திருப்புகழ்
திருப்புகழில் இப்போது கிடைத்திருப்பது 1307 பாடல்கள்தான். பல்லாயிரம் பாடல்கள் இருந்ததாகவும் அவை மறைந்து போனதாகவும் கூறுகிறார்கள்.
திருப்புகழைப் பாடிய அருணகிரி பாடல்களை எழுதி வைக்கவில்லை. அவர் பாடிய கோயில்களில் இருக்கும் அன்பர்கள் அந்தப் பாடல்களை ரசித்து எழுதி வைத்தார்கள். அப்படி எழுதி வைத்த பாடல்கள்தான் இன்று தப்பிப் பிழைத்து நமக்குக் கிடைத்திருக்கின்றன.
திருப்புகழை பாட சொன்ன முருகன்
திருப்புகழ் என்ற பெயரைப் பின்னால் யாரும் வைக்கவில்லை. அருணகிரியே ஒரு பாடலில் திருப்புகழ் என்று குறிப்பிடுகிறார்.
பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
பட்சியெனும் உக்ர துரகமும் நீபப்
பக்குவ மலர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்
திக்கது மதிக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றிய பனிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பென எனக்கருள்கை மறவேனே
குற்றமற்ற மணிகள் பொருந்திய பொன்னணிகளை அணிந்து கொண்டு அழகு நடை போடும் மாமயிலையும், கடம்ப மலர் மாலையையும், கிரவுஞ்ச மலையானது மறைந்து போகும் படி திருக்கையால் ஏவித்துளைத்த வேலையும்,எட்டுத் திசையும் கிடுகிடுக்க வரும் சேவலையும்,அருள் தருகின்ற சிற்றடிகளையும்,பன்னிரண்டு தோள்களையும்,இருந்து அருள் செய்யும் ஒவ்வொரு திருப்பதிகளையும் வைத்து உயர்ந்த வகையில்திருப்புகழை உள்ளம் விரும்பிப் பாடு என்று அருள் சொன்ன கருணையை நான் என்றும் மறவேனே!
ஆக திருப்புகழ் என்ற பெயரை அருணகிரிநாதர் வைக்கவில்லை. முத்தமிழ்த் தெய்வமான முருகப் பெருமானின் திருவாயால் பெயரிடப்பட்ட நூல் திருப்புகழ். திருப்புகழை முருகன் அருணகிரியைப் பாட வைத்தான்.
பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
பட்சிந டத்திய குகபூர்வ
பச்சிம தட்சிண வுத்தர திக்குள
பத்தர்க ளற்புத மெனவோதுஞ்
சித்ரக வித்துவ சத்தமி குத்த
திருப்புக ழைச் சிறி தடியேனுஞ்
செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
சித்தவ நுக்ரக மறவேனே
அடியவர்களுக்கு அருளும் இறைவனே ஆடும் மயில் ஏறி விளையாடும் குகனே கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய திசைகளில் உள்ள அன்பர்கள் எல்லாரும் அற்புதம் அற்புதம் என்று ரசித்து ஓதுகின்ற அழகு கவிநயமும் சந்தநயமும் மிகுந்து இருக்கும் திருப்புகழை கொஞ்சமாவது நானும் சொல்லும் படி செய்து உலகில் பரவுவதற்கு வகை செய்த உன்னருளை மறக்க மாட்டேன் முருகனே! என்று அருணகிரி முருகனுக்கு நன்றி கூறுகிறார்.
திருப்புகழ்–6 (முதலில் பாடப்பட்டது)-திருவண்ணாமலை
"முத்தைத் தரு பத்தித் திருநகை" என்ற பாடல்தான் முதலில் பாடப்பட்டது. பாடப்பட்ட இடம் திருவண்ணாமலை கோயில்.
திருப்புகழ் பாடு என்று முருகன் பணித்த பின் "என்ன பாடுவது? எப்படிப் பாடுவது?" என்று புரியாமல் தவித்த அருணகிரிக்கு, "முத்து முத்தாகப் பாடு" என்று முருகனே எடுத்துக் கொடுக்க பாடப்பட்டதுதான் "முத்தைத் தருபத்தித் திருநகை" என்ற திருப்புகழ்.
