உலகைக் காக்கும் உத்தமனுக்கு உறியடி உற்சவம்.
1-09-2015 குங்குமம் இதழ்
தஞ்சை மாவட்டத்தில் பசுமை நிரம்பிய கிராமம் வரகூர். அங்கு அமைந்துள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் நடைபெற்று வரும் உறியடி உற்சவம் உலகப் பிரசித்தி பெற்றது. தேவர்களின் தலைவன் தேவேந்திரன் தனக்கு கோகுலத்தில் விழா கொண்டாடவில்லை என்று கோபம் கொண்டு, அந்த ஊரை அழிக்க வருண பகவானை ஏவி விடுகிறான். வருணன் கடும் மழையைப் பொழிந்து கோகுலவாசிகளை தவிக்க விடுகிறான். கண்ணன், கோவர்த்தன மலையைக் குடை போல உயர்த்தி, அனைவருக்கும் அடைக்கலம் கொடுத்து காப்பாற்றுகிறான். ஆபத்பாந்தவனாகிய கண்ணனை வழிபடும் விழாவே உறியடி உற்சவத்தின் முக்கிய அம்சம். அன்று வரகூர் கோகுலமாகிவிடுகிறது என்றால் மிகையல்ல. மக்கள் தங்களை யாதவர்களாக பாவித்து 'கோவிந்தா, ' என்று கோஷமெழுப்பியபடி, அந்த கிராமத்தை ஒட்டியுள்ள காவிரி ஆற்றில் நீராடிவிட்டு, ஈர உடைகளுடன் தரையில் புரண்டு வெங்கடேசப் பெருமாள் கோயில் வரை வருவது, பரவசமூட்டும் காட்சி. கோயிலுக்கு எதிரில் மூங்கில் மரம் நடப்பட்டு, அதன் உச்சியில் மத்தளம் போன்ற வடிவில் செய்யப்பட்ட மூங்கில் கூடுக்குள் முறுக்கு, சீடை போன்ற சில பலகாரங்களை வைத்துக் கட்டித் தொங்கவிடுகிறார்கள்.
சுற்றிலும் யாதவ வேடம் புனைந்த சில பக்தர்கள் கைகளில் கம்பு ஏந்தி அந்தப் பிரசாதக் கூடையை அடிக்க, அவர்களின் கைக்கம்புக்குச் சிக்காதபடி ஒரு கயிறால் அந்தக் கூடையை ஒருவர் மேலும் கீழுமாக சாமர்த்தியமாக இழுப்பார். உறியடிக்க முயற்சிப்பவர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து திக்கு முக் காடச் செய்வார்கள். உறியடி முயற்சியில் வெற்றி பெற்றவர்கள் அதில் வைத்திருக்கும் பிரசாதத்தை வெங்கடேசப் பெருமாளுக்கு நிவேதனம் செய்துவிட்டு, பிறகு எல்லோருக்கும் விநியோகிப்பார்கள். வழுக்கு மரம் ஏறுவது உறியடி நிகழ்ச்சியின் மற்றொரு அங்கமாகும். உயரமான ஒரு சவுக்கு மரம் நடப்பட்டு, அதன் மீது பலவிதமான வழுக்கும் பசைகளைத் தடவி இருப்பார்கள். அதன் மீது ஏறுவோர் வழுக்கிவிழும்படி தண்ணீரையும் பீய்ச்சி அடிப்பார்கள். வாழ்க்கையில் வழுக்கி விழுவோர், பகவானின் நாமத்தை உச்சரித்து பக்தியோடு முயற்சித்தால் பிரச்னைகளை வெல்வார்கள் என்ற தத்துவத்தைப் போதிப்பதே இந்த வைபவம். தடைகளை மீறி வழுக்கு மரத்தில் ஏறி அதன் உச்சியில் கட்டப்பட்டு இருக்கும் பிரசாதத்தைக் கைப்பற்றுபவருக்கு அந்த பிரசாதம் முதலில் வழங்கப்பட்டு, மீதமுள்ளது பிறருக்கு அளிக்கப்படுகிறது.
தவிர, சிலர் தங்களை ஆடு, மாடுகளாக பாவனை செய்து கொண்டு, ஒரு பட்டியில் அடைபட்டுக் கிடந்து,பிறகு கால்நடைகளைப் போலவே குனிந்து நடந்து பெருமாள் தரிசனம் காண வருவார்கள். இன்னும் சிலர் இடுப்பில் சலங்கைக் கட்டிக்கொண்டு ஆடு, மாடு போல குதித்து பாய்ந்தோடுவார்கள். இரவு முழுவதும் அவர்களின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்தான். தோளில் கம்பளி போட்டுக்கொண்டு கால் ஊனமுற்றவர் போல கையில் பால் சொம்பு ஏந்தி வரும் ஒருவர், பகவான் கிருஷ்ணனுக்கு அதைப் படைக்க வருவது மற்றும் ஓர் உருக்கமான காட்சி! அதற்கு 'சப்பாணி வேண்டுதல்' என்று பெயர்.
