தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
தேவதாமூர்த்திகள் அவதார புருஷர்கள்
சிவத்தின் சக்தி ; நாராயண ஸஹோதரி
பரப்பிரம்மத்தின் சக்திதான் அம்பாள். ஒரு வஸ்துவின் சக்தி அந்த வஸ்துவோடு இரண்டறக் கலந்த விஷயம். வஸ்து இல்லாமல் அந்த சக்தி இல்லை. சக்தி இல்லா விட்டால் அந்த வஸ்துவும் இல்லை. ஆனபடியால் பிரம்மமேதான் சக்தி. பிரம்மத்தை ஈஸ்வரன் என்றால் அந்த ஈசுவரனோடு இரண்டறக் கலந்திருக்கிறவள் அம்பாள். பூவும் வாசனையும் தனித்தனியாய் இருக்க முடியுமா? பால் வேறு, அதன் வெளுப்பு வேறு என்று இருக்க முடியுமா? தேன் வேறு, அதன் தித்திப்பு வேறு என்று பிரிக்க முடியுமா? இப்படியே ஈசுவரனில் பிரிவறத் தோய்ந்திருக்கிறாள் அம்பாள். பரமேசுவரனும் பராசக்தியும் பிரிக்க முடியாமல் ஒன்றாயிருக்கிற ஆதி தம்பதி; சகல சிருஷ்டிக்கும் தந்தையும் தாயும் அவர்கள் தாம்.
தாய் வேறு, தந்தை வேறு என்று ஒரேடியாகப் பிரித்துச் சொல்லமுடியாமல், அம்மையப்பனாக, தாயுமானவராக இருக்கிற ஸ்வரூபம் அது. இரண்டும் இரு ரூபமாக இல்லாமல் ஒன்றாகக் கலந்த சிவ - சக்திகளே அர்த்தநாரீசுவரத் திருக்கோலம். நமக்கு அம்மா, அப்பா என்று இரண்டு ரூபங்கள் அநுக்கிரஹத்துக்கு வேண்டியிருக்கின்றன. நம்மைக் கண்டித்து உபதேசித்து ஞானத்தைக் கொடுக்கிற தகப்பனார் வேண்டும். நம்மிடம் எப்போதும் அன்பு கொண்டு ரக்ஷிக்கிற தாயாரும் வேண்டும். ஆனால் அவர்கள் வேறுவேறாகப் பிரிந்திருந்தாலோ தத்வ ரீதியில் சரியாக இல்லை. இதனால்தான் ஈசுவரனும் அம்பாளும் ஒரே ரூபத்தில் ஒரே சரீரத்தில் ஒரு பாதி அவர் மறுபாதி இவள் என்று அர்த்தநாரீசுவரராக ஆவிர்பவித்திருக்கிறார்கள்.
'சம்பு என்கிற சத்தியம் அருவமானது; அதன் உருவமே நீதான்' (சரீரம் த்வம் சம்போ:) என்று நம் ஆசார்யாள் அம்பாளைப் பார்த்துச் சொல்கிறார். அரூபம் ரூபமானதே அவளது சக்தியால்தான். ஆனாலும் சுத்த ஞான மயமாக இருக்கப்பட்ட அம்பாளின் பிரம்மம், அதன் அநுக்கிரஹ ரூபமான அம்பாள் இரண்டையும், தந்தையாகவும், தாயாகவும் பார்க்க வேண்டும்போல் நமக்கு ஆசையாக இருக்கிறது. இதற்காகத்தான் பரமேசுவரனுக்கும் ஒரு சகல ரூபம் இருக்கிறது. அப்புறம் தாயார், தகப்பனார் என்று முழுவதும் பிரிந்து விடாமல் ஒரு பொது ரூபமும் நமக்கு வேண்டியிருக்கிறது. இதற்காகவே இவரும் சேர்ந்து வலப்பாதி பரமேசுவரனாகவும் இடப்பாதி அம்பாளாகவும் அர்த்தநாரீசுவர ரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பாஸிடிவ், நெகடிவ் என்கிற இரண்டாக ஒரே எலெக்ட்ரிஸிட்டி இருப்பதுபோல் ஒரே பரம சத்தியம் அர்த்தநாரீசுவர ரூபம் கொண்டிருக்கிறது.
அர்த்தநாரீசுவரக் கோலத்தைப் பார்க்கிறபோது, பிறப்புக்குக் காரணமான காமனைத் தகனம் செய்த நெற்றிக் கண்ணில் பாதி சம்பந்தம் அம்பாளுக்கு இருக்கிறது. இறப்புக்குக் காரணமான காலனை உதைத்து ஸம்ஹாரம் பண்ணின இடது காலோ முழுக்கவும் அவளுடையதாக இருக்கிறது. இதிலிருந்து, ஜனன மரணச் சூழலிலிருந்து ஜீவனை விடுவிக்கிறவள் அவள்தான் என்று தெரிகிறது.