முத்தை தரு பத்தி திரு நகை அத்திக்கு இறை சத்தி சரவண
முத்திக்கு ஒரு வித்து குருபர என ஓதும்
——————————–
——————————–
பத்து தலை தத்த கணை தொடு
ஒற்றை கிரி மத்தை பொருது ஒரு
பட்ட பகல் வட்ட திகிரியில் இரவாக
பத்தற்கு இரதத்தை கடவிய
பச்சை புயல் மெச்ச தகு பொருள்
பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒரு நாளே!
——————————–
——————————–
கொட்புற்று எழ நட்பு அற்ற அவுணரை
வெட்டி பலி இட்டு குலகிரி
குத்துப்பட ஒத்து பொர வ(ல்)ல பெருமாளே
ஒற்றைக் கிரி மத்தைப் பொருதொரு
மந்தர மலையை மத்தாக கொண்டு கடலைக் கடைந்தவரும்,
பட்டப் பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
பட்டப் பகலைத் தனது வட்டச் சக்கரத்தால் இரவாக்கியவரும்,
பக்த்தற்கு ரதத்தைக் கடவிய
தன் பக்தனாகிய அருச்சனனுடைய தேரைச் ஓட்டியவரும்
பச்சைப் புயல்
மெச்சத் தகு பொருள்
போற்றத்தகு பரம்பொருள் (முருகன்)
பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒரு நாளே!
திருத்தணிப் பாடல்
சூர்ப்பநகை வரவின் விளைவாக ராமாயணக் காவியத்தில் விளைந்த முக்கிய திருப்பங்களையும் திருத்தணிப் பாடல் ஒன்றில் மிக விரிவாகப் பாடியிருக்கிறார் அருணகிரியார்.
மூக்கறை மட்டை மகாபல காரணி
சூர்ப்பநகைப் படுமூளி உதாசனி
மூர்க்க குலத்தி விபீஷணர் சோதரி முழுமோடி
……………………………………………………
…………………………………………………..
மூத்த அரக்கனி ராவணனோடியல்
பேற்றிவிடக் கமலாலய சீதையை
மோட்டன் வளைத்தொரு தேர்மிசையே
கொடு முகிலேபோய்
மாக்கன சித்திர கோபுர நீள் படை
வீட்டிலிருத்திய நாளவன் வேரற
மார்க்க முடித்த விலாளிகள் நாயகன்''
மூக்கறை–மூக்கறுப்பட்டவள்; மட்டை-மட்டகுணம் படைத்தவள்; மகாபலகாரணி-பெரும்பலம் பொருந்தியவள் (பெரும் தீனி உண்பவள்); சூர்ப்பநகை-முறம் போன்ற நகம் உடையவள்; படுமூளி- மூக்கறுப்பட்டதால் மூளி; உதாசனி-தீ போல் சுடும் கோபமுடையவள்; மூர்க்க குலத்தி-மூர்க்க குலமுடைய அசுரர் குலப்பெண்; விபீஷணர் சோதரி.
கம்பன் சூர்ப்பநகையை "ராவணனுடன் உறை கடிய நோய்" என்பான். பிரம்மன், நோயை அவனுடலில் வைக்க முடியாமல் உடன் பிறக்க வைத்து விட்டானாம்!
விபீஷணர் சோதரி.
தீயப் பெண்ணை தீயவனான ராவணனது சோதரி என்று கூறாமல் தூயவரான விபீஷணர் சோதரி என்று ஏன் கூறுகிறார் அருணகிரிநாதர்? இதன் பின்னால் ஒரு கதை உண்டு.
