Sunday, August 16, 2015

Guru Parampara-Periyavaa

Courtesy:Sri.Anand Vasudevan

தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)

குரு

குரு பரம்பரை

அத்வைத ஆசார்யர் என்றால் உடனே எல்லோரும் நம்முடைய ஸ்ரீ சங்கர பகவத் பாதாளைத் தான் நினைத்துக் கொள்வீர்கள். அவர் தான் பரமேச்வராவதாரமாக வந்து, அத்வைதத்தை நன்றாக விளக்கி, என்றைக்கும் பெயர்க்க முடியாமல் ஸ்தாபனம் செய்துவிட்டுப் போனவர். ஆனால் அவர்தான் அத்வைத ஸித்தாந்தத்தை முதலில் கண்டுபிடித்தார் என்றில்லை. அவருக்கு ரொம்ப முன்னாடி லோகத்தின் முதல் கிரந்தமான வேதத்திலேயே - இப்படிச் சொல்வதுகூட தப்பு. லோகத்தையே பிரம்மா வேதத்தை guide ஆக வைத்துக் கொண்டுதான் சிருஷ்டி பண்ணியிருக்கிறார். அதனால் அதை லோகத்தின் முதல் கிரந்தம் என்கிறது கூட சரியில்லைதான். அப்படிப்பட்ட, லோக சிருஷ்டிக்கும் முந்தியதான வேதத்திலேயே - அத்வைத தத்துவம் சொல்லியிருக்கிறது. வேத சிரஸ் (மறைமுடி) என்கிற உபநிஷத்துகளிலெல்லாம் இந்தத் தத்துவம் நிறைய சொல்லப்பட்டிருக்கிறது. கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் முடிவாக இதைத்தான் சொல்லியிருக்கிறார். 'கீதை' என்றால் 'பகவத் கீதை' என்றே இப்போது பிரஸித்தமாயிருந்தாலும், ஒவ்வொரு ஸ்வாமிக்குமான புராணத்தைப் பார்த்தால் 'தேவி கீதை', 'சிவ கீதை' என்றெல்லாம் வரும். அந்த தெய்வங்களும் முடிவாக அத்வைத உபதேசமே செய்திருக்கின்றன. அப்புறம் ஆசார்யாள் [ஆதிசங்கரர்] வரையில் அநேக குருக்கள் வந்திருக்கிறார்கள்.

க்ஷிணாமூர்த்தி, தத்தாத்ரேயர், நாராயணன், பிரம்மா ஆகியவர்களை அத்வைத சம்பிரதாய ஆசாரிய வரிசையில் முதலில் சொல்வது வழக்கம். இந்தத் தெய்வக்குருக்களுக்கு அப்புறம் வசிஷ்டர்,சக்தி, பராசரர், வியாஸர் என்ற ரிஷிகள் அத்வைதத்தை அப்பாவிடமிருந்து பிள்ளையாகப் பெற்று உபதேசம் செய்திருக்கிறார்கள். இவர்கள் ரிஷிகள்.

ரிஷிகளை மநுஷ்ய ஆசார்யர்களோடு சேர்க்கக் கூடாது. மநுஷ்யர்கள் அறியமுடியாததை அறிகிற, மநுஷ்யர்கள் கேட்காததைக் கேட்கிற , மநுஷ்யர்களால் செய்யமுடியாததைச் செய்கிற அதீந்திரிய சக்திகள் உள்ளவர்களே ரிஷிகள். ஆகாசத்தில் பரவியுள்ள பரமாத்மாவின் சுவாஸ சலனங்களான சப்தங்களை மந்திரங்களாகப் பிடித்துத் தரக்கூடிய மகாசக்தி படைத்தவர்கள். அதனால் இவர்களை சாதாரணமாக மநுஷ்ய இனத்தோடே சேர்ப்பதில்லை.

உதாரணமாக, கோவில்களில் பிரதிஷ்டையாகியிருக்கிற மூர்த்திகளை நாலைந்து தினுசாகப் பிரித்திருக்கிறார்கள் - ஸ்வயம்வியக்தம், தைவிகம், மாநுஷம், ஆஸுரம், ஆர்ஷம் என்று.

ஸ்வாமி தானாகவே ஒரு இடத்தில் லிங்கமாகவோ, விக்ரஹமாகவோ ஆவிர்பவிப்பதற்கு "ஸ்வயம் வியக்தம்" என்று பெயர். "ஸ்வயம்பு", "சுயம்பு", "தான்தோன்றி " ( "தாந்தோணியம்மன் "என்கிறதில் வரும் "தாந்தோணி ") என்பதெல்லாம் அதைத்தான்.