சிவனும் சக்தியும் பிரிக்க முடியாதவை என்பதையறிந்து, ஸ்வாமி அம்பாள் இருவரிடத்திலும் ஒரே போன்ற பக்தி வைக்க வேண்டும். ஒருத்தரை ஒதுக்கி மற்றவரிடம் மட்டும் பக்தி வைத்தால் போதாது என்பார்கள். இரண்டு பேரிடமும் சேர்ந்து அன்பு வைக்கிற போதுதான், அவர் அவளுக்கு ஆதாரமாக இருக்கப்பட்ட அவளுடைய பதி, அவள் அவரை விட்டு நீங்க முடியாத அவளுடைய சக்தி என்கிற ஞானம் நீங்காமல் இருக்கும். இருவரில் ஒருவரை ஒதுக்கிவிட்டால் இந்த ஸதி - பதி உறவு மறந்துபோய், பக்தி விபரீதமாகிறது. சூர்ப்பனகை சீதையைத் துவேஷித்து ராமரிடம் மட்டும் வைத்த அன்பும், ராவணன் ராமரைத் துவேஷித்து ஸீதா தேவியிடம் மட்டும் வைத்த அன்பும் விபரீதமாகி காமமாக ஆயின என்று உங்களுக்குத் தெரியும். பலனும் விபரீதமாகவே ஆயிற்று. இப்படி விபரீத பலன்கள் இல்லாமல், பூரண அநுக்கிரஹம் வேண்டுமானால், அம்பாளும் ஈஸ்வரனும் அர்த்தநாரீசுவரராக இருப்பதை எந்நாளும் மறக்காமல் பக்தி செலுத்த வேண்டும். அவர் 'மாதொரு பாகன்', அவள் 'பாகம் பிரியாள்' என்பதை நினைவு கொண்டு இருவரிடமும் அன்பு வைக்க வேண்டும்.
அர்த்த நாரீசுவர ரூபத்தில் எந்த இடது பக்கம் அம்பாளுடையதாக இருக்கிறதோ, அதுவே சங்கர நாராயண மூர்த்தத்தில் மஹாவிஷ்ணுவுடையதாக இருக்கிறது. இதிலிருந்து அம்பாளேதான் மஹாவிஷ்ணு என்றாகிறது. திருவையாற்றில் உள்ள ஈஸ்வரனைப் பற்றித் துதிக்கிறபோது, அவருக்கு ஹரியைத்தவிர வேறு பத்தினி இல்லையென்று அப்பர் ஸ்வாமிகள் சொல்கிறார்.
'அரியலால் தேவியில்லை
ஐயன் ஐயாறனார்க்கே'
அம்பாளும் மஹாவிஷ்ணுவும் ஒன்றேதான் என்கிற தத்துவத்தையே புராண ரீதியில் சொல்கிறபோது அவளை நாராயண ஸஹோதரி என்கிறோம்.
அர்த்தநாரீசுவரர் ஆகட்டும், சங்கர நாராயணர் ஆகட்டும், இரண்டிலும் வலது பக்கம் பரப்பிரம்ம ஸ்வரூபமான பரமேசுவரனே இருக்கிறார். வலது என்பதை எலெக்ரிஸிட்டியில் பாஸிடிவ் என்று வைத்துக்கொண்டால் இடப்பக்கம் நெகடிவ் ஆகிறது. பாஸிடீவ் சக்தி ஒரு மையக்கருவாக (Nucleus) இருக்க, நெகடீவ் சக்தி அதைச் சுற்றி அதிவேகமாகச் சுழன்றுகொண்டிருப்பதாக அணு விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். உலகம் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக, ஆனால் காரியமேயில்லாமல் இருக்கிற நிற்குணமான பிரம்மத்தை மையமாக, ஆதாரமாகக் கொண்டு உலகத்தை எல்லாம் சிருஷ்டித்து நடத்திக் காரியத்தைச் செய்து வருகிற சர்குணமான சக்தி இயங்குவது பாஸிடீவைச்சுற்றி நெகடீவ் சுழலுகிறதுதான். இதுவே ஆராதனைக்காக ஒரு மூர்த்தியாக வருகிறபோது, மத்திய நியூக்ளியஸ் - சுற்றி வருகிற சக்தி என்றில்லாமல் வலது பக்கம், இடது பக்கம் என்று இரண்டு கூறுகளாக திவ்ய ஆகாரம் (வடிவம்) எடுத்துக் கொள்கிறது. இதில் வலது பாஸிடிவ், செயலில்லாத ஆதார பிரம்மம்; இடது நெகடிவ், சகல காரியங்களுக்கும் மூலமான பிரம்மத்தின் சக்தி. இடது கூறு அர்த்தநாரீசுவர ஸ்வரூபத்தில், ஸ்திரீ ரூபமாகி அம்பாளாயிருக்கிறது; சங்கர நாராயண வடிவத்தில் புருஷ ஆகாரம் கொண்டு ஸ்ரீமகா விஷ்ணுவாக இருக்கிறது.
திருமங்கையாழ்வார் பெருமானைப் பற்றிப் பாடுகிற போது,
'பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து'
என்கிறார். பெருமாள் தமக்கு வலப் பாதியில் ஈசுவரனை வைத்துக் கொண்டிருக்கிறார் என்றால், ஈசுவரனின் இடப்பாகத்தில் பெருமாள் இருக்கிறார் என்றுதான் அர்த்தம்.
காரியமில்லாமல், கேவல ஞான மயமாக இருக்கிற பிரம்மத்தைப் பரமேசுவரன் என்றால், சகல ஜகத் காரணமாகிற மாயா தத்வத்தையும், இதிலிருந்து விடுவிக்கிற காருண்யத்தையும் அம்பாள் என்றோ மகாவிஷ்ணு என்றோ சொல்கிறோம். பரமேசுவரனுடைய சக்தி அவள்; ஸாக்ஷாத் நாராயணனே அவள்.
இதைப் பௌராணிகமாகச் சொல்கிறபோது, அவளை ஈஸ்வரனுக்குப் பத்தினி என்றும், மஹாவிஷ்ணுவுக்குத் தங்கை என்றும் பார்க்கிறோம்; அம்பாளை 'சிவ சக்தி ஐக்ய ரூபிணி' என்று சொல்லி முடிக்கிற லலிதா ஸஹஸ்ரநாமத்தில் இன்னோர் இடத்தில் 'பத்மநாப ஸகோதரி' என்று கூறியிருக்கிறது. அம்பாளைத் தவிர வேறெந்த தேவதா பேதத்தையும் பாடாத ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள், தம் கீர்த்தனங்களிலெல்லாம் அவளை 'சியாம கிருஷ்ண சஹோதரி' என்றே அழைத்து, இதையே தம் முத்திரையாக வைத்திருக்கிறார்.