சங்கசூடன்-சுமுகி
சத்திரவிரதன் எனும் அரசனுக்கு சங்கசூடன் என்ற மைந்தன் இருந்தான். கருத்துடன் கல்வி பயின்று வந்த அவனுக்கு, தனது குருவின் மகளாகியசுமுகி, தன் மீது காதல் கொண்டிருந்தது தெரியாது. ஒருநாள் அவன் குருவைத் தேடி அவர் வீட்டிற்குச் சென்றிருந்தபோத வீட்டில் சுமுகி தனித்திருந்தாள். அவள் சங்கசூடனிடம் தன் காதலைத் தெரிவித்தபோது,"குருவின் மகள் சகோதரி; இனிவரும் பிறப்பிலும் கூட நீ எனக்குத் தங்கைதான்" என்று மறுத்துக் கூறினான் சங்கசூடன்
கோபமுற்ற சுமுகி, அவன் தன்னைக் கற்பழித்தான் என்று கூறித் தந்தையிடம் பழி மூட்டினாள். குரு இதை நம்பி அரசனிடம் கூற, அவனும் மகனைத் தீர விசாரிக்காமல், அவனைக் கற்பாறையில் கிடத்தி, கை கால்களை வெட்டும்படி உத்தரவிட்டான்.
தர்ம தேவதையை நினைத்துப் புலம்பினான் சங்கசூடன். அச்சமயம் அவன் வெகுவாக மதிக்கும் ஆதிசேஷன் பூமியைப் பிளந்து வெளிவந்து, "உன்னைப் பற்றித் தவறாகப் பழி மூட்டிய சுமுகியை அடுத்த பிறப்பில் வந்து இடர் செய்வேன்" என்று சூளுரைத்துச் சென்றான்.
விபீஷணன்-சூர்ப்பநகை
அடுத்த பிறவியில் சங்கசூடன் விபீஷணனாகவும், சுமுகி சூர்ப்பநகையாகவும் பிறந்தனர். ஆதிசேஷனாகிய லட்சுமணன் அவள் அங்கங்களை அரிந்து அவமதித்தான். இந்த உயர்ந்த உட்கருத்தை விளக்கவே, அருணகிரியார் விபீஷணர் சோதரி என்று பாடி உள்ளார்.
ராமசரம்
அருணகிரியார் ராமனை, 'ராசரந்தொடு புங்கவன்' என்று கோடைநகரில் பாடுகிறார்:
"ஏழு மரங்களும் வன்குரங்கெனும்
வாலியும் அம்பரமும் பரம்பரை
ராவணனும் சதுரங்க லங்கையும் அடைவேமுன்
ஈடழியும்படி சந்திரனும் சிவ
சூரியனுஞ் சுரரும் பதம்பெற
ராமசரந்தொடு புங்கவன் மருகோனே!"
உன் மாமனைப் போல் இருக்கிறாய்
பாடல்-236 (சுவாமி மலை)
முருகன் புகழைப் பாடும் அருணகிரியார், முராரி மருக கணையை எறிவதில் உன் மாமனைப் போன்றவனாய் இருக்கிறார் என்று கூறும் அழகே தனி!
……………………………………………………………….. ………………………………………………………………..
வடிவுடைய மானு மிகல்கர னுந்திக
ழெழுவகைம ராம ரமுநிக ரொன்றுமில்
வலியதிறல் வாலி யுரமுநெ டுங்கட …… லவையேழும்
மறநிருதர் சேனை முழுதுமி லங்கைமன்
வகையிரவி போலு மணியும லங்க்ருத
மணிமவுலி யான வொருபதும் விஞ்சிரு …… பதுதோளும்
அடைவலமு மாள விடு சர அம்புடை
தசரதகு மார ரகுகுல புங்கவன்
அருள்புனை முராரி மருக விளங்கிய …… மயிலேறி
அடையலர்கள் மாள வொருநிமி டந்தனி
லுலகைவல மாக நொடியினில் வந்துயர்
அழகியசு வாமி மலையில மர்ந்தருள் …… பெருமாளே.
அழகுடைய மான், மாறுபட்ட கரன், ஏழு மராமரங்கள், ஒப்பற்ற வாலியின் மார்பு, ஏழு கடல்கள், வீரம் நிறைந்த அசுர சேனைகள், ராவணனது சிறந்த சூரியன் போல ஒளிவீசும் ரத்தின மணிகள் பதிக்கப்பட்ட பத்து முடிகள், இருபது தோள்கள் இவை அனைத்தும் சேர்ந்துள்ள வலிமை முழுதும் அழியுமாறு ஒரு கணை விடுத்த தசரத குமாரன்' என்று ராமனின் சரவேகத்தைப் புகழும் அழகிய சுவாமிமலைப் பாடல் இது!
