வருவான்; நாம் அவனை திரும்பவும் தோற்கடித்து விடுவோம். அவன் திரும்பவும் உலகத்திலிலுள்ள ராக்ஷசர்களை எல்லாம் ஒன்றுதிரட்டிக் கொண்டு வருவான்; அதனால் என்னவாகும் என்றால், நாம் உட்கார்ந்த இடத்திலேயே ராக்ஷசர்களை சங்காரம் செய்து விடலாம். ஆகவே, அவனைக் கொல்லக் கூடாது; வெறுமனே தோற்கடித்து விட வேண்டும்.'

இருபத்தி மூன்று அக்ஷரோணி சேனைகளை தாங்கிக் கொண்டு, ஜராசந்தன் வந்தான். பகவான் அத்தனை சேனைகளையும் சங்காரம் செய்து, ஜராசந்தனை தோற்கடித்து விட்டார். அவன் போனான். பாரதத்தில் ஒவ்வொரு இடத்திலுமிருந்த அசுரர்களையும், ராக்ஷசர்களையும், துஷ்டர்களையும் ஒன்றுதிரட்டிக் கொண்டு வந்தான். பகவான் திரும்பவும் அவனை தோற்கடித்து விட்டார். இப்படி பதினேழு தடவை கோவிந்தன் ஜராசந்தனை தோற்கடித்தார்.

இன்னொரு ராக்ஷசனுமிருந்தான் – பெயர் காலயவன். யதுவம்சத்தினரால் கொல்லப்பட மாட்டான் என்கிற வரம் அவனுக்கு பிராப்தமாகி இருந்தது. அவன் வந்து, அங்கே மிகவும் விசித்திரமாக யுத்தம் செய்தான். பகவான் நினைத்தார், 'இவனை கொல்வதென்பது நம்மாலோ முடியாது.'

பகவான் காலயவனுக்கு முன்னால், முன்னால் ஓடினார். காலயவனும் பின்னால், பின்னால் ஓடி வந்தான். ஒரு குகையில் கோவிந்தன் பிரவேசித்து விட்டார். அந்த குகையின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்தார், முச்குந்தமஹாராஜர். இந்த முச்குந்தர் ராம்ஜிபகவானுடைய பூர்வஜர்; சூரியவம்சத்து ராஜா. இவர் அத்தனை பெரிய பராக்கிரமசாலியாக இருந்தார், தேவர்களும் யுத்தத்தில் சகாயத்திற்காக வேண்டி இவரை கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஒரு தடவை முச்குந்தமஹாராஜர் தேவர்களுக்கு ரொம்ப பெரிய சகாயம் செய்து விட்டார். தேவர்களுக்கு ஜெயம் கிடைத்து விட்டது. அசுரர்களை தோற்கடித்து விட்டார்கள். தேவர்கள் முச்குந்தரிடம் கேட்டார்கள், 'உங்களுக்கு என்ன வேண்டும்?.' முச்குந்தர் சொன்னார், 'எனக்கு பலமாக தூக்கம் அழுத்துகிறது. நான் பல வருஷங்களாக தூங்கவில்லை. என்னை தொந்தரவு செய்யாதீர்கள். என்னை தூங்க விடுங்கள்.'

தேவர்கள் சொல்லி விட்டார்கள், 'நீங்கள் மலைக்கு நடுவிலிருக்கும் குகையில் போய் தூங்கி விடுங்கள். யார் உங்களை நடுவில் எழுப்பி விடுகிறாரோ, அவர் மேல் உங்களுடைய பார்வை விழுந்த உடனேயே, அவர் எரிந்து பஸ்மமாகி விடுவார். அதன் பிறகு, உங்களுக்கு பரமாத்மாவின் தரிசனம் கிடைக்கும்.'

குகையில் தூங்கிக் கொண்டிருந்தார் முச்குந்தர். கண்ணைய்யா நினைத்தார், 'காலயவனை நாமோ கொல்ல முடியாது; அவனுக்கு வரம் கிடைத்திருக்கிறது. ஆனால், அவனுக்கு விமொசனமளித்தாக வேண்டுமே!'

பிரபு குகையில் நுழைந்து விட்டார். முச்குந்தரை மஞ்சள்-மஞ்சளாக இருந்த தன்னுடைய பீதாம்பரத்தால் போர்த்தி விட்டு விட்டார். பிறகு ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு நின்று விட்டார்.

காலயவன் இரைக்க-இரைக்க ஓடி வந்தான். முச்குந்தர் பீதாம்பரத்தை போர்த்திக் கொண்டு இருந்ததைப் பார்த்தான். அவன் நினைத்தான், 'பேஷ், இடையர்குல-கிருஷ்ணனே, எனக்கு பயந்து இந்த குகையில் வந்து தூங்கி விட்டாயா? உன்னை விட்டு விடுவேன் என்று மட்டும் நினைத்து விடாதே.' பீதாம்பரத்தோடிருந்தவரை கிருஷ்ணர் என்று நினைத்து ஓங்கி விட்டான் ஒரு உதை. முச்குந்தர் கண்விழித்தார். அவருடைய நேத்திரம் திறந்த உடனேயே, காலயவன் எரிந்து பஸ்மமாகி விட்டான்.