கிருஷ்ணாஷ்டமியின் போதே யசோதைக்குப் பெண்ணாகப் பிறந்த விஷ்ணு மாயை அவள்தான். ஸ்ரீராம நவமியின் போதோ அவள் ஞானாம்பிகையாக அவதரித்த வஸந்த நவராத்திரி நிகழ்கிறது. விஷ்ணு அவதரித்த போதே இவளும் அவதரித்தாள் என்றால் இரண்டும் ஒன்று அல்லது உடன்பிறப்புகள் தானே!
ஆண்டாள் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவைக் கல்யாணம் செய்து கொள்வதாக சொப்பனம் கண்டு, அதைப் பாசுரமாகப் பாடியிருக்கிறாள். அதிலே வைதிகப் பிராம்மண சம்பிரதாயப்படி, தனக்கு நாத்தனார் கூரைப் புடவை கட்டி மாலை போட்டு முகூர்த்தப் பந்தலுக்கு அழைத்து வந்ததாகச் சொல்கிறபோது, கிருஷ்ணனின் சகோதரியான அம்பாளே இப்படி நாத்தனார் ஸ்தானம் வகித்ததாக ஆணாடள் பாடியிருக்கிறாள்.
'மந்திரக் கோடி உடுத்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழிநான்!'
(அந்தரி என்றால் அம்பாள்)
இப்படி அம்பாளை ஒரு பக்கம் ஈசுவரனோடு அபேதமாகவும், இன்னொரு பக்கம் ஸ்ரீ மஹாவிஷ்ணுவோடு அபேதமாகவும், ஒருத்தருக்குப் பத்தினி, இன்னொருத்தருக்கு சகோதரி என்று பாவித்துப் பழகிவிட்டால், அப்புறம் ஈஸ்வரனுக்கும் பெருமாளுக்குமிடையே உசத்தி - தாழ்த்தி செலுத்தவே மாட்டோம். சைவ, வைஷ்ணவம் பிணக்கு அறுந்தே போகும்.
காரியமில்லாத நிலையில் இருக்கிற ஒரே வஸ்து காரியமாகிறபோது பல ரூபங்களாகிறது; இந்த ரூபங்களிடையே ஒன்றுக்கொன்று உசத்தி - தாழ்த்தி இல்லை; அதே மாதிரி இந்த ரூபங்களுக்கும் இவை எல்லாவற்றுக்கும் மூலமாக இருக்கப்பட்ட ஒரே ஸத்யத்துக்கும் இடையிலும் வேறுபாடே இல்லை. இந்த ஞானம் நமக்கு வந்துவிட்டால், நம் மதத்தில் சண்டை, சச்சரவு, அபிப்பிராய பேதம், பிணக்கேயில்லாமல் ஆகும். ஈசுவர பத்தினியாகவும், பத்மநாப ஸஹோதரியாகவும் இருக்கிற அம்பாள்தான் இந்த சமரஸ பாவனையை நமக்கு அநுக்கிரஹிக்க வேண்டும்.
அம்பிகையின் ரூபங்கள் பல தினுசாக கோயில்களில் இருக்கின்றன. அதிலே ஒன்று சிவாலயங்களில் கோஷ்ட தேவதையாக இருக்கிற துர்க்கை. சிவன் கோயில்களில் கர்ப்பக்கிருஹத்தைச் சுற்றி விநாயகர், தக்ஷிணா மூர்த்தி, மஹாவிஷ்ணு (அல்லது லிங்கோத்பவர்), பிரம்மா, துர்க்கை ஆகிய மூர்த்திகள் இருக்கின்றன. இவர்களிள் தக்ஷிணாமூர்த்திக்குப் பத்தினி கிடையாது. இது அம்பாளின் சம்பந்தமில்லாமல் ஸ்வச்சமாகத் தான் மட்டுமே ஸ்வாமி இருக்கிற கோலம். இப்படியே துர்க்கைக்கும் பதி ஸ்தானத்தில் எவரையும் சொல்லத் தெரியவில்லை. தனி அம்பாளாக அவள் இருக்கிறாள். தக்ஷிணாமூர்த்தியின் கைகளில் ஜபமாலையும், சுவடியும் இருக்கும். இவர் வெள்ளை வெளேர் என்று இருப்பார். இதே மாதிரி ஒரே வெளுப்பாக ஜபமாலையும், சுவடியும் வைத்துக் கொண்டிருக்கும் ஸ்திரீ தேவதை ஸரஸ்வதி. சகோதரர்கள் ஒரேமாதிரி இருக்கிறார்கள். அதனால் ஸரஸ்வதி சிவனின் சகோதரி. இருவரும் ஞான மூர்த்திகள். பிரம்மா தாமரைப் பூவில் அமர்ந்திருக்கிறார். அவரது வர்ணம் உருக்கிவிட்ட தங்கத்தின் நிறம். இதேமாதிரி ஸ்வர்ண வர்ணத்தோடு தாமரைப் பூவில் அமர்ந்திருக்கிறாள் மஹாலக்ஷ்மி. பிரம்மா பிரஜைகளை சிருஷ்டித்துக் கொண்டேயிருக்கிறார் என்றால், லக்ஷ்மியோ ஐசுவரியத்தைப் பெருக்கிக்கொண்டேயிருகக்கிறாள். இவர்கள் இருவரும் உடன் பிறந்தவர்கள்.
