பரமனையே பாடுவார் - உமா பாலசுப்ரமணியன்
புரம் மூன்றும் செற்றானைப் பூண் நாகம் அணிந்தானை
உரனில் வரும் ஒரு பொருளை உலகு அனைத்தும் ஆனானைக்
கரணங்கள் காணாமல் கண் ஆர்ந்து நிறைந்தானைப்
பரமனையே பாடுவார் தம் பெருமை பாடுவாம்.
மனம் , வாக்கு, காயம் என மனிதனுக்கு மூன்று கரணங்கள் உண்டு. அதேபோல் விலங்கினங்களுக்கும் மனம் உண்டு , காயம் உண்டு , வாக்கு உண்டு . ஆனால் மனிதனுக்கு மட்டும் அவை நன்கு வளர்ந்திருக்கின்றன. அவனுடைய வாக்கு, ஈடேயில்லாமல் சிறப்புள்ளதாக இருக்கிறது. அதனால் விலங்கினங்களை வாயில்லாப் பிராணிகள் என்றும் , மனிதனை வாயுள்ளவன் என்றும் வழங்குகிறோம். வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பதற்கு ஏற்ப , வாயுள்ள மனிதனே இறைவன் திருவருளைப் பெறுவதற்கு உரியவன் .
மனிதன் தன் கருத்துக்களைச் சொல்வதற்கு மொழியை உபயோகப்படுத்துகிறான். மொழியையும் செம்மையாக வளர்த்தாலன்றி இறைவனை வழிபடுதல் இயலாத காரியமாகிவிடும் . அவன் தன் மூன்று கரணங்களாலும் இறைவனை வழிபட்டால் இறையருளைப் பெற்று இன்பம் பெறலாம் .
" வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும்
தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை " ---
என்று நாவுக்கரசர் அருளினார். இந்தக் கரணங்களைக் கொண்டு இறைவனை வழிபடுவதே அவைகளைப் பெற்றதன் பயனாகும் . உடம்பினால் வழிபடுவதை மிகுதியாகக் கொண்டவர்களைப் பத்தராய்ப் பணிவார் என்றும் ,வாயினால் பாடிச் சிறப்பாக இறைவனை வழிபடுபவர்களைப் பரமனையே பாடுவார் என்றும் , உள்ளத்தால் சிறப்புத் தொண்டு புரிபவர்களைச் சித்தத்தை சிவன் பால் வைத்தார் என்றும் மூவகைத் தொகை அடியாராக வைத்துத் திருத் தொண்டத் தொகை பாடினார் சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள்.
தென் தமிழிலும் பிற மொழிகளிலும் இறைவனைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் பல உள்ளன. அவை இறைவன்பால் அன்புமிகுந்த அடியவர்கள் பாடிய பாடலாகும் . அவற்றை வாயாரப் பாடி ஆடும் அன்பர்கள் யாவரும் பரமனையே பாடுவார் என்ற பெயர் கொண்டவர்கள் . பிற விலங்கினங்கள் பெறாத வாய்ப்பைப் பெற்ற மனிதன் அந்த வாயினால் பெரிய பயனை அடைந்து இறைவனைப் பாடுவது தான் அழகு. அதைச் செய்கின்ற நாயன்மார்கள் பரமனையே பாடுவர் . சிவபெருமானையே பரம் பொருளாகக் கொண்டு தென் தமிழிலும் வட மொழியிலும் ஏனைத் தேச மொழிகளிலும் பேசப்படுகின்ற துதிகளை இறைவன் பால் ஒன்றி உண்மையான அன்பொடு உருகிப் பாடுகிறவர்கள் ஆவர்.
தென் தமிழும் வட கலையும் தேசிகமும் பேசுவன
மன்றின் இடை நடம் புரியும் வள்ளலையே பொருள் ஆக
ஒன்றிய மெய் உணர் வோடும் உள் உருகிப் பாடுவார்
பன்றியுடன் புள் காணாப் பரமனையே பாடுவார்.
No comments:
Post a Comment