முச்குந்தர் யோசித்தார், 'யாரிவர்? ஏன் எரிந்து போய் விட்டார்? என்னவாயிற்று?.' பிறகு, திரும்பிப் பார்த்தால் கண்ணைய்யா நின்று கொண்டிருந்தார். முச்குந்தருக்கு தேவர்கள் சொன்ன வார்த்தை ஞாபகம் வந்து விட்டது.

विमोहितोऽयं जन ईश मायया त्वदीयया त्वां न भजत्यनर्थदृक् ।

'ஹே கோவிந்தா, தூங்கி-தூங்கியே என்னுடைய வாழ்நாள் கழிந்து விட்டது. ஆனால், இன்று சரியான தோரணையில் விழித்துக் கொண்டு விட்டேன். உங்களுடைய தரிசனம் எனக்கு பிராப்தமானது.'

அவர் முழுக் கதையையும் சொன்னார்.

'உங்களுடைய தரிசனத்திற்கான அபிலாஷை தான் என்னுடைய ஆழ்மனதிலிருந்தது. அந்த மனோரதத்தை நீங்கள் பூர்த்தி செய்து விட்டீர்கள்.'

உன்னுடைய தரிசனத்தைக் காணுவதற்கே என்னுயிர் ஏங்கிக் கொண்டிருந்தது.

(பகவானுடைய பக்தியில் ஒருபோதும் நாம் திருப்தியடைந்து விடக் கூடாது. கீர்த்தனம் நிறைய செய்தாகி விட்டது; நிறைய ஜெபமாலையை உருட்டியாகி விட்டது. இந்த நினைப்பு மனதில் வந்து விடக் கூடாது. பகவான் தினமும் நூதன தரிசனத்தைக் கொடுக்கிறார்).

அதற்காக அது தன்னையே மாய்த்துக் கொள்ளவும் தயாராக இருக்கிறது.
இந்த உலகம் நமது கண்ணுக்குத் தெரியும் ஒரு மாயத்தோற்றம்.

(இரண்டிரண்டாக இருப்பதைத் தானே நாம் உலகமேன்கிறோம்?
இரவு-பகல்.
வெய்யில்-குளிர்
செல்வம்-வறுமை
அறிவு-மூடத்தனம்
ஆண்-பெண்
வெளிச்சம்-இருட்டு
இவைகளால் நடப்பது தானே உலகம்?)

இதை உதறி விட விரும்புகிறது என்னுயிர்.
உன்னருகில் வர விரும்புகிறது என்னுயிர்.
உனக்குள்ளேயே ஒன்றி விட விரும்புகிறது என்னுயிர்.

கிருஷ்ணர் சொன்னார், 'முச்குந்தரே, கலியுகத்தில் உங்களுக்கு மிகப் பெரிய சேவை செய்ய வேண்டி இருக்கும். பிராம்மண குலத்தில் ஜன்மம் எடுக்க வேண்டி இருக்கும்.'

'அப்படியா?'

'நர்சி மேத்தாவாகி வரவேண்டி இருக்கும், குஜராத்தில்.'

वैष्णव जनतो तेने कहिये जे पीड परायी जाने रे |
வைஷ்ணவ ஜனதோ தேநே கஹியே ஜே பீட் பராயி ஜானேரே.

அவர் பரம வைஷ்ணவரான நர்சி மேத்தாவாகி வந்தார்.

கண்ணைய்யா மதுராவிற்கு திரும்பி வந்தார்.

2

ஜராசந்தன் நினைத்தான், 'பதினேழு தடவை, இந்த இடையன் என்னைத் தோற்கடித்து விட்டான்.'

பதினெட்டாவது தடவை அவன் என்ன செய்தான் தெரியுமா?

பதினெட்டாவது முறை, ஜராசந்தன் பதினோராயிரம் பண்டிதர்களை பூஜையில் உட்கார வைத்தான். அவன் சொன்னான், 'பண்டிதர்களே, நான் கிருஷ்ணரோடு யுத்தம் செய்யப் போகிறேன்.'

எல்லோரையும் கங்கணம் கட்ட வைத்து விட்டான். தக்ஷணையும் கொடுத்து விட்டான். சங்கல்பம் எடுக்க வைத்து விட்டான். 'நான் கிருஷ்ணருடன் யுத்தம் செய்யப் போய்க் கொண்டிருக்கிறேன். இந்த தடவை நான் கிருஷ்ணரைத் தோற்கடித்து விட்டால், உங்கள் (பதினோராயிரம் பண்டிதர்கள்) எல்லோருக்கும் அவ்வளவு தக்ஷணை கொடுப்பேன் – அவ்வளவு தக்ஷணை கொடுப்பேன், வாழ்நாள் முழுவதையும் நீங்கள் சௌகரியமாக உட்கார்ந்தே கழித்து விடலாம். இந்த தடவை நான் கிருஷ்ணரிடம் தோற்று விட்டால், உங்கள் எல்லோரையும் கழுவில் ஏற்றி விடுவேன்.'