இப்போது புருஷ சம்பந்தமில்லாமல் தனியாக இருக்கிற அம்பாளான துர்க்கையம்மன் எப்படியிருக்கிறாள்? நீலமேக சியாமளமாக இருக்கிறாள். கையிலே சங்கும் சக்கரமும் வைத்திருக்கிறாள். மகிஷாசுரன் போன்ற பல ராக்ஷதர்களை சம்ஹரித்திருப்பவள் இவள்தான். இதையெல்லாம் பார்த்தால் ஸ்ரீமஹாவிஷ்ணுவே இவளுடைய சகோதரர் என்று சொல்லாமலே புரியும். இதே வர்ணம், இதேமாதிரி சங்கு சக்கரம், அசுரர்களை சம்ஹரிப்பதற்காக என்ற திரும்பத் திரும்ப அவதாரங்கள் எல்லாம் மகாவிஷ்ணுவிடமே காணப்படுகின்றன. பரம கருணையினால் இருவரும் இப்படி துஷ்ட நிக்ரகம் செய்கிறார்கள். இந்த மாயப் பிரபஞ்சத்தை லீலா விநோதமாக நடத்துவது இந்த இருவரும்தான். மாயோன், மாயோன் என்றே அவரைச் சொல்வார்கள். இது சங்க காலத்திலிருந்து தமிழ்நாட்டில் உள்ள பெயர். மாயாவி, மாயா நாடக சூத்திரதாரி என்று புராணங்கள் சொல்லும். அவளையோ மஹாமாயை என்றே சொல்கிறோம். மற்ற சகோதர ஜோடிகளைவிட இந்த இரண்டு பேரும் ரொம்பவும் நெருக்கமாக இருக்கிறார்கள் - ஒன்று என்றே சொல்லிவிடலாம்போல்! மேலே நான் சொன்ன துர்க்கைக்கு 'விஷ்ணு துர்க்கை' என்றே பேர் இருக்கிறது. லோகத்திலும் அம்பாள் விஷ்ணுவின் சகோதரி என்பது சகலருக்கும் தெரிந்திருக்கிற அளவுக்கு ஸரஸ்வதி சிவசகோதரி என்பதோ, லக்ஷ்மி பிரம்மாவின் சகோதரி என்பதோ பிரசாரமாயிருக்கவில்லை.
மாயம் செய்வதை முக்கியமாக பெண்பாலாகவே கருதுவது மரபு. மஹாவிஷ்ணுவிடத்தில் இந்த அம்சம் தூக்கலாக இருக்கிறது. அதனால்தான் அவர் அமிருதத்தைப் பங்கீடு பண்ணினபோது மோஹினியாக அவதாரம் பண்ணினார். இவர் அம்பாளின் இன்னொரு ரூபம் என்பதற்கு ரொம்பவும் பொருத்தமாக மோஹினியைப் பரமேசுவரனே கல்யாணம் செய்துகொண்டிருக்கிறார். விஷ்ணு க்ஷேத்திரங்களில் ஜகத் பிரசித்தமாக இருக்கிறது திருப்பதி. வேங்கடரமண ஸ்வாமியைப் பார்த்தாலும் ரொம்ப அம்பாள் சம்பந்தமாக இருக்கும். அங்கே பெருமாளுக்குப் புடவைதான் உடுத்துகிறார்கள். சுக்ரவாரத்தில் அபிஷேகம் பண்ணுகிறார்கள். மற்றப் பெருமாள் கோயில்களில் கருடன் இருக்கிறது பல இடங்களில். இங்கு மட்டும் சிம்மங்கள் இருக்கின்றன. சிம்மம் அம்பிகையின் வாகனம்.
அம்பாளும், மகாவிஷ்ணுவும், பரமேசுவரனும் மூன்று ரத்தினங்கள். "ரத்ன த்ரய பரீக்ஷா" என்றே ஸ்ரீ அப்பைய தீக்ஷிதர் ஒரு கிரந்தம் செய்திருக்கிறார். இந்த மூன்றும் ஒரே பரம சக்தியத்தின் மூன்று ரூப பேதங்கள்தான். அம்பாள் மற்ற இரண்டு பேரோடும் பிரிக்க முடியாமல் சம்பந்தப்பட்டிருக்கிறாள். ஒருத்தருக்குப் பத்தினியாகவும் இன்னொருத்தனுக்கு ஸகோதரியாகவும் இருக்கிறாள். இந்த மூன்று மூர்த்திகளிடமும் உயர்வு தாழ்வு கற்பிக்காத பக்தி வேண்டும். எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருக்கிற சத்தியம் (Truth) சிவம் என்றும், அதுவே பலவாகத் தெரிகிறதற்குக் காரணமான சக்தி (Energy) அம்பாள் அல்லது விஷ்ணு என்றும் புரிந்து கொண்டு பக்தி செலுத்த வேண்டும்.
அம்பாளுக்கும் மஹாவிஷ்ணுவுக்கும் பேதமில்லை என்பதைத் தத்துவ ரீதியில் சொன்னேன். இப்போது உங்களுக்குத் தெரியாத ஒரு கதை சொல்கிறேன். ராமாயணம் உங்கள் எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஆனால் அந்தத் தெரிந்த கதையையே உங்களுக்குத் தெரியாத மாதிரி சொல்கிறோன். வால்மீகி, கம்பர், துளசீதாஸர் எழுதியவை தவிர, ஆனந்த ராமாயணம், அற்புத ராமாயணம், துர்வாஸ ராமாயணம் என்றெல்லாம் பல இருக்கின்றன. அதில் ஏதோ ஒன்றில் இந்த விஷயம் இருக்கிறது.
அம்பாள்தான் ஸ்ரீராமனாக அவதரித்தாள் என்பது கதை. ஈசுவரனே ஸீதையாக உடன் வந்தார். ஸ்ரீராமன் நல்ல பச்சை நிறம். 'மரகதமணி வர்ணன்' என்பார்கள். அம்பிகையை 'மாதா மரகத சியாமா' என்கிறார் காளிதாஸர். முத்துஸ்வாமி தீக்ஷிதரும் 'மரகதச்சாயே' என்று மீனாக்ஷியைப் பற்றிப் பாடுகிறார்.
