Thursday, August 27, 2015

Birth place of carnatic music is TN-Periyavaa

Courtesy:Sri.GS.Dattatreyan

காஞ்சியில் மஹா சுவாமிகள் ஓர் அற்புத சங்கீத அருவிருந்து!

1990 ஆம் ஆண்டு நான் சங்கீத வித்வத் சபையில் உள்ள இசைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவி. என்னுடன் படித்தவர்களில் பெரும்பான்மையோர் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள்.
ஒரு நாள் எங்களுக்குள் ஒரு சிறு விவாதம் வந்தது. அப்போது அவர்கள், "சங்கீத மும்மூர்த்திகள் 3 பேருமே…சம்ஸ்க்ருதம் & தெலுங்கில்தான் பாடி இருக்கிறார்கள்.எனவே தெலுங்கும் சம்ஸ்க்ருதமும் இல்லை என்றால், சங்கீதமே இல்லை என்று தெலுங்கர்கள் கூறினார்கள்.தமிழ் சுத்த waste என்றார்கள். சாதாரணமாக நான் மொழிகளுக்கிடையில் எந்த வித்யாசமும் பார்ப்பதில்லை. ஆனால், அவர்கள் இப்படி சொன்னதும் எனக்கு மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
ஆகையால் நானும் பதிலுக்கு ஏன்? தமிழில் தேவாரம், திருவாசகம் எல்லாம் இல்லையா? பழந்தமிழர் இசை எல்லாம் இல்லையா என்று வாதாடினேன்.அவர்களுக்கு பெரும்பான்மை பலம் இருந்ததால், தனியே வாதாடிக் கொண்டிருந்த என் வாதம் ஈடு படவில்லை.
அதற்குள் கல்லூரி முடிந்து அன்று சோர்ந்து போய் கிட்டத்தட்ட அழுத நிலையில் வீட்டுக்குப் போனேன்.
என் முக வாட்டத்தைக் கண்ட என் தாயார், என்ன விஷயம் என்று விசாரித்தார்கள். நானும் சொன்னேன். ஆனால், இதை ஒரு பொருட்டாகவே மதிக்காக என் அம்மா, " நாளைக்கு காஞ்சீபுரத்துக்குப் போய் பெரியவாளை தரிசனம் பண்ணப் போறேன். நாளைக்கு காலேஜுக்கு லீவ் போட்டுவிட்டு நீயும் வா என்றார். எனக்கோ மன சங்கடம். நம் வருத்தத்தைப் பற்றி அம்மா கொஞ்சம் கூட கவலையே படவில்லையே….என்று. அன்று இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. எனவே அடுத்த நாள், கல்லூரிக்குச் செல்லாமல் காஞ்சீபுரம் செல்வது என்று தீர்மானித்தேன்.
எனக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் உண்டு. எனவே நான் வரைந்த சங்கீத மும் மூர்த்திகளின் (தியாக ராஜர், முத்து சுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்த்ரிகள்) ஓவியங்களை மஹா சுவாமிகளுக்கும் காட்டி ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன்.
மறுநாள் நானும் என் அம்மாவும் மஹா சுவாமிகளின் தரிசனத்துக்காகக் காத்திருந்தோம். தரிசனமும் நன்றாகக் கிடைத்தது. நான் கொண்டு சென்றிருந்த ஓவியங்களை, சுவாமிகளின் அருகில் இருந்த உதவியாளர் மூலமாக, சுவாமிகளிடம் கொடுத்தேன். அந்த மூன்று படங்களையும் பார்த்த பெரியவர், இதெல்லாம் யார் வரைஞ்சா? என்றார். அந்த உதவியாளர், என் பெயரையும் ஊரையும் கேட்டார். சொன்னேன். அப்படியே பெரியவாளிடம் சொன்னார். உடனே பெரியவா, அந்த குழந்தையை, என் முன்னாடி வர சொல்லு, என்றார். நானும் அம்மாவும் போனோம். எங்களை உட்கார சொன்னார்.
அதற்கு முன் அவரை அவ்வளவு கிட்டத்தில் பார்த்ததோ அவருடன் பேசியதோ இல்லை என்பதால், ஆச்சர்யம் சந்தோஷம் பயம் என பலவித உணர்சிகளுடன் எதிரே அமர்ந்திருந்தேன்.
என்னுடைய படிப்பு பற்றி எல்லாம் விசாரித்தார். நானும் சங்கீதக் கல்லூரியில் படிப்பதாகக் கூறினேன். அப்போது ஒரு க்ஷண நேரம் முதல் நாள் நடந்த வாக்கு வாதத்தைப் பற்றி பெரியவாளிடம் சொல்லி அதற்கு ஒரு தீர்வு கேட்கலாமா என்று தோன்றியது. அப்படி செய்தால், அதிகப் பிரசங்கி என்று நினைத்துவிடப் போகிறார்களே என்று என்னை நானே அடக்கிக் கொண்டுவிட்டேன்.
ஓவியங்களைப் பார்த்த பெரியவர், சங்கீத மும் மூர்த்திகளின் கீர்த்தனைகளைப் பாட சொன்னார். மூன்று பேருடைய கீர்த்தனைகளிலும் ஒவ்வொன்று பாடினேன்.
பிறகு அந்த ஓவியங்களைப் பற்றி விசாரித்தார்.
அதில் முத்து சுவாமி தீட்சிதரின் . கையில் உள்ள வீணையில் நான் ஒரு தவறு செய்திருந்தேன்.
முத்து சுவாமி தீட்சிதரின் வீணை மற்ற வீணைகளைப் போல் இல்லாமல், யாளி மேல் பக்கமாக இருக்கும். ஆனால், எவ்வளவு முயன்றும் ஏனோ அந்த இடம் மட்டும் எனக்கு சரியாகவே வரைய வரவில்லை. ஆகையால், எல்லா வீணைகளையும் போல் யாளியைக் கீழ்ப் பக்கமாகவே வரைந்திருந்தேன்.
அந்தத் தவறை சுட்டிக் காட்டிய பெரியவா, அந்த வீணை தீட்சிதருக்கு சாக்ஷாத் கங்கா தேவியே அனுக்ரஹம் பண்ணிக் கொடுத்தது. அதை மாத்தறது தப்பு. அடுத்த தரம் வரும் போது அதை சரியா வரைந்து எடுத்துண்டு வா. என்றார்.
பிறகு, "இவளோட ஜீவிய சரித்ரம் தெரியுமோ உனக்கு?" என்றார். நானும், " ஓரளவுக்குத் தெரியும் பெரியவா" என்றேன். தெரிஞ்சமட்டும் சொல்லு…என்றார்.
இவா மூணு பேரும் திருவாரூர்லே பிறந்தா…..என்று நான் ஆரம்பித்ததுதான் தாமதம். உடனே நிறுத்து என்று சைகை செய்த பெரியவர் தொடர்ந்தார். அவர் வாக்கிலேயே சொல்கிறேன்.
"தர்சநாத் அப்ர சதஸி ஜனநாத் கமலாலையே
காச்யாம் து மரணான் முக்தி: ஸ்மரணே அருணாச்சலே"
இதுக்கு என்ன அர்த்தம்னா….
சிதம்பரம் நடராஜ மூர்த்தியை தரிசனம் பண்ணினா முக்தி, சிதம்பரத்தை அப்ர சதஸ் ன்னே சொல்லி லிருக்கு. சபைன்னா, சித் சபைதான். சபாபதின்னா நடராஜ மூர்த்திதான். ருத்ரத்துலே கூட சபாப்யோ சபாபதிப்யச்சவோ நமோ நமோ…ன்னு சொல்லி இருக்கு.
இப்பேர்பட்ட மஹா சபையான பொன்னம்பலத்தை தரிசனம் பண்ணிக்கணும்.
அடுத்தது, ஜனநாத் கமலாலையே….
இதுக்கு கடைசிலே வரேன்…..
காச்யாம்து மரணான் முக்தி: ன்னா…காசியிலே போய் ஜீவனை விட்டா, மோக்ஷம்…இது நம் எல்லாருமே கேள்விப் பட்டுருக்கற சமாச்சாரம்தான்.
ஸ்மரணே அருணாச்சலே…. சிதம்பரம் நடராஜ மூர்த்தியை தரிசனம் பண்ணிண்ட முக்தின்னா….இங்கே அருணாசலேஸ்வரரை நினைச்சுண்ட தத் க்ஷணத்திலே (அந்த நிமிஷத்திலேயே) முக்தி.