பண்டிதர்கள் நினைத்தார்கள், 'நன்றாக கட்ட வைத்தாரய்யா, கங்கணத்தை! முடியாது என்று சொல்லவும் முடியாது.'

கங்கணம் கட்ட வைத்து விட்ட பிறகு, யாரால் மறுக்க முடியும்?

ஜராசந்தன் மதுராவுக்கு படையெடுத்து வந்தான்.

கண்ணைய்யா நினைத்தார், 'பதினோராயிரம் பிராம்மணர்கள் பூஜையில் உட்கார்ந்திருக்கிறார்கள். நான் ஜராசந்தனை தோற்கடித்து விட்டால், அவன் பண்டிதர்களை பலி கொடுத்து விடுவான்.'

அதனால் கண்ணைய்யா பலராமரிடம் சொன்னார். 'அண்ணா, தாத்தப்பர் திரும்பவும் வந்து விட்டார்.'

பலராமர் சொன்னார், 'வந்து விட்டார் என்றால், வந்து விட்டார். யுத்தமோ நான் செய்யவே போகிறேன், ஆமாம்.'

கண்ணைய்யா சொன்னார், 'அண்ணா, ஒரு காரியம் செய்வோமா?'

'என்ன?'

'இந்த தடவை நாம் யுத்தக்களத்தை விட்டே ஓடிப் போய் விட்டோம் என்றால் எப்படி இருக்கும்?'

பலராமர் சொன்னார், 'என்ன பேச்சு பேசுகிறாய், கண்ணைய்யா? யுத்தக்களத்தை விட்டு ஓடி விடுவோமானால், நமது நெற்றியில் எழுதி ஒட்டி விடுவார்கள் ஓடுகாலித்திலகம் என்று.'

கண்ணைய்யா சொன்னார், 'வெண்ணைத்திருடன் என்று எல்லோரும் சொல்லியாகி விட்டது; துணிகளை அபகரிப்பவன் என்று பெயர் வாங்கியாகி விட்டது; ஓடுகாலி என்று இன்னுமொரு பெயர்! அதனால் என்ன குடியா முழுகி விடப் போகிறது? ஆனால் பிராம்மணர்கள் அவமானமடைவதற்கு நான் காரணமாக இருக்க விரும்பவில்லை.'

கிருஷ்ணரும், பலராமரும் யுத்தக்களத்தை விட்டு ஓட ஆரம்பித்து விட்டார்கள்.

ஜராசந்தன் சொன்னான், 'ஓடி விட்டான், ஓடி விட்டான், ஓடி விட்டான். கடைசியில் இடையன் என்பதை காண்பித்து விட்டான்.'

ஜராசந்தன் விடவில்லை, பின்னாலேயே போனான்.

பகவான் பர்வதத்தின் மேலே ஏறி விட்டார்.

ஜராசந்தன் பர்வதத்தைச் சுற்றி நாலாப்பக்கமும் தீ வைத்து விட்டான்.

கோபாலரும் பலராமரும் மேலிருந்து கீழே ஸ்டண்ட்-மாஸ்டர்களைப் போல குதித்து விட்டார்கள். அவர்கள் சமுத்திரக்கரையை நெருங்கி விட்டார்கள். தேவர்களின் பிரதான சிற்பியாக இருக்கும் விஸ்வகர்மா இரவோடிரவாக தங்கத்தாலான துவாரகையை நிர்மாணித்து விட்டார். கோபாலர் மதுராவிலிருந்த அனைத்து யதுவம்சத்தினரையும், நெருங்கியவர்களையும் யோகமாயையின் மூலமாக மதுராவிலிருந்து, துவாரகைக்கு கொண்டு வந்து சேர்த்து விட்டார். கண்ணைய்யா துவாரகாதீசர் ஆகி விட்டார்.

3

ரேவதன் என்று ஒரு ராஜா இருந்தார். அவருடைய மகன் ரைவதன். அவரை குபுத்னி என்றும் சொல்வதுண்டு. அவருடைய மகளுடைய பெயர் ரேவதி. இந்த குபுத்னியின் மகள் ரேவதி இருந்தாளே, அவள் மதிப்பிற்குரிய பலராமண்ணாவின் பத்னியானாள்.

கோவிந்தபகவான் துவாரகைக்கு ராஜாவாகி விட்டார்.

பிருந்தாவனவாசிகளே சௌராஷ்டிரத்தில் வந்து துவாரகாவாசிகளாகி விட்டார்கள்.

கண்ணைய்யா நினைத்தார், 'எல்லாமே சரியாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது; நாம் விரும்பியபடியே நடந்து கொண்டிருக்கிறது. ஸ்வர்ணத்திலான துவாரகை எழுந்து நின்று விட்டது. அண்ணாவும் செட்டிலாகி விட்டார். நமக்கும் ஆகி விட வேண்டாமோ விவாஹம்?'

விவாஹம் மிக அவசியமானதல்லவா?