சிருஷ்டி, ஸ்திதி சம்ஹாரத்தைத் தாண்டி மூல காரணமாக இருக்கிறபோது பராசக்தி செக்கச் செவேல் என்று இருந்த போதிலும், மும்மூர்த்திகளில் ஒருத்தருக்குப் பத்தினியாகிப் பார்வதியாக இருக்கிறபோது பச்சையாகத்தான் இருக்கிறாள். இவள்தான் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியாக வந்தாள். பரமேசுவரன் ஸீதா தேவியானார்.
பழைய காலத்தில் சின்ன வயசிலேயே குழந்தைகளுக்குக் கல்யாணம் செய்வார்கள். அப்போது ஹோமம் முதலிய கர்மங்களால் குழந்தைகளுக்கு அலுப்புத் தட்டிவிடப் போகிறதே என்று குஷிப்படுத்துவதற்காக விளையாடல், ஊஞ்சல், நலங்கு, ஊர்வலம் என்றெல்லாம் வைத்திருந்தார்கள். ஊர்வலத்தின் போது கல்யாணப் பெண்ணுக்கு ஆண் வேஷமும், மாப்பிள்ளைக்குப் பெண் வேஷமும் போடுவார்கள். இந்த மாதிரி, லோகத்தில் ராக்ஷஸ பயத்தைப் போக்கி விளையாட்டாக ஊர்வலம் வருவதற்கு அம்பாள் ராமனாகவும், ஈசுவரன் ஸீதையாகவும் வேஷம் போட்டுக் கொண்டார்கள். இது ஒருத்தருக்கும் தெரியாது. ஸ்ரீராமனும் ஸீதையும்கூட இதை மறந்தே போனதுபோல் இருந்தார்கள். ஆனால் ரொம்பவும் உணர்ச்சி வேகம் ஏற்பட்டால் மனஸின் அடியிலே எங்கோ மறைந்திருப்பதுகூட வெளியிலே வெடித்துவிடுகிறது அல்லவா? இப்படி ஒரு கட்டம் ராமாயணத்தில் வருகிறது.
ஸ்ரீராமன் ஸீதையை விட்டுவிட்டுக் காட்டுக்குப் போவது என்று தீர்மானம் பண்ணிவிடுகிறார். அப்போது தேவிக்கு உணர்சி பீறிக்கொண்டு வந்துவிடுகிறது. "காட்டிலே துஷ்டர் பயம், மிருக பயம் இருக்கிறது என்பதால் பெண்டாட்டியை அழைத்துப் போக மறுக்கிறாரே, இவரும் ஒர் ஆண் பிள்ளையா" என்று ஸ்வாதினத்தில் அவளுக்கு மகா கோபம் வர, அந்த வேகத்தில் ஓர் உண்மையைச் சொல்லி விடுகிறாள்.
"உம்மை மாப்பிளையாக வரித்த என் பிதா ஜனகர் நீர் புருஷ வேஷத்தில் வந்திருக்கிற ஒரு ஸ்திரீ (ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம்) என்பதைத் தெரிந்து கொள்ளாமல் போனாரே!" என்று ராமனைப் பார்த்து சண்டை போடுகிறாள் ஸீதா தேவி. இது சாக்ஷாத் வால்மிகி ராமாயண வசனம்.
ஸ்ரீராமனுக்கு அவர் அம்பாள்தான் என்பதை இப்படி சூக்ஷ்மமாக ஞாபகப்படுத்திவிட்டாள் ஸீதை. உடனே அவருக்கு அவதாரக் காரியம் நினைவிற்கு வந்தது. ராக்ஷஸ சம்ஹாரம் செய்ய வேண்டும் என்ற நினைப்பு வந்ததும், அதற்கு அநுகூலமாகவே விளையாட்டு நடப்பதற்காக ஸீதையை அழைத்துக் கொண்டு காட்டுக்குப் போனார்.
இவரால் சம்ஹரிக்கப்பட வேண்டிய ராவணனோ பெரிய சிவ பக்தன். ஆதியில் அவனுக்கு சிவனையே கைலாஸத்திலிருந்து இலங்கைக்கு இழுத்துக் கொண்டு வந்து அசோக வனத்தில் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று ஆசை. அதற்காகத்தான் கைலாஸத்தைப் பெயர்த்துப் பார்த்தான். அப்போது அம்பிகை பயந்து ஈஸ்வரனைக் கட்டிக் கொள்ள அவர் விரல் நுனியால் மலையை அழுத்தி விட்டார். தப்பினோம் பிழைத்தோம் என்று இராவணன் இலங்கைக்கு ஒடி வந்தான். மகா சிவ பக்தனாதலால் அவனுக்குக் தன்னுடைய ஈசுவரன்தான் ஸீதையாக வந்திருக்கிறார் என்று தெரிந்து விட்டதாம். முன்பு அம்பாளால்தான் தன் காரியம் கெட்டுப்போச்சு என்கிற கோபத்தில், இப்போது அவள் தலையீடு இருக்கக்கூடாது என்றே ராமரை அப்புறப்படுத்திவிட்டு ஸீதையை தூக்கி வந்து அசோக வனத்தில் வைத்தானாம். ஆனாலும் ராக்ஷஸ அறிவானதாலும் அம்மையப்பனான ஜோடியில் ஒன்றை விட்டு ஒன்றை மட்டும் பிடித்துக் கொண்டதாலும் ராவணனுடைய அன்பு விகாரப்பட்டுக் காமமாயிற்று. இருந்தாலும் சிவபக்தியினால் இவனுக்கு அவதார ரகசியம் அவ்வப்போது துளி தெரிந்தது. ஆஞ்சநேயரைப் பார்த்தவுடனே ராவணன், 'இவன் யார்? நந்தியம் பெருமானா?' என்று நினைக்கிறான். 'கிமேஷ பகவான் நந்தீ?' என்பது வால்மீகி ராமாயண வசனம். ஸீதா ராமர்களின் பரமதாஸனாக இருக்கப்பட்ட ஹநுமாரைப் பார்த்ததும் கைலாஸத்தில் ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் தாஸனாக இருக்கிற நந்திதான் அவர் என்பது புரிந்ததுபோல ராவணன் பேசுகிறான்.
