Monday, October 5, 2015

Guru Bhakti & Pati Bhakti-Periyavaa

Courtesy:Sri.Anand Vasudevan

தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)

தேவதாமூர்த்திகள் அவதார புருஷர்கள்

பதிபக்தியும் குருபக்தியும் வழங்கும் தேவி

அம்பாளை உபாஸிப்பதால் பதிபக்தி உண்டாவது ரொம்பவும் நியாயம்தான். ஏனென்றால் அவளே மகா பதிவிரதையாக இருக்கிறவள். பிரியம் வைக்க முடியாதவரிடம் மகாப் பிரியமும், விசுவாசமாக இருப்பதுதான் விசேஷம். சகல ஐசுவரியமும் உள்ள வைகுண்டத்தில் அலங்காரப் பிரியராக ரூபலாவண்டத்தோடு இருக்கிற மகா விஷ்ணுவிடத்தில் மஹாலக்ஷ்மி பிரியமாக இருப்பதில் சுவாரஸ்யம் இல்லை. மயானவாசியாக, புலித்தோலை கட்டிக்கொண்டு கபால மாலை போட்டுக் கொண்டு, ஊரெல்லாம் பிச்சை எடுக்கிற பரமேசுவரனிடத்தில் அம்பாள் மாறாத அன்போடு இருப்பதே விசேஷம். தாக்ஷாயணியாக அம்பாள் பிறந்தபோது அவளது பிதாவான தக்ஷன் ஈஸ்வரனை மதிக்கவில்லை. இதைக் கண்டு பொறுக்க முடியாத தாக்ஷாயணி தகப்பனுடைய யாகசாலையில், "என் பர்த்தாவை மதிக்காத தக்ஷனுக்குப் பெண்ணாக பிறந்து, தாக்ஷாயணி என்று வைத்துக் கொண்டிருக்கிற இந்தச் சரீரமே எனக்கு வேண்டாம்" என்று பிராணனை விட்டாள். யாக குண்டலத்திலேயே உயிரைத் தியாகம் செய்தாள் என்பது கதை. தாக்ஷாயணிக்கு 'ஸதி' என்றே இயற்பெயர். 'தக்ஷனின் புத்ரி' என்கிற அர்த்தத்தில் 'தாக்ஷாயணி' என்ற காரணப் பெயரும் ஏற்பட்டது. இதனால்தான் வெள்ளைக்காரர்கள் பதிவிரதத்தின் உச்சியாக உடன்கட்டை ஏறுகிறதை Suttee (ஸதி) - என்றே சொன்னார்கள். 'ஸதி' என்றாலே கற்புக்கரசி என்று அர்த்தமாகிவிட்டது. அதற்கப்புறம் தாக்ஷாயணியே பர்வத ராஜபுத்திரியாக ஜனித்து பார்வதி என்று பேர் பெற்றாள். சம்ஹார மூர்த்தியும், கோர மசானவாசியுமான பரமேசுவரனிடம் இப்போதும் அவளுடைய அன்பு மாறவே இல்லை. அவரையே மறுபடியும் பதியாக அடைய வேண்டும் என்று சின்னஞ்சிறு வயதிலேயே உக்கிர தபஸ் செய்தாள் பார்வதி. கடைசியில் ஈஸ்வரனைக் கல்யாணம் செய்து கொண்டாள். இவளைக் கல்யாணம் பண்ணிக் கொண்ட விசேஷத்தால், 'கோர கோர தரேப்ய:' என்று வேதம் சொல்கிற கோரருத்திரனும், பரம மங்கள ஸ்வரூபியாக, சிவமாக ஆனார். அவளுக்கு 'சிவா' என்ற பேர் உண்டாயிற்று.