குந்தன்பூருக்கு ராஜாவாக இருந்தார் பீஷ்மகர். மஹாராஷ்டிராவில் நான்கு பகுதிகள். கொங்கணம், விதர்ப்பம் இத்தியாதி என்று நான்கு பாகங்கள். விதர்ப்பத்தின் தலைநகரான நாக்பூருக்கு பக்கத்திலேயே குந்தன்பூர் இருக்கிறது. ருக்மணிமாதாவின் பிறப்பிடம்!

राघवत्वेभवत्सीता रुक्मिणी कृष्णजन्मनी ॥

ஸ்ரீமன் நாராயணரே ராம்ஜியின் ரூபத்தில் பிரகடனமாகிறார்; நாராயணரே கிருஷ்ணராகிறார். ஒரே தத்துவம். நாராயணருடைய துணைவி லக்ஷ்மிமாதா. அதே நாராயணர் ராகவனாக பிரகடனமாகும் போது, அதே லக்ஷ்மிமாதா ஜானகியான சீதாமாதாவின் ரூபத்தில் பிரகடனமாகிறாள் – ராம்ஜியின் துணைவி ஸ்ரீசீதாஜி. அதே நாராயணர் கிருஷ்ணராகி வரும் போது, அதே லக்ஷ்மிஜி ருக்மிணியாகி வருகிறாள்.

ராதா?

ராதாவோ கிருஷ்ணரே.

கிருஷ்ணரே ராதா.

ஈருடல் ஓருயிர்.

குந்தன்பூருக்கு அதிபதி, விதர்ப்பதேசத்தின் ஸம்ராட் பீஷ்மகருக்கு, ஐந்து பிள்ளைகள் – ருக்மி, ருக்மரதன், ருக்மபாஹு, ருக்மகேசி, ருக்மமாலி என்று ஐந்து மகன்கள். மகளில்லை.

பாகவதத்தின் சித்தாந்தம் சொல்கிறது, வீட்டில் மகனிருந்தால் அது சந்தோஷப்பட வேண்டிய விஷயம்; ஆனால், அதிக சந்தோஷம் எப்போது? வீட்டில் மகளும் இருக்கும் போது. வீட்டில் ஒரு மகள் இருந்தேயாக வேண்டும். யார் வீட்டில் அதிக பெண் பிள்ளைகள் இருக்கிறார்களோ, அவர்கள் அதிக சந்தோஷமடைய வேண்டும்.

பீஷ்மகராஜாவுக்கு மகளில்லை. அவர் மிகவும் துக்கமடைந்தார்.

நாம் ஒரு பெண்ணை கன்யாதானம் செய்யும் போது, ஒரு அஸ்வமேதயாகம் செய்த பலன் கிடைக்கிறது. பெண்ணைப் பெறுவது, அவளை எழுதப் படிக்க வைத்து கல்விகற்றவளாக்குவது, வளர்ந்த பிறகு அவளை கன்யாதானம் செய்வது – இதை விட பெரிய தானம் உலகத்தில் வேறெதுவுமில்லை.

4

கன்யாதானத்தை விட பெரிய தானம் வேறெதுவுமில்லை. அதனால், யாருக்கு பெண்பிள்ளை இல்லையோ அவர்கள் யாராவது பிராம்மணருடைய மகளை சுவீகாரம் எடுத்துக் கொண்டு, கன்யாதானம் செய்து விடுவார்கள்; கல்யாணச் செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்டு விடுவார்கள்.

பீஷ்மகமஹாராஜா நினைத்தார், 'என்னுடைய வீட்டில் மகளில்லை.'

எந்த தந்தை ஒரு மகளுடைய கன்யாதானத்தையே செய்யவில்லையோ, அவர் எந்த நல்ல ஒரு சத்காரியத்தை செய்யவேயில்லை என்று அர்த்தமாகிறது; மகளே இல்லையே.

பீஷ்மகராஜா பகவானை மிகவும் ஸ்மரணம் செய்தார். இன்று, பத்னியோடு நதியில் ஸ்நானம் செய்யப் போனார். நதியில் தாமரைப்பூவின் மேல் ஒரு சின்ன பெண்குழந்தையைப் பார்த்தார். 'அட, இந்தப் பூவின் மேல் என்ன? இவ்வளவு சின்ன குழந்தை!.' அவர் அதை தூக்கிக் கொண்டதும், அது கிலுகிலுவென்று சிரித்து விட்டது. அவர் அதை கையில் ஏந்தி கொண்டு வந்தார். பத்னியிடம் சொன்னார், 'இதோ பார், பகவான் நமது இச்சையை பூர்த்தி செய்து விட்டார்.'

லக்ஷ்மிமாதாவே ருக்மணியின் ரூபத்தில் பிரகடனமாகி விட்டாள். ஜெகன்மாதா; ஜெகத்தாத்ரி.
அவளைக் கொண்டு வந்து பீஷ்மகராஜா மிகவும் கவனத்தோடு கல்வி பயில வைத்தார்.