சிவ ஸ்தலங்கள் பலவற்றில் ஸ்வயம்பு லிங்கம் இருப்பதைப் பார்க்கிறோம். வைஷ்ணவர்கள் ஸ்ரீரங்கம், திருப்பதி, பத்ரிநாத், ஸ்ரீமுஷ்ணம், நைமிசாரண்யம், [புஷ்கரம், ஸாளக்ராமம், நான்குநேரி] என்று எட்டை ஸ்வயம்வியக்த க்ஷேத்ரங்களாகச் சொல்கிறார்கள்.

தேவர்கள் பிரதிஷ்டை பண்ணினது தைவிகம். காஞ்சீபுரத்தில் அம்பாளே மண்ணை லிங்கமாகப் பிடித்துவைத்தாள். திருவீழிமிழலையில் மஹாவிஷ்ணுவே லிங்கப் பிரதிஷ்டை செய்தார். அநேக ஸ்தலங்களில் இந்திரன் தோஷம் நீங்குவதற்காக ஈச்வரனையோ, விஷ்ணுவையோ பூஜை பண்ணினதாகச் சொல்வார்கள். இதெல்லாம் " தைவிகம் ". இதற்கு நேர் எதிர் வெட்டாக திரிசரன், ஓணன் மாதிரியான அசுரர்கள் ஸ்வாமியைப் பிரதிஷ்டை செய்த இடங்கள்தான் திரிசிரபுரம் என்ற திருச்சினாப்பள்ளி, காஞ்சீபுரத்தில் உள்ள ஓணகாந்தன் தளி முதலிய இடங்கள். அஸுரர் பிரதிஷ்டை செய்ததுதான் "ஆஸுரம் ".

மநுஷ்யர்கள் - அநேக ராஜாக்களும் பக்தர்களும் - பிரதிஷ்டை பண்ணினதுதான் "மாநுஷம்" என்று நீங்களே புரிந்துகொண்டிருப்பீர்கள்.

இன்னொன்று "ஆர்ஷம்" என்று சொன்னேனல்லவா? "ஆர்ஷம்" என்றால் "ரிஷிகள் பண்ணினது" என்று அர்த்தம். குற்றாலத்தில் அகஸ்திய மஹரிஷி மூர்த்திப் பிரதிஷ்டை பண்ணியிருக்கிறார். சிக்கலில் வஸிஷ்ட மஹரிஷி, திருக்களரில் துர்வாஸர், ஜம்புகேச்வரம் என்ற திருவானைக்காவலில் ஜம்பு மஹரிஷி என்றிப்படி அநேக க்ஷேத்திரங்களில் ஆர்ஷப் பிரதிஷ்டைதான். ஏதோ, இப்போது நினைவில் வருவது, வாயில் வருவதை மட்டும் சொன்னேன்.

இதை எதற்கு சொல்ல வந்தேன் என்றால் பொதுவாக தேவ ஜாதி, அஸுர ஜாதி, மநுஷ்ய ஜாதி என்ற மூன்றைத்தான் நாம் சொன்னாலும், இங்கே ஆர்ஷம் என்று ரிஷிகளை மநுஷ்யர்களோடு சேர்க்காமல் தனி இனமாக வைத்திருக்கிறது என்று காட்டத்தான்.

மாநுஷ லிங்கம் என்று ராஜ ராஜ சோழன் பிருஹதீச்வரப் பிரதிஷ்டை பண்ணும் போதுகூட நேராக அவனே பண்ணாமல் கருவூர்ச் சித்தரைத்தான் பிராணப் பிரதிஷ்டை செய்ய வைத்திருக்கிறான். இதே மாதிரி "ரிஷிகள்" என்று சொல்லுகிற அளவுக்கு திவ்ய சக்தி இல்லாதவர்களானாலும் அந்தந்தக் காலத்தில் உள்ள மஹான்களை, ஸித்த புருஷர்களைக் கொண்டே மாநுஷ லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. இப்போதுகூட காலனிக்குக் காலனி புதுக்கோயில் கட்டுகிறபோது யாராவது ஒரு ஸ்வாமிகளைக் கூப்பிட்டு வைத்துக் கொண்டுதானே கும்பாபிஷேகம் பண்ணுகிறீர்கள்? ஆனால் பிராணப் பிரதிஷ்டை முதலானதுகளை சிவாச்சாரியர்களோ, பட்டர்களோதான் செய்கிறார்கள். இவர்கள் நியமத்தோடு செய்தால், மந்திரங்களுக்கே ஸ்வயமான வீர்யம் உண்டாதலால், மந்திரவத்தாக இவர்கள் செய்யும் பிரதிஷ்டையிலும் தெய்வ ஸாந்நித்யம் உண்டாகி லோகத்துக்கு க்ஷேமம் உண்டாகும்.