(More details about this sloka here : http://knramesh.blogspot.in/2015/03/chidambaram-abhrasadas.html)


இப்போ கமலாலயம் சமாசாரத்துக்கு வருவோம்.

ஜனநாத் கமலாலையேன்னா திருவாரூர்லே பிறந்தால் முக்தி. அந்த ஓவியங்களைக் காட்டி, இவா -மூணு பேருமே திருவாரூர்லே பிறந்திருக்கா. அங்கே பிறந்ததுனாலேயே ஜீவன் முக்தாள் ஆய்ட்டா.
இப்போது என்னிடம்…..
"ஆமா…உனக்கு ஒரு சமாசாரம் தெரியுமோ…..
இந்த திருவாரூர்…நம்ப தஞ்சாவூர் ஜில்லாலதான் இருக்கு….
ஆமாம் என்பது போல் நான் தலையை ஆட்டினேன்.
அவா எந்த பாஷையிலே பாடி இருந்தாலும் அவா பிறந்த இடம் நம் தமிழ்நாடுதான். அப்படி பார்த்தா….சங்கீதத்தினுடைய பிறப்பிடமே நம் தமிழ்நாடுதான்னு சொல்லலாம் இல்லையா.(மீண்டும் ஆமாம் என்ற பாவனையில் தலை ஆட்டினேன்.)
தமிழ்நாடு இல்லேன்னா சங்கீதமே இல்லைன்னு சொல்லிடலாமே இல்லையா….
பாஷைங்கறது நம் மனசுலே நினைக்கறதை வெளிப் படுத்தற ஒரு கருவிதான். அதனாலே….அவா தமிழ்லே பாடலயேன்னு நாம் ஒண்ணும் வருத்தப் பட்டுக்க வேண்டாம்…..
முதல் நாள் கல்லூரியில் நடந்த வாக்குவாதத்திற்கு ஒரு அருமையான விளக்கம் நான் கேட்காமலேயே கிடைத்தது.
பெரியவாளின் மேற்படி விளக்கத்தைக் கேட்டு நான் எப்படிப்பட்ட உணர்ச்சியில் இருந்தேன் என்பதை விவரிக்கத் தெரியவில்லை.
என் கண்களில் கரகரவென்று கண்ணீர் வந்துவிட்டது.
சங்கீத மும்மூர்த்திகள் பலவிதமான தெய்வங்களை பற்றிப்பாடி இருக்கிறார்கள். அது எந்த தெய்வத்தைப் பற்றி இருந்தாலும் ஒவ்வொரு முறை நான் பாடும் போதும் நான் நினைத்துக் கொள்ளும் ஒரே தெய்வம் நம் கருணைக் கடலாம் காஞ்சி மகான் ஒருவர்தான்.



No comments:

Post a Comment