பெண்-குழந்தைகளின் கல்வியில், நமது பாரதம் எப்போதுமே ஈடுபாடு கொண்டிருந்தது. பெண்கல்வியில் எத்தனை அக்கறை நமது பாரததேசம் எடுத்துக் கொண்டதோ, உலகத்தில் எந்த தேசமும் அத்தனை அக்கறை எடுத்துக் கொண்டதில்லை. ஆயிரம் வருஷங்களுக்கு முன்னால், மொகலாயர்கள், வெளிதேசத்தவர்கள் இந்த நாட்டை ஆக்கிரமித்த போது, அவர்கள் இஷ்டத்திற்கு இந்த நாட்டின் செல்வங்களை சூறையாடினார்கள். அப்போதிலிருந்து பெண்கல்வி சிதைந்து விட்டது. ஏனென்றால், அவர்களுடைய தேசத்திலோ, பெண்கல்வி இருந்ததே இல்லை. அந்த நிலைமையில் பெண்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர தடையிருந்தது; பள்ளிக்கூடம் போவதற்கு தடையிருந்தது.

இப்போதும், இந்த நூற்றாண்டிலும் இப்படி எத்தனையோ தேசங்கள் இருக்கின்றன, பெண்கள் பள்ளிக்கூடம் போவதற்கு எதிர்ப்பு இருக்கிறது. நமது நாட்டில் பெண்கள் கல்வி கற்பது குறைந்து கொண்டே வந்தது. ஆனால், புராதனபாரதத்தை எடுத்துக் கொண்டால், (புராதன பாரதத்தின் அர்த்தம் வைதீகபாரதம்) ஆயிரக்கணக்கான ஸ்திரிகளின் பெயரைச் சொல்லி விடலாம் – வேதங்களின் ஞானம், வேதாந்தங்களின் ஞானம், உபநிஷதங்களின் ஞானம் மட்டுமில்லை, விஞ்ஞானத்திலும் கைதேர்ந்தவர்களாக, நிபுணிகளாக இருந்தார்கள். மைத்ரேயி என்ன! கார்க்கி என்ன! வாசக்னவி என்ன! ஒருத்தரை மிஞ்சிய இன்னொரு அறிவுச்சுடர் வீசிய மங்கையர்-திலகங்கள்! அவர்களில் ஒரு பெயர் ருக்மணிமாதா.

ஐந்து சகோதரர்களின் அன்புத் தங்கை; அவர்களின் செல்லம். எத்தனை பிரியம் தாய்-தந்தை வைத்திருந்தார்களோ, அத்தனை பிரியத்தை அண்ணன்மார்களும் வைத்திருந்தார்கள். ஒரே தங்கையல்லவா? எல்லோருக்கும் செல்லம்!

மூத்த அண்ணன் ருக்மி தீர்மானித்து விட்டார், 'என்னுடைய தங்கையின் கல்யாணத்தை சிசுபாலனோடு செய்வேன்.'

இந்த சிசுபாலன் யார்?

கண்ணைய்யாவின் விசேஷ அத்தை பிள்ளை. பகவானுக்கு இன்னொரு அத்தை இருந்தாள் – பாண்டவர்களின் தாய் குந்திமாதா. இரண்டாவது அத்தை இருந்தாளே, அவளுடைய மகன் தான் சிசுபாலன்; பாண்டவர்களுடைய விசேஷமான சித்தி பிள்ளை. அவன் அத்தனை துஷ்டனாக இருந்தான், அத்தனை துஷ்டனாக இருந்தான் – எதுவரையில் தொண்ணூற்று ஒன்பது தடவை வசைபாடவில்லையோ, அதுவரையில் அவனுக்கு தண்ணீர் கூட தொண்டையில் இறங்காது. தொண்ணூற்று ஒன்பது தடவை தினமும் எண்ணி கிருஷ்ணரை வசைபாடுவான், அதுவும் காரணமேயில்லாமல். அவனுடைய நியமம் திடமானது. நூறு தடவை ஏசுவதற்கு அவனுக்கு சலுகை கிடைத்திருந்தது. பகவான் சொல்லி வைத்திருந்தார், 'நூறு தடவை நீ என்னை திட்டினால், நான் உன்னை ஒன்றும் சொல்ல மாட்டேன்.' அவன் தொண்ணூற்று ஒன்பது தடவை திட்டுவான்; ஒன்றை விட்டு விடுவான். (என்றைக்கு நூற்றி ஓரு தடவை ஏசினானோ, அன்றைக்கு அவன் கோவிந்தாய நமோ நம:வாகி விட்டான்.)

அவனுடைய சிநேகமிருந்தது, ருக்மணியின் அண்னன் ருக்மியோடு. ருக்மி ருக்மணியுடைய நிச்சயதார்த்தத்தையும் நடத்தி விட்டான், சிசுபாலனோடு. அவன் தந்தையிடம் வந்து சொன்னான், 'நாளை மறுநாள் சுயம்வரம். (புராதன-பாரதத்தில் சுயம்வர சம்பிரதாயமிருந்தது.) உலகத்திலிருக்கும் ராஜகுமாரர்கள் வருவார்கள், என் தங்கை ருக்மணியின் சுயம்வரத்தில் கலந்து கொள்ள. தந்தையே, ருக்மணிக்குச் சொல்லி வைத்து விடுங்கள் சிசுபாலனின் கழுத்தில் சுயம்வரமாலையை சூட்ட. நான் வாக்கு கொடுத்து விட்டேன்.'