ரிஷிகள் தனி இனம் மாதிரி என்று சொல்ல வந்தேன்.

தேவ தர்ப்பணம், பித்ரு தர்ப்பணம், ரிஷி தர்ப்பணம் என்னும் போதும் ரிஷிகளைத் தனி இனமாகத்தான் வைத்திருக்கிறது.

அத்வைத ஸம்பிரதாயத்தில் தக்ஷிணாமூர்த்தி, தத்தர், நாராயணர், பிரம்மா ஆகிய தேவர்களுக்கு அப்புறம், வஸிஷ்டர், சக்தி, பராசரர், வியாஸர் என்ற ரிஷிகள் குருமார்களாக வந்தார்கள். வியாஸரின் பிள்ளை சுகர். அவர் மநுஷ்யர், ரிஷி, தேவர் எல்லாரையும்விடப் பெரியவர். சுகப்பிரம்மம் என்றே சொல்லப்பட்டவர். பிரம்மமாக இருந்த சுகர் பிரம்மச்சாரி. அதனால் அவருக்கப்புறம் பிள்ளை வழியில் சம்பிரதாயம் போகவில்லை. சிஷ்யர் வழியில் போயிற்று.

சுகருக்கு அப்புறம்தான், ரிஷிகள் என்று சொல்லமுடியாத ஸந்நியாஸிகளான கௌடபாதரும், அவருக்கப்புறம் அவருடைய சிஷ்யரான கோவிந்த பகவத்பாதரும் அத்வைத ஆசார்யர்களாக வந்தார்கள். ரிஷிகள் எல்லோரும் ஸந்நியாஸிகள் அல்ல. அவர்கள் பத்னிகளோடு இருந்திருக்கிறார்கள். அருந்ததி வஸிஷ்ட மஹரிஷிக்குப் பத்தினி, அநஸுயை அத்ரி மஹரிஷிக்குப் பத்தினி என்றெல்லாம் படிக்கிறோமல்லவா? யக்ஞம், யக்ஞோபவீதம் (பூணூல்) முதலியவை ரிஷிகளுக்கு உண்டு. ஸந்நியாஸிகளுக்கு இவை இல்லை. ஸந்நியாஸிகளான கௌடபாதருக்கும் கோவிந்த பகவத்பாதர்களுக்கும் அப்புறம்தான் "ஆசார்யாள்" என்ற மாத்திரத்தில் குறிப்பிடப்படும் ஸ்ரீ சங்கர பகவத்பாதர்கள் வந்தார்கள். சுகர் முதல் வருகிற துறவிகளான ஆசார்யர்களுக்குப் "பரிவ்ராஜகர்கள்" என்று பெயர். "பரமஹம்ஸ பரிவ்ராஜக" என்பது வழக்கம்.

பரமேச்வரனானாலும் மநுஷ்ய ரூபத்திலேயே இருந்து கொண்டு, மநுஷ்யர் மாதிரியே காரியம் செய்து காட்டினவர் நம் ஆசார்யாள். மநுஷ்யராக இருந்து கொண்டே ரொம்பவும் சக்தியோடு வைதீக தர்மத்தை, அத்வைதத்தை நிலை நாட்டியதுதான் அவர் பெருமை.

ஆசார்யாளுடைய நேர் குரு என்பதால் கோவிந்த பகவத்பாதருக்குப் பெருமை. ஆசார்யாளே "பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம்" என்று மூன்று தரம் சொல்லும்போது, கிருஷ்ணனோடு கூடத் தம் குருவையும் நினைத்துக் கொண்டுதான் சொல்லியிருக்கிறார். பகவானுக்கு எத்தனையோ நாமாக்கள் இருந்தாலும், ஆசார்யாள் 'கோவிந்த' நாமத்தையே 'ஸெலக்ட்' பண்ணினதற்குக் காரணம், அது தம் குருவின் பெயராகவும் இருக்கிறது என்பதுதான்.