அம்பாளைவிட மங்கள வஸ்து இல்லை. 'ஸர்வ மங்கள மாங்கல்யே' என்பார்கள். அவளுடன் சேர்ந்திருப்பதாலே பரமேசுவரனும் மங்கள ஸ்வரூபியாகிறார். மங்களமே வடிவான அம்பிகை மகா சுமங்கலி. அவளுடைய சௌமங்கலியத்துக்கு எப்படி பங்கம் உண்டாக முடியும்? இதனால்தான் ஆலஹால விஷம் சாப்பிட்டுக்கூடப் பரமேசுவரன் சௌக்கியமாகவே இருக்கிறார் என்று ஆச்சாரியாள் 'ஸெளந்தரிய லஹரி'யில் கூறுகிறார். காதில் தோடு, நெற்றியில் குங்குமம், கழுத்தில் கருகுமணி இத்யாதி மங்கள சின்னங்களெல்லாம் சுமங்கலி லக்ஷணம். அம்பாளும் காதில் தாடங்கம் அணிந்திருக்கிறாள். சாதாரண பனை ஒலையைத்தான் தாடங்கமாகப் போட்டுக் கொண்டிருக்கிறாள். 'தாலீபலாச தாடங்கம்' என்று இதை ஸ்தோத்திரங்கள் சொல்கின்றன. பழைய காலத்தில் எல்லோருமே படாடோபம் இல்லாமல் எளிமையிலேயே சுபிட்சமாக இருந்தார்கள் என்பதற்கு இது ஒரு திருஷ்டாந்தமாகத் தோன்றுகிறது. அம்பாளைப் போலவே எல்லா ஸ்திரீகளும் பனை ஒலையைத்தான் போட்டுக் கொண்டிருக்கவேண்டும். இதனால்தான் பிற்காலத்தில் வைரத்தோடு போட்டுக் கொள்கிற டாம்பீகம் வந்தபின்கூட, அதை 'வைர ஓலை' என்றே சொல்கிற வழக்கம் உண்டாகியிருக்கிறது.

அம்பாளுடைய தாடங்கத்துக்கு வருவோம். மங்களச் சின்னமான தாடங்கம் அவள் காதிலிருந்து இறங்கக்கூடாது. அப்படியானால் பரமேசுவரன் எக்காலத்திலும் ஜீவிக்கத்தான் வேண்டும். இதனால்தான் அவள் ஆலஹால விஷம் உண்டும்கூட அது அவரைப் பாதிக்கவில்லை. 'இது உன் தாடங்க மகிமையம்மா!' என்கிறார் ஆசாரியாள். திருவானைக்காவில் அகிலாண்டேசுவரியின் தாடங்கத்திலேயே ஸ்ரீ சக்ர, சிவ சக்ரப் பிரதிஷ்டை செய்து, அவளை ஸெளம்ய மூர்த்தியாக்கின ஆசாரியாள், இப்படி இங்கே 'தவ ஜனனி தாடங்க மஹிமா' என்கிறார்.

விஷத்தைச் சாப்பிட்டும் பரமேசுவரன் சொஸ்தமாக இருப்பதற்குக் காரணம், எந்த விஷத்தையும் முறிக்கிற மருந்தாக, அமிருத்தமாக, அம்பிகை அவரோடு சேர்ந்து இருப்பதுதான். வேத வாக்கியமான 'ஸ்ரீ ருத்ர'த்தில் இப்படித்தான் சொல்லியிருக்கிறது. "ருத்திரனாக கோரமாக இருக்கிற உனக்கு 'சிவா' என்று ஒரு மங்கள சரீரம் இருக்கிறது. இந்த சிவாதான் லோகம் முழுவதற்கும் மருந்து. (சிவா விச்வா ஹபேஷஜீ) லோகத்துக்கு மட்டும்தான் அது மருந்தா? இல்லை. ருத்திரனாக உனக்கும்கூட 'சிவா' தான் மருந்து. (சிவா ருத்ரஸ்ய பேஷஜீ) என்று வேதம் சொல்கிறது. கோர ஸ்வரூபியையும் தன் பதிவிரத்யத்தால் மங்களமாக்கி, அவரை என்றென்றும் ஜீவிக்கும்படி செய்கிறவளை ஸ்திரீகள் ஆராதித்தால் பதிபக்தியும், தீர்க்க ஸெளமங்கல்யமும் ஸித்திக்கும்.