ருக்மணி நினைத்தாள், 'இது என்ன நியாயம்!.' அண்ணியிடம் வந்து சொன்னாள், 'பாருங்கள் அண்ணி, நான் சின்னக் குழந்தையில்லை. என்னைக் கேட்கவேயில்லை, அண்ணா நிச்சயம் செய்து விட்டார். நானோ குழந்தைப் பருவத்திலிருந்தே கோபால்ஜியின் சரணங்களில் பிரியம் கொண்டு விட்டேன்.'

ருக்மணியின் அண்ணி சொன்னாள், 'நீ உண்மையான மனதோடு கோவிந்தனை விரும்புவதாய் இருந்தால், ஒரு கடிதம் எழுதி விடு. உன் மனதிலிருப்பதை எழுதி விடு. கோவிந்தனை கூப்பிட்டுக் கொள். சுயம்வரமாலையை சூட்டி விடு.'

ருக்மணி ரொம்ப அழகாக் கடிதம் எழுதினாள். அந்த கடிதத்தில் ருக்மணிமாதா ஏழு மந்திரங்களை எழுதினாள். கல்யாணத்தில் எத்தனை முறை வலம் வருகிறார்கள்? ஏழு தடவையில்லையா? அதை நாம் சப்தபதி என்கிறோம். ருக்மணிமாதாவும் ஏழு ஸ்லோகங்களை எழுதினாள். ஒவ்வொரு பதியின் பாவனையை ஒவ்வொரு மந்திரத்தில் எழுதி விட்டாள்.

श्रुत्वा गुणान् भुवनसुन्दर शृण्वतां ते. निर्विश्य कर्णविवरैः हरतोऽङ्ग तापम्।
रूपं दृशां दृशिमतामखिलार्थ लाभं. त्वय्यच्युताविशति चित्तमपत्रपं मे ॥

அரண்மனையிலிருப்பாரல்லவா குலபுரோஹிதர், அவரிடம் கடிதத்தைக் கொடுத்து விட்டாள். 'துவாரகாதீசருக்குக் கொடுத்து விடுங்கள்.'

5

பகவான் கடிதத்தை படித்துக் கொண்டிருந்தார்.

பிரகலாதன் ஹிரண்யகசிபுக்கு ஒன்பது வித பக்திகளை எடுத்துக் காட்டினாரே, அந்த ஒன்பது வித பக்திகளில் முதல் பக்தி எதுவாக இருந்தது?

சிரவணம்.

श्रवणं कीर्तनं विष्णोः स्मरणं पादसेवनम् ।
अर्चनं वन्दनं दास्यं सख्यमात्मनिवेदनम् ॥

ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாதஸேவனம் அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் சக்யமாத்மநிவேதனம்.

ஸ்ரவணம் – பரீக்ஷித்
கீர்த்தனம் – சுகதேவர்
ஸ்மரணம் – பிரஹலாதன்
பாதஸேவனம் – லக்ஷ்மி
அர்ச்சனம் – பிருதுராஜா
வந்தனம் – அக்ரூரர்
தாஸ்யம் – ஹனுமான்
சக்ய – அர்ஜுனன்
ஆத்மநிவேதனம் – பலிராஜா.

முதல் பக்தி, சிரவணம். ருக்மணி எழுதி இருந்த, இந்த கடிதத்தின் முதல் சப்தம், ஸ்ருத்வா – நான் உங்களைப் பற்றி கேள்விப் பட்டேன்.

'கோபால்ஜி, நான் உங்களை பார்க்கவில்லை. நீங்கள் என் மீது கிருபை செய்து விட்டீர்கள். அதை, நான் எந்த வார்த்தைகளால் வருணிப்பது?'

ருக்மணி கிருஷ்ணரை பார்த்ததேயில்லை. வெறும் கேள்விபட்டது மட்டுமே. கேள்விப்படாமல், பகவானை நீங்கள் தெரிந்து கொள்வதெப்படி? ஏது வரையில் தெரிந்து கொள்ளவில்லையோ, அவருடைய சரணங்களில் பிரியம் செய்வதெப்படி?

जाने बिनु न होई परतीती |
बिनु परतीती होई नहीं प्रीती ||

எது வரைக்கும் கேட்கவில்லையோ, அது வரையில் நாம் எப்படி தெரிந்து கொள்வது பகவானை? தெரிந்து கொள்ளவில்லை என்றால், அவருடைய சரணங்களில் நாம் பிரியம் கொள்வதெப்படி? முதல் பக்தி, ஸ்ரவணம். ருக்மணியுடைய கடிதத்தின் முதல் வார்த்தை ஸ்ருதவா. 'நான் கேட்டிருக்கிறேன் உங்களைப் பற்றி. அப்படி கேட்ட பிறகு, உங்களை என்னுடைய பதியாக வரித்து விட்டேன்.'