திருப்புகழ்-104
அகல்வினை யுட்சார் சட்சம யிகளொடு வெட்கா தட்கிடு
மறிவிலி வித்தா ரத்தன …… மவிகார
அகில்கமழ் கத்து ரித்தனி யணைமிசை கைக்கா சுக்கள
வருள்பவர் நட்பே கொட்புறு …… மொருபோதன்
…………………………………………………………………
…………………………………………………………………
இகல்படு நெட்டூர் பொட்டெழ இளநகை யிட்டே சுட்டருள்
எழுபுவி துய்த்தார் மைத்துனர் …… மதலாய்வென்
றிடரற முப்பால் செப்பிய கவிதையின் மிக்கா ரத்தினை
யெழுதிவ னத்தே யெற்றிய …… பெருமாளே.
மாறுபட்ட பெரிய திரிபுரங்கள் தூளாகி விழ புன்னகை பூத்தே சுட்டு எரித்து அருள் புரிந்தவரும், ஏழு உலகங்களையும் உண்ட திருமாலின்மைத்துனருமாகிய சிவபெருமானின் குழந்தையே,
திருப்புகழ்-113
ஆல காலமெ னக்கொலை முற்றிய
வேல தாமென மிக்கவி ழிக்கடை
யாலு மோகம்வி ளைத்துவி தத்துட …… னிளைஞோரை
——————————–
——————————–
மாய மானொட அரக்கரை வெற்றிகொள்
வாலி மார்பு தொளைத்திட விற்கொடு
வாளி யேவிய மற்புயன அச்சுதன் …… மருகோனே
——————————–
——————————–
நாளி கேரம்வ ருக்கைப ழுத்துதிர்
சோலை சூழ்பழ நிப்பதி யிற்றிரு
ஞான பூரண சத்தித ரித்தருள் …… பெருமாளே
மாய மானாக வந்த மாரிசனையும், அரக்கர்களையும் வெற்றிகொண்டவரும், வாலியின் மார்பைத் தொளைக்கும் வண்ணம் வில்லைஏந்தி அம்பை எய்தவரும், மற்போருக்குப் பொருந்திய புயத்தைஉடையவருமான அச்சுதன் (திருமாலின்=ராமன்)மருகனே,
திருப்புகழ்-115
இத்தா ரணிக்குள்மநு வித்தாய் முளைத்தழுது
கேவிக் கிடந்துமடி மீதிற் றவழ்ந்தடிகள்
——————————–
——————————–
மத்தா மதக்களிறு பிற்றானு தித்தகுக
னேதத் திலங்கையினி லாதிக்க முண்டதொரு
முட்டா ளரக்கர்தலை யிற்றே விழக்கணைக
ளேதொட் டகொண்டலுரு வாகிச் சுமந்ததிக
மட்டார் மலர்க்கமல முற்றாசனத் திருவை
மார்பிற் புணர்ந்த ரகு ராமற்கு மன்புடைய …… மருமகனாகி
——————————–
——————————–
வர்க்கா மருப்புழுகு முட்டா திருப்பழநி
வாழ்வுக் குகந்தடிய ராவிக் குள்நின்றுலவி ……வருபெருமாளே.
குற்றம் பொருந்திய இலங்கையில் தலைமை கொண்ட முட்டாளாகிய ராவணனுடைய தலை அறுந்து கீழே விழ அம்புகளை ஏவியவரும், மேக நிறத்தை உடையவரும், மிகுந்த வாசனையை உடைய தாமரை மலர் மணம் கொண்ட, ஜனகன் மகளாகிய சீதையை மார்பில் அணைத்த ரகுராமனுக்கு அன்புடைய மருகனாகி,
முருகப் பெருமானின் தத்துவம்
- முருகப்பெருமானின் மாங்கனி கோபம்: விளையாட்டில் தத்துவமும்; தத்துவத்தில் விளையாட்டும் கூடாது. விளையாட்டு விளையாட்டாகவும்; தத்துவம் தத்துவமாகதான் இருக்கவேண்டும்.