நாராயணம், பத்மபுவம், வஸிஷ்டம்

சக்திம் ச தத்புத்ர பராசரம் ச |

வ்யாஸம் சுகம் கௌடபதம் மஹாந்தம்

கோவிந்த யோகீந்த்ரம் அதாஸ்ய சிஷ்யம்||

ஸ்ரீ சங்கராச்சார்யம் அதாஸ்ய பத்ம

பாதம் ச ஹஸ்தாமலகம் ச சிஷ்யம்|

தம் தோடகம் வார்த்திககாரம் அன்யான்

அஸ்மத் குரூன் ஸந்ததம் ஆனதோஸ்மி||

என்கிற ச்லோகத்தில், அத்வைத ஆசார்ய பரம்பரையை முழுக்க சொல்லி, 'இப்படிப் பட்ட எல்லோரையும் நமஸ்காரம் பண்ணுகிறேன்' என்று முடித்திருக்கிறது. அத்வைத குரு பரம்பரையை 'பிரம்ம வித்யா ஸம்பிரதாய கர்த்தா'க்கள் என்றே சொல்வார்கள். இதில் முதலில் நாராயணன். அதாவது மஹாவிஷ்ணு. அப்புறம் " பத்மபுவன்" என்றது பிரம்மா;தாமரையில் உண்டானவர் என்று அர்த்தம். அதற்கப்புறம் வஸிஷ்டர், சக்தி, பராசரர், வியாஸர், சுகர், கௌடர், கோவிந்த பகவத் பாதர் இவர்களைச் சொல்லி, இப்படிச் சொல்லும்போதே கௌடபாதருக்கு மஹான் ('மஹாந்தம்') என்றும் கோவிந்தருக்கு யோகீந்திரர் என்றும் சிறப்புக் கொடுத்திருக்கிறது. ஆசார்யாளுக்கு மட்டும் "ஸ்ரீ" போட்டுத் தனி மரியாதை கொடுத்து "ஸ்ரீ சங்கராசார்யம்" என்று "ஆசார்ய" பதத்தையும் கொடுத்து கௌரவம் சொல்லியிருக்கிறது. அதற்கப்புறம், ஆசார்யாளின் முக்கியமான சிஷ்யர்களாக இருக்கப்பட்ட பத்மபாதர், ஹஸ்தாமலகர், தோடகர், ஸுரேச்வரர் ஆகியவர்களை சொல்லியிருக்கிறது. ஸுரேச்வரர் என்று சொல்லாமல் "வார்த்திககாரர்" என்று சொல்லியிருக்கிறது. "வார்த்திகம்" என்ற விளக்கவுரை எழுதியவர் ஸுரேச்வரர். அதனால் இப்படிச் சொல்லியிருக்கிறது. "வார்த்திகம்" என்றால் பாஷ்யம், வியாக்யானம், விரிவுரை என்ற மாதிரியான விளக்கம். உபநிஷதங்களை விளக்கி ஆசார்யாள் பாஷ்யம் எழுதினாரென்றால், அவற்றில் பிருஹதாரண்யம், தைத்திரீயம் இவற்றுக்கான பாஷ்யங்களையும் இன்னும் விரிவாக விளக்கி "வார்த்திகம்" எழுதினவர் ஸுரேச்வராச்சாரியாள். இவர் வரையில் பேரைச்சொல்லி, அப்புறம் தனியாகப் பேர் சொல்லாமலே, "அவர்களுக்கப்புறம் இன்றுள்ள எங்கள் குருவரைக்கும் வந்துள்ள எல்லா ஆசார்யார்களுக்கும் நமஸ்காரம் பண்ணுகிறேன்" என்று ச்லோகம் முடிகிறது.

இங்கே சொன்னது ஸ்ரீ சங்கர பகவத் பாதர்களை ஆசார்யராகக் கொண்டவர்களின் குரு பரம்பரா ச்லோகம். மற்ற ஸம்பிரதாயத்தவர்களும் தங்கள் தங்கள் குரு பரம்பரையைத் தெரிந்து கொண்டு,அவர்கள் பெயரைச் சொல்லி நமஸ்காரம் பண்ண வேண்டும்.

ஆத்ம ஜ்யோதிஸை [ஜோதியை]ப் பூர்ணமாகப் பிரகாசிக்கக் செய்யவும், துக்கமில்லாமல் இருப்பதற்குரிய ஸாதனங்களைச் சொல்லவும் நமக்கு ஆசாரிய பரம்பரை வேண்டும். ஒரு ஆசாரியர் தமக்குப் பிற்காலத்தில் தம் காரியத்தைச் செய்ய மற்றொருவருக்கு அதிகாரம் கொடுக்கிறார். இப்படி வருபவர்களின் வரிசைதான் ஆசாரிய பரம்பரை. அந்தப் பரம்பரை விஷயத்தில் நாம் நிரம்ப நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். ஆத்ம ஜ்யோதிஸை அடையவேண்டிய மார்க்கமாகிய நிதியைக் காப்பாற்றித் தந்தவர்கள் அவர்களே! யார் யார் மூலமாக இந்த நிதியானது லோகத்தில் இன்றுவரையில் வந்திருக்கிறதோ, அவ்வளவு பேரையும் த்யானித்தால் அதிக அநுக்கிரஹம் உண்டாகும். ஆகவே குரு பரம்பரா ஞானமானது ஆத்ம தத்வத்தில் நாட்டமுடையவர்களுக்கு அவசியம் இருக்க வேண்டும்.