ருக்மணிமாதா இரண்டாவது சுலோகத்தில் எழுதுகிறாள், 'நீங்கள் சொல்வீர்கள் – முன்னே பின்னே பார்த்ததில்லை, இது முறையா, கடிதம் எழுதி விட்டாயே? நல்ல குலத்தில் வந்த பெண் பிள்ளைகள் இப்படி இருப்பார்களா? பரிச்சயமில்லாத நபருக்கு எழுதி விட்டாய் – என்னை விவாஹம் செய்து கொள்ளுங்கள் என்று. இது எதில் சேர்த்தி?'

ருக்மணிமாதா சொல்கிறாள், 'கோபால்ஜி, இந்த உலகத்தில் அப்படிப்பட்ட பெண் யாரிருக்கிறாள், உங்களுடைய மஹிமையைக் கேட்ட பிறகும், உங்களுடைய கதையைக் கேட்ட பிறகும், உங்களுடைய லீலைகளைக் கேட்ட பிறகும், உங்களுடைய சரணங்களில் பிரியம் கொண்டு விடாத படியாக, அப்படி யாராவது இருக்க முடியுமா? உங்களுடைய சரணங்களொ பிரியம் கொள்வதற்கு யோக்கியமுள்ளவைகளே. கோபால்ஜி, நான் சிறுமியாக இருந்த போது, நீங்கள் குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்தீர்கள். உங்களுடைய மஹிமையை என் வீட்டில் நிறைய கேட்டு, கேட்டு பூரித்திருக்கிறேன்.'

ருக்மணிமாதாவின் தந்தை பெரிய தர்மாத்மாவாக இருந்தார் – பீஷ்மகராஜா. அவரிடத்தில் சந்தர்கள் வந்து கொண்டிருந்தார்கள். சந்தர்கள் வந்தால் பாகவத-கதை இல்லாமலிருக்குமா? சத்சங்கம் இல்லாமலிருக்குமா? இருந்தே தீரும்! இளம்பிராயத்திலிருந்தே, ருக்மணிமாதா கிருஷ்ணருடைய கதையைக் கேட்டாள். அதனால், கிருஷ்ணரைக் குறித்து கோபிபாவனை விழித்துக் கொண்டது. 'எனக்கு கிருஷ்ணரே பதியாவார்.'

'நீங்கள் நினைப்பீர்கள், இது முரண்பாடாக இருக்கிறது என்று. அப்படி நீங்கள் நினைத்தீர்களானால், இதைக் கேட்டுக் கொள்ளுங்கள். என்னுடைய நிச்சயதார்த்தம் சிசுபாலனோடு ஆகி விட்டது. நான் சிசுபாலனை – கிசுபாலனை விவாஹம் செய்து கொள்ளப் போவதில்லை. நிச்சயம் செய்து விட்டார் என் அண்ணா, என்னைக் கேட்காமலேயே. என்னுடைய பதியோ ஜன்ம-ஜன்மாந்திரங்களாக நீங்களே. ஆகவே நீங்கள் வருகை தாருங்கள். இங்கு எல்லோருடைய முன்னிலையிலும், உங்களை நான் வரிப்பேன். பிறகு என்னை துவாரகைக்கு கொண்டு செல்லுங்கள்.'

ருக்மணி கீழே எழுதுகிறாள், 'இப்போது நீங்கள் நினைப்பீர்கள் – உன்னுடைய இருப்பிடத்திற்கு நான் வருவதெப்படி?

अन्तः पुरान्तरचरीमनिहत्य बन्धूं- स्त्वामुद्वहे कथामिति प्रवदाम्युपायम् ।
पूर्वेद्ययुरस्ति महती कुलदेवियात्रा यस्यां बहिर्नववधूर्गिरिजामुपेयात् ॥

ருக்மணி மாதா சொல்கிறாள், 'நீங்கள் நினைப்பீர்கள், நீயோ அந்தப்புரத்திலிருக்கிறாய். உன்னுடைய பாதுகாப்பிற்கான ஏற்பாடுகள் பலமாக இருக்கும். நீயோ ராஜகுமாரி. அட, உன்னைக் கைப்பற்ற நான் எப்படி வர முடியும்? எத்தனை பேர் வில்-அம்புகளை தாங்கிக் கொண்டு, வாளை ஏந்திக் கொண்டு நின்றிருப்பார்கள்?

ருக்மணி சொல்கிறாள், 'இல்லை, இல்லை.'

पूर्वेद्युरस्ति महती कुलदेवियात्रा. यस्यां बहिर्न्नवावधूर्ग्गिरिजामुपेयात् ॥

'ஹே கோபால்ஜி, என்னுடைய குலத்திற்கு ஒரு பழக்கமிருக்கிறது. விவாஹத்திற்கு முன்னால் மகள், காத்யாயினி-அம்மனை வழிபடுவதற்குப் போவாள். காத்யாயினி (பார்வதி) அம்மன் கோவில் எங்களுடைய ஊருக்கு வெளியே இருக்கிறது. எங்களுடைய குலதேவதை. நானும் அங்கே போவேன், பூஜை செய்வதற்கு. நான் போவேனில்லையா, அங்கேயே நீங்கள் வந்து விடுங்கள். பிறகு, காத்யாயினி-அம்மனுக்கு முன்னாலேயே, அவளுடைய சரணங்களின் சந்நிதியிலேயே, நான் உங்களை பதியாக வரிப்பேன். ஒரு தடவை நான் உங்களை வரித்து விட்ட பிறகு, வேறு யாரும் ஒன்றையும் செய்து விட முடியாதல்லவா? நீங்கள் வந்து விடுங்கள், கோபால்ஜி.'