- முருகனின் திருமணம் சமத்துவத்தைக் காட்டுகிறது. தேவலோக அரசனின் மகளைத் திருமணம் செய்த முருகன், வேடுவர் குல மகளைத் திருமணம் செய்திருக்கிறான். பூவுலகைச் சேர்ந்த வள்ளியம்மைக்குக் கொடுக்கப்படும் தனிச்சிறப்பு.
- சைவச பரம் பொருளான சிவபெருமானின் புதல்வன் முருகன். வைணவர்களின் பரம் பொருளான விஷ்ணுவின் புதல்விகளானா வள்ளி, தேவசேனா கல்யாணம் செய்தமை சமய ஒற்றுமை.
வள்ளி-தெய்வயானை
- ஸ்ரீமன் நாராயணரின் ஆனந்தக் கண்ணீரில் இருந்து அமிர்தவல்லி –சுந்தரவல்லி என்ற இரு கன்னிகைகள் தோன்றி முருகப் பெருமானை மணம் புரிய, இமயமலையில் தவம் புரிந்தனர்.
- கன்னியர் தவத்திற்கு உகந்த ஷண்முகப் பெருமான் சூர சம்ஹாரத்துக்குப் பின்னர் இருவரையும் மணம் புரிவதாக வாக்களித்தார்.
- சம்ஹாரக் காலம் வரையில் அமிர்தவல்லி இந்திரனின் வளர்ப்பு மகளாகவும், சுந்தரவல்லி வள்ளி மலையிலும் வளர்ந்து வருமாறு அருளினார்.
- அதன் படி, குழந்தை வடிவம் தாங்கிய அமிர்தவல்லியை இந்திரனின் வாகனமான ஐராவதம் வளர்த்தது. ஆதலால் 'தெய்வ யானை' என்ற திருப்பெயரால் அழைக்கப் பெற்றாள்.
- வள்ளி மலையில் ஸ்ரீமகாவிஷ்ணு முனிவராக தவநிலையில் இருந்து வந்தார். அத்தருணம் ஸ்ரீமகாலக்ஷ்மி பெண் மான் வடிவம் தாங்கி முனிவரை கடந்து செல்ல, பரந்தாமனின் திருப்பார்வை கடாட்சத்தால் அம்மான் ஒரு பெண் மகவை ஈன்று மறைந்தது.
- வேடர் தலைவர் நம்பிராஜன், வள்ளிக் கிழங்கு குழியில் கண்டெடுத்த தெய்வக் குழந்தைக்கு 'வள்ளி' என்னும் திருநாமம் சூட்டி வளர்த்தான்.
- செந்தில் வேலவன் சூர சம்ஹார நிகழ்வுக்குப் பின்னர், தெய்வயானைத் தாயாரை திருப்பரங்குன்றத்திலும், வள்ளி அம்மையாரை வள்ளி மலையிலும் மணம் புரிந்தார்.
- இந்நிகழ்வுகளால் ஷண்முகப் பெருமான் திருமாலின் மருமகன் என்னும் திருநாமம் பெற்றார்.
- முருகனுக்காக யானை, "தெய்வயானையை வளர்த்தது" "வள்ளியை மணமுடித்தது".
வேலவனின் வேறு பெயர்கள்!
- ஆறுமுகம்: ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது.
- குகன்: குறிஞ்சி நிலத் தெய்வம், மலைக் குகை கோயில் கொண்டவன்.
- குமரன்: மிக உயர்ந்தவன், இளமை உடைவன், பிரம்மச்சாரி.
- முருகன்: அழகுகன் ; ஒப்புமையற்ற பேரழகன்.
- குருபரன்:கு= அஞ்ஞான இருள், ரு= நீக்குபவர், ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றும் குரு. சிவனுக்கும், அகத்தியருக்கும், அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.
- காங்கேயன்: கங்கையின் மைந்தன்.
- கார்த்திகேயன்: கார்த்திகைப் பெண்களால் வளர்ந்தவன்.
- கந்தன்: கந்து – யானை கட்டும் தறி. கந்தன்-ஆன்மாக்களுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகைவர் வலிமையை அழிப்பவன். ஸ்கந்தன்-தோள் வலிமை மிக்கவன். ஆறு திருமேனியும் ஒன்றானவன்.