சாச்வத ஐச்வர்யமான ஆத்ம ஸாம்ராஜ்யத்தை நமக்குக் காட்டிக் கொடுத்த இந்த எல்லா ஆசார்யர்களின் பெயரையும் தினமும் சொல்லி, இந்த ச்லோகத்தால் அவர்களையெல்லாம் அனைவரும் நமஸ்கரிக்க வேண்டும்.

இங்கே ஆத்ம ஸாம்ராஜ்யம் என்று சொன்னேன். முதலில் ஒரு வேடப் பையனுக்கு ஸாம்ராஜ்யம் கிடைத்த கதையில் ஆரம்பித்தேன். அப்புறம் எங்கேயோ அத்வைத குரு பரம்பரை என்று கொண்டு போய்விட்டேன்! அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? சொல்கிறேன் :

ஆசார்யாளுக்கு முந்தி மநுஷ்ய ரூபத்தில் இருந்து கொண்டு அத்வைதோபதேசம் செய்தவர்களில் அவருடைய குருவான கோவிந்தர், குருவுக்கு குருவான பரமகுரு கௌடபாதர் ஆகிய இரண்டு பேரை மட்டும் ச்லோகத்தில் சொல்லியிருந்தாலும், லோகத்திலும் பொதுவாக இந்த இருவரின் பேர் மட்டும் கொஞ்சம் தெரிந்திருந்தாலும் வேறு சில மநுஷ்ய ரூப அத்வைத ஆசார்யர்களும் நம் பகவத்பாதாளுக்கு முந்தியே, சுகருக்கு அப்புறம் இருந்திருக்கிறார்கள்.

நாராயணணிலிருந்து சுகர் வரையிலானவர்களை, அத்வைதிகளைப் போலவே மற்ற ஸித்தாந்திகளும் தங்கள் தங்கள் கொள்கைகளுக்கு மூல புருஷர்களாக வைத்துக் கொண்டு நமஸ்காரம் செய்கிறார்கள். ஆனால் கௌடபாதர், கோவிந்த பகவத்பாதர் இருவரும் அத்வைதந்தான் தத்வம் என்று, மற்ற ஸித்தாந்தங்களை நிராகரித்துத் தீர்மானம் பண்ணியிருப்பதால், இவர்கள் அத்வைதிகளுக்கு மட்டுமே ஆசார்யர்கள் ஆவர். இப்படி exclusive- ஆக அத்வைதத்துக்கு மட்டுமே கிரந்தங்கள் உபகரித்தவர்களில் ஆசார்யர்களுக்குப் பூர்வத்தில் வேறு சிலரும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் பேரையாவது உங்கள் காதில் போட்டு வைக்கிறேன். ஆத்ரேய பிரம்மநந்தி என்பவர் ஒருத்தர்; ஸுந்தர பாண்டியர்கள் என்று ஒருத்தர் (ஏதோ தெற்கத்தி ராஜா பேர் மாதிரி இருக்கிறது!); பர்த்ரு ப்ரபஞ்சர் என்று இன்னொருவர்; பர்த்ருஹரியும் ஒருவர். ப்ரம்மதத்தர் என்று ஒருத்தர் ஸூத்ர பாஷ்யமே பண்ணியிருப்பதாகத் தெரிகிறது. இந்த த்ரவிடாசாரியரை விசிஷ்டாத்வைதிகளும் தங்கள் ஸித்தாந்தத்தை ஆதரிப்பவர் என்று சொல்லிக் கொள்வதுண்டு.

இவர்களுடைய கிரந்தம் எதுவும் இப்போது பூர்ணமாக நமக்குக் கிடைக்காவிட்டாலும், ஸாக்ஷாத் நம் சங்கர பகவத்பாதாள் உள்படப் பிற்கால அத்வைத கிரந்த கர்த்தாக்கள் இவர்களை மேற்கோள் காட்டியிருக்கிறார்கள்.

இவர்களில் த்ரவிடாசார்யார்தான் நம் கதைக்கு சம்பந்தப்பட்டவர்.

No comments:

Post a Comment