Thursday, December 31, 2015

Song on Ramana maharishi by Ilayaraja

courtesy:http://amrithavarshini.proboards.com/thread/1159#ixzz3vtRg2Dpb

சின்ன பையன் ஒருவன் – இசைஞானி இளையராஜா

சின்ன பையன் ஒருவன் செய்த செயல் என்னைக் கலக்கிடுதே

அதை எண்ணத் தொடங்கி விட்டால் என் பிறப்பு ஏன் என்று தோன்றிடுதே

முன்னம் நிகழ்ந்ததெல்லாம் மனக்கண் முன்னாலே தோன்றிடுதே

இன்னம் நினைந்திருந்து நெஞ்சம் அலை பாய்ந்து தவிக்கிறதே


அன்றொரு நாள் மரண பய சோதனையில்

கொன்று விட்டான் தான் என்னும் தன்னை விசாரணையில்

கட்டிய ஆடைகள் சாதி குலத்தையும் தொட்டவிழ்த்தான் 

ஒட்டி வளர்ந்த தலை முடி தன்னை மொட்டையிட்டான்

அண்ணாமலையாரை ஒட்டிக்கொண்டான் 

கண்ணீர் கயிற்றால் கட்டிக்கொண்டான்


திண்ணை தெருக்களிலே தங்கி கொண்டான் கைகளைப் போர்த்திக்கொண்டான்

உண்ணக் கிடைக்கையிலே உண்டு விட்டு உடம்பில் துடைத்துக் கொண்டான் 

பூதமும் போகாத பாதாள லிங்கத்துள் போயமர்ந்தான்

ஒரு மாதம் வருடமற்று மனமற்று தவத்தில் ஆழ்ந்துவிட்டான் 

பூரானும் பூச்சியும் ஊர்ந்ததம்மா இளம் தேகத்திலே

புற்றுக்கறையான் அரித்ததம்மா பல பாகத்திலே நவ முனி யோகத்திலே 


சேஷாத்ரி ஸ்வாமிகள் காப்பாற்ற நாம் செய்த புண்ணியம் என்றாச்சு 

ஆசா பாசத்துள் அல்லாடும் நமக்காசான் கிடைத்தான் நன்றாச்சு 

புற்றோடு புற்றாக போயிருந்தால் மனம் விற்றுப் போனவற்க்கு மருந்துண்டோ? 

முற்றும் அறிந்து முனிவனானவன் இல்லால் நம் பிறவிக்கு பயனுண்டோ? 


மாங்கிளையில் தூங்கி வாழ்ந்த மனிதர்கள் மண்ணில் உண்டோ? 

பூங்குழவி கொட்டி கால்கள் வீங்கத்தாங்கி கொண்டாருண்டோ? 

த்யானித்திருப்பான் சோரூட்டிப் போவார்கள் தெரியாது 

நாலு நாள் ஆனாலும் வாயை விட்டு சோறு இறங்காது 

சிறு முனிக்கு மக்கள் கூடுவார் சிலருக்கு பொறுக்காது 

உடலை மாய்த்திடப் போனானே விடவில்லை ஈசனும் விதியா அது? யாருக்கும் தெரியாது


உடம்போடு வாழ்ந்தாலும் உடம்பின்றி வாழ்ந்தவன் குரு ரமணன்

உடம்பின்றி ஆன்மாவாய் உடன்வந்து உறைபவன் குரு ரமணன் 

புற்று நோயகற்ற கீறினாலும், அவன் தேகத்தில் இல்லை

முற்றும் தேக வாழ்வு முடிந்தாலும் அவன் தேகி இல்லை 

ஒளி வெள்ளமாய் மலை உச்சியில் கலந்து விட்டான் ரமணன் 

கலியுகத்தில் கலி ஒழிப்போன் அவனே குரு ரமணன் 


சின்ன பையன் ஒருவன் உலகத்தை சின்னதாய் ஆக்கிவிட்டான்

இந்த சின்ன உலகினையும் அன்பு கொண்டு தன்னோடிணைத்துக் கொண்டான் 

முன்னம் நிகழ்ந்ததெல்லாம் மனக்கண் முன்னாலே தோன்றிடுதே

இன்னம் நினைந்திருந்து நெஞ்சம் அலை பாய்ந்து தவிக்கிறதே

சின்ன பையன் ஒருவன் செய்த செயல் என்னைக் கலக்கிடுதே

அதை எண்ணத் தொடங்கி விட்டால் என் பிறப்பு ஏன் என்று தோன்றிடுதே


https://www.youtube.com/watch?time_continue=315&v=gOZ5nX7wCFA

No comments:

Post a Comment