- கடம்பன் : கடம்ப மலர் மாலை அணிந்தவன்.
- சரவணபவன்: சரம்= நாணல், வனம்=காடு, பவன்=தோன்றியவன்,
நாணல் மிக்க தண்ணீர் உடைய காட்டில் தோன்றியவன். - ஸ்வாமி:ஸ்வம்=சொத்து, எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன். சுவாமி என்ற பெயர் முருகனுக்குமட்டுமே உரியது. சுவாமி உள்ள மலை சுவாமி மலை.
- சுரேஷன் : தேவர் தலைவன் சுரேசன்.
- செவ்வேள் : செந்நிறமுடையவன், ஞானச் செம்மை உடையவன்.
- சேந்தன் :செந்தழல் பிழம்பாய் இருப்பவன்.
- சேயோன் : சேய்= குழந்தை, குழந்தை வடிவானவன்.
- விசாகன் : விசாக நட்சத்திரத்தில் உதித்தவன்.
- வேலவன், வேலன் : வெல்லும் வேல் உடையவன். அறிவாக, ஞான வடிவாக விளங்கும் வேல், கூர்மை, அகலம், ஆழம் என்னும் மூன்றும் உடையது.
- முத்தையன்: பிறப்பிலேயே முத்து ஒளியுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால் தான் ஒளிரும். எனவே இயல்பாகவே ஒளிர்பவன் முத்தையன்.
- சோமாஸ்கந்தன் : ச – உமா – ஸ்கந்தன்: சிவன் உமை முருகன்.
- சுப்ரமணியன்: சு=மேலான, பிரம்மம்=பெரிய பொருள்-மேலான பெரிய பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன்.
- வள்ளற்பெருமான் : முருகன், மண்ணு வள்ளி இச்சா சக்தி மூலம் விண்ணுலக மங்கை தெய்வானை கிரியாசக்தி மூலம் பரலோக நலன்களையும், வேலின் மூலம் ஞானசக்தியையும் ஆகிய மும்மைநலன்களையும், முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.
- ஆறுபடையோன்: மூலாதாரம், வாதிஷ்டானம், மணிபூரகம்,
அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறாதாரங்களை ஆறுபடை வீடுகளாய் உடையவன். - மயில்வாகனன் : மயில்-ஆணவம், யானை-கன்மம், ஆடு-மாயை இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்.
தமிழ்=முருகன்; உதாரணமாக 12 உயிரெழுத்து=முருகனின் 12 தோள்கள்; 18 மெய்யெழுத்து=முருகனின் 18 கண்கள் (முருகன் சிவனது நெற்றிப் பொறியிலிருந்து தோன்றியவர் என்பதால், இவரது ஒவ்வொரு முகத்திலும் இவருக்கும் நெற்றிக்கண் உண்டு. 6 இன எழுத்து = 6 முகங்கள்;. ஆயுத எழுத்து ஃ வேலை குறிக்கும்.
வேலவனின் அறுபடை வீடுகளைக் குறிக்கும் சுந்தரனுபூதிப் பாடல்!
உல்லாச நிராகுல யோக இதச்
சல்லாப விநோதனும் நீயலையோ?
எல்லாமற என்னை உணர்ந்த நலம்
சொல்லாய் முருகாசுர பூபதியே
- உல்லாசம்-தெய்வானையை மணந்த திருப்பரங்குன்றம்
- நிராகுலம்– சூரசங்காரம் நிகழ்ந்த திருச்செந்துர்.
- யோகம்– யோகியாக நின்ற திருவாவினன்குடி
- இதம்– பிரணவத்தின் பொருளை சிவபெருமானுக்கு உபதேசித்த சுவாமிமலை.
- சல்லாபம்– வள்ளியை மணந்து, வள்ளியுடன் நின்ற திருத்தணிகை.
- வினோதம்– ஔவையாருக்காக பழத்தை உதிர்த்து விளையாடிய பழமுதிர் சோலை
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
Please click below to go to CONTENTS for all the Articles in HRE:
https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/
No comments:
Post a Comment