அம்பாளே நாராயணன் என்பதற்காக இந்தக் கதை எல்லாம் சொல்கிறேன். இரண்டும் ஒன்றாக இருக்கட்டும்! ஆனால் நாராயணன் என்கிற புருஷ ரூபம் அம்பாளின் ஸ்திரீ ரூபம் இரண்டும் நன்றாக இருக்கின்றனவே; இரண்டையும் வைத்துக் கொள்ளலாமே என்று தோன்றுகிறது. அப்போது அவர்களை சகோதரர்களாக வைத்துக் கொள்ளலாம். அம்பாளை நாராயண சகோதரி என்று சொல்வதற்குப் புராணக் கதைகள் எல்லாம் பக்கபலமாக இருக்கின்றன.
ஆசைகள் அத்தனை அனர்த்தத்துக்குக் காரணம். ஆசைதான் காமம் என்பது. ஆசைப்பட்டது கிடைக்காவிட்டால் குரோதம், சோகம் எல்லாம் உண்டாகின்றன. காமத்தில் பிறப்பு உண்டாகிறது. குரோதத்தால் நம்மை நாமே கொன்று கொள்கிறோம். எனவே ஜனன மரணத்திலிருந்து விடுபட வேண்டுமானால் நம்மைக் காமமும் குரோதமும் அண்ட விடக்கூடாது. மழை ஜலம் உள்ளே புகவொட்டாமல் நல்ல டஃபேடோ குடைத்துணி காப்பாற்றுகிறது. அதை 'வாட்டர் ப்ரூஃப்' என்கிறோம். இதே மாதிரி நமக்குக் காம ப்ரூஃபாக, க்ரோத ப்ரூஃபாக, சோக ப்ரூஃபாக ஒரு கவசம் இருக்கிறதா என்றால், இருக்கிறது.
அம்பாளின் கிருபைதான் அந்தக் கவசம். நமக்கு ரொம்பப் பணம் இருக்கலாம். செல்வாக்கு இருக்கலாம். 'பவிஷு' கியாதி இருக்கலாம். அழகு ஆரோக்கியங்கள் இருக்கலாம். இவையெல்லாம் அம்பாள் அநுக்கிரஹத்தால் கிடைத்ததாக நாம் சொல்லிக் கொள்ளலாம். ஓரளவுக்கு அப்படி சொல்வது வாஸ்தவம்தான். ஆனாலும் ஆசையும், வெறுப்பும், பயமும், துக்கமும் மனஸிலிருக்கிற வரையில் இதுகள் எல்லாம் கிடைத்துத்தான் என்ன? ஆனபடியால் உண்மையில் அம்பாள் அநுக்கிரஹம் இருப்பதற்கு அடையாளம் நம்மை, ஆசையும், துவேஷமும், பயமும் அழுகையும் தொடாமல் இருப்பதுதான்.
துவேஷம், பயம், அழுகை அவைகளுக்கும் மூலக்காரணம் 'நான், நான்' என்று ஒன்றிடம் ஆசைதான்; காமம்தான். எனவே காமம் ஒன்று தொலைந்தால் போதும். அத்தனை அனர்த்த பட்டாளமும் தொலைந்து போனதாக ஆகிறது. அதன்பின், இந்த உலகத்தில், இந்தச் சரீரத்தில் நாம் இருக்கிற போதே மோக்ஷ ஆனந்தம்தான்.
காமேசுவரி என்றும் காமாக்ஷி என்றும் பெயர் படைத்த பராசக்தியை மனமுருகிப் பிரார்த்தித்தால் அவள் நம் காமத்தை அடியோடு துவம்ஸம் செய்துவிடுகிறாள். காமேசுவரி தான் பஸ்பமாகிவிட்ட காமனை மறுபடி உண்டாக்கியவள். அதன்பின் காமதகனம் செய்த பரமேசுவரனுக்குக் காமம் பொங்குகிற மாதிரி தன் கண்களில் பிரேமை பொங்கப் பார்த்தவள்தான் காமாக்ஷி. இவளுடைய அநுக்கிரஹத்தால் நமக்குக் காம ஐயம் ஏற்படுமென்றால் ஒன்றுக்கொண்று முரணாகத் தோன்றுகிறது. ஆனால் முரண் இல்லை. பரப்பிரம்ம லோகப் பிரக்ஞையே இல்லாமல் இருந்துவிட்டால், மாயா லோகத்தில் மாட்டிக்கொண்டிருக்கிற நாம் எப்படி விடுபடுவது? நம்மை விடுவிக்கவே அததற்குக் காருண்யம் உண்டாகிறது. இந்தக் காருணையைத்தான் பரமேசுவரனுக்கு உண்டான காமம் என்று சொல்கிறோம். இந்தக் கருணை உணர்வு அவருக்குப் பிறப்பதற்குக் காரணமாக இருந்த சக்தியை காமாக்ஷி என்கிறோம். ஸமஸ்த ஜீவராசிகளும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்ற காமம் தவிர, வேறு ஒரு ஆசையும் இல்லாத பரம அன்பு லீலை அது.