பெண்களுக்குப் பதியேதான் குரு. பழைய காலத்தில் காமம் உள்ளே புகுமுன் காயத்ரீ புகுந்துவிடவேண்டும் என்று கருதி எட்டு வயசுக்குள் புருஷப் பிள்ளைகளுக்கு உபநயனம் செய்து குருவிடம் சேர்த்தார்கள். அதே வயசில் பெண்களுக்குக் கல்யாணம் செய்து புருஷனிடம் சேர்த்தார்கள். அவனேயே குருவாகவும் தெய்வமாகவும் இவளுக்கு வைத்தார்கள். பிற்பாடுதான் காமம் ஏற்பட்டு, அவனை அவள் பதியாகப் பார்ப்பதே. எனவே குருபக்தியும், பதிபக்தியும் பெண்களுக்கு ஒன்றேதான். பதிவிரதா சிரோமணியான அம்பாளை ஆராதிக்கிற பெண்களுக்கு அவள் தீர்க்க ஸெளமாங்கலியத்தைத் தருகிறாள். ஸ்ரீமத் பாகவதத்தில் கோபிகா ஸ்திரீகள் மார்கழி மாதம் முழுதும் தினம் அதிகாலையில் ஆற்றங்கரையில் அம்பாளை பூஜத்து, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை அடைந்தார்கள் என்று சொல்லியிருக்கிறது. பிற்பாடு ருக்மணியும் அம்பாளை ஆராதனை செய்தே பகவானை பர்த்தாவாக அடைந்தாள் என்று வருகிறது. தமிழ்நாட்டிலும் சங்க காலத்திலேயே 'அம்பாவாடல்' என்கிற பேரில் கன்னிப் பெண்கள் கல்யாணமாவதற்கு அம்பாளை வழிபட்டார்கள் என்று தெரிகிறது. இதற்குப் 'பாவை நோன்பு' என்ற பேர் இருக்கிறது. இன்னமும் கன்னிப் பெண்கள் கல்யாணமாவதற்காக கௌரீ பூஜை பண்ணுகிறார்கள். ஆந்திர தேசத்தில் அவ்வழக்கம் அதிகம் இருக்கிறது.

எப்பேர்ப்பட்ட பர்த்தா வந்தாலும், அவனையே தெய்வமாகப் பாவித்துத் தன்னை சரணாகதி செய்துவிட வேண்டும் என்பதுதான் உத்தம பதிவிரதா லக்ஷணம். ஏதோ ஓரிடத்தில் மனஸை பரிபூரணமாக அர்ப்பணம் பண்ணிவிட வேண்டும். பிறகு அதை மாற்றக்கூடாது என்பதுதான் முக்கியம். அந்த ஓரிடம் முக்கிய வஸ்துவாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அது எப்படி வேணுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்; அதனிடத்தில் மனஸைப் பூரணமாகச் சமர்ப்பித்துவிட்டால், அப்புறம் நமக்கென்று தனியாக எதுவுமே செய்து கொள்ள வேண்டும் என்பதில்லாமல் போய்விடுகிறது. இது தன்னலனை அடியோடு இழந்து கொள்கிற நிலை. இப்படி அகங்காரம் அடியோடு போய்விட்டதனால் மோக்ஷமார்க்கத்துக்கு வாசலைத் திறந்து விட்டாற் போலிருக்கிறது. நாம் சரணாகதி பண்ணுவதுதான் இதில் முக்கியம். அது எந்தப் பாத்திரத்தைக் குறித்து என்பது அவ்வளவு முக்கியமல்ல. ஒரு ஸ்திரீ எப்படிப்பட்ட புருஷன் கிடைத்தாலும் அவனிடம் சரணாகதி செய்து, பதிவிரதையாக இருந்து, அவனையே பரமேசுவரனாக நினைத்து விட்டாளானால், நிச்சயமாக அந்தப் பரமேசுவரன் இந்தப் புருஷன் மூலமாகவே அவளுக்கு அநுக்கிரஹம் பண்ணிவிடுவார். மகாகுரூபமும், விபரீத குணமும் படைத்த பதியிடம் அதி விசுவாசத்தோடு இருந்த நளாயினிக்கு சூரியனையே உதிக்காமல் நிறுத்தி வைக்கிற சக்தி உண்டாயிற்று. பதிவிரதை பூஜிக்கிற அந்தப் பதிக்கு ஒரு சக்தியும் இராது! நளாயினியின் பதியால் சூரியனை உதிக்காமல் நிறுத்தி வைக்க முடியுமா? முடியாது. பரமேசுவராம்சம் லவலேசம்கூடத் தனக்கு இருப்பதாக ஒரு பதிக்குத் தெரியாதபோதுகூட அவனை ஈஸ்வரனாக மதிக்கிற இவளுக்கு சகல சக்தியும் வந்து விடுகிறது. குரூபியிடமும், குணஹீனனிடமும்கூடப் பதிபக்தி பாராட்டுவதுதான் விசேஷம். "அவர் இயற்கையாகவே நல்லவராக இருந்தால் நம் தியாகத்தைக் காட்ட வழி ஏதுமில்லை. அதற்காகவே பகவான் இப்படிக் குணஹீனனான புருஷனாக நமக்குக் கொடுத்திருக்கிறார்" என்று நினைக்க வேண்டும். இப்படிப்பட்ட பதியை அநுசரிப்பதால் ஏற்படுகிற அவமானமும் கொஞ்ச காலம்தான் இருக்கும். 'தனியாக நமக்கென்று மான அவமானம் என்ன இருக்கிறது?' என்று இவள் இருக்க வேண்டும். மொத்தத்தில் விஷயம், 'தனக்காக ஒன்றைப் பண்ணிக் கொள்வது' என்பது அடிபட்டுப்போனால், அப்புறம் மோக்ஷம் சமீபம்தான்.