வரகூரின் புராதனப் பெயர் 'பூபதி ராஜபுரம்'. அத்வைத துறவி நாராயண தீர்த்தர், ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். தீவிர கிருஷ்ண பக்தர். தன் பிணி தீர அவர் பல புண்ணியத் தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவரை, 'பூபதி ராஜபுரத்துக்கு வந்தால் உன் பிணி அகலும்' என்று கிருஷ்ண பரமாத்மா வெள்ளை வராகம் (பன்றி) ரூபமாக வந்து கூறவே, அவர் உள்ளம் உருகிப் பிரார்த்தனை செய்து கொண்டே அந்த கிராமத்துக்கு வந்தார். உடனே நோய் குணமாயிற்று! வராகம் வழிகாட்டிய ஊர் என்பதால் 'வராக ஊர்' என்று பெயர் பெற்று பிறகு 'வரகூர்' என்று ஆகியது இத்தலம். வரகூர் பெருமாளின் கட்டளைப்படி, அங்கேயே அவர் தங்கியிருந்து, பகவானின் சந்நதியிலேயே 'கிருஷ்ணலீலா தரங்கிணீ' என்ற வடமொழி பக்திக் காவியத்தை எழுதினார். அதை அவர் உருகிப் பாடியபோது பெருமாள் வீற்றிருக்கும் திரைக்குப் பின்னால் சலங்கை ஒலி கேட்டதாம். பகவானே நர்த்தனமாடியதாக தரங்கிணீ காவியத்தில் ஒரு சிறப்புக் குறிப்பும் காணப்படுகிறது. கிருஷ்ணனின் கருணைப் பார்வை கிடைக்கப் பெற்ற நாராயண தீர்த்தரின் காவியத்தை ஒட்டியே அங்கு கோகுலாஷ்டமி காலத்தில் உறியடி உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த மகான் வரகூரிலேயே வாழ்ந்து முக்தியடைந்தார்.
இங்குள்ள ஆலய மூலவரை, அப்பொழுது அந்தப் பகுதியை ஆண்டுவந்த பராந்தகச் சோழன் நிர்மாணித்திருக்கிறார். மூலவர் மட்டுமின்றி உற்சவரும் சோழர் காலத்து சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறார். மூலவர் ஸ்ரீலட்சுமி நாராயணன், லட்சுமி தேவியை தம் மடியின் இடப்பாகத்தில் அமர்த்தி அணைத்துக் கொண்டிருக்கிறார். உற்சவ மூர்த்தி, ஸ்ரீதேவி-பூதேவியுடன் விளங்குகிறார். ஆண்டு முழுவதும் இந்தக் கோயிலில் ஏதேனும் உற்சவம் நடந்து கொண்டிருக்கிறது.
பெருமாள் புறப்பாடு, நிவேதனம் ஆகியவை பஜனை சம்பிரதாயப்படி நடத்தப்படுகின்றன. உறியடி உற்சவ நாளில் பஜனை, திவ்ய நாம சங்கீர்த்தனம் ஆகியவை நள்ளிரவுக்குப் பின்னும் நடைபெறுவதால் அன்று வரகூர் கிராமமே உறங்குவதில்லை! தங்கள் குறை தீர்க்கப் பெருமாளை வேண்டிக்கொண்டு கல்யாண உற்சவம் நடத்தி வருகிறார்கள் பக்தர்கள். கல்யாண வைபவத்தில் 25க்கும் மேற்பட்ட மூலிகை திரவியங்களுடன் பலகாரங்கள் செய்யப்பட்டு, பழ வகைகளுடன் ஹோமம் நடத்து கிறார்கள். அதனால் பலருக்கும் குறை நீங்கிய நிறைவான வாழ்க்கை அமைகிறது என்கிறார்கள். தீராத வயிற்று வலியில் இருந்தும்சிலர்நிவாரணம் பெற்றிருக்கிறார்கள். பெருமாள் திருக்கோல மூர்த்தியாக, தவழும் வடிவத்துடன் இடக்கையால் பெரிய தங்கக் குடத்தை அணைத்திருக்க, அதில் வெண்ணெயும், பாலும் தளும்பும் காட்சியை உறியடி உற்சவ நாளில் காணும் பக்தர்கள் பரவசம் அடைகிறார்கள். அந்த நாளில் மட்டுமல்ல, வரகூர் பெருமாள் கோயிலுக்கு எப்போது போனாலும் மெய்சிலிர்த்துதான் போகிறது. தஞ்சாவூரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது வரகூர். பூதலூர் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஆட்டோ, கார், பேருந்து மூலம் செல்லலாம்.முத்துசாமி
No comments:
Post a Comment