காமனை எரித்த பரமேசுவரனின் பாதியாக அவள் இருப்பதால் - நெற்றிக் கண்ணில் பேர்பாதி அவளுடையது - அவள் ஜீவப்பிரபஞ்சத்தின் காமத்தை பஸ்பமாக்குகிறாள். "சிவனுக்குக் காமமூட்டிய நீயே பக்தர்களின் காமத்தை நாசம் செய்கிறாய்" என்று மூகர் அடிக்கடி சொல்வார்.
காம தகனம் செய்த சிவத்தின் சக்தி என்பதால் காமத்தை அவள் எரிக்கிறாள். நாராயண சகோதரியாகவும் இருக்கிறவள் அவள். நாராயணனோ சாக்ஷாத் மன்மதனின் பிதாவாக இருக்கிறார். பலபேருக்குப் பிரம்மா மகாவிஷ்ணுவின் பிள்ளை என்பது மட்டுமே தெரியும். ஆனால் மன்மதனுக்கும் அவர் பிள்ளைதான். மோஹினியாக வந்தபோது அவர் பரமேசுவரனிடமே ஐயப்ப சாஸ்தாவை ஒரு புத்திரனாகப் பெற்றார். சிவ - சக்தி சேர்ந்து பிறந்த சுப்ரமண்யர் போன்றவர் சிவ - விஷ்ணு சேர்ந்து ஜனித்த ஐயப்பன். எனவே பரம ஞானமூர்த்தியாக இருக்கிறார். ஆனால் பிரம்மாவோ ஜன்மாவுக்குக் காரணமாக இருக்கிறார். ஒரு ஜந்து ஜனிக்கக் காரணமாக இருக்கிற காமத்தைத் தூண்டுகிறவனே மஹாவிஷ்ணுவின் இன்னொரு பிள்ளையான மன்மதன். சகல ஜீவராசிகளையும் காமத்தில் தள்ளி ஆட்டிப்படைக்கிற வல்லமை அவனுக்கு இருக்கிறது!
எரித்த காமனை மறுபடியும் உயிர்ப்பித்த காமாக்ஷி காமத்தைப் போக்குகிறாள் என்றேன். இதே மாதிரி காமனைப் படைத்தவர் மஹாவிஷ்ணு என்றால், நம் காமங்கள் போக அவர் அநுக்கிரஹிப்பாரா? நிச்சயம் அநுகிரஹிப்பார். ஸ்ரீராமன் யார்? மஹாவிஷ்ணுவின் அவதாரம். 'ராமன்' என்று சொன்னால் அங்கே காமன் வரமாட்டான், என்கிறோம். ராம ராம ராம என்று சொல்லிச் சொல்லியே காமாதி அறுபகைகளை ஒழித்த மகான்கள் பலர் உண்டு. அவரும் காமனும் அப்பா - பிள்ளையாயிற்றே, ஏன் இப்படி என்று கேட்கலாம். அப்பாவிடம் பிள்ளைக்கு உள்ள அபரிமித மரியாதையாலேயே, அவர் இருக்கிற இடத்துக்கு வரமாட்டான். அங்கேதான் வாலைச் சுருட்டிக் கொண்டுவிடுவான். துளஸீதாஸர் இப்படித்தான் வேடிக்கையாகப் பெரிய தவத்தைச் சொல்கிறார். சிவபெருமானிடம் பயத்தினால் அவரது அடியார்களைக் காமன் நெருங்க மாட்டான். மஹாவிஷ்ணுவிடம் மரியாதையினாலேயே அவரது பக்தர்களிடம் தன் கைவரிசையைக் காட்ட மாட்டான்.
நர நாராயணர்கள் என்பதாக மஹாவிஷ்ணு இரட்டை அவதாரம் செய்தார். இவர்கள் பத்ரிகாச்ரமத்தில் தபஸ் செய்தபோது, தபசைக் கலைக்க தேவலோக அப்ஸரஸ்கள் வந்தார்கள். அப்போது நரனுக்கு மகா கோபம் வந்தது. பகவானின் அம்சமாயினும் 'நரன்' என்ற பேருக்கு ஏற்றபடி, இவருக்கு மநுஷ்ய சுபாவத்தினால் கோபம் வந்துவிட்டது. "ஹும்" என்று ஓர் உறுமல் போட்டார். அந்த ஹுங்தாரத்தினால் எங்கே பஸ்பமாகிவிடுவோமா என்று பயந்து, அப்ஸரஸ்கள் அவரைவிட்டு, நாராயணர் தபஸ் செய்கிற இடத்துக்கு ஒடி வந்தார்கள். இங்கே வந்து தங்கள் சாமர்த்தியத்தைக் காட்ட ஆரம்பித்தார்கள். நாராயணருக்கோ கொஞ்சம்கூடக் காமமே கிடையாது. அது மட்டுமில்லை. நரர் மாதிரி இவருக்குக் கோபமும் கிடையாது. எனவே சிரித்துக் கொண்டு விளையாட்டாகத் தமது தொடையைத் தட்டினார். நாராயணின் தொடையிலிருந்தே ஊர்வசி (ஊருதொடை) தோன்றினாள். அவளுடைய ஒப்பில்லாத ரூப லாவண்யத்தைக் கண்டு, தேவலோக நாட்டிய ஸ்திரீகள் வெட்கி, 'இவரிடம் நம் சக்தி பலிக்கவே பலிக்காது' என்று உணர்ந்தார்கள். அப்ஸரர்களும் வெட்கும்படியான அத்தனை பெண்ணழகைக் தமக்குள் வைத்துக்கொண்டே அவர் பரம பரிசுத்தமான தபஸ்வியாக இருந்திருக்கிறார்! அவரையே ஆதாரமாகக் கொண்டு, இவரிடமிருந்தே பிறக்கிற அழகு தன் கைவரிசையை அவரிடமே காட்ட முடியுமா? இதுதான் தாத்பரியம்.