குருவிஷயமும் இப்படித்தான். நல்லவர் என்று நினைத்துதான் ஒருவரை குருவாக வரிக்கிறோம். பிற்பாடு அப்படியில்லை என்று தெரிந்தாலும்கூட, விடாமல் சிசுரூஷை செய்தால் நம் மனசு சுத்தமாகிவிடும் என்று எனக்குத் தோன்றுகிறது. எல்லாமாக ஆகியுள்ள பரமேசுவரன்தான் இங்கே இப்படி ஆகியிருக்கிறார் என்கிற பாவத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். தகாத இடம் என்று தோன்றுகிறபோதும் சிசுரூஷையை குறைக்காமலிருந்தால் ஜாஸ்தி பலன் என்றுகூடத் தோன்றுகிறது. நன்றாக இருக்கிற ஒன்றிடம் பிரியம் வைப்பதில் விசேஷம் என்ன இருக்கிறது? கெட்டதிடமும் அதே பிரியத்தை வைத்துவிட்டால், நம் பிரியத்தாலேயே கெட்டதும் நல்லதாகலாம் - கோரமான ருத்திரன்கூட அம்பாளால் மங்கள ஸ்வரூபியான மாதிரி.

குரு ஸ்வரூபமாக வருகிறவளும் அவள்தான். இந்த மாயா லோகம் அவளால்தான் நடக்கிறது. அதிலிருந்து கைதூக்கி விடுவதற்காக அவளே குருவாக வருகிறாள். குண்டலினி யோக சாதகர்கள் தங்கள் சிரஸின் உச்சியில் பிராண சக்தியைக் கொண்டுவந்து அங்கே பூரண சந்திரனில் அம்பாள் பாதத்தைத் தரிசிக்கிறார்கள்; இதையே குருபாதுகை எனறும் சொல்கிறார்கள். காளிதாஸரும், "தேசிக ரூபணே தர்சிதாப்யுதயாம்" - ஆசாரிய வடிவில் தன் மகிமையைக் காட்டுகிறவள்" என்று அம்பாளை ஸ்துதிக்கிறார்.

'ஈசுவரன் மயானத்தில் வசிக்கிறாரா, வசிக்கட்டும்; பேய் பிசாசுகளோடு கூத்தடிக்கிறாரா, அடிக்கட்டும்; சம்ஹார தாண்டவம் பண்ணுகிறாரா, பண்ணட்டும்; ஊர் ஊராகப் பிச்சை எடுக்கிறாரா, எடுக்கட்டும் - அவர் எப்படியிருந்தாலும் அவருக்கே இருதயத்தை அர்ப்பணம் செய்வேன்' என்று அவரிடமே தீவிரமாக அன்பு வைத்து, தக்ஷ யக்ஞத்தின் தன் பிராணனையே தியாகம் செய்த அம்பாள்தான், இப்படிப்பட்ட பதிபக்தியை, குருபக்தியை அநுக்கிரஹம் செய்கிறாள்.

No comments:

Post a Comment