பகவான் படித்துக் கொண்டிருந்தார்.

கடிதத்தைக் கொண்டு வந்திருந்த பிராம்மணர் நின்றிருந்தார். பிராம்மணர் சொன்னார், 'அப்படியானால், நான் … நான் உத்தரவு வாங்கிக் கொள்கிறேன்.'

கண்ணைய்யா சொன்னார், 'உத்தரவில்லை, நாம் புறப்படலாம். நீங்களும் உட்காருங்கள்.'

பகவான் பிராம்மணரை அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டார்.

பலராமர் பார்த்தார், 'கண்ணைய்யா எங்கே போகிறான்?'

பலராமர் கிருஷ்ணரிடம் ரொம்ப பிரியம் வைத்திருந்தார் – தம்பியல்லவா? அவர் கிருஷ்ணரோடு அப்படியே நிழலைப் போலவே கூட இருப்பார். என்னுடைய கோவிந்தனுக்கு சிரமம் ஏதும் ஏற்பட்டு விடக் கூடாது. என்னுடைய கண்ணையாவுக்கு கஷ்டம் ஏதும் வந்து விடக் கூடாது.

பலராமர் சொன்னார், 'கண்ணைய்யா, எங்கே போகிறீர்கள்?'

தம்பி என்பதால் கொஞ்சம் சங்கோஜம் இருக்கத் தானே செய்யும்?

'அதோ, அந்த கோடி வரைக்கும் போகிறேன்.'

நீங்கள் சௌராஷ்டிரத்திற்குப் போயாகி விட்டது என்றாலும் சரி, துவாரகைக்குப் போயாகி விட்டது என்றாலும் சரி, வீட்டில் வீட்டுபாஷையைத் தானே பேசுவீர்கள்? 'அங்கே தான் போகிறேன்.'

'எங்கே போகிறீர்கள்? இப்போது உங்களை நீங்கள் யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் துவாரகாதீஸர்! இன்னும் உங்களுக்கு பிருந்தாவனத்திலிருந்த முரளிதரன் என்கிற ஞாபகமா? இப்போது நீங்கள் துவாரகாதீஸர்! அப்படியெல்லாம் விட்டேற்றியாக நடந்து கொள்ள முடியாது. உங்களுடைய ஷெட்யூல் தயாராகி விடுகிறது. எத்தனை மணிக்கு, எங்கே போக வேண்டும், எந்த மீட்டிங்குக்கு போக வேண்டும், என்ன செய்ய வேண்டும். தலைக்கு மேல் வேலை இருக்கிறது.'

'இல்லை, நான் அங்கே தான் போகிறேன்.'

பின்னால் உட்கார்ந்திருந்த பண்டிதர் சொல்லி விட்டார், 'குந்தன்பூர் போகிறோம்.'

பலராமர் பார்த்தார், 'குந்தன்பூரிலோ சுயம்வரமல்லவா நடக்கவிருக்கிறது? நாளைக்கு ருக்மணியுடைய சுயம்வரம் அல்லவா? அடாடடா, என்னுடைய கோபால் ஒற்றையாளாக சிக்கி விடப் போகிறாரே' என்று பலராமர் பதற ஆரம்பித்து விட்டார். அவர் தன்னுடைய சேனைகளுக்கு சொன்னார், 'எல்லோரும் மப்டியில் புறப்படுங்கள். கண்ணைய்யாவின் கண்ணில் தூசு-தும்பு பட்டு விடக் கூடாது. என்னுடைய துவாரகாதீஸர், என்னுடைய செல்லம் கண்ணைய்யாவின் முழு-பாதுகாப்பு ஏற்பாடுகள் இறுக்கமாக இருக்கட்டும். நானும் ஏதாவது ஒரு வேஷத்தில் அங்கே ஹாஜராகி விடுவேன்.'

6

காத்யாயினி-அம்மனை வழிபட ருக்மணிமாதா புறப்பட்டாள். ஒரு ஆயிரம் தோழிகள் அவளை சூழ்ந்து நடந்து கொண்டிருந்தார்கள். அவர்களைச் சுற்றி நாலாப்பக்கமும், ஆயிரக்கணக்கான சேனைவீரர்கள் அணி வகுத்து நடந்து கொண்டிருந்தார்கள். ராஜகுமாரியல்லவா, ருக்மணி?

காத்யாயினி கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்தாள், ருக்மணி. வழியில் பண்டிதர் கிடைத்து விட்டார்; கடிதத்தைக் கொண்டு போனாரே அந்த பண்டிதர்.

ருக்மணி கேட்டாள், 'என்னவாயிற்று?'

அவர் சொன்னார், 'கோபால்ஜி வந்து விட்டாரம்மா. கவலைப் படாதே. கோபால்ஜி இங்கேயே தான் எங்கேயோ இருக்கிறார்.'


No comments:

Post a Comment