அதே மாதிரி, பிரம்மாவும், மன்மதனும் விஷ்ணுவிடமிருந்து வந்ததாலேயே அவர் ஜன்மத்தை, காமத்தைப் போக்குகிற சக்தி படைத்தவராக இருக்கிறார்.
நாராயண சகோதரியான அம்பாள் சிவனின் சக்தியாகக் காமனைப் பொசுக்கினாள். அவளே எரிந்துபோன காமனுக்குப் புனர்ஜன்மா கொடுத்து அவனைப் படைத்தாள். அவனை ஆக்க, அழிக்க இரண்டுக்கும் அவள் சக்தி பெற்றவள் என்பதிலிருந்து அவன் அவள் ஆக்கத்திலிருக்கிறவன்தான் என்றாயிற்று. எனவே, அவனுடைய அடியார்களை அண்டமாட்டான். இதனால்தான் காமாக்ஷியை உபாஸிப்பவர்கள் காம ஜயம் செய்கிறார்கள்.
நாம் ஏதாவது கெடுதல் வந்தால் 'சிவா சிவா' என்கிறோம். கேட்கக்கூடாததைக் கேட்டால் 'சிவா சிவா' என்று காதைப் பொத்திக் கொள்கிறோம். மூகரோ ரொம்பவும் நல்லதாக இருக்கிற ஓர் அதிசயத்தைப் பார்த்து, 'ஆஹா ஆஹா' என்று சொல்வதற்குப் பதில் 'சிவ சிவ' என்கிறார்.
சிவசிவ பசயந்தி ஸமம்
ஸ்ரீகாமாக்ஷி கடாக்ஷிதா:புருஷா:
ஸ்ரீகாமாக்ஷியம்மாளின் கடாக்ஷத்தைப் பெற்றவர்கள் விஷயத்தில் எத்தனை அதிசயங்கள் நடந்துவிடுகின்றன. "சிவ சிவ" என்கிறார். என்ன அதிசயம் என்றால், 'நமக்கு எல்லாம் வேறு வேறாகத் தெரிகிறபோது அவர்களுக்கு எல்லாம் சமமாகத் தெரிகிறதே!' என்று வியக்கிறார்.
சமத்துவம் சமத்துவம் என்று இந்தக் காலத்தில் வாய்ப்பேச்சில் நிறையச் சொல்கிறோம். ஆனால் ஞானமில்லாமல், வெறும் பால்டிக்ஸாகச் சொல்கிறோம். காரியத்தில் இது முக்கால்வாசி பொய்யாகவே இருக்கிறது.
காமாக்ஷியின் கடாக்ஷம் பெற்றவனுக்கோ அத்வைத ஞானமே சித்தித்து விடுகிறது. அவனுக்குப் பார்ப்பதெல்லாம் ஒரே பரம்பொருள்தான். சத்தியமான சம தரிசனம் அவனுக்குத்தான் இருக்கிறது.
அவனுக்குக் காடும் வீடும் ஒன்றாகிவிட்டது என்கிறார் மூகர். அவனுக்குக் குரோதம் என்பது கொஞ்சம்கூட இல்லை. எனவே மித்திரனும் சத்துருவும் சமமாகி விட்டார்களாம்!
காமமும் அவனை விட்டு அடியோடு அகன்றுவிட்டது. யுவதியின் சிவந்த உதடும், மண்ணாங்கட்டியும் அவனுக்கு சமமாகிவிட்டன என்கிறார் மூகர். 'லோஷ்டம் ச யுவதி பிம்போஷ்டம்'
என்று பிராஸம் போட்டு அழகோடு சொல்கிறார்.
லோஷ்டம் - மண்ணாங்கட்டி; ஓஷ்டம் - உதடு (உதடு பெரிதாகித் தொங்கிக்கொண்டிருக்கிற பிராணிதான் ஓஷ்ட்ரம்; இதுவே தமிழில் ஒடட்டை, ஒட்டகம்); 'பிம்பம்' என்றால் கோவைப் பழம்; 'பிம்போஷ்டம்' - கோவைப்பழம் மாதிரிச் சிவந்த உதடு.
கீதையில் பகவான் "யோகீ ஸம லோஷ்டாச்ம காஞ்சன" என்று சொன்னதை நினைப்பூட்டுகிற மாதிரியே, மூகரும் சொல்கிறார். பொன்னாசையை வைத்து, 'பொன்னும் மண்ணும் யோகிக்குச் சமம்' என்றான் பகவான். மூகர் பொண்ணாசையை வைத்துப் பேசுகிறார்.
எத்தனை காமம், குரோதம், சோகம், பயம் இவற்றை உண்டு பண்ணுகிற வஸ்துவும் அம்பாளை உபாஸிக்கிறவனைக் கொஞ்சம்கூட அசைக்காது.
காமக்குரோதாதிகள் இல்லாமல் எப்போது பார்த்தாலும் அவளையே தியானித்துக் கொண்டிருந்தால் அதுவேதான் மோக்ஷம். 'அவள் வேறு. நாம் வேறு' என்கிற பாவனையும் போய், அவளே நாமாக முடிகிற அந்த நிலையே மோக்ஷம்.
ஆரம்ப நிலையில் அவள் வேறு என்றே பாவிக்கலாம். அப்போது அவளுடைய சரணாரவிந்தங்களையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அவளைப் பிரார்த்தித்தபடி இருக்க வேண்டும்; கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அவளிலேயே கரைக்க வேண்டும்.
நாம் கொஞ்சம் பிரயாசைப்பட்டாலும் போதும். அவளே நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி ரக்ஷிப்பாள். நமக்கும் அவளுக்கும் இருக்கிற வேறுபாட்டையும் தகர்த்துக் தானாகவே ஆக்கிக் கொள்வாள்.
No comments:
Post a Comment